பார்ப்பன இலக்கியம்

பயங்கரமான சந்தோஷத்தில் இருக்கிறேன். தலைகால் புரியாமலாடுகிறான் என சொல்லுவார்களே அதே நிலை தான். இந்த நிலைக்கு இரண்டு காரணங்கள்.

முதலில் என் நாவல் எனக்கு கிடைத்தது. அதில் தான் எத்தனை சந்தோஷம். ஞாயிறு அப்பா வந்து காந்திபுரத்தில் என்னிடம் ஒரு ஐம்பது நூலினை கொடுத்தார். அதனால் வெளியீட்டிற்கு வர இருக்கும் வெளியிடுபவருக்கும் உரையாற்றுபவர்களுக்கும் அளிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

முதலில் வ.உ.சி பூங்கா. அங்கேயே வந்து கவிஞர் சுஷில் வாங்கிக் கொள்கிறேன் என்றார். சுஷில் உண்மையில் என்னுள் தனிமையான ஒரு இடத்தினை பிடித்திருப்பவர். அவரை அழைக்கும் போது அவரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை நான் கவிஞர் சுஷிலுக்கு எப்போதும் ரசிகனோ அடிமையோ இல்லை அதே கண்ணமாவிற்கு கிரங்கி கிடக்கும் பெட்டி பாம்பு என. ரிஷி மூலத்தினை எப்போதும் எந்த ஒரு எழுத்தாளரும் கவிஞரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்த கவிஞரிடம் மட்டும் அதனை அறிய ஆசைப்படுகிறேன்.

எனக்கு கவிதை இலக்கணங்கள் தெரியாது. ஆனால் எந்த கவிதையினை வாசித்தாலும் அதனூடே செல்லும் ரிதம் நான் அதிகம் நேசிக்கும் ஒன்று. அந்த இசையின் இழைக்காக மட்டுமே நான் கவிதைகளை தேடி செல்கிறேன். இவரின் கவிதைகளில் அந்த இசை என்னை சிறை பிடிக்கிறது. முதன் முதலில் இவரை வாசித்த போது அடிமைபட்டேன். தொடர்ந்து ஐந்து மணிநேரம் நீர் கூட இல்லாமல் வாசித்தேன். கண்ணம்மாவுடன் வாழ்ந்தேன். கண்ணம்மா சுஷிலால் இந்த உலகத்தில் உலவும் ஒரு தேவதை. அவளின் படைப்பினை அவர் கவிதையினை கொண்டே சொல்ல நினைகிறேன்


படைக்கும் செயலில் 

களைத்த இறைவன்
கொண்ட இடைவெளியில்
உனை செதுக்கிய 
தருணம் இது கண்ணம்மா


இதில் எழுதபட்டிருக்கும் எழுத்தினை நான் அவரின் தளத்தினில் தேடி எழுதவில்லை. மனதினில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது கண்ணம்மாவின் வரிகள். அவரின் இணையம் - http://sushilkumarbharathi.blogspot.in/.


அவரிடம் கொடுத்துவிட்டு அடுத்து முருகவேளிடம் கொடுக்க லாலி ரோடு செல்ல வேண்டியதாய் இருந்தது. அவரை பற்றி ஒன்றே இன்று தான் சொல்ல நினைக்கிறேன். நிச்சயம் அவருக்கு நோய் நொடிகள் இனி எப்போதும் இருக்காது. அதற்கு காரணம் அவரின் வெளிப்படையான சிரிப்புத் தன்மை. இப்படி ஒரு மனிதரை கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு என் நாவலினை வெளியிடுவதில் ஒரு வானுக்கும் மண்ணிற்கும் இடையேயான ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதனை என்னால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. வெளியே எனில் கல்லூரியில் விடுதியில் என. காரணம் இங்கிருப்பவர்களுக்கு என் சந்தோஷம் ஒரு செய்தி. ஆனால் எனக்கோ கொண்டாட்டத்தினை பகிர்வது தேவையாக இருக்கிறது. அது நடக்க வாய்ப்பே இல்லை என்பதனால் அதனை குறுசோகமாக உள்ளே வைத்துக் கொண்டேன். இப்போது மரத்துவிட்டது. ஆனால் அதனை அவர் அறிந்து கொண்டாரா என்ன என தெரியவில்லை அந்த கொண்டாட்டத்தினை அவர் பேச்சின் மூலம் பகிர்ந்து கொண்டாரே அதை என்னால் இப்போது டைப் செய்ய முடியவில்லை. நிச்சயம் அவர் அங்கு என்ன பேசப்போகிறார் என மற்றவர்களை காட்டிலும் அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன்.

இதற்கு பின் நான் சென்ற இடம் தான் சற்று சுவாரஸ்யமானது. நேற்று கோவையில் ஒரு இலக்கிய சந்திப்பு மரக்கடையில் பள்ளி ஒன்றில் நடந்தது. அங்கு கோவை இலக்கியவாதிகள் பங்கேற்றிருந்தனர். அங்கு தான் இருவருக்கு நூலினை கொடுப்பதாக சொல்லியிருந்தேன். அங்கு போய் அவர்களுடன் சேர்த்து இன்னமும் சிலருக்கு நூலினை கொடுத்தேன். அப்போது நறுமுகை தேவி உள்ளே வா பேச்சுகளை கேட்போம் என்றார். சரி என நானும் சென்றேன். பேராசிரியர் அக்னி என்பவர் இளஞ்சேரல் என்னும் படைப்பாளியின் காருவகி என்னும் நாவலினை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பேசியது இலக்கிய பேச்சா பார்ப்பன சமூகம் இலக்கியத்தின் மேல் கொண்ட ஆதிக்கத்தினை எதிர்த்த பேச்சா என தெரியவில்லை. பயங்கர சூட்சுமத்தினை அறிந்து வைத்திருந்தார். தான் பேச நினைத்த பார்ப்பன எதிர்ப்பினை நன்றாக பேசி இடையிடையில் வார்த்தையின் கோர்வையால் காருவகி நாவலிற்கு வந்தார். இளஞ்சேரல் சோகமயமாக இருந்தார் ஏன் என தெரியவில்லை!

அவர் சொன்ன இரு விஷயங்கள் என்னை அதிகமாக பாதித்தது. ஒன்று ஒரு படைப்பினை கொடுப்பதற்கு முன் அந்த படைப்பாளி அதற்கு முன் இருக்கும் இலக்கிய வரலாற்றினை அறிந்திருக்க வேண்டும் என்றார். எனக்கோ சுத்தமாக தெரியாது. இதுவே என்னை பாதித்தது. வரலாற்றினை அறிந்தால் மட்டும் தான் நல்ல படைப்பினை கொடுக்க முடியுமா ? நானோ சமூகம் சார்ந்து நடக்கும் எதையும் அறியாது புனைவுலகத்திலும் என் வாசிப்பு அல்லது திரை சார்ந்து எழுதுவதிலும் என் எழுத்து வண்டியினை தள்ளிக் கொண்டிருக்கிறேன். இதில் எங்கிருந்து வரலாற்றினை அறிவது ? ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலக்கியம் பிராமணர்களால் பிராமணர்களை முன்வைத்து எழுதபட்டது எனில் அது கலை தானே ஒழிய எப்படி இலக்கிய ஆதிக்கமாகும் ? இந்த பதிலறியா கேள்வி தான் என்னுள் இன்னமும் இருக்கிறது. இன்னுமொன்று தி.ஜானகிராமனை வாசிக்க ஆசைப்படுகிறேன். அவர் தி.ஜா வின் நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களை பார்த்து சொன்னார் - அக்ரஹாரத்தில் இருந்த ஆணாதிக்கத்தினை எதிர்த்து பெண்கள் பாலியல் வேட்கையின் மூலம் புரட்சி செய்கிறார்கள் என.

இதில் எனக்கு ஏற்பட்ட பயம் யாதெனில் நான் பிறப்பால் பிராமணன். என் நாவலும் பிராமணர்களை முன்வைத்து எழுதபட்டிருக்கிறது. அப்படியெனில் என் நாவலும் புறக்கணிக்கப்படுமா ? Pleasure of the text  கொடுப்பது மட்டும் இலக்கியம் இல்லையா ? சமூக அல்லது வரலாற்றுப் பிரச்சினையினை எடுத்து சென்றே தீர வேண்டுமா ? இதற்கு வெளியீடன்று பேச இருப்பவர்களிடம் பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------

இக்கேள்வியுடன் என் முதல் காரணத்தினை முடிக்கிறேன். இரண்டாவது காரணம் என் சந்தோஷத்திபை பன்மடங்காக்கியது. ஒருக்கணம் என் நாவல், இருக்கும் உலகம் என அனைத்தினையும் மறந்து மனத்தினுள் டைம் மெஷின் மூலம் சில ஆண்டுகாலம் பின் சென்று என்னை நானே கண்டு சில நேரம் அந்த மன உலகத்திலேயே இருந்தேன். அது எட்டு வருடங்களுக்கு முன் தொலைத்த என் தோழி மார்க் சுக்கர்பர்கால் மீண்டும் கிடைத்திருக்கிறாள். அவளின் நினைவினை எப்போதும் இழந்ததில்லை. அவள் கிடைப்பாள் என்னும் நம்பிக்கையினை கூட சில ஆண்டுகளில் நான் இழந்திருந்தேன். தற்செயல் நிகழ்வுகள் தான் இவ்வுலகில் எப்படியெல்லாம் நடக்கிறது. அவளும் என்னை பல மாதங்கள் தேடியிருக்கிறாள் போல. என்னுடன் படித்த வேறு நண்பர்களின் அகௌண்டிற்கு சென்று நான் இருக்கிறேனா என தேடியிருக்கிறாள். நானோ அவர்கள் யாரையும் தேடவில்லை. இவள் ஒருத்தியினை மட்டுமே தேடியிருக்கிறேன். யாருக்கு நன்றி சொல்ல என தெரியவில்லை. எட்டு ஆண்டுகாலம் அவளுடன் நான் பேச வேண்டிய விஷயங்கள் அநேகம் இருக்கிறது. . .

நிறைய எழுத இருக்கிறது அவளை பற்றி. ஆனால் மௌனம் காக்க போகிறேன். காரணம் மர்மமானது. விரைவில் அறிந்து கொள்வீர்கள்.

முக்கிய குறிப்பு :
நாவல் வெளியீடன்று உரையாக இல்லாமால் கலந்துரையாடலாக வைக்க இருக்கிறேன். வருபவர்களை போலவே நானும் அதீத எதிர்பார்ப்பில் இருக்கிறேன். இன்னுமொரு விஷயம் இன்னமும் சில நாட்களில் என் நாவல்கள் எங்கெங்கு கிடைக்கும் என்னும் தகவல்களினை அளிக்கிறேன். . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக