வகுப்பினை கவனித்துக் கொண்டிருக்கிறேன்

நான் விமானப் பொறியியல் படிக்கிறேன். இங்கு எனக்கு aircraft structures என்றொரு பாடப்பிரிவு இருக்கிறது. அது யாதெனில் விமானத்தில் எந்த இடத்தில் உட்புறமாகட்டும் வெளிப்புறமாகட்டும் அங்கு கட்டுமானத்திற்கு எப்படிப்பட்ட பொருள்களை உபயோகபடுத்த வேண்டும் என்பதை சொல்லும் பாடம். இது சற்று சுவாரஸ்யமாகவும் இருக்கும். எனக்கு அனைத்துமே சுவாரஸ்யமாகவே தான் இருக்கிறது. பரிட்சை என வரும் போது தான் இந்த அனைத்தும் எனக்கு பிரச்சினையாக இருக்கிறது!

இந்த சுவாரஸ்யம் கூட ஏனெனில் பன்னிரெண்டாவது வரை விமானம் சார்ந்து எதுவும் சொல்லிதரப்படவில்லை. சில தத்துவங்களின் பயன்களில் ஓரிரு வரிகளாய் வரும். சற்றுமே வாசிக்காத அல்லது வாசித்தத்தை புது கோணத்தில் அறிவதால் நிச்சயம் சுவாரஸ்யம் வரும். சுவாரஸ்யமாக இருக்கும் போதும் எனக்கு அதிகம் நாட்டம் செல்ல மறுக்கிறது. இப்போது என் கல்லூரியில் பாருங்கள் ஈழத் தமிழ் போராட்டம் செய்ததால் இரண்டு வாரம் வீணானது என ஞாயிறும் கூட கல்லூரி! தினம் மிகுதியான களைப்பு. இரண்டு மணி வரை தான் வகுப்புகளில் தாக்கு பிடிக்க முடிகிறது. அதற்கு பின் என்ன சொன்னாலும் தலை கிறங்கிவிடுகிறது.

அப்படி இன்றும் கிறங்கும் நேரத்தில் தான் இன்றைய கட்டமைப்பு வகுப்பு நடந்தது. இத்தனைக்கும் பதினொன்றுக்கு எல்லாம் தலை சுற்றிவிட்டது. அப்போது எத்தனையோ ஹைக்கூ என் நோட்டுகளினை நிரப்ப ஆரம்பித்தது. சற்று பயமும் இருந்தது எங்கு நடத்துபவர் பார்த்துவிடுவாரோ என. எப்படியோ அவருக்கு தெரியாமல் எழுதிவிட்டேன். அதனை இப்போது பகிர்கிறேன். தலைப்பெல்லாம் இடவில்லை. சில வரிகள் மட்டுமே கிறுக்கல்களாய் என் நோட்டில் இருந்தது. அவை. . . .

உன்னை உதாசீனம் செய்தவர்களை
நானும் உதாசீனம் செய்கிறேன்
வாழ்க்கை
மனிதர்களற்ற பாலையாகிறது
*****
என் சதை திணுக்குகளை
தின்று கொண்டிருக்கும்
தனிமையின் அர்த்தத்தினை அறிய
ஒரு வாய்ப்பினை அளிக்கிறேன்
ஒரே ஒரு முறை மரணித்து பார்
*****
உன் மன்னிப்பு என்னும் வார்த்தை
என் காதினை ரணமாக்குகிறது
வேண்டுமெனில் கண்விழித்து பார்
கேட்டுக் கொண்டிருப்பது
என் பிணமாகவும் இருக்கலாம்
*****
ஊமையாய் இருந்து பார்த்தேன்
மௌனமும் என்னை வதைக்கிறது
*****
என் தோலுரித்து
அதில் கவிதை எழுதி
காதலை நிரூபிக்கச் சொன்னாய்
இறந்து போகிறேன் அன்பே
என் தேகமே உனக்கான கவிதையாகும்
அழுகும் வரையில்
ஆசை தீர வாசித்துக் கொள்
*****
சுயநலத்திற்காக
சில நண்பர்களின் மரணத்தினை
நினைத்து சந்தோஷம் கொள்கிறேன்
கூடவே அசரீரி கெக்கலி இடுகிறது
உன்னைப் போலவே ஒருவன் நிச்சயம் இருப்பான்
*****
உன் சொந்தங்கள் யாரென கேட்டான்
பதிலளித்தேன்
சூன்யம் என் மனைவி
வெளி என் துணைவி
சிக்கி தவிக்கும்
ரெட்டை பெண்டாட்டிகாரன் நான்
*****
நீ கேட்க விரும்பாத வார்த்தைகளை
கவிதைகளாய் எழுதுகிறேன்
நீ வாசிக்காத கவிதைகளில்
உன்னை அதிகம் வருணிக்கிறேன்
வருணித்துக் கொண்டே இருந்ததில்
பேச மறந்து போனேன்
அந்த நேரம் என்னிடம் கேட்டாய்
ஏதாவது பேசேன்
???????
*****
நூலகத்தில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என் மனதில்
பதிந்த
உன் பெயருக்கான
அர்த்தத்தினை
*****
சாகும் நேரம் தெரிந்தபின்
கடைசி பத்து நிமிடங்கள்
உன்னை நினைக்க ஆசைபடுகிறேன்
உன்னில் எதை நினைக்க
என்று தான் குழப்பமாக இருக்கிறது
*****
உன்னை மட்டுமே நினைத்து
கவிதை எழுத நினைக்கிறேன்
அதே வார்த்தைகளில்
எத்தனையோ கவிதைகள் எழுதபட்டுவிட்டது
உன் பெயரை தவிர
வார்த்தை தெரியாமல்
வகுப்பினை கவனித்துக் கொண்டிருக்கிறேன்
*****

கவிதைகளிலிருந்து வெளி வரும் போது வகுப்பு முடிந்திருந்தது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக