உருமாறுமியல்

நாவல்களுக்கும் எனக்கும் சமீப காலத்தில் ஏழரை நாட்டு சனி என்று நினைக்கிறேன். லைஃப் ஆஃப் பை வாசிக்கலாம் என எடுத்தேன்.  முக்கால்வாசி நூலினை முடிக்கும் போது முக்கிய வேலை வந்தது என நிறுத்தி வைத்தேன். அந்த வேலை முடிந்த போது கணினியில் பிரச்சினை. சரி கணினியில் இருக்கும் லைஃப் ஆஃப் பையினை பிறகு வாசிக்கலாம் என நினைத்து வி.எஸ் நைப்பால் எழுதிய ஹாஃப் எ லைஃப் வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது ஈழத்தமிழர்களின் குறிக்கீட்டால் சேலம் வர வேண்டியதாய் போயிற்று. வரும் அவசரத்தில் நூலினை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். இரண்டு வார வேலைகளுக்கு பின் மீண்டும் லை ஆஃப் பை வாசித்த போது தான் தெரிகிறது அழகாக எடுத்து வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் காலி! வாசித்ததோடு நிறுத்திவிட்டேன் எழுதவில்லை. படம் பார்த்து அதனுடன் ஒப்பீட்டளவில் எழுதலாம் என.

இப்போது எனக்குள் இருக்கும் பிரச்சினை அறுபட்டு நிற்கும் நாவல். நான் எந்த வேலை செய்தாலும் என் நினைவுகள் அந்த நாவலிலேயே இருக்கிறது. அது எப்படி முடியும் ? அடுத்த பக்கங்களில் என்ன இருக்கும் ? அந்த கதாபாத்திரம் என்ன அயிற்று ? அவனுடைய காதலி என்ன ஆனாள் ? இப்போது நான் இரு கூறாக பிரிகிறேன். ஒன்று அறுபட்ட நாவலினால் செதுக்கபட்டு நினைவுகளை அங்கேயே மூழ்கடித்துவிட்டு யதார்த்த வாழ்வினை வாழமுடியாமல் இருப்பவன். யதார்த்த வாழ்வினில் என்னவாக இருக்கிறேன் என பார்த்தால் (எனக்கு நானே)எழுத்தாளன். தற்சமயம் எழுத கச்சாப்பொருள் எதுவும் இல்லை. கைவசம் இருக்கும் ஒரே விஷயம் அறுபட்டு நிற்கும் நாவல். அது இப்போது என் கைவசமும் இல்லை. நான் என்ன செய்வேன் ? என் மனநிலை எப்படி இருக்கும் ? என் சார்ந்த உயிரும் அந்த உயிரினை எனக்கு காட்டும் என்னை சுற்றியிருக்கும் பொருளும் ஒன்றோடொன்று மோதி கடைசியில் என் எழுத்துகள் பைத்தியக்காரனின் எழுத்துகள் என பெயர் பெரும். ஏதாவது ஒரு கிறுக்கன் மனப்பிறழ்வுகளை எழுதியிருக்கிறார் என்பான்.

இந்த மனப்பிறழ்வுசார் பிரச்சினையினை இலக்கியமாக்கினால் எப்படி இருக்கும் ? மனோதத்துவ குளறுபடிகளை(இரண்டு காரணிகளையும் சேர்த்து) ஒரு பொருளுக்குள் அடைக்க வேண்டும். அந்த பொருள் உண்மையல்ல அல்லது அப்படி ஒரு பொருள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கக் கூடாது அதுவும் இல்லையெனில் அது ஒரு illusion ஆக இருக்க வேண்டும். யதார்த்தத்தில் இருக்கும் மனித மன வாதைகளை உலகில் இல்லாத பொருளின் மூலம் வெளிப்படுத்தினால், இல்லாத என்பது கூட தவறு கற்பனைக்கு உகந்த பொருளின் மூலம் வெளிப்படுத்தினால் அந்த இலக்கியத்தின் பெயர் தான் சர்ரியலிஸம்.(வாசித்ததிலிருந்து புரியும் படி வாசகர்களுக்கு சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன்).

இந்த சர்ரியலிஸத்தினை கொஞ்சம் பிரித்தால் அங்கு காஃப்கா இருக்கிறார். காஃப்கா யாரென பார்த்தால் ஜெர்மானிய இலக்கியவாதி. இவருக்கு இங்கென்ன வேலையெனில் சர்ரியலிஸத்தினை இன்னமும் கொஞ்சம் ஆழ்துளையிட்டு வேறு ஒரு கோட்பாட்டினை முன்வைக்கிறார். அதன் பெயரே வித்தியாசமானது - Kafkaesque. இதை உச்சரிக்கும் உரிமை வாசகர்களுக்கே.

இந்த கோட்பாடு என்ன சொல்ல வருகிறது எனில் சர்ரியலிசத்தில் ஒரு பொருளை உள்மன பிடிகளிலிருந்து விடுபட நமக்காக உருவாக்குகிறோம் அல்லவா ? அந்த பொருளுக்கு நாம் அடிமையானால் ? உருவாக்கப்பட்ட நாம் அப்பொருளுக்கு அடிமையாகி அப்பொருள் நம்மை அதிகாரம் செய்ய ஆரம்பித்தால் ? நாம் உருவாக்கிய கற்பனை உலகம் மீளமுடியாத சிறையாக நமக்கே மாறினால் ? எங்கு போனாலும் நாம் மீண்டும் அதே குழிக்குள் சென்று விழும் நிலை ஏற்பட்டால் அந்த நிலையினை தான் Kafkaesque என்கிறார்.

இந்த நிலையினை நாம் அன்றாட வாழ்வில் தினம் அனுபவிக்கிறோம். அனுபவிக்காத ஆளே இல்லை.சின்ன உதாரணமெனில் நான் போன வருடம் ஏற்காடு சாரு நிவேதிதா நடத்திய இலக்கிய சந்திப்பிற்கு(இத இவன் விடமாட்டான் போலிருக்கே)சென்றிருந்தேன். அங்கு ஒரு விசித்திரமான மனிதர். அவர் தான் இந்த தத்துவத்திற்கு சரியான ஆள். சாரு நிவேதிதா தன் சொந்த வாழ்க்கையினை தன்னை சுற்றியிருக்கும் தன்னை பாதித்த சம்பவங்களை புனைவாக மாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதற்கு தனியொரு இலக்கியமும் இருக்கிறது. இதனை வாசகர்களான நாங்கள் அறிந்திருப்போம் தானே. இப்போது அவருக்கு வருகிறேன். அவர் சாருவிடம் வந்து (வெகு நேர பேச்சுக்கிடையில்) கக்கே பிக்கே என சிரித்துக் கொண்டே "அப்பறம் சாரு இங்க நடக்கறதும் உங்க நாவல்ல வரும் ம்ம்ம்" என சொல்லிக் இளித்துக் கொண்டிருந்தார். பாவம் சாரு எதுவும் சொல்லமுடியாது என்பதனால் புன்சிரிப்பு மட்டும்.

அவருடைய தேவையெல்லாம் சாருவின் எழுத்தில் தன் பாத்திரம். அதற்கு இப்படியெல்லாமா அசடு வழிவது! இந்த பாத்திரத்தினை நாம் Kafkaesque தத்துவத்திற்குள் கொண்டு செல்லலாம். இது மாபெரும் பிரபஞ்சத்தின் சிறு துண்டே. நம்மையே நாம் பரிசோதித்து பார்த்தால் இன்னமும் எத்தனையோ போலித் தனங்களை பார்க்கமுடியும்.

Kafkaesque என்பதை நான் எப்படி பார்க்கிறேன் என இதுவரை சொல்லவில்லை. அதன் அர்த்தத்தினை மட்டுமே சொல்லியிருந்தேன். இந்த தத்துவம் எனக்கு ஒரு paradox. தலையுமின்றி காலுமின்றி புரிதல் கொள்ள நினைப்பவனை சிந்திக்க மட்டுமே வைப்பது. இந்த கோட்பாட்டினை சிந்திக்க ஆரம்பித்தால் நம் இருத்தல் மேலேயே சந்தேகம் வந்துவிடும். ஏனெனில் நாம் தினம் தினம் போலி வேஷங்களால் சிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடான சமாச்சாரத்தினை எழுத்தில் வடிப்பது எப்படி ?

இதன் பொருள் அளவில் கதை மாந்தர்களையும் கதையமைப்பினையும் செய்துவிடலாம். ஆனால் நாவாலின் கட்டமைப்பு ? இதனை சரிவர செய்யவில்லையெனில் நாவல் சர்ரியலிஸ தன்மையுடன் நின்று Kafkaesque வின் காத்திரத்தினை காட்டாமல் போய்விடும். இது நடந்தால் அந்த நாவலானது பின்னடைவினை கொள்கிறது. அப்படி நான் பார்க்கும் காஃப்காவின் ஒரு படைப்பு தான் METAMORPHOSIS.

இந்த கோட்பாட்டினை அனைவரும் மேலே சொல்லியிருப்பதாலோ அல்லது ஏற்கனவே அறிந்திருந்ததாலோ தெரிந்து கொண்டீர்கள். இதனை கதை அமைப்புடன் நாவலாக்குகிறீர்களெனில் எப்படியெல்லாம் ஆக்க முடியும் ? நாயனை வைத்து ஆரம்பித்து அவன் பிரச்சினைகள் அதன் தாக்கங்கள் பின் அவனின் உள்மன மாறுதல்கள் என. இன்னொன்று பித்த நிலையிலிருந்து எழுதுவது. இங்கே பல கட்டமைப்புகள் எழுகிறது. அஃதாவது ஃப்ளாஷ் பேக் வைத்து சொல்லப்படும் இடத்தில். இதனை தான் இவரும் கையாண்டிருக்கிறார். எப்படி என பார்த்தால் கதையின் நாயகன் க்ரிகார் சம்சா என்பவர் நாவலின் ஆரம்பத்திலேயே வண்டாக மாறுகிறார். பின் கொஞ்ச நேரங்கள் மட்டுமே அவருடைய மன அழுத்தங்களை காஃப்கா சொல்கிறார். அதற்குள் தற்கால கதை.

கதை ஒன்றுமேயில்லை. அவர் தூங்கிக் கொண்டே இருக்கிறார். இவர் இப்படி உருவமாற்றம் அடைந்தவுடன் எப்படி இவரை வீட்டிலுள்ளவர்கள் அணுகுகிறார்கள் என்பது மீதக்கதை. இதில் அவருக்குள் அவருடைய சுயம் சார்ந்த கேள்விகள், மனிதனாக இருந்த போது பிடித்த விஷயங்கள் வண்டாக மாறும் போது இல்லாமல் போகும் போது கேட்கப்படுகிறது.

Kafkaesque என்னும் தத்துவத்தினை மட்டுமே சிலாகிக்க நினைத்தேன். ஏனெனில் அவர் கண்டுபிடித்த கோட்பாட்டினில் அவரே தோற்றுவிட்டார். இந்நாவலில் எதற்கு வண்டினை உபயோகித்திருக்கிறார் என சொல்லப்படவில்லை. இது அந்த தத்துவத்தில் பங்கு வகிக்கிறது. நாமாக தேர்ந்தெடுக்கும் வெளி தான் நம்மை ஆக்ரமிக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் வண்டு ? இதற்கான பதில் நாவலில் இல்லை. ஆச்சர்யம் என்ன எனில் இந்த தத்துவமே நாவலின் சிறு பகுதி தான்! நஆவலை அவசர அவசராமாக எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

காலம் தாண்டி நிற்கும் வகையில் இந்நாவல் தன்னுள் எதையுமே கொண்டிருக்கவில்லை.ஆனால் அந்த காலத்தில் நிச்சயம் இந்நாவல் கொண்டாடபட்டிருக்கும். இந்த சர்ரியலிஸமோ இப்போதிருக்கும் வாசிப்பு உலகிற்கு சிறிதும் பொருந்தாத ஒன்று!

77 பக்கங்கள் இருக்கும் இந்த படைப்பு சிறுகதையாம்!!!! என்ன மதிப்பீடோ யார் கண்டா!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக