பீர் கவிதை கலவி வாழ்க்கை

கட்டுரைக்கு முன் என நான் எழுதியிருந்த கட்டுரையினை வாசித்து இந்த கட்டுரையினை வாசியுங்கள்.

காமத்துவ இலக்கியம் என சொல்லியிருந்தேன். அப்படியெனில் என்ன ? படங்களில் அல்லது அதற்கென இருக்கும் பிரத்யேக இணையதளங்களில் இருக்கும் விஷயத்தினை அப்படியே வார்த்தைகளில் சொல்வதா ? கிளுகிளுப்பு புத்தகமா ? இந்த கேள்விக்கான பதிலினை என் புரிதலிலிருந்து சொல்வதற்கு முன் ரியாஸ் குரானா என்னும் கவிஞர் இலக்கியம் என்றால் என்ன என சொல்லியிருந்ததை சொல்ல நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலினை கொண்டுள்ள ஒரே விஷயம் தான் இலக்கியம். இந்த இலக்கியத்தினில் காமம் எப்படி இருக்கும் ?

மனிதன் பாலியல் ரீதியான இணையதளங்களில் காண்பதை வைத்து தன் சுய இன்பத்தினை அடைகிறான். அப்படிப்பட்ட மனிதர்களுக்காகவே ஊருக்கு ஒதுக்குபுறத்தில் எப்போதும் ஒரு திரையரங்கு இருக்கிறது. இதில் சூப்பரான ஊர் எனக்கு தெரிந்து கோவை தான். நகரத்தின் மையத்தில் இருக்கும் நாஸ் தியேட்டர் தான் அம்மக்களுக்கு! மேலும் இந்த சுய இன்பத்தின் உச்சம் காந்திபுர பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் காண முடியும். இதன் மூலம் நான் தெரிவிக்க விரும்புவது ஒரு காட்சியினை பார்க்கும் போது அங்கு நடக்கும் செய்கைகள் பார்வையாளனின் மனதில் அல்லது உணர்வு சார் நரம்புகளை தூண்டுகிறது. இது இலக்கியங்களில் சாத்தியமா ? காமம் உணர்வுகளை தூண்டும் கருவி மட்டும் தானா ?

முதலில் வாசகர்களுக்கு ஒன்றினை சொல்லிவிடுகிறேன் காமம் வேறு ஆபாசம் வேறு. இரண்டினையும் இணைக்கக்கூடாது. நம் சினிமாக்களில் பாடல் காட்சிகளில் வருவது ஏன் காட்சிகளில் வருவது கூட ஆபாசம் மட்டுமே. அதனை தாண்டி இங்கே செய்யப்படும் விஷயம் ரேப். காரணம் கதைக்கு ஒரு வில்லன் இருப்பான். காமம் என்னும் உணர்வினுள் இருக்கும் விஷயம் சுயபோகம் என்பது மட்டுமா என்றொரு சந்தேகத்தினை இது எழுப்புகிறது.

இலக்கியங்களை சற்று பார்த்தால் இலக்கியங்கள் மட்டுமல்ல உலக சினிமாக்களில் கூட காமம் ஒரு தேடலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே இந்த காமமானது அந்தரங்கமான விஷயமாக கருதி கருதி ஒரு நாவலில் எழுதினால் கூட இலை மறைவாக காய் மரைவாக இருக்க வேண்டிய விஷயத்தினை இப்படி எழுதலாமா என அறச் சீற்றம் மிகுந்தவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

சக உலக உணர்வுகளையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரே உணர்வு காமம் மட்டும் தான் என இந்த இலக்கியங்கள் எனக்கு சொல்கிறது. சொல்லிக் கொடுக்கிறது. அப்படி சமீபத்தில் நான் வாசித்த காமத்தினை கொண்டாடும் ஒரு இலக்கியம், நாவல் - women by CHARLES BUKOWSKIஇந்த நாவலின் கதை அல்லது சொல்லும் விஷயம் தான் இக்கட்டுரையின் தலைப்பே - பீர் கவிதை கலவி வாழ்க்கை. அதன் சுழற்சியினை தான் நாம் காண முடியும். அந்த சுழற்சி யாருடைய வாழ்க்கையினில் நடக்கிறது எனில் சினாஸ்கி என்னும் கவிஞனின் வாழ்க்கையில்.

இந்நாவலினை எழுதுவதும் சினாஸ்கியே எழுதுகிறான். சினாஸ்கி நாவலின் முதல் வரியிலேயே கதையினை அல்லது அது தரும் இம்பாக்டினை கொடுத்துவிடுகிறான். எப்படியெனில் I was 50 years old and had'nt been to bed with a women for four years. இங்கிருந்து நாவலுக்கான கட்டமைப்பு ஆரம்பிக்கிறது. எப்படியெனில் அவனுடைய மனைவி லிட்யா அவளை பிரிந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. அவளுடைய கதையின் மூலம் வாசகனான நாம் அவனுடைய கடந்த காலத்திற்கு செல்கிறோம். ஆனால் கதை நகர நகர நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் என்பது கதையின் ஆதிக்கத்தினால் மறக்கடிக்கப்படுகிறது.

இங்கிருந்து தான் அவனுடைய பெண்களுக்காக ஏக்கம் ஆரம்பிக்கிறது. இந்த நாவலே மிகுந்த புதிர்களை தன்னுள் கொண்டிருக்கிறது. சிறுவயதில் அன்பிற்காக அலைந்த மனிதன் சினாஸ்கி. அந்த அன்பினை வாழ்க்கை முழுவதும் காமத்தின் மூலம் அடைய ஏங்குகிறான். அவனுக்கு இந்த உலக மக்களை பிடிக்கவில்லை. எழுத்தாளன் எனில் மக்களை ப்டிக்க வேண்டும் என சொன்னாலும் அவனுக்கு மக்களின் மீது ஈடுபாடே இல்லை. எப்போதும் பெண்கள். பெண்களிடம் அவனுக்கு பிடித்தது கால்கள். அங்கிருந்து அவன் பெண்களை கவர ஆசைப்படுகிறான். அவன் பெண்களை நிர்மாணிப்பது அவர்களை அறிந்து கொள்வது அனைத்தும் அவர்களுக்கு கொடுக்கும் இதழ் முத்தத்தில் தான். சில இடங்களில் கிழவன் என்பதால் நிராகரிக்கப்படுகிறான். சில இடங்களில் கலவிகளை கொள்கிறான். ஆனாலும் அவனுக்கு இந்த வாழ்க்கை புதிராக அன்பு என்பது எங்குமே இல்லையா என்னும் கேள்வியினை மட்டுமே தருகிறது.

இந்த நாவல் கொண்டிருக்கும் கதையானது முன் சொன்னது போல இன்மையிலிருந்து இருத்தலை தேடி பயணிக்கும் ஒரு மனிதனின் கதை. அன்பு இல்லாத பகுதியானது அவ்வப்போது சில பெண்களிடம் பேசும் போது சொல்லப்பட்டு அப்படியே போய்விடுகிறது. அதே இந்த பயணமானது முழுக்க முழுக்க கொண்டாட்டமாக பெண்களை கவர அவன் செய்யும் முயற்சிகள் கவிதை வாசிப்பு பீர் என செல்கிறது. இடையில் இந்த கவிதை எதற்கு எனில் அவனுடைய தேடல் அனைத்து காமத்தின் மூலம் கிடைக்க நினைக்கும் அன்பு. ஆனால் அது அவனுடய வாழ்வாதாரத்திற்கு போதாது. அதற்கு அவன் கவிஞனாக இருக்கிறான். அவன் எழுதுவதெல்லாம் பெண்களை பற்றிய கவிதைகள். இந்த கவிதைகளை கூட அவன் மக்கள் கூட்டத்தின் இடையே சொல்லும் போது பீரினை அருந்திக் கொண்டே தான் சொல்லுகிறான். அவனுக்கு கவிதைகள் பிடிக்கவில்லை. இருந்தாலும் அது அவனுடைய தேவை. இதனை நாவலில் அதிகம் காண முடியும். மேலும் இரண்டு முறை நவலின் கருவினை சொன்னதற்கு காரணம் ஒன்று இருக்கிறது. இது முழுக்க முழுக்க சோகமையமான நாவல். ஆனால் அதனை காண்பிக்கக்கூடாது என்பதில் அவர் கவனம் கொண்டு கடந்த காலத்தினை கட்டமைப்பின் சில இடங்களில் சொல்லி நழுவி விடுகிறார். வாசிக்கும் போது முடிந்தால் கவனியுங்கள். ப்யூகோவ்ஸ்கியின் எழுத்து மந்திரம் அநாயசமாக இருக்கும்.

நாவலில் எனக்கு பிடித்த பாத்திரம் எனில் லிடியா. லிடியாவினை சினாஸ்கி காதலிக்கிறான். சினாஸ்கியினை வேறொரு பெண் காதலிக்கிறாள். அப்போது அவளுடன் சென்று விடுகிறான். அங்கு லிடியா வந்து தலைமுடி சண்டையினை போட்டு சினாஸ்கியினை அழைத்து செல்வாள். அவர்களுக்கிடையில் சண்டை வரும். அப்போது அவன் வெளியேறுவான் வேறொரு பெண் கிடைப்பாள் மீண்டும் தலை முடி சண்டை அதே குடும்ப வாழ்க்கை. இது தொடர்ந்து கொண்டே இருக்கும் போது அவள் நாவலிலிருந்து காணாமல் போய்விடுகிறாள். ஆனால் அவளை நினைத்து வரும் வரிகள் அனைத்தும் உருக்குபவை. நாவலின் மொழி மிக எளிமையாகவும் ஒருவித மயக்கும் தன்மையும் கொண்டிருப்பதால் இந்த வரிகள் சிறிய இடங்களில் வந்தாலும் அதன் தாக்கம் நீங்காமல் பதியும் வண்ணம் அமைந்து விடுகிறது.

இந்த நாவல் எனக்கு அதிகம் பிடிக்க காரணம் இதில் காட்டப்படும் கொண்டாட்டம் அனைத்தும் சினாஸ்கியின் ஆழ்மன தனிமையினை மறைக்க. இது இந்நாவலிலேயே அங்கங்கு தெரிகிறது. எப்படியெனில் அவனுக்கு தேவை கொண்டாட்டமான காமம். நிறைய பெண்கள் கிடைத்தாலும் அவன் செய்வது வேட்கை. இதை அவன் மனமே உணர்ந்து கொள்கிறது இருந்தாலும் மீள முடியவில்லை. நிர்பந்தகளினால் அவன் பீடிக்கப்பட்டு மீள முடியாமல் அத்யந்த தனிமையில் தவிக்கிறான். இவன் மட்டுமல்ல கதை மாந்தர்கள் அனைவரும் தனிமையில் விடப்படுகிறார்கள். காமத்தில் ஆரம்பித்து கதை தனிமைக்கு செல்கிறது. எழுதப்பட்ட மொழி இந்த விஷயத்தினை வெளிப்படையாக சொல்வதில்லை.

தாஸ்தாயெவ்ஸ்கி தனிமையின் வதையினை அப்படியே சொல்கிறார். ப்யூகோவ்ஸ்கி அதை கொண்டாட்டமாக மாற்றுகிறார். ஆனால் அதில் வதையே தழைத்தோங்கி இருக்கிறது. மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு நிச்சயம் இது தெரியாது.

இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் காமம் அனைத்தும் ஆராய்ச்சி. ஓர் ஆய்வே தவிர எப்படி பார்த்தாலும் இந்த பிரதியினை சுயபோகத்திற்கு உபயோக படுத்த முடியாது. அப்படி ஒருவன் இந்நூலினை சரோஜா தேவி நூல் என சொன்னால் அது அவனுக்குள் இருக்கும் குறையே.

இந்நாவலினை எனக்கு அறிமுகபடுத்திய சாரு நிவேதிதாவிற்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

இந்நாவலில் என்னை கவர்ந்த வரிகள் அநேகம். அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதினேன். அவையெல்லாம் தனியே ஒரு பதிவாக இடுகிறேன். . .(அதை இட்டால் பக்கங்கள் அதிகமாகி இருக்கும் வாசகர்களும் போய்விட்டால். . . )

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக