ஆதவனின் டெம்ப்ளேட்


ஆதவன் எனக்கு முன்பே பரிச்சயம் ஆனவர் தான். அவரின் இரண்டு நாவல்களையும் வாசித்திருக்கிறேன். அதனை பற்றிய என் கருத்தினையும் பதிவு செய்திருக்கிறேன். கீழிருக்கும் லிங்குகளை க்ளிக்கி வாசித்துக் கொள்ளலாம்இப்போது பி.டி.ஃபில் அவரின் சிறுகதைகளை வாசித்தேன். ஏன் பி.டி.ஃப் என கேட்கலாம் ? நூலகம் இல்லையா ? இங்கு நூலகம் செல்ல வேண்டுமெனில் வெகு தூரம் போக வேண்டும். எனக்கோ விடுமுறை வார கடைசி நாட்களில் தான். அப்போது கைவசம் இருக்கும் நூல்கள் அல்லது சினிமா. அப்படியே நூலகம் போனாலும் இரண்டு மணி நேரம் தான் செலவு செய்ய முடியும். எனக்கு ஆசை செல்ல வேண்டும் என. எதிர்காலத்தில் முடிகிறதா என பார்க்கலாம்.

https://docs.google.com/file/d/0B0Psp1TVzHnYM3EyR0h3NzYtcnc/edit - இந்த லிங்கினில் அந்த சிறுகதை தொகுதி உள்ளது(நன்றி தேவாதி ராஜன்)

இப்போது சிறுகதை தொகுதிக்கு செல்வோம். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகள். ஆனால் இக்கதைகளுக்கும் ஆதவன் எழுதிய 'காகித மலர்கள்' மற்றும் 'என் பெயர் ராமசேஷன்' நாவல்களுக்கும் பெரிய தொடர்புகள் இருக்கிறது.

ஒவ்வொரு கதையினை கடந்து செல்லும் போதும் இவர் தனிமனித வாழ்க்கையில் நாம் போடும் முகமூடிகளை கட்டவிழ்க்க நினைக்கிறாரா அல்லது சமூக மதிப்பீடுகளால் தனிமனிதன் சீரழிவதை சாடுகிறாரா என சந்தேகம் வருகிறது. இந்த சந்தேகம் எழக் காரணம் யாதெனில் அவர் தன் கதைகளில் உருவாக்கும் கதாபாத்திரங்கள் சமூகத்திற்காக ஏதேனும் முகமூடிகளை அணிகிறது. அந்த முகமூடிகள் சரியா என பரிசீலனை செய்கிறது. அந்த பரிசீலனையே கேள்விக்குறியாக வாசகனுக்கு மிஞ்சுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் என்னால் இதனையே பார்க்க முடிகிறது.

அப்படியே தொடர்ந்து கவனித்தால் ஒரு கதாபாத்திரம் இந்த கதாபாத்திரங்கள் வேடமணிவதை கவனித்து அதனை பரிகசிக்கிறது. இன்னமும் கொஞ்சம் நன்கு கவனித்தால் இந்த பரிகசிப்பும் ஒருவகை வேடமே. சுற்றி சுற்றி ஒரு விஷயத்திற்கே வந்து ஆதவன் ஏன் எழுத வேண்டும் ?

அப்படி ஒரே விஷயத்தினை எழுதினாலும் ஒவ்வொரு கதையும் மாறுபடுகிறது. சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கிறது. மேலும் இந்த விஷயத்தினை அவர் ஒவ்வொரு கதையினில் வைத்தாலும் எழுதப்படும் முறை மிக வித்தியாசமாக இருக்கிறது.

பிரதானமாக ஒரு கதையினை வைத்துக் கொள்கிறார். அந்த கதையினை சொல்லிக் கொண்டிருப்பது போல் கதை நகர்கிறது. அப்போது அங்கே ஒரு இடைவெளி உருவாகிறது(கதைக்குள்). அந்த இடைவெளியில் அவர் வேறு ஒரு கதையினை, அஃதாவது அந்த கதாபாத்திரத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு கதையினை அவர் வாசகனுக்கு முன்னிறுத்துகிறார். அது ஃப்ளாஷ் பேக்கினை போலவோ குறியீடுகள் போலவோ சிறுகதையில் வருகிறது. குறிப்பான விஷயம் நடக்கும் பிரதான சம்பவத்திற்கும் அக்கதைக்கும் சம்மந்தம் இருக்காது. சில நேரங்கள் கடந்தவுடன் மீண்டும் பிரதான கதைக்கே வந்துவிடுகிறார். இதற்கிடையில் நடக்கும் transition உண்மையில் தெரிவதே இல்லை. இதனை காகித மலர்களில் அழகுற தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக நான் சொல்ல நினைப்பது மூன்றாமவன் என்னும் சிறுகதை தான். இந்தக்கதையினை குறிப்பிட்டு கூறக் காரணம் இருக்கிறது. மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்னும் போரில் சிக்கிக் கொள்கின்றனர் இருவர். அவர்களில் ஒருவன் இன்னொருவனை வீழ்த்த பல முகமூடிகளை அணிகிறான். இந்த முகமூடிகள் எப்போதும் செயற்கையானவை நிரந்தர உணர்வினை தரப்போவதில்லை என்பதனை உணரும் போது கதை சறுறு பித்தனிலைக்கு செல்கிறது. அப்படியே முடிந்தும் விடுகிறது.

இதில் என்னை ஆச்சர்யபடுத்தியது யாதெனில் அக்கதையில் ஒரு வரி வருகிறது
'இதுவரையில் பரசுவின் அம்மாவினை பற்றி எதுவும் சொல்லாதது மறதியினால் அல்ல, ஒரு சஸ்பென்ஸ் கருதித் தான். கதையின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதால் இனி அவளைப் பற்றிக் கூறலாம்.'

இதனை க.நா.சு மற்றும் சாருவிடம் கண்டிருக்கிறேன். தன் பெயர்களையோ அல்லது எழுதுபவர்களின் இருத்தலையோ கதைக்குள் கொணரும் போது வாசகன் திக்குமுக்காடிப் போகிறான். கதை சொல்லி யார் ? கதை சொல்லி கதைக்குள் இருக்கிறானா அல்லது கதைக்கு வெளியிலா ? கதை என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒரு இடத்தில் பிரயாணிக்கும் சம்பவங்கள்.  A fixed frame. அப்படியிருக்கையில் எழுத்தாளன் தன்னை உள்ளே கொண்டு வரும் யுக்தி அருமையான ஒன்று. அதனால்தான் எனக்கு இக்கதை அதிகம் பிடித்தது.

மேலும் இந்த தொகுப்பில் அவர் கையாண்டிருப்பது மிகச் சிறிய கருக்களையே. அதனை சொல்லப்பட்ட விதம் தான் இன்னமும் இந்தக் கதைக்கு உயிர் இருப்பதன் காரணம். நிழல்கள் கதை இரு காதலர்க்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகளே. சொல்லப்பட்டிருக்கும் விதமோ நன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு கதைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம், நிழல்களினை போல். ஆனால் அந்த நிழல்கள் கதையிலும் நாயகன் தனக்குள் இருக்கும் ஒரு பிம்பத்துடன் பேசுகிறான் அதன் பேச்சினால் அவளுக்கு முன் அவளுக்காக ஒரு முகமூடி அணிகிறான். இது தான் ஆதவனின் டெம்ப்ளேடோ என சந்தேகம் எழுகிறது.

கிழக்கு பதிப்பகத்தில் ஆதவனின் அனைத்து சிறுகதைகளும் தொகுப்பாக இருக்கிறது. லிஸ்டில் வைத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வாங்குவேன். அதில் அவரின் அனைத்து சிறுகதைகளும் இருக்கிறது(மொத்தம் 60 என நினைக்கிறேன்). எளிமையான தமிழில் அழகான ஒரு இலக்கியவாதி ஏன் ஒரே கருவில் அல்லது பல கருவிலும் ஒரே விஷயத்தினை சொல்லியிருக்கிறார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்த நூலில் என்னைக் கவர்ந்த சில வரிகளை பகிர்ந்து பதிவினை முடிக்கிறேன்

அன்பையும் கொடூரத்தையும் பிரிக்கும் கோடு எத்தனை மெலிதானது

ஊரை ஏய்த்து பிழைக்கத் தான் மரபும் மண்ணாங்கட்டியும் உதவுகின்றன

இது சூதாட்டம். சரியான விடையை கண்டுபிடிப்பதை விட லாபகரமான விடையை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம் (எழுத்தாளனும் ஒரு வகையில் சூதாடி தான். வாசகனின் ஏமாறும் திறனை அழகுற பயன்படுத்த தெரிந்த சாமர்த்தியசாலி)

ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து. ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் வெடிக்காமல்(சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள், குரோதங்கள், துவேஷங்கள்

பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின் பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவுகளிலும் தானே மனிதர்களாகிய நாம் செலவிடுகிறோம் ?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்து முடிக்கும் உருப்படியான காரியங்களைவிட குறைவானதாக கூடவே இருக்கலாம்

ஒரு சலிப்பிலிருந்து இன்னொரு சலிப்பில் தான் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவும் இல்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி கடைசியில் கால்வலி தான் மிச்சம்

மனிதன் தான் வெறும் மிருகமில்லை என்று தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபித்துக் கொள்ள ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொள்கிறான் ?

கருணையையும் கடுமையையும் பிரிக்கும் கோடு இவ்வளவு மெலிதானதா ? (இதே வார்த்தைகளை சற்று முன்பு பார்த்தீர்கள். ஆனால் கடைசியில் இருக்கும் முற்றுப்புள்ளியும் கேள்விக்குறியும் எவ்வளவு பெரிய மாற்றத்தினை கொடுக்கிறது என்பதை கதை வாசித்தால் உணர்வீர்கள்.)

எது வேஷம் ? எது வேஷமில்லை ? எது அவனுக்கு இயல்பற்றது ? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ  நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டங்களில் ஒவ்வொன்று உண்மையாய் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஓவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒரு நாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில் - அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில் - தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின், யத்னங்களின் அடிப்படையே இவ்வகை தோற்றங்கள் தாமே ? பொய்கள் தாமே ?

கடைசி பெரிய வரிகள் போதும் ஆதவனின் டெம்ப்ளேட்டினை விவரிக்க.

பின்குறிப்பு : 
அழியாச்சுடர்களில் இரண்டு நான் வாசித்த கதைகள் இருந்தது. அதன் லிங்குகளை தருகிறேன் க்ளிக்கி வாசிக்கவும்

http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_20.html (முதலில் இரவு வரும்)

http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_08.html (ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்) - இந்தக்கதை ஜி.நாகராஜன் எழுதிய நாளை மற்றுமொரு நாளே நாவலின் சில இடங்களை நினைவூட்டியது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக