நாவலின் சிருஷ்டிகரத் தன்மை

இதுவரை என் கணிப்பில் நாவலும் சிறுகதைகளும் முன்முடிவுகளுடன் எழுதப்படும் பிரதி என எனக்குள் கொண்டிருந்தேன். அதே கவிதையெனில் அனைவராலும் எழுதி விட முடியாது. எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது வெறும் வார்த்தைகளாக நின்று விடுகிறது. அதே உன்னதமான கவிதைகள் அல்லது ரசனை சார்ந்த கவிதைகளாக நாம் பாவிக்கும் விஷயங்கள் தன்னுள் ஒரு அசைக்க முடியாத தன்மையினை கொண்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ எனக்குள் சிருஷ்டி என்பதன் அர்த்தம் கவிதை என்றிருக்கிறது.

நாவல்களும் தன்னுள் ஒரு சிருஷ்டிகரத் தன்மை கொண்டிருக்கிறது என்பதனை இன்று தான் உணர்ந்தேன். இத்தனை நாள் நான் வாசித்த நாவல்களில் இதனை கடந்து வந்திருக்கிறேன் இருந்தும் இன்று அதனை முழுமையாக உணர்கிறேன். கொஞ்சம் விளக்கப் பார்க்கிறேன்.

சில எழுத்தாளர்கள் அடுத்தவரின் படைப்புகளையோ அல்லது தம் படைப்பினை கூட இக்கதைகள் யார் நினைத்தாலும் எழுத முடியும் என சொல்லிப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு உவமையே தவிர நேரடி அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு படைப்பிலும் அது சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் எழுத்தாளனின் வாழ்க்கையிலிருந்து சில விஷயங்கள் கசியவே செய்கிறது. ஆக அனுபவத்தினை படைப்பாக மாற்றுகிறான் என வைத்துக் கொள்வோமா ?

நாம் நிறைய பேர் டைரி எழுதுவதை பார்த்திருக்கிறோம். அவர்கள் அதில் குறிப்பாக தினம் நடந்த விஷயங்கள், மற்றவர்களிடம் சொல்ல முடியாத அந்தரங்கமான உணர்வுகள், வெளிக்காட்டாத உணர்வுகள் என நிறைய எழுதுவர். இந்த எழுத்து காகிதத்தினை, பிரதியினை நிரப்புகிறது. மேலே சொன்னதற்கு செல்வோம். இரண்டுமே அனுபவத்தினை பிரதியாக்குகிறது. ஆனால் இரண்டும் வேறு வேறாக இருக்கிறது. எப்படி ?

இதற்குள் தான் நான் சொல்லவரும் சிருஷ்டிகரத் தன்மை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சுயானுபவங்கள் தனித்துவம் வாய்ந்தவையே. அதனை டைரியில் எழுதும் போது நமக்கு எதிர்காலத்தில் நினைவுகளை ஊட்டும் வண்ணம் எழுதுகிறோம். அதே இலக்கியம் என வரும் போது நமது சுயம் எழுத்தின் வசீகரத் தன்மைகளால் மாற்றுதலுக்கு உட்பட்டு கொஞ்சம் ஜனரஞ்சகத் தன்மையினை அடைகிறது. அப்போது தான் இலக்கியம் உருவாகிறது.

இலக்கியத்தில் டைரி எழுதுவது போலக் கூட இருக்கிறதே. அது என்ன ? இலக்கியங்களில் கடிதம் வகையில் எழுதுவது, சில நாட்களுக்கு முன் பால கணேசனுக்கு ஒரு கடிதம் என இரண்டு பாகமாக கட்டுரை எழுதியிருந்தேன் அது வினாத்தாளினை போல கதையினை கொண்டுள்ளது. அவையெல்லாம் இலக்கியத்திற்கு உருவம் கொடுக்கும் கருவி.

இப்படி மாற்றுவது மட்டும் தான் சிருஷ்டிகரத் தன்மையா என்ற கேள்வியும் எழுப்ப வேண்டும். ஒரு நாற்பது வயது எழுத்தாளன் என வைத்துக் கொள்வோம். அவன் தன் பால்யகால நினைவுகளை புனைவாக எழுதுகிறான். அப்போது அவனை நினைத்துப் பார்க்க முடியுமா ? அவனுக்கு நடப்பது ஒரு transition. காலம் கடந்து அந்த நிலைக்கு சென்று அதனை பிரதியாகுகிறான். அது சரிவர வந்தால் இலக்கியமாகிறது. இது மாறி நடக்கலாம், இனம் மாறியும் நடக்கலாம். இது அனைவராலும் செய்யக் கூடிய விஷயமும் அன்று. இதைத் தான் சிருஷ்டிகரத் தன்மை என சொல்ல நினைக்கிறேன்.

இந்த விஷயத்தினை இன்று எனக்கு உணர்த்திய நாவல் a portrait of the artist as a young man - james joyce


நான் சொன்ன காலம் கடந்து சென்று எழுதபட்ட நாவலே இது. நாவல் எதனை பேசுகிறது என்பது முக்கியமான விஷயம்.

சந்தேகத்திற்கும் சந்தேகிப்பதற்கும் இடையே அநேக வித்தியாசங்கள் இருக்கிறது. சந்தேகம் என்பது முழுக்க ஒரு தீர்வினை கொண்ட ஒன்று. எப்படியும் அவனது சுய வாழ்க்கையோ நண்பர்களோ பதிலினை அளிப்பார்கள். அதே சந்தேகித்தல் என்பது வியாதி.

இந்நாவலில் கதாநாயகன் ஒட்டு மொத்த உலகத்தினையும் சந்தேகமாக பார்க்கிறான். இதனை வெளியில் சொல்லிவிடுவதால் இவன் இண்டலெக்சுவலோ என உலகம் அவனை சந்தேகிக்கிறது. அவனுடைய சந்தேகத்தின் சின்ன விஷயத்தினை மொழிபெயர்க்கிறேன் பிறகே புரியும் உலகம் அவனை ஏன் அப்படி பார்க்கிறது என.

பிரபஞ்சத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது ?
சூன்யம். ஆனால் இந்த சூன்யத்திற்கு முன் என்ன இருந்தது என்பதை காண்பிக்க இப்போது பிரபஞ்சத்தை சுற்றி ஏதேனும் இருக்கிறதா ?

இது வெறும் உதாரணமே. இன்னமும் இது போல் ஏகப்பட்ட சந்தேகங்கள் அவனுள் எழுகிறது. காலப்போக்கில் பதிலினையும் எப்படியோ அடைகிறான்.

இந்த தேடலும் பால்யகால நினைவுகளும் மட்டுமே இந்நாவலை முழுமையாக்குகிறது. எழுதபட்ட நடை தான் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு விஷயம். ஒரு நாவல் முழுக்க சந்தேகங்களால் நிறைந்திருந்தாலும் ஸ்டீபனும் வாசகனும் ஒரு சேர பயணிக்கும் அளவு எழுதபட்டுள்ளது. அஃதாவது ஸ்டீபனின் சந்தேகங்களை வாசகனுடையதாக எளிமையான மொழியின் மூலம் மாற்றுகிறார். அப்படி மாற்றுவதன் மூலம் வாசகன் சில இடங்களில் மட்டும் விடையினை அறிகிறான்.

அதற்கு காரணம் கேள்விகள் இவ்வுலகில் யாருக்கும் பொருந்தக் கூடிய விஷயம் ஆனால் பதிலகளோ அனுபவங்களால் சொல்லக் கூடியது. கேள்விகளை கடத்த முடிந்த ஜேம்ஸ் ஜாய்ஸினால் அனுபவத்தினையும் அது தரும் பதிலினையும் கடத்த முடியவில்லை. இது இந்நாவலின் தோல்வியாகாது.

மேலும் இந்நாவல் மிக ஆழமான படைப்பு என்றே சொல்ல நினைக்கிறேன். இடையிடையில் பேசப்படும் தத்துவார்த்த பிரச்சனைகள் மேலோட்டமாக சொல்லாமல் மிக நீண்டதாய் சொல்லியிருக்கிரார். அங்கு முழுக்க வாசகனுக்கு கதாபாத்திரத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலை போல எழுதபட்டிருக்கிறது.

இதனை பாராட்டியே ஆக வேண்டும். இதனை இப்போது எழுத முனைபவர்களுக்கு சொல்ல நினைக்கிறேன். இந்நாவலில் ஆசிரியர் கொஞ்சம் பிசகிருந்தாலும் அலுப்புதட்டி மூடி வைக்கும் அளவு வாசகன் சென்றிருப்பான். காரணம் தத்துவங்கள் பேசப்படும் பகுதிகள் அப்படி. ஆனால் இவர் அந்தந்த பகுதிகளில் தேர்ந்தெடுத்த மொழி நடை கொஞ்சமும் சலிப்பில்லாமல் கடைசிக்கு நம்மை இழுத்து செல்கிறது.

ஒரு நாவல் எதை பற்றி வேண்டுமென்றாலும் பேசலாம். ஆனால் அப்பிரதி நிறைவேற்ற வேண்டிய முதல் விஷயம் வாசகனுக்கு சலிப்பினை தராமல் இருப்பது. அதை இந்நாவல் அழகுற செய்கிறது. 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக