கதாபாத்திரத்தின் வருகை


நான் கல்லூரி சேரும் முன்பு வரை உயிர்மை மாத இதழினை தவறாமல் வாங்கி அதோடு நில்லாமல் வாங்கிய அன்றே வாசித்து வந்து கொண்டிருந்தேன். கல்லூரி சேர்ந்தவுடன் நாவல்கள் வாசிப்பதோடு சரி. கோவையிலிருந்து ஊருக்கு வரும் போது ஏதேனும் இதழ்களினை வாசிப்பேன்.

முன்பு வாசித்து வந்தேன் என சொன்னேன் அல்லவா அப்போது இதழினை கையினில் வாங்கியவுடன் வாசிப்பது சாரு நிவேதிதா எழுதிய உலக பட விமர்சனம் எஸ்.ராமகிருஷணன் மற்றும் பிரபஞ்சனின் எழுத்து மற்றும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும். வாசிப்பதோடு அந்த இதழ் முடியும் போது சாரு நிவேதிதா மற்றும் மனுஷ்யபுத்திரனின் பகுதிகளை வெட்டி சேகரித்து வைத்துக் கொள்வேன்.

தொடர்ந்து அவருடைய கவிதைகளை வாசித்து வந்ததால் தான் அவரின் கவிதை நூல்களை வாங்க வேண்டும் என ஆசை வந்தது. அதனையும் வாங்கி வாசித்தேன். ஆனாலும் அந்த உயிர்மையில் நான் வாசித்த குறிப்பிட்ட கவிதை ஒன்று நீங்காமல் என்னிடம் இடம் பிடித்திருந்தது.

இன்று காலையிலிருந்து அதனை தேடிக் கொண்டிருந்தேன். சிலந்திகளின் கூடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்தார் மனுஷ்யபுத்திரன். ஆனாலும் சுவை குறையவே இல்லை. . . 

இன்று காலை
எட்டரை மணிக்கு
ஒரு கதாபாத்திரம்
என் வாழ்க்கையில் நுழைந்தது

நான் இந்த வாக்கியத்தை
சரியாக எழுதியிருக்கிறேனா ?
சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்
நான் கதை எழுதுபவன் அல்ல
மேலும் என்னைப் பற்றியும்
எந்தக் கதைகளும் இல்லை
ஒரு கதாபாத்திரத்திற்கு வேறு வழியில்லை
அது நேராக
என் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது

நான் எனக்கு மிகவும் பிடித்த 
எழுத்தாளனின் கதையை சொல்லி
அங்கிருந்துதானே வருகிறாய் என்று கேட்டேன்
கதாபாத்திரம்
வேறொரு எழுத்தாளனின் பெயரினை சொன்னது
அந்த எழுத்தாளன் எல்லா கதாபாத்திரங்களையும்
பாதியிலேயே கொன்றுவிடுபவன் என்பதால்
அது பொய் சொல்கிறது என்பதை கண்டுபிடித்தேன்

கதாபாத்திரம் தனக்கு
ஒரு பெயர் இருப்பதைச் சொன்னது
அந்தப் பெயர் கூட
எனக்கு சந்தேகத்திற்கு உரியதாகவே இருந்தது
அந்த மாதிரியான தோற்றமுள்ள
கதாபாத்திரங்களுக்கு
அந்த மாதிரியான பெயர்களை
எந்த எழுத்தாளனும் சூட்டுவதில்லை
இதிலெல்லாம் சில திட்டவட்டமான
ஒழுங்குகள் இருக்கின்றன

ஆனால் அது ஒரு கதாபாத்திரம் தான் என்பதில்
எனக்கு சந்தேகமே இல்லை
ஒரு கதாபாத்திரம் 
எப்படி ஒரு நாற்காலியில் அமருமோ
அதுபோலவே அதுவும் அமர்ந்தது
ஒரு கதாபாத்திரம்
முதல் வாக்கியத்தை எப்படிப் பேசுமோ
அப்படியே அதுவும் பேசியது
ஒரு கதாபாத்திரம்
எந்த இடத்தில் நம் இதயத்தை தொடுமோ
அது போலவே அதுவும் தொடுகிறது

கதாபாத்திரத்தின் ஆடைகள்
ஏன் கசங்கியிருக்கின்றன என்று கேட்டேன்
அதற்கு அது
ஒரு கதையைச் சொன்னது
அதன் டைரியில்
ஏன் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன
என்று கேட்டேன்
அதற்கு அது
இன்னொரு கதையை சொன்னது
அது ஏன் எப்போதும்
பதட்டத்துடன் திரும்பி திரும்பி பார்க்கிறது
என்று கேட்டேன்
அதற்கு அது சொன்ன கதை தான்
எல்லாவற்றையும் விட விசித்திரமானது
அது எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது
மௌனமாக இருந்தது
எப்போதும்
கதாபாத்திரங்களின் மௌனங்கள்
சொற்களை விட நம்மை மனம் கசிய செய்வது
இல்லையா ?

எனக்கு ஒரு கதாபாத்திரத்திடம்
எப்படி உரையாடுவதென்றே தெரியவில்லை
எல்லாவற்றையும் கதைகளாய் மாற்றிவிடும்
என் நண்பனிடன் அதை அழைத்துச் செல்லட்டுமா
என்று கேட்டேன்
எல்லா கதாபாத்திரங்களிடமும்
தன்னுடைய உணர்ச்சிகளை கலந்துவிடுபவனிடம்
என்னை ஒப்படைத்துவிடாதே என்று
அது கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டது

நீ ஏன் உன் கதையை விட்டு
வெளியே வந்தாய் என்று கேட்டபோது
அரைகுறையாக உருவாக்கப்பட்ட
கதாபாத்திரங்களின் துக்கத்தை
ஒரு வாசகனுக்கு
ஒரு போதும்
புரியவைக்க இயாலாது என்றது

கதாபாத்திரம்
என் கண்களை நேராக பார்த்துப் பேசுகிறது
நான் மனிதர்களின் கண்களை
ஒருபோதும் சந்திப்பதே இல்லை
நாம் யாருடைய கண்களை பார்க்கவில்லையோ
அவர்களை பற்றிய எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுபட்டு விடுகிறோம்
ஆனால்
ஒரு கதாபாத்திரத்தின்ன் கண்களை
நம்மால் தவிர்க்க முடிவதே இல்லை
அது பல நேரங்களில்
நமது கண்களைப் போலவே இருக்கிறது
அல்லது நம்மால் ஒரு போதும்
மறக்க முடியாதவர்களின்  கண்களாக இருக்கிறது

புத்தகத்திலிருக்கும்
ஒர்ரு கதாபாத்திரத்தினை துண்டிப்பது எளிது
நீங்கள் அந்தபக்கத்தை
மூடி வைத்துவிடுகிறீர்கள்
நாடகத்திலிருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை விலக்குவது எளிது
திரைகள் விழுந்துவிடுகின்றன
சினிமாவில் இருக்கும்

ஒரு கதாபாத்திரத்தை அழிப்பது எளிது
விளக்குகள் எரியத் தொடங்கிவிடுகின்றன
வாழ்க்கைக்குள் ஒரு கதாபாத்திரம் வரும் போது
எல்லா ஒழுங்குகளும் குலையத்
தொடங்கிவிடுகின்றன
ஒவ்வொரு சிறிய செயலும்
ஒவ்வொரு சிறிய எண்ணமும்
ஒரு புனைவாகத் தொடங்கிவிடுகிறது

ஒரு மனிதனை வெளியேற்றுவது போல
ஒரு கதாபாத்திரத்தை செய்ய முடியாது
ஒரு அன்பை புறக்கணிப்பது போல
ஒரு கதாபாத்திரத்தின் இருப்பை புறக்கணிக்க
இயலாது

ஒரு நிஜ மனிதனும்
ஒரு கதாபாத்திரமும்
எப்படி ஒன்றாக
ஒரு வாழ்க்கையைப்
பகிர்ந்துகொள்ள முடியும் என
கதாபாத்திரத்திடம் துக்கத்தோடு கேட்டேன்

எந்த ஒரு கதாபாத்திரமும்
எப்போதும் ஒரு மனிதனாவதில்லை
ஆனால்
எல்லா மனிதனும்
ஒரு கதாபாத்திரம் ஆகலாம்தானே
என்று அது
என்னை நோக்கிப் புன்னகைத்தபோதுதான்
நான் அதன் வருகையைப்
புரிந்துக் கொள்ள தொடங்கினேன்
-மனுஷ்யபுத்திரன்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக