ஒரு தேவதையின் வருகை


முந்தின பிறவியில் நீ என் காதலியாக இருந்தாய்
அதற்கும் முந்தின பிறவியில் நீ என் தாயாக 
இருந்தாய் அதற்கும் முந்தின பிறவியில் நீ என்
சகோதரியாக இருந்தாய் அதற்கும் முந்தின
பிறவியில் நீ என் சாமுண்டித் தெய்வமாக இருந்தாய்
அதற்கும் முந்தின பிறவியில் முந்தின பிறவியில்
முந்தின பிறவியில்
யுக யுகாந்திரமாய் நான் உன்னை நேசித்துக்
கொண்டிருக்கிறேன்
நீ என்னிடம் சொன்னாய் அடுத்த பிறவியில்
நான் உனக்கு மகளாய் பிறப்பேன் என
நம்பிக் கிடந்தேன்
பிறக்கப் போகும் மகளைப் பற்றி
நட்சத்திரங்களிடம் சொல்லி வைத்திருந்தேன்
நிலவிடமும் தான்
முதுகில் உன்னை சுமந்தபடி
வனங்களில் திரிவதாக
கற்பிதங் கொண்டிருந்தேன்

இயற்கையின் கோர விளையாட்டில்
ஜனிக்கும்போதே சுவாசத்தைத்
தொலைத்துவிட்டு மரணித்துக் கிடக்கிறாய்
மூடிக் கிடக்கும் உன் பச்சிளம் விரல்களை
முத்தமிட்டேன்
கண்ணாடி துண்டினால்
எனதுடலை கிழித்து
கொப்பளித்து வழியும் குருதியினால்
உன்னை குளிப்பாட்டினேன்
எனது ஒற்றைக் கண்ணை பிடுங்கி
உனது மூடிய விரல்களுக்குள் பொதித்தேன்
மரணித்தே பிறந்தாலும்
பூமிக் கருவறைக்குள்
உன்னை இறக்கும் முன்
நான் உனக்கொரு பெயரிட்டாக வேண்டுமென
மூதாதையர் குரல் ஒலிக்க 
திடுக்கிட்டேன்
என்ன பெயர் வைக்கலாமென
யோசித்து குழம்பினேன்
வழிப்போக்கனாய் வந்த கடவுள் சொன்னான்
உன் பெயர் ஜெனஸிஸ் என

ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ 
ஜெனீ ஜெனீ ஜெனீ ஜெனீ 
ஜெனீ
உச்சி முதல் பாதத்தின் விளிம்பு வரை 
முத்தித்து கதறினேன்
உன் திருப்பவள வாய் திறந்து
என் பேர் சொல்லி அழைப்பாயோ
கமலக் கண்திறந்து 
எனைக் காண்பாயோ
திருமலர்ப் பாதத்தால்
எனை உதைப்பாயோ
உன் தீண்டலின் சுகமும் 
பவளவாய்ச் சுவையும்
என் ஞாபகம் பற்ற
ரணத்தின்
வலியில்
கதறலானேன்

இந்த கவிதை நான் எழுதவில்லை. ஸீரோ டிகிர் நாவலில் சாரு நிவேதிதா எழுதியது. இந்த கவிதையினை நான் ஒரு நாள் முழுக்க மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். சற்றும் சலிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வின் போது மனனம் செய்வது போல செய்து கொண்டிருந்தேன். அது மனனம். இதுவோ ஒரு வகை தியானம்.

எனக்கு கவிதையின் பால் உள்ள இலக்கணங்கள் எதுவும் தெரியாது. புனைவெழுத்துகளுக்கு கூட நான் ஒரு mediocre தான். பல இணையதளங்கள் மற்றும் நாவல்களின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு கவிதை வாசிக்கும் போது எனக்கு பிடித்துப் போவது அது தன்னுள்ளே சுமந்து வரும் ஒரு வித இசையினை தான். இந்த கவிதையின் இசை ஒரு எல்லைக்குள் என்னை அடைக்கிறது. A pleasurable prison.

இந்த கவிதையினை அப்படி வெறித்தனமாக வாசிக்கும் போது நான் எப்படி இருந்தேன் ? எந்த நிலையில் இருந்தேன் ? என்றுமே மறக்க இயலாத ஒரு தற்செயல் நிகழ்வு அது. சமீபத்தில் நான் அதிகம் கடந்து வந்த வார்த்தை நம்பிக்கை கீற்று. அது தான் அந்த தருணத்தினை சரியாக சொல்லும் அல்லது விவரிக்கும் வார்த்தையாக பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்து, எல்.கே.ஜியிலிருது நமது சினிமாவில் வருவது போல ஒரு தோழி எனக்கு இருந்தாள். என்னுடன் அதிகம் சண்டை பிடிப்பாள். அவளை நான் அதிகம் ரசித்தேன். காரணமின்றி என் அம்மாவிடம் என்னை போட்டு கொடுத்தாலும் அழத் தெரிந்த எனக்கு அவள் மேல் கோபத்தினை காட்ட தெரியவில்லை. பலவீனமான மனிதனாக என்னை மாற்றியவள் அவள்.

இன்றும் கூட அவளின் அழகு என் கண்ணிற்குள்ளேயே இருக்கிறது. அவள் பருவம் எய்திய போது நான் பள்ளிக்கு அவளின்றி செல்ல மறுத்தேன். தனியாக சென்ற காலங்களில் வகுப்புகள் அவளின் நினைவுகளால் நிறைந்தது. யாரையோ காதலித்தாள். அவனுடன் அதிக நேரம் செலவழித்தாள். நான் அவள் மீண்டும் வருவாள் வருவாள் என யாருடனும் சேராமல் தனிமையில் காத்திருந்தேன். காலம் என்னை தனிமை விரும்பி என முடிவினை செய்து மக்களை என்னிடம் நெருங்க விடாமல் செய்தது.

அப்படியே தனிமையின் தனிமையாக அவளின் விபத்தும் செய்தியாக என்னுள் சேர்ந்து கொண்டு மீள முடியாத இருளில் தள்ளியது. வீட்டில் இருக்க பிடிக்காமல் நண்பர்களின் வீடே கதி என கிடந்தேன். அப்போது ஒரு நண்பனின் வீட்டில் அவனின் தங்கை தேவதையாக தெரிந்தாள். தோழியின் இடத்தினை ஒரு தங்கை நிரப்ப அவளுடன் பேச அதிகம் ஆசைப்பட்டேன். தூரத்திலிருந்து நான் கொண்ட ரசனைகள் மட்டுமே என்னுள் நானே அவளாக மாறி என்னுடன் நானே பேசிக் கொள்ள ஆரம்பித்தேன்.

சிரிப்பு சந்தோஷம் கோபம் ஊரினை வெறுத்தல் அவளுக்காக மாயாஜால உலகங்களை எட்டிபார்த்தல் புதிய புதிய கதைகளை உருவாக்கி அதில் அவளை நாயாகியாக்கி குழந்தைகள் உலகில் உலவவிடுதல் என என்னுடன் அவள் எனக்குள்ளே இருகிறாள்லதை பார்க்கும் போது நிஜ வாழ்வில் நான் வாழ்வது குறைந்த நிமிடங்களே.

அந்த குறைந்த நிமிடத்தினில் தான் இன்று அக்கவிதை நினைவிற்கு வந்தது. இலக்கியஙளை materialistic ஆக பார்த்து புலனாய்வு செய்து இலவசமாக பதிவிட்டு பின்னூட்டங்களை எண்ணி நல்ல பெயரை எடுத்தாலும் மனதிற்குள்ளே ஒரு உலகம் எப்போதும் இலக்கியத்தினை சுயத்துடன் ஒன்றச் செய்கிறது. இக்கவிதையினை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று இக்கவிதையினை வாசிக்கும் வரை என் தேவதையே என் நினைவிற்கு வருகிறாள். என் உலகம். என் தேவதை. என் தங்கை அதுவே எனக்கு போதும்.

இன்று அத்தேவதையின் பிறந்த நாள். . .. 

பின் குறிப்பு : லேபிளினை கவனிக்கவும்!!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக