நான் ஒரு ஓட்ட வாய். . . .

சமீபத்தில் என் நாவலுக்கான அட்டைப்படத்தினை ஃபேஸ்புக்கில் இட்டிருந்தேன். அதற்கு நிறைய பேர் வாழ்த்துகளும் சிலர் தங்களின் நூலினை நான் எதிர்பார்க்கிறேன் என குறுந்தகவல்களிலும் சொல்லியிருந்தார்கள். எனக்கு இருக்கும் சிறிய பிழையும் இந்த ஃபேஸ்புக்கினால் வந்தது. சிலரை நான் எனக்குள் கொள்ளும் முன்முடிவுகளால் பெரிய மனிதர்கள் இலக்கியம் அல்லது திரை சார்ந்து இருக்கும் ஆர்வம் அதிகமுடையவர்கள் என நினைத்துக் கொண்டு வெகுதூரத்தில் இருக்கும் வாசகனாக பார்வையாளனாக இருக்கிறேன். இப்படி நீங்கள் யாரேனும் யாருக்காகவாது இருப்பின் அந்த குணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படியொரு சம்பவம் எனக்கு இப்போது நடந்தது. என் ஃபோட்டோவிற்கு அராத்து என்னும் என் ஃபேஸ்புக் நண்பர் வாழ்த்து சொல்லியிருந்தார். நான் மேலே சொன்ன அசட்டுத் தனத்தினை அவரின் பெயருக்கு எனக்குள் செய்திருந்தேன். அவர் அப்படி வாழ்த்தியவுடன் ஒரு பூரிப்பில் அவருக்கு பிரத்யேக நன்றியினை சொல்லியிருந்தேன். ஆனால் அதன்பின் வந்த சில பின்னூட்டங்கள் என்னை உண்மையில் பாதித்தது. காரணம் நான் அவருக்கு மட்டும் பிரத்யேக நன்றி சொல்வதன் மூலம் தான் உண்மையிலே யாரையும் பாராட்டுவதில்லையா என சந்தேகம் வந்துவிட்டால் ? ஒருவித மன உளைச்சலினை தரக்கூடியது இது போன்ற மனப்பாங்கு. சிலர் அதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வர். சிலர் தவறாக கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. சொல்ல வருவது சின்ன விஷயம் - ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் முன்முடிவில்லாமல் வாழ்ந்து பாருங்கள். நானும் இனி அப்படி இருக்க முடியுமா என முயற்சி செய்யப்போகிறேன்.

                                                                                                                     **********

என் நாவலின் அட்டைப்படத்தினை வெளியிட்ட பிறகு நான் எதிர்பார்த்த இரண்டு கேள்வியினையே சில நண்பர்கள் என்னிடம் ஃபேஸ்புக் உரையாடலில் கேட்டனர்.

1.பிருஹன்னளை என்றால் என்ன ?
2. இந்நாவலின் கரு என்ன ?

முதல் கேள்விக்கு மட்டுமே நான் பதில் சொல்ல நினைக்கிறேன். இந்த வார்த்தையானது எனக்கு அம்மா சொல்லும் அநேக கதைகளிலிருந்து ஈர்க்கப்பட்ட ஒன்று. அம்மா என்னிடம் முக்கால் வாசி நேரங்களில் மகாபாரத கதைகளையே சொல்லிக் கொண்டிருப்பாள். அந்த மகாபாரதத்தில் இரண்டு வாசங்கள் வரும் - வனவாசமும் அக்ஞாதவாசமும். வனவாசம் அனைவரும் அறிந்ததே. அக்ஞாதவாசம் எனக்கு மிக பிடித்த பகுதி. குறிப்பாக அம்மாவின் மூலம் சொல்லப்படும் மகாபாரதத்தில். அக்ஞாதவாசம் யாதெனில் பாண்டவர்கள் கௌரவர்களுக்கு தெரியாமல் அந்த நாட்டிலேயே வேறு வேடங்களில் வாழ வேண்டும். அப்போது அர்ஜுனன் என்ன செய்ய என தெரியாமல் சேலையினை சுற்றிக் கொண்டான். அப்போது அவனுக்கு கிடைத்த பெயர் தான் "பிருஹன்னளை".

இப்போது இரண்டாவது கேள்விக்கு செல்வோம். நான் அநேகம் பேரிடம் என் நாவலுக்கான கருவினை சொல்ல மாட்டேன் என சொல்லிவிட்டேன். ஏன் என்றும் சொல்லிவிடுகிறேன். இது எழுபது பக்கங்களுக்குள் அடங்கும் ஒரு குறுநாவல். நான் கருவினை சொல்ல வேண்டுமெனில் சொல்லலாம் என முடிவெடுத்து எதனையாவது சொல்ல ஆரம்பிப்பேன். விளைவு முழுக்கதையினையும் சொல்லிவிடுவேன். என் பிரச்சினை என்ன செய்ய!

இந்த பிரச்சினையினேலாயே என்னுடன் சினிமா பார்க்க அநேகம் பேர் வரமாட்டார்கள். சில சினிமாக்களை நான் முதலில் பார்த்துவிடுவேன். பின் நண்பர்களுடன் செல்லும் போது எனக்கிருக்கும் ஆவல் அந்த இயக்குனரை முந்திக் கொள்ள வேண்டும் என்பது. நண்பர்களுக்கு கிடைக்கும் காட்சி இன்பத்தினை மறந்து நானும் சொல்லி வசவுகளை வாங்கிக் கொள்வேன். இப்போது அந்த பிரச்சினை என்னிடம் இல்லை.

பிரச்சினை மட்டுமல்ல சில நேரங்களில் கோபமும் வருகிறது. பரதேசி வெளிவந்த போது நான் ஒரே நாள் தொடர்ந்து இரண்டு ஷோக்கள் சென்றிருந்தேன். இரண்டாவது முறை சென்றிருந்த போது என் அறை நண்பர்களுடன். அப்போது எனக்கருகில் ஒரு ஐந்து நண்பர்கள் வந்திருந்தார்கள். அதில் எனக்கு அருகிலிருப்பவன் ஒரு காட்சி வருவதற்கு முன்னரே அந்த காட்சியினை இது இப்படி இருக்கும் செமயா இருக்கும் என அலப்பறை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவர்களுக்கு மட்டும் கேட்டால் பரவாயில்லை எனக்கும் தானே கேட்கிறது! செவியினை திருப்பியா வைக்க முடியும் ? சும்மாவா வள்ளுவர் சொல்லியிருக்கிறார் - பிறர்கின்னா முற்பகல் செய்யின். . .

அப்படி சொல்லும் போது நாம் சுய சந்தோஷம் அடைகிறோம் ஆனால் கலை என்னும் தன்மையினை அடுத்தவனுக்கு அந்த படைப்பு கொடுக்கும் வழியினை தடுத்துவிடுகிறோம். அதனை எனக்கு உணர்த்தியது நான் வாசித்த நூல்கள். அதன்பின் ஒருவரிடமும் சொல்லுவதில்லை. சுயகட்டுப்பாடு. அதே என் நாவல் என வரும் போது எனக்கு அதீத சுயகட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறேன். பேசிக்கலி நான் ஒரு ஓட்ட வாய். . .

என் நாவலினை பற்றி சின்ன சின்னதாய் பிருஹன்னளை என்னும் தலைப்பில் எழுத நினைத்தேன். இப்போது அதனை லேபிளாக வைத்து எழுத நினைக்கிறேன்.... இதுவும் அதன் ஒரு பகுதியே. . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக