கக்கா

இந்த வார்த்தைக்குண்டான அர்த்தத்தினை தான் தமிழ் மக்கள் எப்படியெல்லாம் உபயோகபடுத்துகிறார்கள். சிறுவயதில் குழந்தைகள் ஏதேனும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் அல்லது கீழே ரோட்டில் இருக்கும் விஷயங்களை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் அம்மா அது கக்கா கீழே போடு என்பர் உடனே குழந்தைகள் கைகளில் ஏதோ பூச்சி ஏறியதை போல கீழே போட்டுவிட்டு போட்டதை அருவருப்பாய் பார்க்கும்.

கக்கா என்பதற்கு நேர்பட அர்த்தம் இருக்கிறதா எனில் இல்லை. அது வழக்கு மொழிச் சொல். அதன் அர்த்தம் மலம். அப்படியொரு கக்கா செயல் எனக்கு சமீபத்தில் நடந்தது. அதுவும் கக்கா சார்ந்ததே.

இந்த மருத்துவர்களை அணுகும் போது என் வயதினை உடையவர்களுக்கு சொல்லும் ஒரே விஷயம் கல்லும் ஜெரிக்கிற வயசு. இதனை நான் பலகாலம் நம்பினேன். ஆனால் இந்த மாம்பழம் என வரும் போது முற்றிலும் எனக்கு முரணாக படுகிறது. 

எனக்கு கனிகளிலேயே பிடித்தது மாங்கனி தான். அதில் வகைகளெல்லாம் எனக்கு தெரியாது. ஏன் என்றும் சொல்லிவிடுகிறேன். சிறுவதிலிருந்து மாம்பழம் மாங்காய் போன்றவை உடலிற்கு சூடு என வீட்டில் ஒதுக்கி வைப்பர்! அதனால் பிடிக்கும் என்பதோடு என் ரசனை நின்றுவிட்டது. சில நேரங்களில் நண்பர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் கொடுக்கும் மாம்பழங்களை சாப்பிடுவேன். வீட்டிற்கு தெரியாது!!!! குறிப்பாக பன்னிரெண்டாம் விடுமுறை தான். கார்த்திக் என்னும் நண்பன் வீட்டில் கொடுக்கப்பட்ட மாம்பழம். அதனை கிளிமூக்கு மாம்பழம் என்பர். உள்ளே ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். நிரைய சாப்பிட்டிருக்கிறேன்.

இத்தனை முன்கதைகள் மாம்பழம் சார்ந்து எதற்கெனில் சமீபத்தில் இரண்டு மாம்பழங்கள் என்னை ஆட்டிவைத்தது. என் உடலுக்கு மாம்பழம் ஒத்துக்காது என அம்மா அடிக்கடி சொல்லுவாள். என்னிடமிருந்து வரும் பதில் மாம்பழம் சாப்பிட்டு உடனே ஒரு டம்ளர் பால் குடித்தால் ஒன்றும் ஆகாது என சொல்லியிருக்காயே அதனை செய்கிறேன் எனக்கு மாம்பழம் கொடு என்பதே. இதில் சனிக்கிழமை என் வீட்டில் இரண்டு மாம்பழங்களை பார்த்துவிட்டேன். உடனே வேண்டும் எனக் கேட்டேன். அது புத்தாண்டிற்கு என்றாள்.

புத்தாண்டாகினும் சாப்பிடுவது அடியேன் தானே அதனை இன்று தின்று நாளை புத்தாண்டு வாழ்த்து சொன்னால் தமிழ்க் கடவுள் கோபித்துக் கொள்வாரா என்றேன். பலமான கொட்டு!!(நீதி : கடவுளை நிந்தித்தால் கண்ணினை குத்துவார். சிறிய அளவு நிந்தனைக்கு கொட்டுக்களே உசிதமாம்!)

ஞாயிறும் வந்தது. ஒரு மாம்பழத்தினை அப்படியே சாப்பிட்டேன். இன்னுமொன்றை ஜூஸ் போட்டு அனைவரும் சாப்பிட்டோம். இரவு பன்னிரெண்டு மணி அளவில் குளித்து உடைகளணிந்து அப்பாவினை எழுப்பினேன். கோயமுத்தூர் கிளம்புவதற்கு. ஏன் அப்பாவினை அர்த்த ராத்திரியில் எழுப்ப வேண்டும் என கேட்கலாம். நான் செய்யும் ஒரே தொந்தரவு அது தான். மாலையில் கிளம்பலாம் என்ன என் கல்லூரி இருப்பது நடுக்காட்டில்! பேருந்து இல்லாமல் போனால் பேருந்து நிலையத்திலேயே தங்க வேண்டியது தான்! என் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு அந்த நேரத்தில் பேருந்து வசதி இல்லை.

அப்படியெனில் அதற்கு முன்னரே கிளம்பலாமே ? அது மதியமாக தான் இருக்கும். கொடுத்தது இரண்டு நாள் விடுமுறை அதில் ஒன்றரை நாள் தான் எனில் என்ன நியாயம். இந்த நியாயத்திற்காக பலியாகுபவர் என் அப்பா. அதன் படி அவரையும் எழுப்பினேன். எப்போதாகினும் நீரில்லா நெற்றி பாழ் என்னும் வாக்கியத்தில் வாழ்பவர் அப்பா. அதன் படி தொப்பையினை மூடிய பேண்டினை அணிந்து பட்டையுடன் போலாமா என்றார். பதில் இல்லை. இல்லை என்பதைவிட தர முடியவில்லை.

ஒன்றரை நாள் அப்போதிலிருந்து கக்காவிற்கே சென்று கொண்டிருந்தேன். இதனால் தான் சொன்னேன் யாரய்யா சொன்னது கல்லும் ஜெரிக்கிற வயசு என! இதற்காக மருத்துவர்கள் மேலேயா கேஸ் போட முடியும் ?

இந்த கக்காவின் நீட்சியாக, சாரி கக்கா சம்பவத்தின் நீட்சியாக ஒரு விஷயம் நடந்தது. ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். கல்லூரி கெடுபிடி. அடுத்த இரவே அதே முஸ்தீபுகளுடன் கிளம்பினேன். பேருந்தில் சேலத்திலிருந்தே என் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவன் உடன் வந்து கொண்டிருந்தான். என் கல்லூரிக்கு கோவையில் வாளையார் என்னும் பேருந்தினை தான் பிடிக்க வேண்டும். முதல் பேருந்தினை பிடித்து சீட்டு பிடித்தேன். அவனுக்கும் சேர்த்து. அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை(யாருக்கு கொடுத்து வைக்கவில்லை என பின் தெரியும்) வேறொருவர் அமர்ந்துவிட்டார். நான் இறங்க வேண்டியது எட்டிமடை என்னும் இடத்தில். மேலும் அங்கிருந்து மூன்று கி.மீ நடக்க வேண்டும். அது தனிக்கதை.

டிக்கெட்டினை சரியாக சில்லறை கொடுத்து எடுத்தேன். இந்த சில்லறையில் ஏகப்பட்ட முரண் இருக்கிறது. அதில் விதிவிலக்கு காலை தான். காலையில் பத்து ரூபாய் நோட்டினை நீடினால் காலங்காத்தாலயே. . .  என இழுவையினை முன்வைப்பர். இது நியாயமானது. காலையில் முதல் சவாரி என்பதால். ஆனால் ஏன் நாள் முழுதும் அதனையே செய்கின்ரனர் ? ஒரு ஐந்து நிமிடம் கழித்து. அப்படி தான் எனக்கு இருந்தது. பேருந்தே கிட்டதட்ட காலி! வெளியே கடைகளும் மரங்களும் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த ஜூனியரையும் காணவில்லை. ரொம்ப தூங்கிவிட்டோமோ என சந்தேகம். மணியினை பார்த்தேன் - அடியேன் உள்ளூர் பேருந்திலேயே முக்கால் மணி நேரம் தூங்கியிருக்கிறேன்!

எந்த இடம் என வேறு யாரிடமாவது கேட்கக்கூடாதா ? நடத்துனரிடமே கேட்டேன். விளைவு ஒன்பது ரூபாய் டிக்கெட்டினை கொடுத்து(சொகுசு பேருந்து!) அந்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். பெயர் தெரியாத ஊர். கண்ணெதிரே ஒன்றுமே இல்லை. ஒரு நிலம். சுற்றிலும் இருள். இறங்கும் போது அட்வைஸ் - போய்ட்டு இந்த பஸ் தான் வரணும். அங்க நில்லு(பேருந்து நிறுத்தத்தினை காட்டி) என்றார். இறங்கும் போது போய் வர எவ்வளவு நேரம் ஆகும் என பயணி ஒருவரை கேட்டேன். பத்து நிமிஷம் தான் பா என்றார். ஆசுவாசம் அடைந்தேன். ஆனால் சொன்னவர் ஓட்டுனரும் நடத்துனரும் டீக்குடித்து தான் பேருந்தினை எடுப்பார் என்பதை சொல்லவில்லை!

அங்கு ஒரு நாற்பது நிமிட காத்திருப்பு. இருளும் புலர்ந்தது. என் தூக்கமும் கெட்டது. இத்துடன் கக்கா பதிவும் முடிந்தது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக