தற்காலிகமாக தொலைந்த இலக்கியம்

என்னிடம் முதன் முறையாக ஒருவன் கேள்வி ஒன்றினை கேட்டான் - என்ன இணையத்தில் இலக்கியமே காணோம் ?

இதற்கு பதில் நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். இலக்கிய வாசிப்பு பொழுது போக்கினை போல் நிச்சயம் செய்ய முடியாது. மேலும் இங்கு இருக்கும் சராசரி வாசிப்பினை போல் பேருந்து பயணத்திலோ இரயில் பயணத்திலோ வாசித்து இன்புறும் பழக்கம் எனக்கு இல்லை. இலக்கியம் வாசிப்பெனில் நான் யாருடைய தொடர்பினையும் தொலைபேசி அலைபேசி முதலியவற்றினை அறுத்துக் கொண்டு தனியே வாசிப்பேன். தனியே வாழ்வேன். இதனால் தான் நான் அதிக நேரங்கள் நூல்களுடன் உரையாடுகிறேன் என சொல்லுகிறேன். இப்போது இந்த பரந்த வெளி என்னிடம் இல்லை. அதற்கு காரணம் என் கல்லூரி.

சிறிது சிறிதாக இதனை சொல்லியிருப்பினும் விரிவாக இப்போது சொல்கிறேன். ஈழத் தமிழுக்காக மாணவர்கள் இரண்டு வாரம் போராட்டம் செய்து அந்த செய்தியினை இப்போது தமிழ்நாடே மறந்து இருக்கிறதே அதனால் அடானமஸ் கல்லூரிகளில் பரிட்சை தள்ளி வைக்கபட்டது. ஆனால் அண்ணா பல்கலைகழகம் அதனை செய்யவில்லை. இதனால் நன்று யாதெனில் பின் வரும் விடுமுறையில் கை வைக்கவில்லை. ஆனால் ஏப்ரல் மாதத்தில் முழு உடம்பினையுமே வைத்துவிட்டார்கள்.

அரசின் ஆர்டர் என சொல்லி முழு ஏப்ரலும் கல்லூரி என சொல்லிவிட்டனர். ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. ஆனால் பத்து நாட்கள் தொடர்ந்து செல்லும் போதே உடல் நிலை அதிகமாக களைப்பினை அடைகிறது. என்னால் கலை சார்ந்து எதுவும் செய்யாமல் (வாசிப்போ சினிமாவோ) தூங்க முடியாது. அதனையும் செய்வதால் எனக்கு அதிகமான களைப்பு. நான் இப்போது யாசகம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு நாள் விடுமுறை. பாருங்கள் நாளை கேலண்டரில் சிவப்பு நிறத்தில் இருக்கும் தேதியில் யுகாதி என போட்டிருக்கிறது. இங்கோ கல்லூரி! தூக்கமின்றி விழிகள் பிதுங்காத குறை தான் பாக்கி.

இப்போது இதனையும் முன்னே சொன்ன அடியேனின் இலக்கிய வாசிப்புகளையும் நினைத்து பாருங்கள். இதுவே ஒரு இலக்கிய முரண். பத்து நாட்களுக்கே எனக்கு நாக்கு தள்ளுகிறது இதில் அன்றாடங் காட்சிகளாக தின்ம் உழைக்கும் மக்களின் நிலை ? என்னால் கற்பனைக்குள் கொணரவே முடியவில்லை. அத்தனை தூரம் சமூகத்தில் நிலவாத சமன்பாடாக இருக்கிறது.

அதனால் தான் சினிமா சார்ந்தே அதிகமாக கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த மாதம் முழுக்க கூட அப்படி வர வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சில காரணங்களுக்காக சில சினிமா கட்டுரைகளை வெளியிடாமல் கணினியில் வைத்திருக்கிறேன். அதனை வெளியிடலாமா என மாபெரும் குழப்பத்திலும் இருக்கிறேன். இதற்கிடையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி தான் ஆரம்பத்தில் சொன்னது. அப்படி சொன்னவுடன் உடனே ஏதாவது வாசிக்க வேண்டுமே என பட்டினத்தாரை வாசித்தேன்.

சே என்னமா எழுதியிருக்காரு. இப்போது அவரை போல் தமிழ் ஆளுமையினையும் உணர்வுகளையும் எழுத்திலிருந்து அல்லது எழுத்தின் மூலம் அவரின் மனதில் இருக்கும் உணர்வுகளை வாசிப்பவனின் உணர்ச்சியாக மாற்றும் திறனினை சமகாலத்தில் நான் வாசித்ததில்லை. உதாரணத்திற்கு இரண்டு பாடல்களை தருகிறேன். பருகுங்கள்


மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடிவெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்புத்தியை 
ஏதென் றெடுத்துரைப்பேன் ? இறைவா கச்சியேகம்பனே


சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா கச்சியேகம்பனே

இதன் அர்த்தத்தினை நாம் அறிந்து கொள்வது ஒரு அருமையான முறை அல்லது புதிர். பொதுவாக என்னிடம் யார் இலக்கியம் என்பது யாதென்று கேட்டால் நான் சொல்லும் விஷயம் மொழியின் அழகியல் தான் இலக்கியம் என்றே. அழகியல் எனில் எப்படி பட்ட கருவாக இருப்பினும் அதனை வாசிப்பவனுக்கு ஆரபத்திலிருந்து கடைசிவரை ஒரு மறைமுகமான ஈர்ப்பு சக்தி இழுத்து செல்ல வேண்டும். இதனை பட்டினத்தாரின் பாடல்களில் அதிகம் உணர்கிறேன். வாசியுங்கள் உங்களுக்கே புரியும் பொருள் புரியாவிட்டாலும் தாங்கள் செய்யுளின் கடைசி அடிக்கு சென்று நிற்பீர்கள்.

அவரின் தமிழ் என்னை அதனுள் ஈர்க்கிறது. தமிழை காதலிக்க தூண்டுகிறது. கூடவே எச்சரிக்கையும் செய்கிறது உனக்கு தமிழே தெரியவில்லை என!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக