பித்தனின் இலக்கியம்

பின்நவீனத்துவம் நவீனத்துவம் ரியலிஸம் சர்ரியலிஸம் என வகை வகையாக இலக்கியத்தினை பிரித்து வைத்திருப்பதில் பித்தனிலையினை தனியாக ஒரு இலக்கியமாக வைக்க ஆசைப்படுகிறேன். அதற்கு காரணம் ஒன்று இருக்கிறது. பித்தனிலையினை கருவாக வைத்து நாவல் எழுதுபவர்கள் அனைவரும் கட்டமைப்பிலும் ஒரு பித்தனிலையினை வைக்கின்றனர். சின்ன உதாரணம். ஒரு கதாபாத்திரத்தினை உருவாக்குகிறோம். அது ஸ்கோஸோட்ரீனிக் வியாதியால் அவதிப்படும் ஒரு பாத்திரம். அந்த வியாதியினை மிரர் படத்தில் பார்த்திருப்பீர்கள். அந்த வியாதியில் இருப்பவர்கள் உளறுவது சம்மந்தம் இல்லாமல் இருக்கும். இப்போது விஷயமே இங்கு தான் இருக்கிறது. அப்படி உளறும் விதத்திலேயே ஒரு கதையினை அமைத்து அந்த கதையில் இருக்கும் கதாபாத்திரமும் ஸ்கீஸோஃப்ரீனிக் வியாதி உடையவனாக இருந்தால் எப்படி இருக்கும் ? கொஞ்சம் யூகிக்க முடிகிறதா ? இதைத் தான் பித்தனிலை இலக்கியம் என்கிறேன்.

இந்த வகை இலக்கியம் முழுமையாக இதுவரை செய்யப்படவில்லை. அல்லது இது வரை நான் வாசித்ததில் அப்படி முழுமைத் தன்மை எங்கேயும் இல்லை என்பது தானவீக்கட்டுரையின் முக்கியமான ஒன்று. இந்த கருத்து அல்லது ஆசை உருவாவதற்கு இரு எழுத்தாளர்கள் தான் காரணம் என சொல்ல நினைக்கிறேன். ஒருவர் சாரு நிவேதிதா. மற்றொருவர் க.நா.சுப்ரமணியம். ஆச்சர்யப்படுவது முதலில் க.நா.சு வினை தான்.

அதற்கு காரணமும் இருக்கிறது. க.நா.சு வின் காலத்தில் இவ்வகை இலக்கியத்தின் புரிதல் மக்களுக்கு இடையில் எப்படி இருந்திருக்கும் என அறிய ஆசைப்படுகிறேன். இவர் உருவாக்குவது ஒரு தனிப்பட்ட உலகம். அந்த உலகம் வித்தியாசமான விஷயங்களை வித்தியாசமாக நம்முன் படைக்கிரது.

க.நா.சு வினை பற்றி பேசும் போது தான் சமீபத்தில் சாம் நாதன் என்பவருடன் பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது. அவர் என்னிடம் எப்படி கா.நா.சு வினை வாசிக்கிறீர்கள் எனக் கேட்டார். உடனே பதில் கேள்வியினையே நான் கேட்டேன். தாங்கள் பொய்த்தேவினை வாசித்தீர்களா  என. உண்மையும் அது தான். க.நா.சு வின் முதல் நாவல் எது என தெரியவில்லை.  பொய்த்தேவாக இருக்குமோ என சின்ன சந்தேகமும் வருகிறது. மற்ற நாவல்களை வாசிக்கும் போது கரு அளவில் மட்டுமே இது க.நா.சு என தெரிகிறது. அதே பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி அவர் கையெடுத்த நடை எதுவுமே பின்னாளில் வந்த நாவல்களில் தெரியவில்லை.

சின்ன உதாரணம் வாழ்ந்தவர் கெட்டால். இதனுடன் பொய்த்தேவினை பார்ப்போம். பொய்த்தேவு ஒரு தனி மனிதனின் வாழ்க்கையினை அருகிலிருந்து பார்த்து அதனை சற்று மிகையுடன் பதிவு செய்தது போல் இருக்கும். வாழ்ந்தவர் கெட்டால் அதே போல் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தினை மட்டுமே மையபடுத்துகிறது. இரண்டையும் பார்க்கும் போது பொய்த்தேவின் வெளி மிகப்பெரியது. ஆனால் எனக்கு வாழ்ந்தவர் கெட்டால் மட்டுமே அதிகமாக பிடித்திருக்கிறது. இரண்டையும் வாசித்த யாரை கேட்டாலும் அவர்களின் பதில் இதுவாக தான் இருக்கும். இதற்கான மூலக் காரணம் அவர் முழு சரிதையினையும் நாவல் எனும் தன்மைக்கு கொண்டு வராமல் சரிதையாகவே எழுதி இருக்கிறார். அஃதாவது புனைவுத் தன்மை வைக்க நினைத்து அவ்விடத்திலெல்லாம் அதனை வைக்க நினைத்தேன் என்பது போல் வரிகளை மறைத்து இருக்கிறார். இதனால் நாவல் முழுக்க ஒரு செயற்கை தன்மை துரத்திக் கொண்டே வரும்.

அதே வாழ்ந்தவர் கெட்டால் முழுக்க ஒரு திகில். ஒற்றை வரி கதையினை அவர் கதை சார்பாக திகிலினை வைக்காமல் எழுதபட்ட முறையில் மட்டுமே திகிலினை வைத்திருக்கிறார். இது தான் நாவல் என்பது. அதனால் தானோ என்னவோ சி.சு.செல்லப்பா பொய்த்தேவு நாவலின் விமர்சனத்திலும் நாவல் யதார்த்தத்தினை பிரதிபலித்தாலும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமற்ற ஒரு சூழலினை உருவாக்க வேண்டும் என்கிறார்(இதனை மூன்றாவது முறை என் இணையத்திலேயே சொல்கிறேன் என நினைக்கிறேன்!). இதனை க.நா.சு வின் நாவல்களில் அழகுற காணலாம்.

இத்தனை தூரம் க.நா.சு வின் நாவல்கள் மேல் எனக்கு ஆர்வமிருந்தாலும் அவரும் பித்தனிலை எழுத்துகளை தொட்டிருக்கிறாரே தவிர முழுமை அடையவில்லை. இதில் எனக்கு தெரிந்து செய்தவர் சாரு தான். அதுவும் நாவல் எனில் ஒன்றில் தான் - ஸீரோ டிகிரி. ஆனால் அதிலும் முழுமை இல்லை. அந்நாவலில் 160 பக்கத்தின் அருகில் வரும் போது அவந்திகாவின் கதை என ஆரம்பிக்கும். அதுவரை இந்த பித்தனிலையினை அழகுற கொணர்ந்திருப்பார். ஆனால் அதன் பின் ஒரு முப்பது அல்லது நாற்பது பக்கங்களுக்கு லீனியர் கதை சொல்லல் முறை. அதற்கு பின்னும் ஜெனிக்கு எழுதும் கடிதங்கள் என லீனியர் முறையே நடக்கிறது. அதே நேநோ, joker is here, மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், என "மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்" சிறுகதை தொகுப்பில் இருக்கும் கதைகள் அழகுற பித்தனிலையினை கொணரும் கதைகள். வாசித்து பாருங்கள் அப்போது தான் அந்த உணர்வினை நன்கு உணர முடியும்.

வாசகர்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம் என சொல்லி விடுகிறேன். கதையில் இருக்கும் பித்தனிலை வேறு, கதையினை சொல்லும் இடத்தில் இருக்கும் பித்தனிலை வேறு. இரண்டும் சேரும் இடத்தில் தான் நான் சொல்ல வரும் பித்தனிலை இலக்கியம் உருவாகும். க.நா.சு ஒரு வேளை இப்போது இருந்திருந்தால் நான் சொல்ல வரும் விஷயத்தினை செய்திருக்கலாம்.

இவ்வளவு நேரம் எழுதியிருந்த அனைத்தும் வெறும் முன்னுரையே. அதாவது  ஒரு நாவலுக்கு சொல்ல நினைத்த முன்னுரை. சமீபத்தில் தான் அவர் எழுதிய பித்தப்பூ என்னும் நாவலினை வாசித்தேன். அதன் தாக்கமே இவ்வளவு நேரம் நான் க.நா.சு மற்றும் சாரு நிவேதிதாவின் எழுத்தில் கண்ட உண்மைகளை பகிர்ந்தது.

இந்நாவலின் முதல் பக்கத்தில் அஃதாவது நாவல் ஆரம்பிக்கும் பக்கம் இது தான்


"எனக்கு பைத்தியமா ஸார் பிடித்திருக்கு ?
ம்..ம்..ம்..
எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கு என்று எல்லாரும் கூறுகிறார்களே. நான் உண்மையிலேயே பைத்தியமா ?
இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடிய நீ உண்மையிலேயே எப்படிப் பைத்தியமாக இருக்க முடியும் ? என்று கேட்டேன்"


இந்த வரிகளை வாசித்தவுடன் எனக்கு அசுரகணம் நாவலின் ஞாபகமே அதிகமாக வந்தது. இது அசுரகணம் நாவலின் முன்னோடி என சொல்லும் அளவு இந்நாவல் இருக்கிறது. குறைத்து சொல்லவேண்டுமெனில் நீண்ட ஒரு ஆராய்ச்சியினை ஒருவன் செய்கிறான். அப்படி செய்யும் போது அநேகமான சந்தேகங்கள் வரும். இது நிச்சயம் ஒரு படைப்பினை கொடுக்கும். அப்படியெனில் இது ரிஷிமூலம் தானே ? இந்த ரிஷி மூலத்தினை அப்படியே நாவலாக்கினால் ? அது தான் பித்தப்பூ நாவல்.(அப்படியெனில் இந்நாவலின் ரிஷிமூலம் ????)


இதில் நான் என்னும் கதாபாத்திரம் ஒரு எழுத்தாளனாக வருகிறது. அவன் பைத்திய நிலையினை பற்றி ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்கிறான். அதற்கு தியாகு என்னும் பாத்திரம் ஒரு பகடைக்காய். இது தான் அவர் செய்த தவறாக பார்க்கிறேன். அதெப்படி அனைவரும் ஒரு குடும்பத்தில் பைத்தியமாக இருக்க முடியும் ?

இந்த கேள்வி நிச்சயம் தோன்றும் வகையில் தான் நாவலில் இருக்கிறது. ஆனால் விஷயம் எழுதபட்டதில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கப்படும் அனைத்தும் தியாகுவின் பக்கம் நிற்கும் வாதங்கள். அது ஆரம்பத்திலும் கடைசியிலும் எங்கேயோ மறைந்து நிற்கும் வார்த்தைகளாய் இருப்பதால் அங்கே ஒரு லாஜிக் பிரச்சினை எழுகிறது.

ஒரு வேளை பித்தப்பூவின் மையம் இதாக கூட இருக்கலாமோ எனவும் தோன்றியது. அஃதாவது மனிதனின் முன்முடிவுகளால் ஒவ்வொருவரை தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொள்கிறான். யதார்த்தமோ நிச்சயம் வேறாக தான் இருக்கும். அதனை உணரும் தருணத்தில் அல்லது முன்முடிவுகள் தனி மனிதனின் மீது முழு ஆதிக்கம் செய்யும் தருணத்தில் ஒருவனுக்கு பித்தனிலை எழுகிறது. அந்த பித்தனிலை தான் இந்நாவலில் மையமாகும் கரு.

இதில் இன்னமும் ஆதிக்கமான விஷயம் யாதெனில் சீராக நாவல் சென்று கொண்டிருதாலும் இடையிடயே நான் என்னும் பாத்திரத்துக்கும் தியாகு என்னும் பாத்திரத்திற்கும் இடையே நடக்கும் வசனங்கள் முழுக்க பித்தனிலையினை சொல்கிறது. ஆனால் அவரால் உருவக்க மனதளவில் முடிந்ததே தவிர பிரதியில் தோற்றே எனக்கு தெரிகிறார். அவரின் அனைத்து நாவல்களையும் வாசியுங்கள் பின்பே அவரை முழுதாக புரிதல் கொள்ள முடியும். இந்நாவலில் எனக்கு பிடித்த சில வரிகளை பகிர்ந்து கொண்டு பித்தனின் இலக்கியத்தினை முடிக்கிறேன்

லக்ஷியம் என்றால் அது என்ன என்று கேட்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் லக்ஷியவாதியாக இருப்பது பைத்தியக்காரத் தனம் தான்!


உங்களுக்கு பைத்தியகார அனுபவம் நிறைய உண்டா ?

எழுத்தாளன் என்றாலே பைத்தியக்காரன் என்று தானே அர்த்தம் ? நான் எழுத்தாளனாக இருப்பதே  எனக்கு பித்தம் தூக்கி அடிப்பதனால் தான்


பைத்தியமில்லாததை பைத்தியமாக்கி காட்டுபவர்கள் தான் அதிகம்.

ஏன் ?
அது சுலபமாக தெரிகிறது!


'என் அப்பா அண்ணா எல்லாரையும் பற்றி எழுதியிருக்கிறீர்களே உங்களின் மேல் கேஸ் தான் போட வேண்டும்' என்று விளையட்டாக சொன்னான்

'கேஸ் போடப்பா! அப்படியாவது என் புஸ்தக விற்பனை கூடுகிறதா பார்க்கலாம். கேஸ் கீஸ் ஏதாவது வந்து, அமர்க்களப்பட்டு பெயர் அடிபட்டால் தான் என் புஸ்தகம் விற்பனையாகும் போல் இருக்கிறது'(க.நா.சு காலத்திலுமா வாசிப்பு பஞ்சம்!!!!)

ஒரே மாதிரி அமைதியின்மையை தவிர்த்து வேறு விதமான அமைதியின்மையை நாடிப் போவது நல்லது தானே!


நாம் வாழ்வதற்கு நூல்களிலிருந்து கற்றுக் கொள்கிறோமா ? பூர்வ ஜென்ம வாசனையிலிருந்து கற்றுக் கொள்கிறோமா ? அல்லது சொந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்கிறோமா ?

ஒன்றிலிருந்தும் இல்லை. கற்றுக் கொள்ளாமலே தான் வாழ்ந்து முடிந்து விடுகிறோம்.

இப்படி ஏகப்பட்ட வசனங்களை இந்நாவலில் சொல்லியிருந்தலும் இந்நாவலை ஒரே வரியில் அசுரகணம் நாவலில் அவரே சொல்லியிருக்கிறார்

பைத்தியக்காரன் உலகிலே பைத்தியக்காரன் என்றால் பைத்தியம் அல்லாதவன் என்று தான் அர்த்தம்


க.நா.சு என்னும் பித்தன் விவாதிக்கபட வேண்டியவன். காலம் மாறிப் பிறந்து காலம் தாழ்த்தி வாசித்திருக்கிறேன். இருந்தும் வாசிப்பு அனுபவம் குன்றவில்லை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக