doodlebug - 1994

அதிகார மையங்களினால் மனிதன் காலங்காலமாக பிணைக்கப்பட்டு இருக்கிறான். இன்றைய சூழலில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்த அதிகார மையங்களின் ஆட்சி என்ன என பார்த்தால் வேலை பார்க்கும் இடம், பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் போன்ற உயர் அதிகாரிகளின் அதிகாரம். அது ஏற்படுத்தும் பயம். இந்த பயமானது மனிதனின் வாழ்க்கையினை சிறைவாழ்க்கையில் தள்ளி விடுகிறது. அதிலிருந்து எந்த மனிதனுக்கும் விடுதலை அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. இதனால் தானோ என்னமோ இன்றைய தலைமுறையினரின் லட்சியமே யார் கீழும் வேலையே பார்க்கக்கூடாது என்பதாக இருக்கிறது.

இப்படி அநேக பாதகங்களினையே சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதன் முடிவு தான் என்ன ? இந்த பிரச்சினைகளை நான் பிம்பங்கள் என்ன சொல்ல நினைக்கிறேன். பிம்பங்களின் ஆதிக்கத்தால் அதிகம் அடிபட்டு அதிலிருந்து மீளுவதற்கான வெளியினை சிந்திக்க மனிதன் மறந்து விடுகிறான். அப்போது அவன் இருப்பது ஒரு பித்த நிலை. அந்த நிலையிலிருப்பது எல்லாம் அவனின் சந்தோஷத்தினை நிர்மானிக்கக்கூடிய சில தற்காலிக சந்தோஷங்கள்.

இந்த நிலையினை பிம்பங்களால் அவன் அடையும் போது அந்த தற்காலிக சந்தோஷமே அவனின் நிரந்தரம் என முடிவினை கொள்கிறான். அவனை சுற்றி நடப்பவைகள் எதுவும் அவனுக்கு புலப்படுவதில்லை. இப்போது இந்த மனோதத்துவத்தின் அடுத்த நிலைக்கு செல்வோம். இந்த மாதிரியான நேரத்தில், ஒரு மழைக்காலம் என வைத்துக் கொள்வோம். ஈசல்கள் அவனை சுற்றி ஆட்டம் போடுகிறது. அவனுடைய கனவுலகத்தினை அவனால் அனுபவிக்க முடியவில்லை. ஒரு போதைக்கு அடிமையானவனை போல் சுத்துகிறான். அந்த ஈசல்கள் அவனுக்கு காண்டாமிருகத்தினை போல காட்சியளிக்கிறது அதனை கொன்றால் மட்டுமே அவனால் சந்தோஷமாக இருக்க முடியும். இதனை தான் சற்று முன் தற்காலிக சந்தோஷம் என சொல்லியிருந்தேன்.

அப்படியே அவன் ஈசல்களினை கொன்றுவிட்டான் என்ன வைத்துக் கொள்வோம். மீண்டும் கனவுலகத்தில் இயற்கை அல்லது அதிகார மையங்களினால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து தப்பித்து வாழமுடியுமா ?

இந்த கேள்வியினை தவிர்த்து மீதம் இருக்கும் அனைத்தும், தவிர்த்து என்பதை விட அது கூட மறைமுகமாக  காஃப்கா என்னும் இலக்கியவாதி உருவாக்கிய Kafkaesque என்னும் தத்துவம் அல்லது கோட்பாடு. இப்போது என் அடுத்த கேள்வி. மேலே நான் இணையதளங்களின் உதவி கொண்டு வாசித்ததை வாசகர்களுக்கு புரியும் வகையில் சொல்ல முயன்றிருக்கிறேன். புரிந்திருக்கும் எனவும் நம்புகிறேன். ஆனால் இதனை படமாக்க முடியுமா ? அதுவும் பார்வையாளனை முழுநேரமும் உட்கார வைக்கும் அளவு ?

இந்த கேள்வியும் நியாயமானது தான். எந்த ஒரு பார்வையாளனும் பாதியில் எழுந்து வரக்கூடிய படத்திற்கு செல்ல விரும்பமாட்டான். ஆனால் இப்படி ஒரு உளவியல் சார்ந்த சற்று அறிவியலும் கலந்த தத்துவத்தினை படமாக்குவது என்பது சற்று சவாலுக்குரிய விஷயம் தான்.
அந்த சவாலுக்கான பதில் தான் DOODLEBUG. 


இது நோலன் இயக்கிய குறும்படம். இப்படம் மொத்தமே மூன்று நிமிடங்கள் தான். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய விளக்கம் என கேட்கலாம். நான் நோலனின் அதி தீவிர ரசிகன். அந்த கதைகளை பின் சொல்கிறேன். ரசிகன் என்னும் பட்சத்தில் தான் பார்க்கும் படங்களினை அனைவரும் பார்க்க வேண்டும் என்னும் தார்மீக ஆசையில் சிலருக்கும் காட்டினேன். பார்க்கும் வரை திகில் குன்றாமல் அமர்ந்திருந்தவர்கள் முடித்தவுடன் என்னிடம் கேட்ட கேள்விஇதில் சொல்ல வருவது என்ன ?

அதனால் தான் மேலே கூறியது. இப்படத்தில் அந்த தத்துவத்தினை எப்படி காண்பித்திருக்கிறார் என சொல்லியே ஆக வேண்டும். ஒரு தத்துவத்தினையோ நூலினையோ படமாக எடுக்கும் பட்சத்தில் பெரிய சவாலானது இயக்குனரின் முன் எழுகிறது. சின்ன உதாரணம் நமக்கு இந்த தத்துவம் புரிகிறது. இதனை படமாக எடுக்க நம்மால் முடியுமா ? படம் என்னும் பட்சத்தில் அது பார்வையாளனை சென்றடைய வேண்டும். அவனும் தத்துவத்தினை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் அல்லது அது சார்ந்த சிந்தனைகளை எழுப்பும் வண்ணமாகவாவது இருக்க வேண்டும். நான் இன்று எழுதி உணர்த்தியிருக்கிறேன் எனில் இது கட்டுரை. என்னால் மட்டுமல்ல யாராகினும் முடியும். அதே நாவலெனில் நிச்சயம் கஷ்டம். முடிந்த வரை முயற்சிக்கலாம். எனினும் பிரதி என்பதால் எப்படியாவது சொல்லிவிட முடியும் என்னும் நிலை இருக்கிறது. அதே படம் எனும் போது அது கண்ணுக்குள் அடங்கும் ஒரு காட்சிப்பேழை. அதனை நிச்சயம் நடிப்பின் மூலமாகவோ வசனங்களின் மூலமாகவோ தான் சொல்லியாக வேண்டும்.

இங்கே தான் அடுத்த பிரச்சினை எழுகிறது. இப்படத்தில் வசனங்கள் இல்லை. வசனங்கள் இல்லை எனும் போது தத்துவத்தின் படி சுற்றியிருப்போரின் அதிகாரம் பெரும் பங்கு வகிக்கும். ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் தான்! மேலும் நோலன் தத்துவத்தின் கடைசியில் சொல்லியிருக்கும் விஷயத்தினையும் ஆழமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்.. அஃதாவது அதிகார மையத்திற்கும் தனி மனிதனுக்கும் இடையில் நடக்கும் முரணான வாழ்க்கை நிரந்தரமானது. அதிலிருந்து மீண்டாலும் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நான் எடுத்துக்காட்டிற்காக ஈசல் என சொல்லியிருந்தேன். இப்படத்தில் நோலன் எடுத்துக் கொண்டது DOODLEBUG. அதன் அர்த்தம் என்ன என  தேடி பார்த்தேன். புழு வகைகளில் வரும் என்பது போல தெரிந்தது.

மேலும் இது போன்ற படங்களில் வெறும் நடிப்பின் மூலம் மட்டும் பார்வையாளனுக்கு திகிலினை கொடுக்க முடியாது. அதற்கேற்றாற் போல இசையும் கேமிராவும் அழகுற அமைக்கப்பெற வேண்டும். அமையபெற்றிருக்கிறது. நான் the-abcs-of-death-2012 படத்தில் சொன்னதை நினைவுகொள்ளுங்கள் குறும்படத்தில் அதீத ஆதிக்கம் இசையும் கேமிராவும் கொள்கிறது. மேலும் முழுப்படமும் ஒரே அறை, கறுப்பு வெள்ளை வேறு!

இரண்டு நிமிட நூடுல்சினை போல மூன்று நிமிட கலைப்படைப்பு தான் இந்த DOODLEBUG. விவாதிக்கப்பட வேண்டிய படங்களுள் நோலனின் படைப்புகள் அதி முக்கியமானவை. குறிப்பாக இந்த குறுகிய படைப்பு.

பின் குறிப்பு : நான் நோலனின் படங்களினை மீள்பார்வை பார்த்து அவைகளை நோலனோமேனியா என மின்புத்தகமாக இட ஆசைபட்டேன். ஆனால் எனக்குள் நடந்த சுய முரண் இப்போது இணையத்தில் எழுதுகிறேன். மீண்டும் following படம் சார்ந்து என் கட்டுரை வரலாம். . .

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

garth said...

அருமை தோழர் doodlebug குறும்படத்தை பல மாதங்களுக்கு முன் பார்த்துவிட்டு இணையத்தில் இதைப் பற்றி தமிழில் பெரிதாக ஒருவரும் எழுதவில்லையே என கவலைப்பட்டிருந்தேன்! (y)நோலனின் கலைக்கு அடிமை என்ற விதத்தில் நோலனோமேனியாவை வரவேற்கிறேன் :)keep watching + reading + bloging

Post a comment

கருத்திடுக