The ABCs of death - 2012

இதுவும் சற்று 18 வயதிற்கு உட்பட்டோருக்கான படம் தான். இந்த படம் பார்ப்பதற்கு முன் எனக்கும் ஒருவருக்கும் விவாதம் ஒன்று நடந்தது. அதில் அவர் நோலனினை பிடிக்கவில்லை என சொல்லியிருந்தார். நானோ நோலனின் அதிதீவிர ரசிகன். அவரை சமாளிக்க எனக்கு மனம் வரவில்லை. அதற்கு காரணம் அவர் சினிமாத் துறையில் இருப்பவர். சினிமாத் துறையில் இருப்பவர்கள் தங்களை மேம்படுத்துவ்தற்காகவாவது அனைத்துலக சினிமாக்களையும் பார்ப்பார்கள் என யூகம் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை என்ன தெரியுமா
உலகமே கொண்டாடும் மெமெண்டோவினை என்னால் ஒரு மணி நேரம் தாண்டி பார்க்க முடியவில்லை. இது தான் இப்பட கட்டமைப்பின் சூட்சுமம் என அறிந்த பின் என்னால் அந்த படத்தினை தொடர முடியவில்லை என்றார்.
அடுத்து டார்க் நைட் உலகமகா மொக்கை!!!

இதனை நான் எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்தால் அவர்களின் கருத்து சுதந்திரத்தில் நுழைவது போலாகிவிடும். அவரின் ரசனை அப்படி. ஆனால் மெனெக்கெட்டு இக்கே குறிப்பிடுவதன் காரணம் இடையில் அவர் குவெண்டின் டரெண்டினோ செய்யாத புதுமையா நோலன் செய்திருக்கிறார் என்றார். டரெண்டினோவினை இப்படி ரசிக்கிறாரே அப்படி அவர் படங்களில் என்ன இருக்கிறது என பார்க்க ஆசைப்பட்டேன். அப்போது தான் செர்பியன் ஃபில்ம் படம் பார்க்க நேர்ந்தது. பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

இந்த செர்பியன் ஃபில்ம் அதீத தாக்கத்தினை என் மேல் திணித்துவிட்டதால் அந்த இயக்குனர் வேறு ஏதேனும் படங்கள் இயக்கியிருக்கிறாரா என தேடினேன். அப்போது என் பார்வைக்குள் சிக்கியது தான் The ABCs of death.

இந்த படம் பார்க்கும் போது எனக்கு தோன்றியது இப்படியுமா படம் எடுக்க முடியும் என்பது தான். இந்த படம் முழுக்க எனக்கு பிடிக்கவில்லை. உலக படங்கள் என்பதால் எழுதுகிறேன் என்பதும் இங்கு இல்லை. இந்த படம் முழுக்க புதிய முயற்சி. அப்படியென்ன புதிய முயற்சி யெனில் இப்படத்தின் முதலில் சொல்லப்படும் விஷயத்தினை சொல்கிறேன்
உலகத்தில் 26 இயக்குனர்களிடம் ஒவ்வொரு எழுத்தினை கொடுத்து அந்த எழுத்தில் தொடங்கும் வார்த்தை ஒன்றினை உருவாக்க சொன்னார்கள். அந்த வார்த்தைகளை தலைப்பாக வைத்து அவர்களையே குறும்படம் ஒன்றினையும் எடுக்க சொன்னார்கள். ஆனால் அந்த 26 குறும்படமும் ஒரே கருவினை கொண்டது. அந்த கரு - மரணம். குறும்பட ரசிகர்களுக்கு இந்த படம் அருமையான விருந்து.


இப்படத்தினை நாம் நான் - லீனியர் என தாராளமாக சொல்லலாம். ஏனெனில் பல இயக்குனர்களின் பார்வையில் மரணம் கொள்ளும் தோற்றம் கதையாகிறது. ஒன்றோடொன்று ஒரு போதும் ஒற்றுமையினை கொள்ளப்போவதில்லை. மரணம் சார்ந்து பன்முகத் தன்மையினை அல்லது பன்முக உருவத்தினை இப்படம் பார்வையாளனுக்கு கொடுக்கிறது. இருபத்தி ஆறு வழிகளில் மரணம். அதில் சில மரணங்கள் உருக்கும் வண்ணம் படாமாக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் இதே விஷயம் தான் இப்படத்தின் பின்னடைவாகவும் படுகிறது. அதனை பின் சொல்கிறேன். என் புரிதலில் இக்கதையினை அல்லது நான் ரசித்ததை முதலில் சொல்கிறேன். என்ன சில குறும்படங்கள் மொழி புரியாததால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

Apocalypse - இதன் அர்த்தம் என்ன என பார்த்தேன். தீமையினை அழித்து நன்மையினை நிலைநாட்டுதல் என சொல்லப்பட்டிருக்கிறது. திரையிலோ ஒருத்தி ஒருவனை கொடூரமாக கொல்கிறாள். இரத்தத்துடன் படம் ஆரம்பிக்கிறது. முதல் கதை முடிகிறது. இதில் வசனம் அதிகம் என்பதால் அடியேன் தோற்றுவிட்டேன் - புரிதலில்.

Big Foot - கணவன் மனைவி இருவரும் புணர்வதற்கு ஆசை படுகிறார்கள். ஆனால் குழந்தை தடையாக இருக்கிறது. அப்போது அக்குழந்தைக்கு ஒரு கதையினை இருவரும் சொல்கிறார்கள். அது சற்று பயமான கதை. குழந்தை உடனே பயந்து தூங்குகிறது. அப்போது குப்பை போடும் ஒரு அகோர முகம் கொண்டவன் அந்த தெருவின் வழியே செல்கிறான். இவர்கள் புணர்வதை பார்க்கிறான். குப்பை கேட்க வந்த அவன் அப்படியே இருவரையும் சிதைத்து விடுகிறான். இவர்களின் கதறல் அக்குழந்தைக்கு கனவின் பயமாக மாறி அப்படியே உறங்கிக் கொண்டிருக்கிறது. போர்வையிலிருந்து எழாமல்.

Cycle - இது அட்டகாசமான படம். நான் harry-potter-and-prizonar-of-azkaban பற்றிய கட்டுரையினை எழுதியிருந்தது நினைவு இருக்கிறதா ? அதில் வருவதை போலவே இதிலும் கதாபாத்திரம் சுழற்சியில் தன்னையே அடையாளம் கண்டு கொள்கிறது. தன்னையே கொல்கிறது. எத்தனை தூரம் நம்மை நம் அடையாளம் கொல்கிரது என்பதனை மனதில் வைத்து சித்தரித்ததை நன்கு உணர முடியும். ஆனால் முழுக்க சீட் நுனியில் கொடுத்திருக்கும் திகில் அட்டகாசம். காட்சிக்குள் அதிகம் இழுக்கும் வண்ணம் இப்படத்தினை அவர் இயக்கி இருக்கிறார்.

Dog fight - இது அட்டகாசமான மரணம். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சண்டை. அந்த சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை. இதில் என்னை ஆச்சர்ய பட வைத்தது கேமிரா தான். அந்த நாயினுக்கு ஒரு கம்பீரத்தினை கொடுத்திருக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. எப்படி சொல்லலாமெனில் நம் படங்களில் ஹீரோ வரும் போது எப்படி விசில் பறக்கும் தியேட்டர்களில். அது போல் இந்த நாயினை வளைத்து வளைத்து காட்டுகிறார்கள்.அதிலும் அந்த நாயினை நடிக்க வைத்திருக்கும் விதம் புல்லரிக்க வைக்கிறது. நேரில் கூட அப்படி நான் பார்த்ததில்லை. அத்தனை தூரம் கேமிராவும் நாயும் திகில் தன்மையினை கொடுக்கிறது.

Exterminate - ஒரு பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிக்க மரணம் தான் முடிவு என நினைக்கிறோம். ஒன்று அந்த பிரச்சினையின் மரணம் அல்லது நம் மரணம். இந்த பிண்ணனியில் ஒரு கதை.

Fart - சத்தியமாக இக்கதை எனக்கு புரியவில்லை. ஏதோ குசு சம்மந்தப்பட்ட கதை என்பது மட்டும் காட்சிகளால் புரிந்து கொள்ள முடிகிறது.

Gravity - இந்த காட்சி ஒரு மரணத்தினை மட்டுமே காண்பிக்கிறது. மனிதன் தப்பிக்க முடியாத ஒரே அரண் இயற்கை. இன்பமும் துன்பமும் கலந்த ஒரு பண்டம். அதை மனிதர்களில்லாமல் இயற்கையினை வைத்து மட்டும் காண்பித்திருக்கிறார். எப்படி என யோசிக்க முடியவிலை தானே ? படத்தில் பாருங்கள்...

Ingrown - இந்த படம் மனதினை ஒருக்கணம் உறைய வைக்கிறது. மனைவிக்கு போதை மருந்தினை அளிக்கிறான் கணவன். ஏன் என்பது சொல்லப்படவில்லை. அது அவளுக்கு அரிப்பினை உடல் முழுக்க தருகிறது. கை கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருக்கிறது. அவள் துடிக்கிறாள். அவனாலேயெ அதனை காண முடியவில்லை. அங்கிருந்து சென்று விடுகிறான். கைகள் தரையினை தொடுகிறது. அவளின் மோதிரவிரலில் இரத்தத்துடன் இருக்கும் மோதிரம் கேமிராவில் நமக்கு காட்டப்படுகிறது.

Libido - இது நேற்று எழுதிய செர்பியன் படத்தினை போன்றது. காமம் வதை இரண்டும் பெண்களால் ஆண்களின் மேல் செலுத்தப்படுகிறது. ரணக்கொடூரமாக இக்கதையின் நாயகன் சித்தரிக்கப்படுகிறான். பெண்கள் செய்யும் வதைகளில் பதிமூன்று நிலைகளுக்கு செல்கிறான். முக்கியமாக உயிருக்கு பயந்து. அப்படியும் அவனுக்கு ஒன்று தான் கிடைக்கிறது. மரணம். முதல் நிலையிலேயே தெரிந்தது இருந்தும் சந்திக்க அவன் கொள்ளும் பயம் அட்டகாசமான நடிப்பு.

Miscarriage - இந்த 26 படங்களிலேயே மிகக் குறுகிய படம் இது தான். ஆனால் அவ்வளவு உருக்கமான ஒரு காட்சி. ஒருத்தி கக்கூசில் எதையோ உள்ளே செல்ல வைக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. உள்ளே தள்ள குச்சி ஒன்றினை எடுத்து வருகிறாள். கேமிரா அந்த கக்கூஸினை காண்பிக்கிறது. இரத்தம் இடையே பிய்க்கப்பட்ட சிசு. மூன்றிலிருந்து ஏழு மாத சிசு. இதை தாண்டி சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.

Nuptials - இந்த படம் எனக்கு ஒட்டு மொத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இதில் குறுகிய நேரத்தில் வரும் காதல் சித்தரிப்பு மெல்லிய புன்னகையினை எனக்கு அளித்தது. கதாநாயகன் மோதிர டப்பாவினை திறக்க கிளி அந்த மோதிரத்தினை நாயகியிடம் தர அந்த ஜப்பான் காரி போல இருக்கும் நாயகி கொழு கொழு கன்னங்கள் குழுமும் வண்ணம் சிரிக்கும் விதம் சே அந்த அழகு கண்ணிற்குள்ளேயே நிற்கிறது. அடுத்த காட்சி அவளா இப்படி என சொல்ல வைக்கிறது!!!

Orgasm - இப்படத்தில் வரும் ஸ்லோ மோஷன் காட்சிகள் அசர வைக்கிறது. ஒரு பெண்ணினை மட்டுமே அவளின் உணர்ச்சிகளுக்கேற்றாற் போல இசையும் கேமிராவும் கிரங்க அடிக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அவளின் உணர்வுகளை ஈசிஜி கிராஃபினை போல அந்த காட்சி அமைப்பும் அதன் வேகமும் நமக்கு கொடுக்கிறது. பிரமிப்பில் ஆழ்த்திய காட்சி இந்த படம்.

Pressure - இந்த கதை கண்ணீர் வரும் அளவு இருக்கிறது. பெண்ணின் தேகம் ஆனது அப்பெண்ணின் தேவைக்கும் சமூகத்தின் தேவைக்கும் ஏற்ப பொருளாக பாவிக்கப்படுகிறது. ஏதொ ஒன்று இங்கே இதற்கிடையில் மரணித்துக் கொண்டிருக்கிறது. இது தான் நியதி என்பதை அவ்வளவு தத்ரூபமாக வேசியாக மாறும் ஒரு பெண்ணின் கதையினை இப்படம் சொல்கிறது.

XXL - இந்த கதை கொஞ்சம் செயற்கை தன்மையினை கொண்டிருந்தாலும் எனக்கு ஈர்ப்பினை அளிக்கிறது. பருத்த பெண். ஒல்லியாக வேண்டும் என நினைக்கிறாள். ஊரே அவளை கிண்டலடிக்கிறது(இதை காட்டியிருக்கும் விதம் தான் எனக்கு செயற்கையாக படுகிறது). அதற்கு அவள் செய்யும் விஷயம் என்ன தெரியுமா ? அவளின் தேகம் எப்படி இருக்கிறதோ அப்படி தன் தேகத்தினை அறுத்துக் கொள்கிறாள். அதன் காட்சி அதில் அவளின் முக பாவனை, செய்து முடிக்கும் போது சிதைக்கப்பட்ட அவளின் முகத்தில் தெரியும் சந்தோஷம் அனைத்தும் மரணத்தினை வரவேற்கிறது. கிட்டதட்ட இந்த ஒரு படம் தான் மரணத்தினை படத்தில் வரவேற்கிறது.

இதில் விடுபட்ட எழுத்துகளில் உள்ள படங்கள் என்னை அதிகம் ஈர்க்கவில்லை. சில படங்கள் பார்க்கவே முடியாதபடி சலிப்பினை தருகிறது. அதன் பெயர்கள் - Hydro electric diffusion, Jidei-Geki, Klutz  Quack, Removed, Speed, Toilet, Unearthed, Vagitus, WTF!, Youngbuck, Zetsumetsu.

படத்தில் குறை என சொல்லியிருந்தேன் அல்லவா அது யாதெனில் 26 இயக்குனர்களும் ஒரு போலவே இருக்க முடியாது. கதை சார்பாகவும் சரி டெக்னிகல் சார்பாகவும் சரி. உதாரணம் நாய் சண்டை படத்தில் கொடுக்கப்படும் உயிர் முழுக்க கேமிரா சார்ந்தது. அதில் குறிப்பாக குழந்தை ஒன்று தெரியும். உயிருக்காக, உயிர் வாழ்தலுக்காக மரணத்துடன் இருவர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அக்குழந்தை உற்சாகத்துடன் ரசிக்கும். இதனை கேமிரா மிக துல்லியமாக காண்பிக்கும். இந்த படம் முழுக்க ஒரு விரைவு திகில் குறிப்பாக ஜனரஞ்சக தன்மையுடன் இருக்கிறது.

அதே அடுத்த படமான எக்ஸ்டெர்மினேட் ஸ்லோ திகில். இங்கே அந்த நாய் சண்டை படத்தில் இருபது போல கேமிராவின் ஆதிக்கம் இல்லை. அது தரும் தாக்கம் இதில் உடைந்து விடுகிறது. உடைவதோடு மட்டுமில்லாமல் இந்த காட்சியுடன் நாம் ஒன்ற வேண்டும். மேலும் சில படங்கள் உண்மையில் அலுப்பு தட்டும் வகையில் இருக்கிறது. இதனால் படத்தின் தொடர்ச்சியினை அநேக இடங்களில் நாம் இழந்துவிடுகிறோம்.

என்ன தான் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித கொலைகளை அல்லது வதைகளை முன் வைத்து சொல்லப்பட்டிருந்தாலும் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நடிப்பு போன்றனவெல்லாம் முக்கிய பங்கு பார்வையாளனிடம் இருக்கிறது. காட்சி கொடுக்கும் இன்பம் தான் கதையினை பார்வையாளனிடம் சேர்க்கிறது. அது இங்கே அறுபடுவதால் படம் கொஞ்சம் பின்னடைவினை காண்கிறது.

இதன் மூலம் பெரிய விஷயம் ஒன்றினை அறிந்து கொண்டேன். குறும்படங்கள் எடுப்பது நிச்சயம் சாதாரண விஷயம் கிடையாது. அந்த படங்களில் அதீத ஆதிக்கம் இசை மற்றும் காமிராவில் தான் இருக்கிறது. இந்த அனைத்து இயக்குனர்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். குறுகிய நேரத்தில் ஒரு தத்துவத்தினை கதாபாத்திரமே இல்லாமல் ஒரு கதையினை சொல்வது சாதாரணமானது அல்ல. குறும்படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய மனிதர்களாக எனக்கு இப்படம் பார்க்கும் போது படுகிறார்கள்.

இந்த படம் ஒரு நவீன முயற்சி என்பதனாலேயே நான் சிலாகித்து எழுதியிருக்கிறேன். இது போல் புது முயற்சிகள் தமிழில் வராதா என உண்மையில் ஏங்குகிறேன். தமிழ் சினிமா பின்னடைந்து இருக்கிறது என ஒரு போதும் சொல்லமாட்டேன். இப்போது இளம் இயக்குனர்களால் முன்னேறுகிறது. என்ன நான் கொஞ்சம் புதுமையினை எதிர்பார்க்கிறேன். உலகத்தினை நம் பக்கம் பார்க்க வைக்கும் புதுமையினை. . . 

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Unknown said...

i wanna meet you... if u wanna knw abt me pls go throght my fb id....prabhusrinivas(prabhucheenu)

Post a comment

கருத்திடுக