கேள்விகளால் நிறைந்த ஓர் இளைஞனின் வாக்குமூலம்

ஃபேஸ்புக்கில் இப்போது தான் கண்டேன். மயூரா ரத்தினசுவாமி என் நாவலினை பற்றி எழுதியிருக்கிறார். அதனை அப்படியே சிறிதும் மாற்றத்திற்கு உட்படுத்தாமல் பகிர்கிறேன்.


"கேள்விகளால் நிறைந்த ஓர் இளைஞனின் வாக்குமூலம்"
------

கிருஷ்ணமூர்த்தியின் "பிருஹன்னளை" நாவல் குறித்து....
------

" ஊரெல்லாம் அண்ணன் மனைவியை அண்ணி என்றழைக்கும்போது நான் மட்டும் மன்னி என்று ஏன் அழைக்க வேண்டும்?" என்கிற குழந்தைத்தனமான கேள்வி முதற்கொண்டு "காமத்தில் வழியினைக் கொண்டாட்டமாக மாற்ற முடியும் என்றால் ஏன் மரணத்தை கொண்டாட்டமாக மாற்ற முடியவில்லை?" என்கிற தத்துவார்த்தமான கேள்விவரை கேள்விகள்தான் இந்த நாவலின் மையச்சரடு.

குளத்தில் ஒரு சிறுகல் விழுந்தாலே வட்ட வட்ட அலைகள் கரைவந்து தளும்பும். தொடர்ந்து கற்கள் விழுந்துகொண்டே இருந்தால்?! அமைதியிழந்த குளம், ஆழத்தில் இருப்பதைப் பார்க்கவே அவகாசம் இல்லாமல் போய்விடுவதைப் போல் மீண்டும் மீண்டும் தொடர்ந்த கேள்விகளால் அலைக்கழிக்கப்படும் மனதிற்கு (கிருஷ்ணமூத்தியின் எழுத்து நடையிலும் இதே அலைகழிப்புதான் ) கேள்விகளுக்குள் ஆழமாகச் சென்று பார்க்க கொஞ்சம் காலஅவகாசம் வேண்டும். கேள்விகளைக் கொட்டித்தீர்த்ததே இந்த கால அவகாசத்தை கிருஷ்ணமூத்திக்கு வழங்கலாம்; வழங்கும்.

வாழ்க்கையில் ஒரு கேள்விக்கான பதிலை தேடும்போது அது இன்னொரு கேள்வியை எழுப்பி விடுகிறது. ஒரு சிறுகேள்வி இப்படி முடிவில்லாத வளையங்களை - ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக - உருவாக்கிக்கொண்டே செல்வதை தவிர்க்க இயலாது. எந்த ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்கும் முன் பெரிய கேள்வி ஒன்று வந்து நம்முன் நிற்பதாலேயே கேள்வியை நாம் கடந்துவிட்டதான பாவனைக்குள் தள்ளப்பட்டு முந்தய கேள்வியை மறக்கிறோம் அல்லது அதற்கான முக்கியத்துவம் குறைகிறது.
கிருஷ்ணமூர்த்தி கட்டமைக்க விரும்பும் அல்லது கட்டமைப்பை தகர்க்க விரும்பும் - அதாவது அவர் தன் முன்னுரையில் சொல்வதுபோல - " நாம் நமது சுதந்திரத்தை நம்மாலேயே இழந்துகொண்டு அடுத்தவர் கருத்துக்கிணங்க வாழ்ந்து வருகிறோம். பிம்பங்களை சுமந்துகொண்டு நமக்கான அடையாளங்களை சமூகம் என்னும் ஜனத்திரளில் நசுங்குவதை வேடிக்கை பார்க்கிறோம்" - இப்படிப்பட்ட ஓர் இளைஞனைப் பற்றிய ஆவணப்படமாக, ஒப்புதல் வாக்கு மூலமாக இந்த நாவலை பார்க்கிறேன். இக்கருத்து நாவல் வெளியீட்டின்போது நிகழ்ந்த உரையாடல்களிலிருந்து நான் தொகுத்துக்கொண்டது. 

20 வயது இளஞனுக்குள் இருக்கும் கேள்விகள், குழப்பங்கள், தடுமாற்றங்கள், ஏளனம், வேகம் மரியாதை குறித்தான புரிதல்கள், மையமின்றிச் சுழல்வது அல்லது மையத்தைத் தேடி சுழல்வது... என்று உள்ளது உள்ளபடியே எந்த ஒப்பனைகளுமின்றி - "ஒப்பனைகளுமின்றி" - பதிவாகியிருக்கிறது "பிருஹன்னளை" நாவலில்.

சொல்ல வந்ததை மடமடவென்று கொட்டித் தீர்க்கவேண்டும் என்ற உந்துதலாலோ அல்லது அதீத படைப்பெழுச்சியினாலோ முதல் இருபது பக்கங்கள் வாசகனை மூச்சுத் திணற வைக்கிறது. மறுபக்கத்திற்குப் போவதற்குள் படித்த பக்கம் மறந்து விடுகிறது. கோர்வையற்ற தன்மை முதலில் அயர்ச்சியைக் கொடுத்தது. மூன்று முறை முயன்றும் முதல் 20 முடியவில்லை; ஏராளமான தகவல்கள், ஏராளமான பாத்திரங்கள், ஏராளமான பெயர்கள். போதாததற்கு காலம், இடம், சூழல், வயது பற்றிய விவரணைகளின் போதாமையும் சேர்ந்து கொண்டு வாசகனை வெளித்தள்ளுகிறது. குழப்புகிறது. இந்த குழப்பம், அயர்ச்சி எல்லாம் தான் திட்டமிட்டு உருவாக்கியதாக கிருஷ்ணமூர்த்தி சொன்னாலும் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அதன் போக்குக்கு வந்ததாகவே நான் கருதுகிறேன்.
நாவலின் இரண்டாம் அத்தியாயம் "பார்த்தசாரதி". இதே அளவுக்கு விரிவாக "ஜெயராமன்" பற்றி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்தவொரு நிகழ்வுக்கும் முன்பாக தானாகவே அந்நிகழ்வின் போக்கைப் பற்றிய முன்முடிவுகளை கற்பித்துக் கொண்டு அதனால் அவதியுறும் பாத்திரம் ஜெயராமன். ஜெயராமனின் இம்மனப்போக்கை தட்டையான தொனியில் விவரித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதனாலேயே வாசிப்புத் தன்மை குறைந்து கடினப்பட்டுப் போனதாகவும் தோன்றுகிறது. 

நாவலில் ஜெயராமனின் இறப்பு இயற்கையா தற்கொலையா என்பது பற்றி ஆசிரியர் எங்கேயும் பேசவில்லை. ஆனால் தற்கொலையாக இருக்கலாம் என்கிற முடிவுக்கு வாசகனைக் கொண்டு சேர்ப்பது போகிறபோக்கில் ஆச்சரியமாக பதிவாகியிருக்கிறது. இதேபோல் துக்கம் விசாரிக்க சொந்த ஊருக்கு வரும் பார்த்தசாரதி அதைச் செய்யாமலேயே திரும்பி விடுவது ஓர் இயற்கையான நிகழ்வு போல் கையாளப்பட்டுள்ளது. இதேபோல் அஞ்ஞானவாசத்தில் அர்ச்சுனன் பெண்வேடமிட்டு "பிருஹன்னளை"யாக மறைந்து வாழ்வது கிருஷ்ணமூர்த்தி தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவைகளுக்கு ஒரு குறியீடாக வந்து போகிறது. 

மொத்தமாகப் பார்க்கும்போது கிருஷ்ணமூர்த்தியின் தேடலில் விளைந்த இந்த முதல் நாவல், கிருஷ்ணமூர்த்தியின் தன்னிலை விளக்கமாகவும், வாக்குமூலமாகவும் பதிவாகியிருக்கிறது. கிருஷ்ணமூர்த்திக்குள் இருக்கும் கேள்விகள் அவரை தேடல் நிறைந்தவராகவும், அத்தேடல் வழியே கண்டடையும் உண்மைகளும், மாயைகளும், கையறு நிலையும் இனிவரும் அவரது படைப்புகளில் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியதாக பதிவாகும் என நம்பலாம். கேள்விகளின் வேர்களை நோக்கி அவர் தேடல் திரும்பும் பட்சத்தில் இன்னும் காத்திரமான கிருஷ்ணமூர்த்தியிடம் எதிர்பார்க்கலாம். கூடிய விரைவில் படைப்புகளின் அரசியல் குறித்தும், படைப்பாளிகளின் அரசியல் குறித்தும் விடைதெரியாத கேள்விகள் இவருக்குள் நிச்சயம் எழும். 

புலிவாலை பிடித்துக் கொண்ட கிருஷ்ணமூர்த்தியை வரவேற்போம்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக