Pulp Fiction - 1994

குவெண்டின் டரெண்டினோ என சில பதிவுகளுக்கு முன் ஒரு பெயரினை சொல்லியிருந்தேன். அவருடைய படங்களை பார்க்க வேண்டும் என அதிக ஆசையினை கொண்டிருந்தேன். ஒரே ஒரு படத்தினை தான்  இதுவரை பார்த்திருக்கிறேன். அது django unchained. அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது இந்த படங்கள் எப்படி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கபடுகிறது என. அதற்கு காரணம் முழுக்க ஜனரஞ்சகமாக இருக்கும் படங்களையும் விருதுகளுக்கு தேர்ந்தெடுப்பார்களா என்னும் சிறுபிள்ளை தனம் தான்.

இந்த படம் பார்க்கும் போது குவெண்டின் டரெண்டினோ மீது அதீத நம்பிக்கை வருகிறது. காரணம் ஜாங்கோவில் என் மீது கொடுத்த ஆச்சர்யத்தினைவிட பன் மடங்கு அச்சர்யத்தினை இப்படத்தில் கொடுக்கிறார். இவ்வளவு நாள் மிஸ் செய்த இயக்குனர்களில் இவரும் ஒருவர் என இப்போது உணர்கிறேன். எனக்கு பிடித்த கட்டமைப்பில் அடியேனை அதிகம் கவர்ந்துவிட்டார்.

அப்படி என்ன ஆச்சர்யம் ? நான் லீனியர் படங்களினை பார்த்திருப்பீர்கள். இல்லையெனினும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். ஒரே ஒரு கதையினை முழுக்க உருவாக்கி அதன் திரைக்கதையினை உடைத்து மாற்றி மாற்றி போடுவது. அப்படி செய்வதால் அதனை சரியாக பார்த்து சேர்க்க வேண்டிய கடமை பார்வையாளனுக்கு வருகிறது.

இன்னுமொரு வகை சம்மந்தம் இல்லாமல், இப்படி சொல்வது கூட சரியில்லை மறைமுகமான சம்மந்தத்தினை கொண்ட பல கதைகளை கோர்த்து ஒரு படமாக்குவது. இந்த வகையில் பார்வையாளன் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறான். அது யாதெனில் கதை கோர்ப்பது மட்டுமின்றி கதையினை சித்தரிப்பதும் அவனுடைய வேலையாக இருக்கிறது. காரணம் சம்மந்தமில்லாது காட்சிகளை காண்பிக்கும் போது பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த சலிப்பினை கொடுக்காமல் நான் லீனியர் எடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் இடையே ஏதேனும் ஒரு வெளிப்படையான தொடர்பு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த தொடர்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் சற்று சவாலான ஒன்று. காரணம் கதையின் மூலமாக அல்லது வசனங்களின் மூலமாக இதைவிட வித்தியாசமான ஒன்று இசையின் மூலமாக. இந்த இசையினை தான் இங்கு பல்ப் ஃபிக்‌ஷனில் அழகுற செய்திருக்கிறார். சரி இப்போது படத்திற்குள் செல்வோம்.


இந்த படத்தின் கதை என்ன ? இது ஆறு பாகமாக பிரிந்து இருக்கிது.

1. இருவர் ஒரு உணவு விடுதியில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவில் அந்த உணவு விடுதியினை கொள்ளை அடிக்க இறங்குகிறார்கள்.

2. ஜூல்ஸ் வின்சென்ட் என இருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார்கள். அங்கிருந்து ஒரு பெட்டியினை எடுக்கிறார்கள் அதனை வைத்திருந்த ப்ரெட் என்பவனை கொல்கிறான்.

3. வின்சென்டின் பாஸின் பெயர் மார்செலஸ். மார்செலஸ் பட்ச் என்பவனிடம் குத்துச் சண்டையில் தோற்பதற்கு ஒரு பகுதி பணத்தினை அளிக்கிறார். அப்போது பெட்டியினை கொடுக்க அங்கே இருவரும் வருகிறார்கள். மேலும் அவர் வெளியூர் போகும் போது தன் மனைவி தனிமையினை உணர கூடாது என அவளை பாதுகாக்க வின்சென்டினை வைக்கிறார். அவளுடன் சென்று ஒரு விடுதியில் சாப்பிடுகிறான் ஆடுகிறான். வீடு திரும்பி சீக்கிரம் தன் வீட்டிற்கு செல்லலாம் என முடிவெடுக்கும் போது அவள் இவன் வாங்கி வைத்திருந்த போதை பொருளினை உட்கொள்கிறாள். மூக்கிலிருந்து இரத்தமும் வாயிலிருந்து நுரையும் வழிகிறது. அவளை காப்பாற்ற வின்சென்ட் அந்த போதையினை வாங்கிய ஆளிடமே எடுத்து சென்று அவளை காப்பாற்றுகிறான்.

4. பட்ச் என்பவனுக்கு அவனுடைய அப்பா இறக்கும் போது வைத்திருந்த கோல்ட் வாட்சினை ஒருவன் வந்து தருகிறான். இது அவனுடைய கனவு. அது முடிந்தவுடன் அவன் போட்டிக்கு செல்கிறான். ஆனால் அவன் அடித்த அடியில் எதிராள் செத்துவிட்டான். அதனால் மார்செலஸ் ஆட்கள் துரத்துகிறார்கள். தன் மனைவியுடன் சென்றுவிடலாம் என நினைக்கும் போது அவனுடைய பழைய வாட்சினை காணவில்லை. அது பழைய அபார்ட்மெண்டில் இருக்கிறது என எடுக்க செல்கிறான். அங்கு ஒரு பிரச்சினையாகி அதில் ஒருவனிடமிருந்து மார்செல்ஸினை காப்பாற்றி தன்னையும் காப்பாற்றிக் கொள்கிறான்.

5. ப்ரெட்டினை கொன்றவுடன் பக்கத்து அறையிலிருந்து ஒருவன்ஐவர்கள் இருவரையும் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் குண்டுகள் எதுவும் அவன் மேல் படவில்லை. கடவுளின் சக்தி என அவனும் வின்சென்டும் அந்த அறையிலிருந்த ஒருவனுடன் செல்லும் போது பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது வின்சென்ட் செய்த தவறினால் மூன்றாமவன் இறந்து விடுகிறான். அந்த காரினை நண்பனின் உதவியோடு சரி செய்து கிளம்புகிறார்கள். அவன் இந்த தொழிலினை முடிக்க முடிவு கொள்கிறான்.

6. ஒரு உணவு விடுதியில் இருவரும் உணவு உட்கொள்கிறார்கள். அங்கு ஒரு கொள்ளை நடக்கிறது. அதில் அவர்களை திருத்தி பெட்டியுடன் அங்கிருந்து இருவரும் செல்கிறார்கள்.
இத்துடன் படம் முடிகிறது. ஒரு நாவலின் அமைப்பில் நாம் வாசிகும் கதைகளை அப்படியே படமாக எடுத்தால் என்ன நடக்குமோ அது தான் இங்கும். மேலும் இப்படத்தில் டரெண்டினோ அருமையான ஒரு விஷயத்தினை செய்துள்ளார். படம் இரண்டரை மணி நேரம். ஆறு பாகங்கள். சரியாக பிரித்தால் கூட கராராக அரை மணி நேரம் வரும். இது தான் விஷயமே. அரை மணி நேரம் தொடர்ந்து ஒரு காட்சியினை நாம் பார்க்கிறோம். யதார்த்தமாக கதையினை எதிர்பார்ப்போம். இங்கும் அப்படியே எடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க நாம் மூழ்கும் போது கதை அப்படியே சுமுகமாக முடிகிறது. அடுத்த பகுதிக்கு செல்கிறோம் என்பதை சொல்லாமல் வாழைபழத்தில் ஊசியினை ஏற்றுவது போல் செய்கிறார் இயக்குனர்.

எப்படி ஆழமாக சொல்கிறார் எனில் வசனங்களில். சின்ன உதாரணமெனில் எனக்கு பிடித்தது இரண்டாவது சாப்டர் தான். காரில் வின்சென்டும் ஜூலியசும் சாப்பாடு வகைகளையும் ப்ரெஞ்சு நாடுகளில் இருக்கும் உணவு வகைகளை பற்றியும் மார்செலஸ் மனைவி மியாவினையும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு வருகிறார்கல். அப்போது அந்த வீட்டிற்குள் வந்து ப்ரெட் சாப்பிடும் சாப்பாடுகளை ஜூலியஸ் சாப்பிடுகிறான். அப்போது அவன் பேசும் மொழி இருக்கிறதே. சே அப்படியொரு dialogue convey இனை பார்த்ததேயில்லை. பேசிக் கொண்டிருக்கும் பொதே குறிப்பாக ஒரு பைபிளின் வாசகம் ஒன்றினை அவன் சொல்லுவான். அப்போது அவனின் உச்சரிப்பு, உதடின் அசைவு கண்களிலும் முக பாவனையிலும் காட்டும் பாவனை ஏதோ சுவாரஸ்யமாக நடக்க இருக்கிறது என நம்மை சொல்ல வைக்கிறது. அந்த திகிலினை சீட் நுனியில் நம்மை கொண்டு வரச் செய்கிறது.


இந்த காட்சியினை பாருங்கள். அந்த முகபாவனையினை அழகுற உணர முடியும். உண்மையில் அந்த காட்சியினை இதுவரை ஆறு ஏழு முறை பார்த்துவிட்டேன்.

சீட் நுனி எனும் போது தான் இந்த படம் இதில் அதிக பங்கு வகிக்கிறது என அறிந்து கொண்டேன். சில காட்சிகளில் வசனங்களில் அவர் இந்த திகிலினை கொண்டு வருகிறார். இதனை திகில் என சொல்லுவதை விட காட்சி தரும் இன்பம் என சொன்னால் நன்றாக இருக்கும். படம் முழுக்க ஏகப்பட்ட வசனங்கள் வந்தாலும் ஒரு இடம் கூட அலுக்கவில்லை. வசனங்கள் இல்லாத இடங்களில் கேமிராவினை கொண்டு அவர் கொடுக்கும் திகில் அதி ஆச்சர்யம்.

ஒரு கதாபாத்திரம் எதனையோ தேடி செல்கிரதெனில் கேமிரா நகர்வதும் அதனை போலவே சென்று ஒரு தேடலை நமக்கு தருகிறது. மேலும் ஒரு விஷயம் கேமிரா சார்ந்து சொல்ல இருக்கிறது. அது அநேக இடங்களில் அந்த காட்சி நாயகனின் கண்களாக இருக்கிறது. நாம் ஒன்றை பார்கிறோம் உதாரணத்திற்கு யதேச்சையாக கண்முன் ஒரு பூனை செத்து இருக்கிறது. அதனை முதலில் பார்க்கும் போது நமக்கு எப்படி இருக்கும் ? நம் முக பாவனை ? நம் புருவங்கள் ? பார்வை ? திகில் தரும் உணர்வு ? இவையனைத்தினையும் அப்படியே பார்வையாளனுக்கு காண்பித்தால் எப்படி இருக்குமோ அப்படி காண்பிக்கிறார். இதில் நடிப்பும் அதிகம் அவசியமாகப் படுகிறது. மறக்காமல் பாருங்கள். இதில் கேமிராவின் ஆச்சர்யம் எப்படி இவரால் செய்ய முடிந்தது என யோசிக்க வைக்கும்.

இந்த கேமிராவோடு சில காட்சிகளில் மௌனம் சேர்கிறது. அங்கு கேமிராவின் இயக்கம், மௌனம், பயத்தில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்தும் நாம் நினைப்பது அங்கு நடக்க வேண்டும் என சொல்ல வைக்கிறார். இன்னமும் நான் சொல்ல நினைப்பது டரெண்டினோ காட்சியின் மூலம் பார்வையாளனின் மனதினை வாசிக்கிறார். ஒருவித புரிதலினை கொள்கிறார். பார்வையாளனை அப்படியே காட்சி பேழையினுள் சிறை வைக்கிறார்.

ஒவ்வொரு காட்சியினையும் இப்படி அழகுற செய்திருக்கும் டரெண்டினோ ஒரு விஷயத்தில் என்னிடம்(இந்த வார்த்தையினை குறித்துக் கொள்க) தோற்றுவிட்டார். என்ன எனில் ஒரு பாத்திரம் இறந்து விடுகிறது. மீண்டும் அந்த பாத்திரம் கதையில் வரும் போது எந்த ஒரு ஆச்சர்யத்தினையும் எனக்கு அளிக்கவில்லை. மேலும் நான் லீனியரின் முக்கிய பாங்கு மறைமுகமாக நீட்சியினை கொண்டிருக்க வேண்டும். இங்கோ அவர் காட்சியினை மட்டுமே மாற்றிப் போடுகிறார். நீட்சிக்கான வித்து ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது.

இது என் தனிப்பட்ட கருத்தே ஒழிய இப்படம் ஒரு முழுக்க வெற்றி கண்ட புதிய முயற்சி. இந்த படத்தினை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்க்கலாம் கொண்டாடலாம் உங்களை போலவே ரசிகர்கள் உங்கள் நண்பர்களாக இருப்பின் காட்சிக்கு காட்சி விசிலடிக்கலாம். டரெண்டினோ ஜனரஞ்சக கலையினை அழகாக வடிக்கிறார். HATS OFF!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக