அது ஒரு சாபம்

சமீபத்தில் ஒரு நண்பருடன் மிகக் குறுகிய உரையாடல் ஃபேஸ்புக்கில் நடந்தது. அவர் ஈழத் தமிழர். அந்த உரையாடலில் போன வாரம் நிகழ்ந்த நீயா நானாவினை சொல்லிக் கொண்டிருந்தேன். வதையினை பதிவு செய்கிறார்கள் என. அவர் உடனே கோபிநாத் ஒரு நிகழ்ச்சியினை நிகழ்த்த தெரியாதவர் என சொல்லி அவரை பற்றிய என் கருத்துகளை கேட்டார். அவரிடமிருந்து தானே என் இலக்கிய தேடலே ஆரம்பித்தது என்பதை விலாவாரியாக சொன்னேன்!!!!

பொதுவாக நூல் வெளியாகிறது எனில் அது முதலில் படைப்பினை அணுகுகிறது. பின் வியாபார ரீதியினை அணுகுகிறது. எனக்கு தெரிந்து அவர் தான் முதன் முதலில் நூலின் தலைபிலிருந்தே வியாபாரத்தினை ஆரம்பித்தார் - ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ? பார்த்தவுடன் வாங்கியவன் அடியேன் தான். அந்த நூலின் அனுபவங்களை ஏற்கனவே எழுதியிருப்பதால் இங்கு கட். அதன் பின் தான் நான் தொடர்ந்து நூல் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பெல்லாம் கோடை விடுமுறை மட்டும் தான். மற்றப்படி அங்கங்கு வாசிப்பது.

அந்த கோபிநாத்தின் நூலில் அவர் ஒரு வாக்கியத்தினை எழுதியிருப்பார் - தொலைந்து போனதை தேடுவது தான் வாழ்க்கை என்று. நிச்சயம் வேறு யாரேனும் சொல்லியிருப்பார்கள். எனக்கு தெரியவில்லை என்பதால் சொல்லவில்லை! இந்த வாக்கியம் திடிரென என் நினைவிற்கு வருவதற்கும் காரணம் இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிந்து கல்லூரி இன்று தான் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களுக்கு நேற்று முன் தினமே திறந்தது. அப்போது என் தோழி ஒருத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் நானும் அப்பாவும் என் ஊரிலேயே தொலைந்துவிட்டோம் என. அதெப்படி சொந்த ஊரிலேயே தொலைந்து போகலாம் ? ஆச்சர்யபட்டாலும் அது தான் நிகழ்ந்தது. என் நாவலினை பிழைதிருத்தி நான் நகலினை வைத்துக் கொண்டு கைப்பட திருத்திய படிவத்தினை பதிப்பாளருக்கு அனுப்பலாம் என நினைத்தேன். நகல் எடுக்க சென்றால் ஒரு ஜெராக்ஸ் கடை கூட இல்லை! நானும் அப்பாவும் எங்கெங்கோ தேடி ஒரு ஜெராக்ஸ் கடையினை அடைந்தோம். அங்கு முதலில் ஒரு ரூபாய் என்றான். இரண்டு நிமிடம் கழித்து ஒன்றரை என்றுவிட்டான். பரவாயில்லை என எடுக்கலாம் தானே. செய்யாமல் வேறு கடைக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். அப்போது தான் இருவருக்கும் சந்தேகம் வந்தது. நாம் எங்கு இருக்கிறோம் என ? நிஜமாக எங்களுக்கு தெரியவில்லை. அந்த இடம் சேலத்தில் இருக்கும் மார்கெட் ஏரியா. அதன் பெயர் லீபஜார். அங்கு என் நண்பர்களின் வீடும் இல்லை எனக்கென வேலைகளும் இல்லை. அப்பாவிற்கும் அதே. இதனால் நாங்களே ஒரு வழியினை கண்டுபிடித்து எப்படியோ ஜெராக்ஸினை எடுத்து வீட்டினை அடைந்தோம்.
ஜெராக்ஸின் விலை : ரூ.1.50/பக்கத்திற்கு.

அப்போது அந்த தோழி நீ வீட்டினை விட்டே வெளியில் போகமாட்டாயா என கேட்டாள். எனக்கு என் மேலேயே சந்தேகம் வந்த தருணம் கூட அது. இப்போது தான் வெளியில் அதிகம் செல்கிறேன். சிறுவயதிலெல்லாம் வீடே கதி. தொலைகாட்சியில் கேபிள் கிடையாது. காலையிலிருந்து மாலை நான்கு மணி வரை தூர்தார்ஷன். எப்போதாவது மதியம் பொதிகை எடுக்கும். இல்லையெனில் மாலை தான். அதிலும் நான் பார்ப்பது வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு ஒன்பதிலிருந்து பத்து மணி வரை போடப்படும் நிகழ்வுகள் என்னும் நாடகம். அந்த நாடகம் ஒவ்வொரு வாரமும் ஒரு பேய்க் கதையினை சொல்லும். இரண்டு நாளும் ஒரு பேய் தான். அதற்கடுத்து ஷக்திமான். இதே சானலில் ஆர்யமான் என ஷக்திமானில் நடித்தவரே நடிக்க ஆரம்பித்தார் அதிகம் ஃபேமஸ் ஆகவில்லை. வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியுமும் ஞாயிற்றுக் கிழமை பழைய படம். இதனை தாண்டி பொழுது போக்கு கிடையாது.

தெருவில் விளையாடும் அளவு சிறுவர்கள் இருந்தும் கேட்டினை தாண்டி வெளியில் சென்றால் வீட்டில் திட்டு. சிறுவயதில் அதிக பயந்தாங்கொள்ளி கூட. வீட்டில் முறைத்தால் கூட அழுதுவிடுவேன். இப்படி இருக்கும் போது எனக்கான கதை சொல்லகதிக நேர நண்பன் ராணி காமிக்ஸ் தான். ஆனால் அந்த ராணி காமிக்ஸினை வாசித்து சும்மா இருக்கும் போது சித்தரிக்க ஆரம்பிப்பேன். சில நேரங்களில் மனதில் ஆழமாக பதிந்த கதைகளை சற்று மாற்றி நானே இயக்குனர் நான் கதாபாத்திரங்கள் தனியாக என் வீட்டினையே லொகேஷனாக மாற்றி கதையினை அமைப்பேன். எனக்கு நானே சண்டைப்போடுவேன். உருவமற்ற எதிரி என்முன் எப்போதும் காத்துக் கொண்டே இருப்பான். நிறைய கதைகள் உருவாக்கியிருக்கிறேன் என் சிறுவயதில். கதைகள் மட்டுமல்ல. எனக்கு அப்போது தெரிந்த வார்த்தைகளை வைத்து நான் கேட்ட பாடல்களை அந்த வார்த்தைகளால் மாற்றி புதிய பாடலை உருவாக்குவேன். இப்போது அவை எதுவுமே என்னுள் இல்லை. நினைவுகளாக கூட இல்லை.

அப்போது விளையாட்டு ? எனக்கு க்ரிக்கெட் எனில் அதிக ஆர்வம். கங்குலி என் ஆதர்ச வீரர். ஆனால் நான் விளையாடுவது எப்படி தெரியுமா ? எனக்கென ஒரு பேட்டும் பாலும் எப்போதும் என்னிடம் இருக்கும். ஒரு நாளில் குறிப்பாக விடுமுறை நாளில் முக்கால் வாசி நேரம் பேட்டுடன் தான் இருப்பேன். அப்பாவும் அக்காவும் இருக்கும் போது விளையாடுவோம். அது கோடை விடுமுறையில் மட்டுமே. மற்றபடி நான் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனியே பேட்டினை வைத்திருப்பேன். தனியே விளையாடுவேன்.

பௌலிங் தனியே செய்தால் ஒகே அதெப்படி பேட்டிங் ? இவையனைத்தும் நான் ஐந்தாவது வரை அனுபவித்த அனுபவங்கள். அப்போது உலகில் இருந்த அனைத்து டீம்களின் ஆட்டக் காரர்களின் பெயரும் விரல்நுனியில் இருக்கும். நானே இரு அணியினை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஒன்று நான் இன்னொன்று உருவமற்று என்முன் இருக்கும். நானே ஸ்டெம்பினை தேர்ந்தெடுப்பேன். அங்கு பேட்டிங் செய்ய முடிவு செய்து நிற்பேன். பேட்டும் செய்வேன் காற்றில். என் வாயிலிருந்து "டக்" என சத்தம் வரும். அது யாதெனில் என் பேட் பாலினை தொட்டுவிட்டது என்பதற்கான அறிகுறி. நிச்சயம் அது ஃபோர் அல்லது சிக்ஸ்! இவ்வளவு ஏன் ஃபீல்டிங்கும் செய்வேன். சுவற்றில் பந்தினை போட்டு திரும்பி வருவதை தாவிபிடிப்பது போல. இதையெல்லாம் நான் விளையாடும் நேரம் எவ்வளவு என நினைக்கிறீர்கள் ? இரண்டு அல்லது மூன்று மனி நேரம் ஒரு வேளைக்கு. விடுமுறை எனில் ஐந்து அல்லது ஏழு கூட ஆகலாம்.

அப்படி விளையாடும் போது ஏகப்பட்ட பேர் மொட்டை மாடியிலிருந்து வேடிக்கை பார்ப்பர். அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் ? அவர்களுக்கு நான் எப்படி தெரிந்திருப்பேன் என்பதெல்லாம் தெரியாது ஆனால் எனக்கு லஜ்ஜையாக இருக்கும். அப்படி பார்க்கும் போது ஆட்டத்தினை நிறுத்தி அவர்கள் சென்றவுடன் ஆடுவேன். அது எனக்கான உலகம். இப்போது நினைவுகளாய் தோழி சொன்னவுடன் கோபிநாத் எழுதிய வார்த்தையோடு என் மண்டைக்குள் வருகிறது.

தங்களால் நான் இருந்த நிலையினை யூகிக்க முடிகிறதா ? எனக்கு அந்த வருடங்கள் அந்த நாட்கள் அந்த மாலைகள் ஒரு சாபம். யாருக்கும் வரக்கூடாது என நான் நினைக்கும் ஒரு காலம். வதை. தனிமை. 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக