எரிந்துருகும் பக்கங்கள்

ஒரு உலகத்தினை அல்லது புது விதமான சமூகத்தினை பிரதியின் மூலம் வாசகனுக்கு அளிக்க முடியுமா ?

இந்த கேள்வியுடன் தான் ஒரு நூலினை பற்றி நான் எழுத இருக்கிறேன். இந்த கேள்வியினை மெய்யாக்க ஒரு எழுத்தாளனுக்கு அவசியமான ஒன்று யாதெனில் இருக்கும் உலகத்தினை சார்ந்து இருக்கும் புரிதல். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாயாஜால உலகத்தின் பறவையினை நாம் உருவாக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். நாம் இரண்டு வழிகளை தான் தேர்ந்தெடுப்போம். ஒன்று நம் கனவில் ஏதேனும் வந்திருந்தால் அதனை அப்படியே எடுப்பது. மற்றொன்று இருக்கும் பறவையில் சில மாறுதல்களை நமக்குள் கற்பனையாக செய்து அதனை காட்சிக்கோ எழுத்துக்கோ கொண்டு வருவது. இந்த வாக்கியத்தினை அடிப்படையாக வைத்து தான் அநேக நவீனகரமான விஷயங்கள் இவ்வுலகத்தில் தோன்றுகிறது.

இந்த நவீனம் எப்போது வாசகனை ஜெயிக்கிறது என்பது இன்னமும் முக்கியமானது. நாம் படைக்கும் உலகம் ஏதேனும் ஒரு உணர்வினை நிச்சயம் வாசகனுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக ஆச்சர்யத்தினை தாண்டி. இதற்கான சிறந்த உதாரணம் நான் வாசித்த வரையில் பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் போல வரலாற்று நாவல்கள். இக்கால மனிதர்கள் சோழனின் தமிழகத்தினையோ உலகத்தினையோ கண்டிருக்க வாய்ப்பே இல்லை. மேலும் கதை சொல்லிகளாக நாம் பயிற்றுவிட்டிருப்பதால் நாவல்கள் அந்த உலகத்தினை அப்படியே நம் கண்முன் வந்து நிறுத்துகிறது.

இப்படி செய்வதற்கு அந்த படைப்பு அந்த சமூகத்தின் detailed description ஐ கொடுக்க வேண்டும். பதினெட்டாவது அட்சக்கோடினை வாசிக்கும் போது நம்மால் ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தின் முழு உருவத்தினையும் உணர முடிகிறது.. அது அசோகமித்திரனின் வெற்றி. அதற்கு அந்த தெரு அல்லது அந்த ஊரின் அமைப்பினை மட்டும் சொல்வதால் நிச்சயம் முழு உணர்வினையும் அடைய முடியாது. அங்கிருக்கும் அரசியல் சமாச்சாரங்கள் நிச்சயம் பிரதியில் இருக்க வேண்டும். 

எதற்கு இந்த அரசியல் மேட்டர் ? கட்டிடம் சார்ந்து நாம் ஒரு ஊரினை சிலாகிக்கிறோம் எனில் அது முழுக்க கற்பனையாகவே இருப்பினும் நாம் பிரதியில் வைப்பதை வாசகன் சித்தரித்துவிடுவான். ஆனால் அந்த ஊரில் இருப்பவன் அந்த சமூகம் கொண்டுள்ள அரசியல் கோட்பாடுகளை சார்ந்தே இருக்கும். ஒரு கருத்தினை ஒரு தெருவே ஆதரிக்கிறது என வைத்துக் கொள்வோம். அதற்கு காரணம் அந்த தெருவில் ஏதோ ஒரு கோட்பாடு கோலோச்சுகிறது. அப்படி இருக்கும் அந்த கருத்து, கோட்பாடு தெரிந்தால் தான் அங்கிருக்கும் ஒருவன்(நாயகனாக இருப்பின்) சிந்திப்பது ஏன் எனப்து நமக்கு புரியும்.

இப்படி அனைத்தும் செவ்வனே ஒரு பிரதி கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அதனை அப்படியே நம்பாமல் சி.சு.செல்லப்பா க.நா.சு எழுதிய பொய்த்தேவு பற்றி எழுதிய விமர்சனத்தில் பொனாமி டொப்ரியின் வாக்கியத்தினை மேற்கோள் காட்டியிருக்கிறார், அதனை நினைவு கொள்ள வேண்டும்
"ஒரு கலைப் படைப்பு, ஒரு ஒழுங்கில்லாமல் எழுதப்படும் நாவலும் கூட - நடப்பு வாழ்க்கையேதான் என்பதில்லை என எல்லாரும் ஒப்புக் கொள்வார்கள். வாழ்க்கை மாதிரி ஒன்று அது. வாழ்க்கையிலிருந்து வேறாக காட்டுவது. அதில் வரும் பாத்திரங்கள் நமது காலத்தில் வாழவில்லை. தங்களுக்கே உரிய காலத்தில் வாழ்கிறார்கள். நம்மதைவிட அவர்களுக்கு இட விஸ்தாரமும் குறைவு. அவர்கள் ஸ்தூலமாக தோன்றினாலும் கூட ஏதோ காற்றுரூபமான தொட முடியதவர்களாகவே அவர்கள் இருப்பதாக படுகிறது நமக்கு."

எந்த ஒரு நாவலை அணுகும் முன்பும் இதனை நினைவில் கொள்ளுங்கள். இந்த உணர்வை கொணர்வது நல்ல படைப்பாகவும் இந்த உணர்வினை உணர்வது தேர்ந்த வாசகனையும் நிணயிக்கிறது. இந்த கோட்பாடு முதற்கொண்டு மேலே சொன்ன அனைத்தினையும் அழகுற வடிக்கப்பட்டிருக்கும் ஒரு நாவல் பி.எச்.டேனியல் எழுதிய எரியும் பனிக்காடு(RED TEA).


இந்த நாவல் தான் சமீபத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்ட பேசப்பட்ட படமான பரதேசியின் கதை மூலமாக இருப்பினும் சிறிது அதனை மறந்து இதனை வாசியுங்கள். பின் ஏன் சில விமர்சகர்கள் அந்த படத்த்னை திட்டி தீர்த்தார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.

முதலில் இந்த நாவலின் கதை. கயத்தார் அருகே இருக்கும் மயிலோடை கிராமத்தில் கறுப்பன் வள்ளி என ஒரு தம்பதியினர். அவர்களின் வீட்டில் பஞ்சம். ஏதாவது வேலை கிடத்தால் போதும் என அவன் வேலை தேடுகிறான். அப்போது ஒரு மேஸ்திரியிடம் சிக்குகிறான். அவன் சற்று பணம் படைத்தவன். இவனிடம் ஏன் இங்கேயே இருக்க வேண்டும் என்னுடன் வேண்டுமெனில் குமரி மலைக்கு வா உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என்கிறான். வீட்டில் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அவனுடன் இருவரும் செல்கிறனர். இவர்களுடன் முப்பது பேர் உடன் வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் சிறிய கூட்டினுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் பயணமோ வெளியூர்களையோ பார்த்ததேதில்லை. பேருந்து இரயில்கள் போன்ற சாதனங்களெல்லாம் அவர்களுக்கு பயம் அளிப்பது. ஆனால் அந்த மலைக்கான பயணம் அந்த சாதனங்களின் மூலமாக தான் நடக்கிறது.

அங்கு போன பின் தான் தெரிய வருகிறது இது மீள முடியாத ஒரு நரக குழி என. எப்படி எனில் கை நீட்டி வாங்கிய காசு வரும் வழியில் செய்த செலவுகள் அங்கு நடக்கும் செலவுகள் போன்றவற்றினை அடைக்கும் வரை அங்கு வேலை பார்க்க வேண்டும். வேலை செய்யாவிடில் கொடுமைகள். எப்படியாயினும் ஒரு வருடத்தில் அந்த கடனை அடைக்க முடியாது. வருடங்கள் நீட்சி கொள்கிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அங்கிருக்கும் ஆங்கிலேயர்களின் அடிகளும் ஆண்களுக்கு அடிகளும் உடல் வலிக்கும் வேலைப்பளுவும் எதிரியாக இருக்கும் போது பருவங்கள் கூடவே சித்ரவதை செய்கிறது.

பருவங்களினால் அட்டைக்கடியும், மலேரியா நிமோனியா ஃப்ளூ என பலவந்தும் சரியாக மருந்து இல்லையென்பதால் மக்களின் சித்ரவதை. அதில் இந்நாவல் கறுப்பன் வள்ளியினையே மையமாக்குகிறது. வள்ளி இரண்டு முறை கருச்சிதைவினை அடைகிறாள். மூன்றாவது முறை அங்கு ஆப்ரஹாம் என புது மருத்துவர் வருகிறார். நல்லவராக இருக்கிறார். அவர் கொடுக்கும் சிகிச்சை மக்களுக்கு நல் உடம்பினையும் நம்பிக்கையினையும் தருகிறது. இவர் மூலமாவது விடிவுகாலம் கிடைக்குமா ? என்பதன் பதில் தான் மீதி நாவல்.

இதில் சிலாகிக்க என்ன சிறப்பு இருக்கிறது எனில் அதிகாரத்தினிடையில் அதிகாரத்திற்காக நடக்கும் சண்டைகள் இங்கே பிரதானமாக்கபட்டிருக்கிறது. மேஸ்திரி என்பவர்கள் அநேகம் பேர் அங்கு இருக்கிறார்கள். மூணாரில் அவர்களின் பெயர் கங்காணி. அங்கு இருக்கும் கூலிகளின் எண்ணம் இந்த மேஸ்திரியிடமே இருப்போம் இவர் செய்யும் கொடுமைகள் மற்றவர்களை காட்டியும் ஏற்புடையதாய் இருக்கிறது என.

இதனை குறிப்பிட்டதன் காரணம் ஒரு கதை வெற்றி அடைவதுறாக்கதைக்குள் இருக்கும் கதைசொல்லியின் கைகளில் தான் இருக்கிறது. அதன் படி கதை மாந்தர்களின் குறிக்கோள் மாறிக் கொண்டே இருக்கிறது. அனைத்துமே இருத்தலின் பல்வேறு உருவங்கள்.

நாவலில் இருக்கும் பருவ நிலை மாற்றங்கள் கதை நடக்கும் மூன்று வருடத்தினையும் அப்படியே கண்களில் காட்டுகிறது. இந்த நாவலில் பயன்படுத்தபட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளும் அதி முக்கியமானவை. காரணம் அந்த கெட்ட வார்த்தைகள் புண்படுத்துவதை காட்டிலும் மரத்து போன வார்த்தையாகிவிடுகிறது. கதை மாந்தர்களுக்கும் சரி வாசகனுக்கும் சரி. இந்த மொழியே வாசகனுக்கு சலிப்பினை அளிக்காமல் வாசிக்க வைக்கிறது. 

இந்த மொழியின் சார்பு தான் நான் நினைத்த பின்னடைவும் இருக்கிறது. இந்நாவல் மேஸ்திரிகளுக்கு இடையேயும் வெள்ளை துறைகளுக்கு இடையேயும் இருக்கும் அரசியலினையும் பேசுகிறது. எப்படியெல்லாம் ஒரு பதிவியினை பிடிக்கலாம் ? அந்த பிடிப்பு முறை எப்படியெல்லாம் சில தந்திர நரிகளால் பார்க்கப்படுகிறது ? அவர்கள் அதனை கொண்டு என்ன செய்கிறார்கள் ? என நிறைய. இவையனைத்தும் நாவலுக்குள் இருப்பினும் அக்கால இந்தியாவினை அப்படியே காண்பிக்க வேண்டும் என்பது போல கதை மாந்தர்களின் வசனங்களாக மட்டுமே இருக்கிறது. இது ஒன்று தான் எனக்கு இந்நாவல் சார்ந்து முரணாக பட்டது. ஒரு வேளை பி.எச்.டேனியலின் ஸ்டைல் அதுவாக இருக்கலாம்!!!

முருகவெளின் மொழிபெயர்ப்பும் சற்றும் குறைவல்ல. கீழே வைக்காதபடி திருநெல்வேலி தமிழ் நன்றாக உபயோகபட்டுள்ளது. ஒரு இடத்தில் எனக்கு இந்த நாவலில் சந்தேகமும் வந்தது. ராமாயி என்னும் கதாபாத்திரம் அக்டோபர் என சொல்லுவது போல வரும். அவர்களுக்கு ஆங்கில மாத பெயர் எப்படி தெரியும் ? அவரிடமே கேட்டேன். டேனியலே அப்படி தான் எழுதியிருக்கிறாராம். முருகவேள் கவனிக்க மறந்தாரோ என நினைத்தேன்(ஐ அம் சாரி முருகவேள்).

மொழி பெயர்ப்பு எனும் போது என்னையே அறியாமல் இந்த பயம் வந்துவிடுகிறது. என்ன செய்ய. மை நேம் இஸ் ரெட் என்னும் நாவலினை தமிழில் என் பெயர் சிவப்பு என மொழிபெயர்த்திருந்தார் ஒருவர். அந்நாவலினை முன்பே வாசித்திருந்தேன். எப்படி இருக்கிறது என புரட்டி பார்த்தேன். அதில் இருவரின் பெயர்கள் என்னை மிரள வைத்தது. அது கதை மாந்தர்களின் பெயர்கள்
black - கறுப்பு
butterfly - பட்டாம்பூச்சி.
ஓரான் பாமுக்கிற்கு இது தெரியுமா என்று தான் தெரியவில்லை!!!

ஒவ்வொரு பக்கங்களும் இயற்கையும் மனிதனும் சேர்ந்து மனிதனுக்கு செய்யும் வதைகளை அழகாக கதை மாந்தர்களின் மூலம் பதிவு செய்கிறது. மொழியின் தாக்கம் அந்த பதிவுகளை உருக்கமானதாக்குகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக