Hurt Locker - 2008

இது கேத்ரின் பிகலோவின் மற்றுமொரு படைப்பு. இதனை நான் நேற்று ஓரு அவசர தன்மையுடன் தான் பார்த்தேன். அதற்கு காரணமும் இருக்கிறது. ஸீரோ டார்க்தெர்டி படம் வந்த போது என் வகுப்பில் நான் மட்டுமே பார்த்திருந்தேன். என் வகுப்பில் அனந்து என ஒருவன் இருக்கிறான். அவன் அதிகம் ஆங்கிலப்படங்களை பார்ப்பவன். அவனுக்கு பிகலோவின் ஹர்ட் லாகர் படம் மிகவும் பிடித்த படம். அதனால் என்னிடம் ஸீரோ டார்க் தெர்டி எப்படி இருந்தது என கேட்டுக் கொண்டிருந்ததான். நானோ அப்படத்தின் திரைக்கதையின்பால் ஈர்க்கப்பட்டதால் அதனை அதிகமாகவே புகழ்ந்து கொண்டிருந்தேன். அவனுக்கு பிரச்சினை யாதெனில் இந்த அனைத்து படங்களும் அவனுடைய சொந்த ஊரில் இருக்கிறது. கைவசம் எதுவும் இல்லை. அதனால் நான் சொல்வதை கேட்டாக வேண்டிய சூழ்நிலை.

இப்போது ஈழத்தமிழருக்கான விடுமுறை என்பதால் அவன் அங்கே ஸீரோ டார்க் தெர்டியினை பார்த்திருக்கிறான். நான் அவனுடைய பார்வையினை அதிகம் மதிப்பவன். அவன் ஒரு சிறந்த நடிகனும் கூட. அது இங்கே தேவையில்லை என்பதால் கட். அவன் ஹர்ட் லாக்கர் இந்த படத்திற்கு எவ்வளவோ பரவாயில்லை என்றான். உடனே எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. உடனே ஹர்ட் லாகர் படம் பார்த்தேன்.

சமீபத்தில் கருந்தேள் எழுதிய பரதேசி படத்தின் விமர்சனத்தில் இயக்குனர்கள் தங்களுக்கென கொண்டிருக்கும் டெம்ப்ளேட் என்னும் விஷயத்தினை அறிந்து கொண்டேன்.  ஒரே மாதிரியான கட்டமைப்பில் பல கதைகளை வைப்பது. இந்த ஃபார்முலாவிலிருந்து பிகலோவும் தப்பிக்கவில்லை என்று தான் இப்படம் என்னை சொல்ல வைக்கிறது. டெம்ப்ளேடினை பற்றி எளிதாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் பாலா ஷங்கர் படங்களை சற்று சிந்தித்து பாருங்கள்

இந்த படமும் ஆவணங்களிலிருந்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது. மார்க் போல் என்பவர் அமேரிக்க ராணுவத்துடன் ஈராக்கிற்கு சென்று அங்கு நடப்பதை வீடியோ எடுத்திருக்கிறார். அதனை மையமாக வைத்து திரைக்கதையினையும் அமைத்து அதனை பிகலோ படமாக்கியிருக்கிறார்.

முதலில் இப்படாத்தினை சொல்கிறேன். பின் ஸீரோ டார்க் தெர்டியுடன் சின்ன ஒப்பீட்டையும் பார்ப்போம். இந்த படம் முழுக்க ஒரு வெடிகுண்டு தகர்ப்பவனின் அன்றாட வாழ்க்கையினை சொல்கிறது. ஆரம்பத்தில் மெமென்டோ பட நாயகன் கை பியர்ஸ் வெடிகுண்டு தகர்ப்பவறாக இருக்கிறார். அவர் பெயர் தாம்சன். அவர் இறந்த உடன் அங்கே வருபவர் தான் கதையின் நாயகன் ஜெரெமி ரென்னர். அவர் பெயர் ஜேம்ஸ். இவருடன் சேர்ந்து இன்னமும் நான்கு பேர் அங்கிருக்கும் வெடிகுண்டுகளை தகர்ப்பது குறுகிய கால போர், சில குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆட்களை புலனாய்வது என திகிலுடனேயே இப்படம் நகர்ந்து செல்கிறது. ஜேம்ஸின் வாழ்க்கை இரு வேறு கூறாக பிரிந்து யதார்த்தம் என்பது குடும்பத்துடன் இருக்கும் உலகம் என்றும் வெடிகுண்டுகளுடன் இருப்பது இன்னுமொரு உலகம் என்னும் வகையிலும் காட்சிகள் அழகுற அமைய பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஜேம்ஸ்  வெடிகுண்டு எல்லாம் எனக்கு வெத்தலை பாக்கு மாதிரி என்னும் கோட்பாட்டினை படம் ஆரம்பத்திலிருந்து இயக்குனர் காட்டியிருக்கிறார். இயக்குனர் நினைத்திருந்தால் படத்தினை முழு யதார்த்தமாக காட்டியிருக்கலாம். ஆனால் விளிம்பு வரை மட்டுமே அவரால் செல்ல முடிகிறது.

ஏன் அவரால் யதார்த்தத்தினை காண்பிக்க முடியவில்லை ? காட்சிகள் ஒவ்வொன்றும் அத்தனை திகில் தரக்கூடியவை. இருப்பினும் அவர் நடிகருக்கு செய்திருக்கும் பூர்ஷ்வாத் தனம் காணவே சகிக்கவில்லை. ஈராக் முழுக்க வெடிகுண்டுகள் இருந்தால் கூட அத்தனையினையும் அவர் ஒருவரேவா தகர்த்தியிருப்பார் ? மேலும் ஜப் தக் ஹை ஜான் படம் போல வெடிகுண்டுகளை தகர்த்தியிருக்கிறேன் என எண்ணூத்தி சில்லறை கணக்கினை சொல்லும் போது எனக்கு ஒரு அசூயையே படத்தின் மேல் வருகிறது. கணக்கினை நம்பும் வகையில் குறைத்திருக்கலாமே!

இதைவிட கொடுமை அந்த நடிகர் மற்ற கதாபாத்திரங்களை காட்டிலும் சற்று உயர்ந்தவர் என காண்பிக்க இயக்குனர் நிறைய முயற்சியெடுத்திருக்கிறார். அது அனைத்தும் படத்தில் காட்சிகளில் அவர் வைத்திருக்கும் யதார்த்தத்தினை உடைத்தெறிகிறது. படமே செயற்கை தனமையினை அடைந்துவிடுகிறது. காட்சிகள் நகர நகர இந்த செயற்கை தன்மை காணாமல் போய்விடுகிறது. இதனை ஆரம்பத்திலிருந்தே வைத்திருக்கலாமே என்பதே என் ஆதங்கம்.

இப்படத்தினையும் ஸீரோ டார்க் தெர்டியினையும் ஒப்பீடு செய்யலாமா ? தாராளமாக செய்யலாம். இரண்டும் போரினை மையமாக வைத்து யதார்த்த உண்மைகளை புனைவாக மாற்றி எழுதபாட்டிருக்கும் திரைக்கதை. இரண்டுமே சற்றும் சலிப்பில்லாமல் ஒன்றோடொன்று திரைக்கதையில் போட்டி போடுகிறது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் பெரும் வித்தியாசம் ஸீரோ டார்க் தெர்டி படம் ஒரே ஒரு குறிக்கோளினை வைத்து அதனை நோக்கி திகில் தருணங்களை உருவாக்குகிறது. இப்படமோ ஒவ்வொரு வெடிகுண்டும் ஒரு திகிலுக்கான குறிக்கோள். அதுமட்டுமின்றி இடையிடையில் சில புலனாய்வு காட்சிகளும் தனியொரு குறிக்கோளினை கொண்டிருக்கிறது.

போர்ப்படம் என பார்க்கும் போது அது ஹர்ட் லாகர் தான். ஆனால் போர்முனைப்பு என்னும் உணர்வினை இந்த படம் நிச்சயம் தரவில்லை. அதற்கு காரணமாய் இருப்பது நடிகர் கதாபாத்திரத்தின் கட்டமைப்பு. இயக்குனர் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.

இப்படம் ஒரு பொழுடு போக்கு படம் அல்ல. முழுக்க முழுக்க சீரியஸான படம். விருப்பப்பட்டு பார்ப்பவர்களை மட்டுமே இப்படம் கடைசி காட்சிவரை தாங்கி நிற்கும். திரைக்கதைகு இப்படம் விருது வாங்கியது என்பதையறிந்தேன். உண்மையில் இந்த திரைக்கதை அமைப்பு பிரமிப்பு திகில் போன்ற அனைத்து உணர்வினையும்  பார்வையாளனுக்கு அப்படியே தருகிறது. படத்தில் வரும் ஸ்லோ மோஷன் காட்சிகள் சூப்பர்.

ஹர்ட் லாகரினை பார்க்காமல் ஸீரோ டார்க் தெர்டியினை பார்த்திருந்தால் என் நண்பனுக்கு அது பிடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அது ஏற்படுத்திய தாக்கம் தற்காலிக திகில் எதுவும் ஸீரோவில் இல்லை. அதனால் சிலருக்கு ஏமாற்றம். உண்மையில் சொன்னால் ஸீரோ பல சிறந்த விஷயங்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அது ஒரு கலைப்படைப்பு. அதனை முதலில் பார்த்திருந்ததனால் இப்படம் சற்று ஏமாற்றமே!

இதில் கற்றுக் கொண்டது இனி எப்படம் பார்த்தாலும் முன்முடிவுகள் கொள்ளுதல் கூடாது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக