Django unchained - 2012

என் கல்லூரியில் இந்த ஆஸ்கர் விருதுகள் வரும் நேரங்களில் அதை எதிர்நோக்கியிருந்த என் கல்லூரி சகாக்கள் அதிகம் சிலாகித்தது இந்த படத்தினை தான். அவர்களையும் ஏமாற்றாமல் இந்த படம் அருமையாக விருதுகளை வாங்கியது - துணை நடிகருக்கும் திரைக்கதைக்கும்.

இந்த படம் இன்று தான் தமிழகம் முழுக்க வெளியாகிவுள்ளது. அதே போல் நானும் சென்றேன் - அடித்துபிடித்து. கொஞ்சமும் சலிப்பினை இப்படம் கொடுக்கவில்லை என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். சிறுவயதில் விருதுகள் குவிக்கும் சினிமாக்கள் என்றாலே தூக்கத்தினை அளிக்கும் எனும் கோட்பாட்டினை மனதளவில் கொண்டிருந்தேன். அப்படி என்னைப்போல் யாரேனும் கோட்பாடுகளை கொண்டிருந்தால் முதல் வேலையாக இப்படம் பார்த்து அதனை தகர்த்தெறியுங்கள்.

இந்த படம் பார்த்த போது மனதில் முதலில் எழுந்த ஆச்சர்யம் இப்படி முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக இருக்கும் சினிமாக்களுக்கும் விருதுகள் அளிப்பார்களா ? Quentin Tarantino என் கல்லூரி ஆங்கில பட விரும்பிகளின் இஷ்டத்திற்குரியவர். ஆனால் அவர் யாரென்றே எனக்கு தெரியாது. மேலும் அவரின் சில படங்களையும் எனக்கு சிபாரித்தனர். அந்த படங்களை நான் என் ஊரில் பார்த்திருக்கிறேன். என்ன அப்போது இந்த படமெல்லாம் மொக்கையாக இருக்கும் என தவிர்த்துவிட்டேன்!

விருதுகள் வாங்கிய சினிமா என சொல்லியாயிற்று அப்படியெனில் நிச்சயம் ஆழமான உணர்வு சார் விஷயம் இருப்பது சகஜம். ஒரு படத்தில் ஆழமான உணர்வு சார் விஷயங்கள் இருக்கிறது எனில் அப்படத்தின் பிரதான குறிக்கோள் அந்த உணர்வினை பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது. இதற்கு துணையாய் இருப்பது திரைக்கதை இசை கேமிரா போன்றன. அதை விட முக்கியமானது நடிப்பு. இந்த நடிப்பு என்னும் விஷயம் சற்று புதிர்களை கொண்ட ஒன்று. சற்று நம் சினிமாக்களை நோக்கினாலே புரிந்து கொள்ள முடியும். அந்த கால பாசமலருக்கும் இந்த கால அபியும் நானும் இரண்டிற்கும் இருக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டாலே நான் சொல்ல வரும் நடிப்பின் வகையறாக்களை புரிந்து கொள்ள முடியும். இங்கு தான் இன்னுமொரு வித்தியாசத்தினை சொல்ல விரும்புகிறேன். உதாரணத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த ஏதாவது வரலாற்று படங்களை எடுத்துக் கொள்வோம். அப்படத்தினை இப்போது சிறந்த இயக்குனர் சிறந்த நடிகர் கொண்டு ரீமேக் செய்தால் எப்படி இருக்கும் ? சிவாஜி கணேசனை போலவே நடிக்க வைப்பார்களா ? நிச்சயம் இல்லை. ஆனால் எடுக்கப்பட்ட கதையிலும் பார்வையாளனுக்கு கண்ணீர் வரும். கதை ஒன்று கட்டமைப்பும் ஒன்று ஆனால் நடிப்பு வேறு வேறு ஆள். பழைய சிவாஜியினை போட்டால் இக்காலத்துவ மனிதர்கள் அழ மாட்டார்கள்! அப்படியிருக்கையில் கால நிலைக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு விஷயம் நடிப்பில் மாறுதலடைந்திருக்கிறது. பழைய கதையினை நாம் கொண்டு வருகிறோம் எனில் அந்த தத்ரூப நிலையினை நடிப்பின் மூலம் நாம் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி சரியாக கொண்டு வரவில்லையெனில் காண்பிக்கப்படும் காட்சி செயற்கைத் தன்மையினையே கொண்டிருக்கும். இந்த நடிப்பு தான் எனக்கு இப்படத்தில் அதிகம் கவரும் வண்ணம் இருக்கிறது.


இப்படத்தின் கதாநாயகன் ஜேமி ஃபாக்ஸ் தான் ஜாங்கோ. இவன் ஓர் அடிமையாய் இருக்கிறான். இவனை வால்ட்ஸ் காப்பாற்றுகிறான். அவன் கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளை கொல்பவன். இந்த ஜாங்கோவும் ஒரு அடிமையே. அவனை அங்கிருந்து விடுவித்து தன் துணையாக அழைத்து செல்கிறான். அப்போது ஜாங்கோவின் மனைவியினை காப்பாற்ற வேண்டிய ஞாபகமும் வருகிறது. இருவரும் ஒரு வில்லனை குறியாக வைத்தே செல்கிறார்கள். அந்த வில்லன் யாரெனில் டைட்டானிக் புகழ் டிகாப்ரியோ. மனைவியினை காப்பாற்றினானா என்பதுதான் மீதிக்கதை. இந்த கேள்விக்கான பதில் கிடைத்தவுடனும் ஒரு அரை மணி நேர படம் இருக்கிறது. சிலர் பாவம் தியேட்டரில் படம் முடிந்தது என எழுந்து சென்றுவிட்டார்கள். டிகாப்ரியோவின் நடிப்பு அவ்வளவு தூரம் ரசிக்கலாம். நெகடிவ் ரோலில் முதல் முறை பார்க்கிறேனோ என்னவோ இந்த உணர்வு எனக்குள்.

ரசனை நடிப்பு எனும் போது தான் இப்படத்தின் மூன்று நாயகர்களும் என் கண்ணுக்கு வருகிறார்கள். இந்த படத்தில் ஆரம்பகாட்சியில் அஃதாவது ஜாங்கோவின் இன்ட்ரோவிலேயே எனக்கு ஒன்று தோன்றியது. இதே போன்று ஒரு படம் தமிழில் வந்தால் தியேட்டர் இப்போது இருப்பது போல் அமைதியாக இருக்குமா என. யார் இந்த படத்தினை பார்த்தாலும் இதனை உணர முடியும். ஒவ்வொரு காட்சியிலும் கேமிராவின் தந்திரமும் வசனங்களும் அந்த ஹீரோவிற்கு மெருகேற்றி புல்லரிக்க வைக்கிறது. ஒரு காட்சியினை சொல்ல வேண்டுமெனில் ஆரம்பத்தில் ஜாங்கோ ஒரு கோணிப்பையினை போர்த்திக் கொண்டு காலில் சங்கிலியுடன் சென்று கொண்டிருப்பான். அவனை விடுவித்தவுடன் அவன் அந்த கோணிப்பையினை பின் பக்கமாக தள்ளுவான். அது இரவு நேரம். லேசாக பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் மட்டும் இருக்கும். அதில் அவனுடைய புஜங்களும் முதுகினில் இருக்கும் தழும்புகளும் அநாயாசமாக இருக்கும்.

இது என்ன கேலித் தனமான விளையாட்டு. தழும்புகள் அநாயாசமாகவா ? இந்த காட்சியினை கொண்டாடுவதா ? வேறு என்ன சொல்வது. இப்படத்தின் இசை இது போன்று வரும் ஏகப்பட்ட காட்சிகளை ரசிக்கும் வண்ணம் கொண்டாட்டமாய் மாற்றியிருக்கிறார். இசை இந்த படத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. இதில் வரும் இசையானது அந்த காட்சியுடன் அதிகம் ஒன்றாமல் சூம் செய்து காட்டப்படும் அல்லது அந்த காட்சியில் வரும் நாயகனுடன் மிகச் சரியாக ஒன்றுகிறது. என்னால் சில காட்சிகளுக்கு இந்த இசைப்போக்குடன் ஒன்ற முடியவில்லை ஆனால் போகப்போக மட்டுமே இந்த விஷயத்தினை புரிந்து கொண்டேன். புரிந்து கொண்டேன் என்பதை விட அந்த இசைக்குள் தள்ளப்பட்டேன். மேலும் அந்த இசைகளினை தனியாக கேட்டால் கூட எழுந்து நடனமாடும் அளவு அதிரடித் தன்மையினை கொண்டிருக்கிறது. மேலும் இந்த இசை ரக ரகமாக படம் நெடுக நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

திரைக்கதை தான் விருது வாங்கியதே அதனை சொல்லாமல் மற்றதை சொல்கிறேனே என நினைக்க வேண்டாம். திரைக்கதையில் நான் இப்படத்துடன் முரண்படுகிறேன். ஒரு விஷயம் சொல்லி அதனை சொல்கிறேன். அந்த ஒர் விஷயம் யாதெனில் இப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகள். அதனை வன்முறை காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும், கேமிராவினை இரத்தத்தில் தோய்த்து காயப்போட்டிருக்கிறார். மேலும் இப்படத்தில் அடித்துக் கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஒன்றே ஒன்று தான். அடிமைகளை சண்டை போடவிட்டு அதில் சந்தோஷம் கொள்ளும் டிகாப்ரியோ வரும் காட்சி. அதனை தவிர மற்றவை அனைத்தும் துப்பாக்கிகள் தான். துப்பாக்கிகளினை வைத்து சண்டைக்காட்சியெனில் அது டக்கென முடிந்துவிடுமே என நானும் நினைத்தேன். ஆனால் படத்தில் துப்பாக்கியினை வைத்து நடக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அவை முடிந்தவுடன் ஏதோ ஒரு அரை மணி நேர சண்டை காட்சியினை பார்த்தது போன்ற உணர்வினை அளிக்கிறது. வதைகளை காட்டும் காட்சிகள் - நாய்களை விட்டு மனிதனை கொள்வது, கன்னங்களில் சூடு வைக்கும் காட்சி என ஒவ்வொன்றும் சில நொடிகள் நீடித்தாலும் அதன் தாக்கம் பகிரங்கமாக இருக்கிறது. இதற்கு அதிகம் துணைபுரிவது பிண்ணனி இசை மட்டும் தான்.

திரைக்கதை. இதன் திரைக்கதை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம் ஒன்றுமே இல்லாத ஒற்றை வரி கதையினை மிக நேர்த்தியாக இரண்டரை மணி நேரமும் சலிக்காமல் சொல்லியிருக்கிறார். இது கொஞ்சம் கடினமான வேலையும் கூட. மேலும் இசையினையும் காட்சியினையும் அவர் இணைத்திருக்கும் விதம் என்னை அதிகம் சிந்திக்க வைத்திருக்கிறது. காட்சியினையும் இசையினையும் பார்க்கும் போது இரண்டும் சிறிதும் சேரா வண்ணம் இருக்கிரது. அப்படியிருக்கையில் எப்படி அவர் இதனை இணைத்திருப்பார் ? மேலும் இந்த கலப்பின் விளைவு பார்வையாளனின் புரிதல் கோணத்தினை மாற்றுகிறது. இந்த விஷயத்தினை யாரும் உணராமல் இருந்தீர்களெனில் மீள்பார்வை பாருங்கள் அப்போது இசையும் காட்சியும் அறுபட்டு இருக்கும் தன்மையினை உணர முடியும். இந்த படத்தில் இருக்கும் இசை ஒரு illusion என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது. அது தான் எனக்கு உண்மையும் கூட.

இப்படி சிலாகித்தாலும் இந்த திரைக்கதையுடன் நான் ஒன்றவில்லை என சொல்லியிருந்தேன். இந்த திரைக்கதைக்கு ஏன் சிறந்த திரைக்கதை கொடுக்க வேண்டும் ? அர்கோ அல்லது ஸீரோ டர்க் தெர்டி படத்திற்கு கொடுக்க தகுதியுள்ளதாக எனக்கு படுகிறது. ஏன் என சொல்கிறேன். ஜாங்கோ கதையினை எழுதி இயக்கியவர் Quentin Tarantino. அவர் தன் கதைக்கே ஒரு திரைக்கதையினை எழுதியிருக்கிறார். மக்களுக்கு சலிப்படையாத ஒரு திரைக்கதையினை. அதே அர்கோ மற்றும் ஸீரோ டார்க் தெர்டியினை பாருங்கள். அதன் கரு ஒரு நூலிலிருந்தோ ஆவணங்களிலிருந்தோ எடுக்கப்பட்டது. அதனை படத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை ஆக்கியிருக்கின்றனர். அங்கே திரைக்கதை எழுதுபவர்களுக்கு பெரும் சுமை ஒன்று சுமத்தபட்டிருக்கிறது. அதனை தாண்டி அவர்கள் சலிப்படையாத ஒரு திரைக்கதையினை அளித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களிலும் நடந்திருப்பது transformation அதே ஜாங்கோவில் நடந்திருப்பதோ presentation. இந்த ஒரு விஷயம் தான் எனக்கு முரணாக பட்டது.

தார்மீகமாக சொல்ல வேண்டுமெனில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஆக்‌ஷன் திரைப்படம் Django unchained.

பி.கு 1 : அருமையான சவுண்ட் எஃபக்டினை கொண்டுள்ள இப்படத்தினை சேலத்தில் பார்த்தது தான் கொஞ்சம் மனவருத்தம். மேலும் தியேட்டரில் மயான அமைதி. தனியாக திரைப்படத்திற்கு சென்றேன். முக்கால்வாசிபேர் தூங்கிவிட்டதால் தனியாகவே படம் பார்த்தேன். தனியே பார்ப்பது எனக்கு பிடித்ததும் கூட என்ன அநேக காட்சிகளுக்கு கைதட்ட கூட ஆளில்லை! இதில் பாதிபேர் படம் தமிழ் டப்பிங் என நினைத்து வந்து ஆங்கிலம் என்றவுடன் சென்றவர்களும் உண்டு!
பி.கு 2 : இப்படத்தினை தமிழில் டப் செய்யலாம் என்றிருக்கிறார்கள் என ஃபேஸ்புக்கில் அருண் சொன்னார். அப்படியே மொழிபெயர்க்கப்பட்டாலும் ஜாக்கி சான் படங்களின் மொழிபெயர்ப்பிற்கு ஈடாக சவால்விடும்! படத்தினை ஒவ்வொரு காட்சியாக கொன்று போடுவர்!

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

ஜானகிராமன் said...

முக்கியமான படத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. அனேகமாக ஜாங்கோ அன்செயின்ட் பற்றி தமிழில் பதியப்பட்ட முதல் விமர்சனம் இதுவாகத் தான் இருக்கும். நானும் இந்த படத்தை பார்த்தேன். உங்களைப் போலவே மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். இதை படித்தவுடன் இந்த படத்தைப் பற்றி எனது தளத்திலும் எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. பி.கு இந்த படத்தின் திரைக்கதைக்கு ஆஸ்கார் கொடுத்த தகவலில் சிறு பிழை இருக்கிறது. திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது இரண்டு பிரிவுகளில் தரப்படுகிறது. ஒன்று, ஒரிஜினல் கதை + திரைக்கதைக்கானது மற்றொன்று வேறொரு நாவல் அல்லது ஏற்கனவே வெளிவந்த கதையின் திரைக்கதைக்கானது. இதில் ஒரிஜினல் கதை + திரைக்கதைக்கான பிரிவில் ஜாங்கோ வென்றிருக்கிறது. மற்றொரு பிரிவில் நீங்கள் குறிப்பிட்ட படி ஆர்கோ வென்றுள்ளது. ஜீரோ டார்க் தர்ட்டி முதல் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் கதையின் தளம் மற்றும் சுவாரசியம் போன்ற விஷயங்களில் ஜாங்கோ சிறப்பானதாகவே இருக்கிறது.

Kimupakkangal said...

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

Post a comment

கருத்திடுக