சிலரிடம் கிறுக்கனாகிறான்

....இந்த யாத்ரீகன் சிலரிடம் கிறுக்கனாகிறான். அப்படி தான் அந்த அந்தி மழை என்னும் பத்திரிக்கையும்  யாரென்றே தெரியாத மக்களிடம் என்னை கிறுக்கனாக்கியது. அந்த பத்திரிக்கையினை வாங்கி நான் வந்து அந்த தியேட்டரின் படிகளில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். நிறைய பேர் வந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. அப்போது என் வசம் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. தண்ணீர் பாட்டில் வாங்க கூட பணம் இல்லையே என சிந்தனை வரை பத்திரிக்கையின் அந்த பக்கத்திலேயே கையினை வைத்து பணம் எடுக்க ஏ.டி.எம் செல்ல ஆரம்பித்தேன். அருகிலிருக்கும் ஏ.டி.எம்மில் ஐநூறு ரூபாய் தான் எடுக்க வேண்டுமாம்! இது என்னய்யா கொடுமை என் கணக்கிலேயே அவ்வளவு இல்லாத போது எப்படி அவ்வளவு எடுப்பது ? ஏ.டி.எம் என் மனக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பதால் அப்படியே இரயில் நிலையம் செல்ல ஆரம்பித்தேன்.

அங்கு அம்மாவிடம் என் கல்லூரி பிரச்சினையினை வெகு நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன். வேறு யாரும் சொல்ல கிடைக்கவில்லை அதனால் சிக்கினாள் அம்மா. அனைத்தினையும் கேட்டு அம்மா சொன்னது ராகு கேது சரியில்லை. சொன்னா யாரு கேக்குறா....!!!!!!

அங்கு பணம் பஞ்சாயத்து முடிந்து மிண்டும் திரையரங்கு. அதே படிகட்டு அதே அந்தி மழை. இம்முறை என் கால் முட்டிகளை ஒரு பிஞ்சு கைகள் அடிக்கடி தடவிச் சென்றது. சின்ன பையன். படிக்கட்டுகளில் ஏறி ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான். என் அருகில் வந்த போது அந்தி மழையிலிருந்து இந்த பிஞ்சு மழையினை பார்க்கலாம் என நினைத்தேன். வெகு நேரம் என் கண்களை பார்த்து கொண்டிருந்தான். எந்த படம் பார்க்க வந்தாய் என கேட்டேன். பதிலே என் மௌனத்தினை ஆரம்பித்தது. மீண்டும் அந்தி மழையினை வாசிக்க ஆரம்பித்தேன். அவனின் பதில் - சேட்டை! அவன் வயது எட்டு!!!!

நேரம் போனதே தெரியவில்லை. அதனால் தியேட்டரினுள் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டார்களா என திரும்பி பார்த்தேன். கிட்டதட்ட ஒரு இருபது முப்பது கண்கள் என்னை வெறி கொண்டு பார்த்து கொண்டிருந்தது. அந்தி மழையினை என் பைக்குள் வைத்தேன்.

படம் - சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. கில்லி படத்தினை தேசியம் கொஞ்சம் லேசாக கலந்து வெளியிட்டால் அது தான் கமாண்டோ. வசனம் எழுதியவன் தமிழ் தெரிந்தவனாக இருப்பான் என்பது என் சின்ன யூகம். தமிழ் பஞ்ச் வசனங்களை அப்படியே ஹிந்தியாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இப்படத்தின் கொடுமை.

இதற்கு பின் தான் சுவாரஸ்யமான ஒன்று. யாருமே கண்டிராத கோவை. யாருமெ அனுபவிக்காத திகில் அனுபவம். பன்னிரெண்டரை மணிக்கு படம் முடிந்தது. அங்கிருந்து எப்போதும் காந்திபுரம் வரை நடந்து தான் செல்வேன். அது ஒரு நான்கு கி.மீ வரும். அப்படி இம்முறையும் நடக்க ஆரம்பித்தேன்.

இதில் திகிலுக்கான காரணி என்ன எனில் அமாவாசை சமீபத்தில் முடிந்து வளர்பிறையின் ஆரம்பம். தெருவிளக்குகளையும் தாண்டி இருள் இருந்தது. தெரு விளக்குகள் மங்கலாக மட்டுமே ஒளித்துக் கொண்டிருந்தது. நடந்து செல்லும் போது சாலையில் யாரும் இல்லை. படம் முடிந்து வண்டியில் செல்பவர்கள் என்னை கடந்து சீறிக் கொண்டிரிந்தனர். அதுவும் சில நிமிடங்களில் மௌனமானது. என்னை சுற்றி இருந்ததெல்லாம் தனிமையும் இருளும் தான். இந்த தனிமையினை நான் அதிகம் ரசிக்கிறேன். சரியாக அப்போது இடது பக்க ப்ளாட்ஃபார்மில் ஒரு மனிதன்.

குறிப்பாக எந்த இடமெனில் வ.ஊ.சி பூங்கா அருகில். அங்கு ஒருவன். பலகையினை போல் ஒன்றினை வைத்து அதன் மேல் ஊனம் போல் அமர்ந்து ஊர்ந்து ஊர்ந்து வந்து பிச்சை எடுப்பார்களே அவன். அதே போல் வெகு தூரத்தில் ஊர்ந்து கொண்டிருந்தான். என் காதில் ஹலோ ஃப் எம்மில் பாடல் ஓடிக் கொண்டிரிந்தது. என்ன தோன்றியதோ தெரியவில்லை இருளினை ரசிக்க பாடல்களினை அணைத்துவிட்டேன்.

அவன் அந்த பலகையினை விட்டு எழுந்து நின்று கொண்டிருந்தான். ப்ரௌன் கலரில் சீக்கு பிடித்த முடி. கம்பீரமான தேகம். சிவந்து வெறித்துக் கொண்டிருந்த கண்கள். அவன் பார்வையே பயத்தினை விதைக்கும் தொனி. அவனை கடக்கும் போது என் நடையினை எண்ணிக் கொண்டிருந்த அவனின் உடல் வாகு. கடக்கும் போது சற்று தேகமே சிலிர்த்தது. திரும்பி பார்த்தேன். நீளமான ஆள் அரவமற்ற சாலையில் அவனுடைய தேகம் மட்டும் தனித்து தெரிந்து கொண்டிருந்தது.

அந்த பார்வை கூட திருப்பம் வந்ததால் என் கண்கலிலிருந்து அகன்றது. முன் சொன்ன இடம் வ.ஊ.சி பூங்காவின் பின் பக்க வழி நுழையும் இடத்தில் இருக்கும் சாலை. அடுத்து வ.ஊ.சி பூங்காவின் முன் பக்கம் செல்லும் சாலை. இந்த சாலையில் இருபக்கமும் அடர்த்தியான மரங்கள் மட்டுமே இருக்கும். வெளிச்சம் சற்று தூரத்தில் தன் இருந்தது. அது இந்த மரங்கள் கொடுத்த இருளினை கடந்தே என் பார்வைக்கு கிடைத்து கொண்டிருந்தது. நான் வலது பக்கத்தில் சென்று கொண்டிருந்தேன். என்னிடமிருந்து வெகு தூரத்தில் வெள்ளை வேட்டி அணிந்து ஒரு தாத்தா ஏதோ ஒரு மூட்டையினை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவரின் நடை மெதுவாக இருந்தது. இதில் அவ்வழியே ரோந்து போலீஸும் காரில் செல்பவர்களும் வேகமாக போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வப்போது கொடுக்கும் வெளிச்சத்தில் தான் அந்த தாத்தாவினை காண முடிந்தது. வெள்ளை உருவமாக.

அவரினை நெருங்க நெருங்க அவரும் வலது பக்கம் வந்து நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் என்னருகில் நின்றது. என்னிடம் நீ தனியாக நடந்து வருவாதை பார்த்தேன். ஏதேனும் பிரச்சினையா என கேட்டார் அந்த காரினுள் இருந்தவர். ஆங்கிலத்தில். இல்லை என புன்முறுவல் செய்தேன். மனிதம் சாகவில்லை என இருளினை கடந்து குரல் ஒன்று எனக்கு கேட்டது. குரலினை விட பெரிதாய் இருந்தது அவரின் புன்சிரிப்பு.

அவரிடம் பேசி திரும்பும் போது அந்த தாத்தாவின் வேட்டி ஒரு கார் வெளிச்சத்தில் மிகப்பெரிதாக தெரிந்தது. அருகில் அவரை கடந்து செல்லும் போது தான் அறிந்து கொண்டேன் அவர் லூசாக இருக்கிறதே என வேட்டியினை சரி செய்திருக்கிறார்!

அவரை கடந்த உடன் வெளிச்சம். இருளில் கிடைத்த இன்பமயமான தனிமை வெளிச்சம் தரவில்லை. தர மறுத்து விட்டது. ஏமாற்றத்துடன் சேலம் பேருந்தில் ஏறினேன்.

என் வாழ்வில் எனக்கு நான் ஒரு யாத்ரீகன். என் பயணங்கள் இப்படி தனியாகவே அமைகிறது. சின்ன உதாரணம். எட்டாம் வகுப்பிலிருந்து என் அத்யந்த தோழனாக ஒருவன் இருக்கிறான். அவனிடம் மே மாதம் ஒரு ஞாயிறு என் புத்தக வெளியீட்டினை காலை நேரத்தில் வைத்தால் ஒரு மணி நேரமாவது வர முடியுமா  என கேட்டேன். அடுத்த நாள் பரீட்சை டா. அடுத்த புக் அப்ப கண்டிப்பா வர்றேன் என்றான். இது தான் நான் சம்பாதித்த நட்பும் மனிதர்களும். நான் அவனை குற்றம் சொல்லவில்லை. அது அவனின் விருப்பமும் தெரிவும். நான் எழுதுகிறேன் என்பதால் என் நண்பனுக்கும் இலக்கியம் பிடிக்க வேண்டும் என இல்லையே. ஆனால் அதுவே என் பிரச்சினை!  நான் வேண்டுமென்றே தனிமையான பயணங்களை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களுடன் ஒன்ற முடியாத என் பலவீனம் எனக்கு தரும் அனுபவங்கள். அதனை இப்போது பகிர்கிறேன். 

உண்மையில் அந்த இருபது நொடி நடை என்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. இது போன்ற பயணத்திற்காகவாவது கிறுக்கனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.

பின் குறிப்பு :  இதனை பிருஹன்னளை என்னும் லேபிளில் வைத்திருக்கிறேன். ஏன் என தங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம் அல்லது நான் இப்போது சொல்வதால் சந்தேகம் எழலாம். அதற்கான பதில் நாவலில் இருக்கிறது. இது அந்நாவலின் நீட்சியாகவும் இருக்கலாம். காத்திருங்கள் நாவல் வரும். .. . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக