ஸீரோ

சாரு அடிக்கடி தன் பிரதிகளில் முன்வைக்கும் விஷயம் நம் தமிழகம் கலை என்னும் பிரிவில் நிறைய mediocre களை கொண்டுள்ளது என. இந்த தன்மையினால் நாம் கலைக்கான சர்வதேச அங்கீகாரத்தினை பெறாமல் இருக்கிறோம். அவர் சொல்லும் விஷயம் ஒன்று எழுதுபவனிடத்தில் இந்த அரைகுறை தன்மை நிறைந்திருக்கிறது இன்னொன்று விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லவா அவர்களிடத்தில் குறைந்து இருக்கிறது. இதனால் பாதிக்கப்படும் விஷயம் மக்கள் அறிந்திராத இலக்கியவாதிகளும் அவர்களின் இலக்கியமும். இதனை இப்போது இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் இலக்கியம் என இந்த இலக்கியவாதிகள் எதனை குறிக்கிறார்கள் ? இலக்கியமெனில் என்ன என எனக்கு சத்தியமாக தெரியாது. நாவல்களை வாசித்து புரிந்து கொள்ள பார்க்கிறேன். எழுத்தாளர்களோ ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்.

சமீபத்தில் சாருவின் ஜேஜே சில குறிப்புகள் என்னும் சுந்தர ராமசாமியின் நாவலினை எதிர்த்து அவர் எழுதியிருந்த விமர்சனத்தினை வாசித்தேன். அவர் மட்டுமல்ல எந்த எழுத்தாளர் எந்த ஒரு நாவலினை விமர்சித்தாலும் அந்த நாவலின் கருவினை வைத்தே இது இலக்கியம் என சொல்கிறார்கள். சந்தேகம் வந்தது என்பதால் வீக்கிபீடியாவிலும் தேடினேன். அங்கு இலக்கியம் எழுத்தப்படும் மொழியின் கலைத்தன்மை என்றிருக்கிறது. என் புரிதலில் மொழி அழகியல் என வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த குழப்பத்தின் போது தான் ரியாஸ்குரானா என்னும் கவிஞரின் இலக்கியம் சார்ந்த பதிவினை வாசித்தேன். அதனை அண்மைக் கட்டுரையில் லேசாக குறிப்பிட்டிருந்தேன். இப்போது முழுமையினையும் தருகிறேன்

"இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியம் என்றால் இன்னதுதான் என்ற தீர்மானங்களுடன் இருந்த நிலை மாறி என்னவாக இருக்கக்கூடும் என்பதன் பால் அக்கறையை திருப்பிவிடுவதை தனது செயலாக கொண்டிருக்கிறது. இதுதான் இலக்கியம், இதுதான் இலக்கியமற்றது போன்றவற்றின் பின் அலைந்துதிரிவதை விட்டுவிட்டு என்னவாக இருக்கக்கூடும் என்பதை அறிய முயற்சிக்கும் அழைப்பாக மாறிவிட்டது. தனித்த ஒருத்தரின் கருத்தோ, ஒரு குழுவின் கருத்தோ அல்லது ஒரு நிறுவனத்தின் கருத்தோ இலக்கியம் என்பது இதுதான் என்பதைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக எல்லோருமே அதைப்புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அறிவிக்கிறது. ஏதொரு கருத்தும் நடு நாயகமாக நின்று கட்டளையிடுவதையும், அதற்குச் சார்பான அறிவாளர்களை உற்பத்தி செய்வதையும் தடுத்துவிடுகிறது. குறித்த ஒரு கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள்தான் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என்றும் பிறர் அதிலிருந்து கழித்து வைக்கப்படவேண்டியவர்கள் என்ற வன்முறையையும் தவிர்க்கிறது. இலக்கியம் என்பதை அறிந்து கொள்வதில் பங்காற்றுபவர்களாக எல்லோரையும் முன்னிறுத்துகிறது. ஒன்றை அறிந்து கொள்ளும் முயற்சியில் பங்கேற்பவர்களாக எல்லோரையும் பார்க்கிறது. தகைமைகள் தரப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கு அப்பால் எல்லோரின் உழைப்பையும் பெறுமதிமிக்கதாக உருவாக்குகிறது."

இதனை வாசிக்கும் போது நான் கட்டமைப்பின் பால் இருக்கும் ஈடுபாடு தான் இலக்கியம் என சொன்னால் அது தவறில்லைதானே ? நான் கட்டமைப்பு இல்லையெனில் புனைவே இல்லை என நம்புபவன் அப்படி இருக்கையில் இலக்கியம் கட்டமைப்பு தான் என ஒற்றை காலில் நிற்கலாம் தானே ? பிறர் கருத்துகள் படி நானும் கரு சார்ந்து ஒரு கருத்தினை முன் வைக்கிறேன்.

சார்லி சாப்ளினின் வாழ்க்கையினை புனைவாக எழுதுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மற்றவர்களை சிரிக்க வைக்கும் அவருடைய வாழ்க்கை பாதைகளை. அப்போது அந்த பிரதி வாசகனுக்கு சிரிப்பினை அளித்தாலும் அது உள்ளே சாப்ளினின் ஆழ்மன சோகங்களை எடுத்து செல்ல வேண்டும். சோகமான இடத்திலிருந்து தான் சாப்ளினின் சிரிப்பு வாழ்க்கை தொடங்கியது. இதனை எழுதும் போது நூறு வாசகர்கள் சிரிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். எனக்கு சாப்ளினின் வதை தான் கண்ணுக்கு தெரிகிறது. அதனை நான் என் இணையத்தில் பதிவு செய்கிறேன். அப்போது என்னிடம் சிரிப்பினை நீங்கள் புகழவில்லையே என கேட்டால் என்ன சொல்ல முடியும் ? உலக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தினை மையமாக வைத்து சிலாகித்தார்களெனில் நானும் அதனையே கொண்டாட வேண்டுமா ? இதனை என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையினை சமீபத்தில் நான் அடைந்ததால் தான் இப்போது இதனை எழுதுகிறேன்.

ப்யூகோவ்ஸ்கியின் பதிவினை எழுதியவுடன் அதனை நிறைய பேருக்கு கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சாருவின் வாசகர் வட்டத்தில் பதிவு செய்தேன். அங்கு ஒரு அருமையான பின்னூட்டம் கிடைத்தது Halpin frayser என்பவரிடமிருந்து

"நீங்கள் நாவலை பற்றியோ அல்லது சாருவின் எழுத்தை பற்றியோ எதுவுமே புரிந்து கொள்ளவில்லை என்பதாக எனக்கு தோன்றுகிறது உங்கள் கட்டுரை வாசிக்கும் பொழுது . மேலும் நீங்கள் எழுதுவது மிகவும் போலியாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு சாரு சுட்டும் எழுத்துக்கள் எதுவும் என்றும் எப்பொழுதும் புரிய போவது இல்லை என்றும் தோன்றுகிறது . நேர்மையற்ற கட்டுரையாகவும் தோன்றுகிறது. You have zero dostoevsky,zero charu nivedita,zero bukowski in you.As of me to understand these men there has to be atleast a little bit of them in you.Feels like you are just trying to put on a fake intellectual mask;nothing more than that.You have understood zero of them."

முதலில் அவருக்கு நன்றி தான் சொல்ல நினைக்கிறேன். காரணம் தார்மீகமாக தன் கருத்தினை சொன்னதற்காக. அவர் மட்டுமல்ல நிர்மலும் தங்களின் கட்டுரை intense ஆக இல்லை என சொல்லியிருந்தார். ஏன் என அறிய நான் சில விமர்சனங்களை பார்க்க வேண்டியதாய் போயிற்று. அதில் முக்கால் வாசி பேர் படைப்புகளை தங்கள் சுய வாழ்வினுடன் ஒப்பிட்டு எழுதுகிறார்கள். எனக்கு அது எப்போதும் உடன்பாடு இல்லை.

உதாரணம் இசைக்கென தனியாக ஒரு ஆன்மீக நிலை இருக்கிறது. அது யாதெனில் கேட்பவனை தன்னை மறக்க செய்யும் நிலை. ஆனால் ஒரு இசை என்றும் புணர்ச்சியாகாது. அப்படியே சிலர் எழுதியிருந்தாலும் அது அவரவர்களின் சுய அனுபவங்கள். எனக்கு ஐயானிஸ் செனாகிஸின் இசையினை தவிர எதுவுமே என் சுயத்தினை மறக்க செய்யவில்லை. ரசிப்பேன் அவ்வளவு தான். ஏ.ஆர் ரகுமானின் இசை எனக்கு பிடிக்காது என எழுதிய போது கூட என் தோழி முறைத்தாள்! அதற்காக நான் மாற்றியெழுத முடியுமா ?

இதே தான் இலக்கியங்களிலும். சாரு எழுதிய தேகம் என்னும் நாவல். சிலருக்கு பயமுறுத்தியது சிலருக்கு அருவருப்பினை தந்தது. அது அனைத்தும் அந்த நாவலின் வெற்றியினை தருவது. காரணம் அந்நாவலில் காட்டப்படும் வதையும் காமமும் ஒரே கோட்டில் செல்லும். குறிப்பாக அதில் வரும் ஒரு கதாபாத்திரம் ஸ்கீசோஃப்ரீனிக் நிலைக்கு செல்லும். அந்த இடத்தில் நாவல் காமத்தினையும் வதையினையும் இணைத்து ஒரு வன்முறை அழகியலினை கொடுக்கும். தோல் நாவலினை எடுத்தால் ஒரு அவலக்குரல் பாதி நாவலுக்கு வந்து கொண்டே இருக்கும். என் கேள்வி எழுத்தாளன் என்பதால் இந்த அனைத்தும் ஒருவனை மனதளவில் பாதித்தே ஆக வேண்டுமா ? என்னால் தேகம் நாவலினை ரசிக்க மட்டுமே முடிந்தது. அந்த நாவல் இரத்தத்தாலும் அழுகிய சதைகளாலும் நிறைந்தது என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.

இதே பிரச்சினை தான் வுமன் நாவலிலும். நாவல் முழுக்க புணர்ச்சிகளால் நிரைந்திருந்தாலும் எனக்கு தெரிந்தது அனைத்தும் அவனின் ஆழ்மன தனிமைகள். காமம் அவனுக்கு பெண்களை சூரையாடும் வேட்கையாக மட்டுமே மாறிவிடுகிறது. அவனுக்கு தேவை ஒரு அதிகார மையம். அதனை காமம் கொண்டு அடைய விரும்புகிறான். அது நடப்பதில்லை. அவன் தோற்றுப்போகிறான். இது தான் நான் எழுதியதன் சாராம்சம் அல்லது என் புரிதல்.

Halpin frayser என்பவரை எதிர்த்த கட்டுரை என தயவு செய்து எடுத்து கொள்ளாதீர்கள். அவர் இப்படி சொன்னதன் மூலம் மட்டுமே என் புரிதலினை என்னால் பரிசீலிக்க முடிகிறது. அவர் வார்த்தையின் படி எனக்குள் ஸீரோ இலக்கியவாதிகள் எனக்கான புரிதலால் எனக்குள் இருப்பின் நான் ZERO வாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

பி.கு : ஜேஜே சில குறிப்புகள் நாவலினை என்றும் ஒரு நாள் வாசிப்பேன். . .

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Nondavan said...

Super Nanba.... எனக்கு சில விஷயங்களை அறிந்துக்கொள்ள ஒரு புள்ளியாக இருந்தது

Nondavan said...

நான் இக்குறிப்பிட்ட நாவலை படித்ததில்லை எனினும், உங்க கருந்து ஏற்புடையதே... நியாயமானதாகவே எனக்குப்படுகிறது.

Post a comment

கருத்திடுக