பால கணேசனுக்கு ஓர் கடிதம்


பால கணேசன் என்பவர் எனக்கு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமானவர். அவர் சமீபத்தில் ஃபேஸ்புக் பதிவில் தான் ஓராண்டுக்கு முன் எழுதியிருந்த சிறுகதைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என சொல்லியிருந்தார். படைப்பாளியினை பொறுத்தவரை காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல் அவரவர்களின் அனைத்து படைப்புகளும். ஆனால் எழுத்து அவரை தாண்டி சமூகத்தின் முன் வைக்கும் போது அது விமர்சனத்திற்குரியதாகிறது. விமர்சனம் சார்ந்தும் இருக்கலாம் எதிர்த்தும் இருக்கலாம். என்ன இரண்டிற்கும் சில உன்னத தன்மைகள் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் விமர்சனம் இருத்தல் கூடாது என சொல்ல முடியாது. சின்ன உதாரணம் வாலி எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழாவில் சொன்னது தான் - மரப்பட்டையினையும் மண்புழுவினையும் யாரும் விமர்சனம் செய்யப்போவதில்லை. இதனை மனதில் வைத்துக்கொண்டு அவர் சொல்லிய அங்கீகாரத்தினை புரிந்து கொண்டு அவர் இட்டிருந்த லிங்கினை நானும் வாசித்தேன். இப்போது முதலில் கதையினை வாசிப்போம் அடுத்த பதிவில் என் கருத்துகளை நான் எழுதுகிறேன். . .
குறிப்பு : நான் காப்பியடித்தேன் என புகார்களினை வைக்க வேண்டாம். அவரின் இணையதள லிங்க் - http://verppulukkal.blogspot.in/2012/01/blog-post_26.html. வாசிப்பதற்கு எளிமையாக இருக்குமே என்னும் எண்ணத்தில் தான் காப்பி பேஸ்ட். . . 


                                             பத்தாம் வகுப்பு தனி  வினாத்தாள்
                                                     விக்னேஷ் - முதல் தாள்
மொத்த மதிப்பெண்கள் - 100 *
* -
மாறுதலுக்கு உட்பட்டது
                                                               
பகுதி - ஒன்று
சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

1 .
காலையில் எழுந்ததும் விக்னேஷ் செய்யும் முதல் காரியம்,
a)
தன் தங்கையின் ஜடையை இழுத்தல் b) தன் தந்தையிடம் திட்டு வாங்குதல்,
c)
அவன் அம்மாவின் புலம்பலை உதாசீனப்படுத்துதல் d) மொட்டை மாடிக்கு சென்று பல் விளக்குதல்
விடை:- மேற்கண்ட நான்கும்.


2 .
பள்ளிக்கு வரும் வழியில் விக்னேஷ் தினமும் சந்திக்கும் நபர் ,
a)
அடிகுழாயில் சண்டை போடும் அவன் தமிழ் ஆசிரியை b) அவனை ஒருதலையாய் காதலிக்கும் சகமாணவி மீனா c) இலந்தைப்பழக்கொட்டை தூள் விற்கும் பாட்டி d) பள்ளியின் வாசலில் வீற்றிருக்கும் சக்தி விநாயகர்
விடை:- மேற்கண்ட எல்லோரும்.


3 .
விக்னேஷ் காலில் அணிந்திருக்கும் செருப்பு மட்டும் எப்போதும் பளபளப்பாய் இருப்பதன் காரணம்,
a)
அவன் எங்களைப்போல் மண்ணில் ஓடி ஆடி விளையாடுவதில்லை  b) அவன் தில்லியில் இருந்தபோது அவன் அப்பா அவருக்காக வாங்கிய விலை உயர்ந்த செருப்பு அது c) பள்ளிக்கு வரும் முன்பு பல் விளக்க மறந்தாலும் செருப்பின் மேல்பகுதிக்கு எண்ணெய் வைக்க மறக்காதது d) அவன் மிகவும் கருப்பு என்பதால் செருப்பு பளபளப்பாக தெரிகிறது
விடை:- c) பள்ளிக்கு வரும் முன்பு பல் விளக்க மறந்தாலும் செருப்பின் மேல்பகுதிக்கு எண்ணெய் வைக்க மறக்காதது.

4 .
கடந்த மாணவர் சங்க தேர்தலில் அவன் யாருக்கு வாக்களித்தான்,
a)
அவன் ஆறு மாத எதிரி ஆறு மாத நண்பன் சீனிவாசனுக்கு b) ஊமைக் குசும்பன் கார்த்திக்கிற்கு c) உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு d) ராகுல் டிராவிட்டுக்கு
விடை:- a) அவன் ஆறு மாத எதிரி ஆறு மாத நண்பன் சீனிவாசனுக்கு

5 .
விக்னேஷ் தான் தேர்தலில் நிற்காததற்கு சொன்ன காரணம்,
a)
மாணவர் தலைவன் பதவி என் மயிருக்கு சமம் b) என்னை எதிர்த்து பெண்கள் நின்றால் எனக்கு பிடிக்காது c) ஆண்டறிக்கை தமிழில் இருப்பதால் அது தில்லியில் பிறந்த எனக்கு எல்லோரின் முன்னிலையிலும் வாசிக்க கடினமாய் இருக்கும் d) நண்பன் சீனிவாசன் இருந்தாலென்ன, நான் இருந்தாலென்ன
விடை:- மேற்கண்ட நான்கும்.
http://4.bp.blogspot.com/-98QUUSX3PA8/TyEvNRnMWlI/AAAAAAAAAFk/2Ay0jRUT4Yk/s320/bare-classroom.jpg.492x0_q85_crop-smart.jpg

கோடிட்ட இடங்களை நிரப்புக.


1 .
விக்னேஷ் ...................... வகுப்பு வரை வெளியூரில் படித்தான்.
விடை:- நான்காம்
2 .
ஆனந்த ஜெபசீலிக்கு கார்த்திக் ....................... என்று பட்டப் பெயர் வைத்தான்.
விடை:- வடிவக் குழாய்.
3 .
விக்னேஷுக்கு ................... டீச்சரைக் கண்டால் அறவே பிடிக்காது.
விடை:- H.M
4 .
ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்திலே ஏது கலாட்டா என அடிக்கடி........................... சொல்லுவார்.
விடை:- காசிராஜன் சார்.
5 .
விக்னேஷின் தந்தை சொந்தமாக .......................... இயந்திரம் வைத்திருந்தார்.
விடை:- பைண்டிங் செய்யும்


பொருத்துக.


1 .
சீனிவாசன்                            -          a)  பொன்.சிவசக்தி
2 .
கார்த்திக்                                 -          b)  கிரேஸ் ஜெபமணி
3 .
விக்னேஷ்                             -          c)  ஆனந்த ஜெபசீலி
4 .
காமராஜ்                                 -          d)  சிவசக்தி
சசிக்குமார்                             -           e)  உமா
விடை:- 1 - d, 2 - e, 3 - a, 4 - c, 5 - b.


4. '
யாதும் நீயே யாவரும் நண்பர்களே ' எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
விடை:- யாதும் நீயே யாவரும் நண்பர்களே
                 
கேதுவும் ரகுவும் கெட்டவழி சொன்னாலும்
                 
என் கோப்பைதனை நிரப்பும் மதுவே!
                 
என் கோபுரத்தின் உச்சி அடையும் படியே!!
                  
யாதும் நீயே யாவரும் நண்பர்களே
                 
அன்று நீ தந்த ஐம்பது பைசா கடன்
                 
கோடி ரூபாய் ஞாபகப் பணமாய்
                 
என் மனக் கோணியிலே கனக்குதடா!
                 
காதலே என் நட்பே கள்வெறி கொண்டு
                 
நான் கானம்பாடி திரிந்தாலும்
                 
நல்வழிப்படுத்தும் நீ நலமாய் இரு என
                 
நவிழ்ந்துவிடு ஓர் வார்த்தை,
                 
நன்றியோடு நான் இருப்பேன்- என்
                 
நாளை என்பேன் நீயென!  

குறு  வினாக்கள் (மதிப்பெண் - ஐந்து)

1 .
விக்னேஷ் வாழ்க்கையின் கொடுமையான  தருணங்கள்  என  நினைப்பதை  உதாரணத்தோடு விளக்குக,
                         
                           
கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்கள். வசிப்பது ஒரு குருவிக் கூட்டில், ஐந்து நண்பர்களுடன். குருவிக்கூட்டுக்குள்ளேயே பாத்ரூம். பாத்ரூமில் விளக்கு இல்லை. மாதத்தின் கடைசி வாரம். கையில் நயாபைசா இல்லை. அங்கே இங்கே ஒப்பேற்றி, வேலை விட்டு சாயங்காலம் திரும்பும்போது, ஒரு தேநீர் அருந்திவிட்டு, மீதியிருக்கும் சில்லறையில் ஒரே ஒரு கோல்ட் பிளாக் பில்ட்டர் சிகரெட் வாங்கி (வழக்கமாய் அடிப்பது கிங்க்ஸ்) அதை அலுங்காமல்  மேல்சட்டை பையில் வைத்து, புகைப் பிடித்து கொண்டே டாய்லெட் போகப் போகும் சுகத்தை நினைத்தவாறே அறைக்கு வருகிறீர்கள். அறையில் யாருமில்லை. அப்பாடா என ஆடைகள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு கையில் தீப்பெட்டியோடு பாத்ரூமிற்குள் நுழைந்து, சுத்தம் செய்து இரு நூற்றாண்டுகள் ஆகிவிட்ட டாய்லெட்டில் அமர்ந்து, சிகரெட்டை பற்ற வைக்கிறீர்கள். பின்னர், ஆழமாய்  ஒரு இழுப்பு. புகை வரவில்லை.மீண்டும் ஒரு இழுப்பு. எந்த பயனும் இல்லை. என்னடா இது என சிகரெட்டை உற்று பார்த்தால், தலைகீழாய் பற்ற வைத்திருக்கிறீர்கள்!! அப்போது வாயிலிருந்து நீங்கள் அறிந்தும் அறியாமலும் வரும் வார்த்தைதான்," என்ன கொடுமை சார் இது!" (ஆனாலும் அந்த சிகரெட்டை பஞ்சு வரை ஒடித்து விட்டு, பின்னர் குடித்துவிட்டு வருவது இந்த கேள்விக்கு அவசியமில்லாதது)


2 .
சுயமைதுனம் பற்றி விக்னேஷ் கேட்டதற்கு நண்பர்களின் பதில் விளைவு என்ன?


             
அன்று எங்கள் ஊர் கோவில் திருவிழா. எங்கள் சவுண்டை அம்மன் கோவில் தெருவும், பத்திரகாளி அம்மன் கோவில் தெருவும் அல்லோகலப்பட்டு கொண்டிருந்தது. அன்னராஜ் அன்று விக்னேஷை பியர் குடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் மும்முரமாய் இருந்து வெற்றியும் பெற்றுவிட்டான். ஒரே ஒரு கோப்பை பியர் அருந்திய விக்னேஷ் தன சுய நிலையை இழந்துவிட்டதாய் அவனே கற்பனை செய்து கொண்டு, தான் பொன். சிவசக்தியின் (அவள்  அப்பா  பெயர்  பொன்ராஜ்) காதலை ஏற்றுக் கொள்ளாமல் விட்டது தவறு என புலம்பிக் கொண்டிருந்தான் (நூறாவது முறையாக) பள்ளியில் படிக்கும் காலத்தில் வருகின்ற காதல் வெறும் ஈர்ப்பு மட்டும்தான் என்று அவன் அவளிடம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சொன்னதை,  இரண்டு வருடங்கள் கழித்து வாபஸ் வாங்குவதாக அறிவித்தான். இப்போது அவளை எங்கு பார்த்தாலும் உடனே I LOVE YOU  என சொல்லப் போவதாகவும் சூளுரைத்தான். அப்போது அவன் கேட்டதுதான் இந்த கேள்வி!
"
டேய்! நீ கையடிப்பியா?" - யாரையும் குறிப்பிடாமல் பொத்தம் பொதுவாக அவனோடு அமர்ந்திருந்த எங்கள் ஐந்து பேரிடமும் ஒரே நேரத்தில் கேட்பது போல் கேட்டான். நான் வழக்கம்போல்  அமைதியாய் இருந்தேன், அன்னராஜ் போதையில் இருந்ததால், ' கெக்கக்க்கே ' என சிரித்தான். சசி, அந்த கேள்வியில் இருந்த நேரடித் தன்மையில் பாதிக்கப் பட்டவன் போல் அங்கிருந்து நகர முயற்சித்தான். குரு மூர்த்தி மௌனத்தை  உடைத்து  கேட்டான்," ஆமா! இப்ப அதுக்கென்ன?".நானும் இதுதான் தருணமென்று,"ஆமாம்!" என்றேன். அன்னராஜின் 'கெக்கக்க்கே ' இன்னும் நிற்கவில்லை.

3 .
விக்னேஷ் ஒரு சுதந்திர போராட்ட வீரன் என்பதை சுருக்கமாய் விளக்குக
                                   
முதன் முதலில், தன் வகுப்பில் படிக்கும் பெண்களுடன்  பையன்கள்  பேசுவது நம் மதிப்பிற்கு இழுக்காகும் என்ற தத்துவத்தை உதிர்த்ததே விக்னேஷ்தான். அதற்கு முன்பெல்லாம் யாரிடம் பெண்கள் அதிகமாய்  பேசுகிறார்களோ அவன்தான் வகுப்பில் கதாநாயகன்! விக்னேஷின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பின், அவன் ஒரு புரட்சி தளபதியாக பார்க்கப்பட்டான் (ஆனால், பெண்கள் யாரும் அவனோடு பேச விருப்பப்படவில்லை என்றும், அவன் எந்த பெண்ணையும், ஆசிரியர்கள் உட்பட யாரையும் மதிப்பதில்லை  என்றும், அதன்பால் எழுந்த காழ்ப்புனர்ச்சியாலேயே அவன் அப்படி ஒரு முடிவெடுத்தான் என்றும் ஒரு வதந்தி உண்டு ) ஆக, பெண்களை எதிர்த்து அரசியல் செய்து, ஆண்களுக்கு அவர்களின் கன்னிச்சிறையிளிருந்து விடுதலை வாங்கி தந்த விக்னேஷை சுதந்திர போராட்ட வீரன் என சொல்வது சால பொருத்தமாகும்.

4 .
விக்னேஷின் கனவுகள்- சிறுகுறிப்பு வரைக.
                                       1 .
தனக்கு லட்ச ரூபாய்  கிடைத்தால் அதில் பாதி தொகைக்கு ஏலந்தப்பழக்கொட்டைத் தூள் வாங்கி தின்ன வேண்டும்.
2 .
சீனிவாசன் பல போட்டிகளில் கலந்து கொண்டு வாங்கும் பரிசுகளை தன காலால் மிதித்து, எச்சில்  துப்பி, முடிந்தால் அதன் மேல் சிறுநீர் கழித்து அவனிடம் தர வேண்டும்.
3 .
சீனிவாசன் வாசிப்பதை கேட்டு கேட்டு படித்தே பாடங்களை மனதில் பதிய வைக்க முடிவதால், எல்லாப் பாடங்களையும் அவன்  குரலிலேயே பதிவு செய்து தேவையானபோது கேட்கும் வண்ணம் ஒரு ரெகார்டர் வாங்க வேண்டும்.
4 .
இனிமேல் மீனா அவனிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால், "போடி சப்ப மூக்கி" என நேரடியாக திட்ட வேண்டும்.
5 . "
ஏன் டீச்சர் ஆட்டி ஆட்டி நடக்குறீங்க? நேர நடங்க" என எங்கள் தலைமை ஆசிரியையிடம் முகத்தை நேருக்கு நேராய் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும்.

5 ."பொன்.சிவசக்தி விக்னேஷை காதலித்தாள்"-என்பதை  ஆதாரத்துடன் சுருக்கமாக விளக்குக.
                                                விக்னேஷ் செய்யும் மடத்தனமான குறும்புகளை, சீனிவாசன் கேலி செய்யும்போது அதை மறுத்து அவள்,விக்னேஷுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசுவாள். "U வடிவக் குழாய்"** பிரச்சினை பெரிதாய் வெடித்து கிளம்பிய போது, அவனிடம் மாணவிகளின் சார்பில் முதலில் மன்னிப்புக்கேட்டவள் அவள்தான் என்பதை வைத்தே அவள் காதலை புரிந்துகொள்ளலாம்..
** - இதைப்பற்றிய விரிவான பதிலுக்கு பெருவினாக்கள் நிர்.2 -ஐ காணவும்.

பெருவினாக்கள் (மதிப்பெண்-பத்து)

1 . "விக்னேஷ் விவகாரமான ஆள்" - விளக்குக.
                                    எட்டாம் வகுப்பு, B பிரிவு. சூரியன் அன்றும் கிழக்கேதான் உதித்தது.ரஷ்யா உடைந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. காசிராஜன் சார் தனது பாதி வழுக்கையை தடவியவாறே, எப்போதும்போல் வகுப்பின் நீள அகலத்தை அளந்த வண்ணம் சமூக அறிவியலில்,குடிமையியல் பாடத்தை ஒப்பித்துக் கொண்டிருந்தார்.மின்சாரம் எவ்வளவு முக்கியமான் ஒன்று என்பதையும், அதை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும் என்றும் வழக்கம்போல் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்தார்.
சீனிவாசன், சிவசக்திக்கு எதுவோ சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்தான். வகுப்பில் மூத்த பெண்ணான(ஒரு வருஷம் பெயில்!) வீரமணி,  தன் தாவணியை ஆயிரத்து நூற்றி பதினாறாவது முறையாக சரி செய்தாள். திடீரென விக்னேஷ் தன் திருவாய் திறந்து கீழ்க்கண்ட சொற்களை உதிர்த்தான்.
"ஆமா சார்! இப்பிடித்தான் ஒரு தடவ ரஷ்யாவுல நைட்டு பத்து மணிவாக்குல திடீர்னு கரண்ட்டு போயிருச்சி! மூணு மணி நேரம் கழிச்சிதான் வந்துச்சி. கரக்டா  அதுக்கு பத்து மாசம் கழிச்சி மக்கள்தொகை கணக்கெடுத்துப் பார்த்தா, வழக்கத்த விட மக்கள்தொகை ஜாஸ்தியாயிருந்துச்சி!!" - என்று சொல்லி விட்டு தன் மலரினும் ஒத்த இதழ்களை மூடிக் கொண்டான். என்ன நிகழ்ந்தது என்பதை உணருமுன்பே விக்னேஷ் உரையாற்றிவிட்டு அமர்ந்துவிட்டதால்,திருவாளர் காசிராஜன் தன் அரை வழுக்கை ,முழு வழுக்கையாகிவிட்டதா என்பதை மீண்டும் பரிசோதித்தார். சிவசக்தி,பிரியா, சுந்தரி மற்றும் வீரமணி ஆகியோர் புத்தகத்தைக் கொண்டு முகத்தை மறைத்தவண்ணம் சிரித்துக் கொண்டிருந்தனர். வகுப்பின் மிக மூத்த உறுப்பினர்களான ராஜசேகரும், குண்டு மணிகண்டனும் (இவனைத் தவிர இன்னும் ரப்பர் மணிகண்டனும்,பென்சில் மணிகண்டனும் வகுப்பில் உண்டு) எங்கே தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்கிற அச்சத்தில் விக்னேஷை நோக்கினர். அவனோ, சிறிது நேரத்திற்கு முன்பு அவன் சொன்னதற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்பதைப்போல் அமர்ந்திருந்தான். 
"அது இல்லன்னா,இதுதான் நடக்கும்!" - என இறுதியாய்,முத்தாய்ப்பாய் ஒரு வார்த்தையை சொல்லி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காசிராஜன் சார். 

2 . "முழுக்க நனஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு?"- என சீனிவாசன் யாரிடம் எப்போது சொன்னான்?
                                             காலையில் எட்டேகால் மணிக்கு இப்படியொரு சந்தோஷம் தனக்கு கிடைக்குமென்று பத்தாம் வகுப்பின் எந்தவொரு மாணவ மணிக்குஞ்சும் நினைக்கவில்லை. ஆனந்தி  ஜெபசீலியின் கண்களில் இருந்து கழன்று விழுந்துகொண்டிருந்த கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் சீனிவாசனுக்கும், அருகிலிருந்த அன்னராசுக்கும் ஆனந்தத்தை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தன. எட்டு பதினாலு வரை பேசாமால் இருந்த விக்னேஷும் சீனிவாசனும் கண்களால் அளவளாவிக்கொண்டனர். ஆனால் அவள் ஏன் அழுகிறாள் என்ற காரணம் மட்டும் இதுவரை தெரியாததால் குருமூர்த்தி அடக்கி வாசிக்குமாறு எல்லோரையும் கெஞ்சிக்கொண்டிருந்தான். கடைசி பெஞ்சில் ஆனந்தியோடு அமர்ந்து அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த பொன்.சிவசக்தி, அழுகையை ரசித்துக்கொண்டிருந்த மாணவர்களை  முறைத்துக்கொண்டிருந்ததுதான் ஏன் என்று சீனிவாசனுக்கு புரியவில்லை.பத்தாம் வகுப்பின் கடைசி பெஞ்சுக்கு பின்னால்தான் வகுப்பறையின் வாசல். எட்டு முப்பதுக்கு தலைமை ஆசிரியரின் சிறப்பு வகுப்பு (I mean Special Class). எட்டு முப்பத்தி இரண்டுக்கு வகுப்பறை அமைதியானது. அந்த அழுகைச்சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த மூன்றாவது வினாடியிலேயே ஆசிரியர், ஆனந்தியின் அழுகையை கவனித்துவிட்டார். பின்னர் நடந்த சம்பாஷனைகள் பின் வருமாறு.......
ஆசிரியர் : ஏம்மா அழுகுற?
ஆனந்தி : (இன்னும் பலமாக அழுதாள்,பதிலேதும் சொல்லாமல்!)
ஆசிரியர் : (எல்லோரையும் பொதுவாக பார்த்துக்கொண்டே) இப்ப அவ ஏன் அழுகுறான்னு சொல்லப் போறீங்களா இல்லையா?
பொன்.சிவ : டீச்சர், அவள பசங்க எல்லாம் பட்டப்பேர் சொல்லி கிண்டல் பண்றாங்களாம்! அதான் அழுகுறா!
(இந்த இடத்தில் ஒரு சின்ன இடைச்செருகல்! பொன்.சிவசக்தி சொன்ன இந்த வார்த்தைகளை கேட்டதும் அதுவரை சிரித்துக்கொண்டும், அடுத்து என்ன நடக்கும் என ஆவலாய் எதிர்நோக்கிகொண்டும் இருந்த மாணவக்குஞ்சுகள், அதிர்ச்சியின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் அவசரமாய் நோக்கிகொண்டனர். அபாய மணியின் ஓசை எல்லோரின் மண்டைக்குள்ளும் ஒலிக்க ஆரம்பித்தது. விக்னேஷும்,சீனிவாசும் மீண்டும் எதிரிகளாய் மாறி ஒருவரை ஒருவர் உஷ்ணப்பார்வை பார்த்துக்கொண்டனர். அவளுக்கு கடைசியாய் என்ன பட்டப்பெயர் வைத்தோம், அவள் எந்தப்பட்டப்பெயரை இப்போது சொல்லுவாள் என ஊமைக் குசும்பன் கார்த்திக் யோசித்துக்கொண்டிருந்தான்.)

ஆசிரியர் : பட்டப்பேரா
என்ன பட்டபேருயாரு அவள அப்பிடிக் கூப்புட்டா?
ஆனந்தி : (கண்ணீரை துடைத்தவாறே) U வடிவக்குழாய்-னு சொல்லி கேலி பண்றாங்க டீச்சர்.
ஆசிரியர் : U வடிவக் குழாயாஅப்படின்னாயாரு அப்பிடிக் கூப்புடறது?
ஆனந்தி : எல்லாப் பசங்களுந்தான் டீச்சர்! 
ஆசிரியர் : எல்லோருமாசீனிவாசா நீயுமா?
(முதல் பெஞ்சில் நடுவில் அமர்ந்திருந்த சீனிவாசன் மெல்ல எழுந்தான். கார்த்திக்கையும்,விக்னேஷையும் கண்களால் எரித்தான்.ஆசிரியரின் நேர்ப்பார்வையை தவிர்த்தான்)
சீனி : இல்ல டீச்சர்! நான் அப்படி சொல்லல டீச்சர்!
ஆசிரி: அப்ப யாரு சொல்வா?
சீனி: தெரியாது டீச்சர்.
ஆசிரி : (சீனியை முறைத்தவாரே) ஆனந்தியாரு சொல்லி நீ கேட்ட?
ஆனந்தி: அன்னராசும் விக்னேஷும் பேசிக்கிரப்போ கேட்டேன் டீச்சர்.
அடுத்த இருபது நிமிடங்கள் சீனிவாசன் அருகில் இருந்த அன்னராசும்மூன்றாவது பெஞ்சில் இருந்த விக்னேஷும் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்.காதுகளில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை யாரேனும் துடைப்பார்களா என அவ்வப்போது சக மாணவர்களை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். காலை அசெம்ப்ளி ஆரம்பிப்பதற்கான மணி ஒலித்ததும்தன பிரசங்கத்தை நிறுத்திய ஆசிரியை எல்லோரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கம்மாணவர்களைவிட மாணவிகளையே அதிகம் பாதித்திருந்தது.சகமாணவனை காட்டிக்கொடுத்த ஆனந்தி அந்த நொடியிலிருந்து மாணவிகளுக்கும் எதிரியானாள். பொன்.சிவசக்தி நேராக விக்னேஷிடம் வந்து மன்னிப்புக் கோரினால். வகுப்பறையில் நிலவிய அமைதியை ப்ரியா கலைத்தாள். "ஆனந்தி தெரியாம தப்புப் பண்ணிட்டா! இதெல்லாம் படிக்கிறப்போ சகஜம். மன்னிச்சிருங்க!" - என்றுவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினாள். அப்போது சீனிவாசன் ஆனந்தியை பார்த்து ,"முழுக்க நனஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்குஅந்த பட்டபேர உனக்கு வச்சது கார்த்திக்தான்! வேணுமுன்னா நீ பதிலுக்கு அவனுக்கு ஒரு பட்டப்பேர் வச்சிரு!" - என்றவுடன் எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க, " அசெம்ப்ளி ஆரம்பிச்சி இவ்வளவு நேரம் ஆச்சி! பத்தாம் வகுப்பு பசங்க எங்க போனாங்க?"-என அடுத்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார் காமராஜ் சார்.


 (தொடரும். . . )

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

titansatheesh.blogspot.in said...

நண்பர் கிமு அவர்களே

உலகத்தரம் வாய்ந்த ஒர் உன்னத சிறுகதையினை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் . கதையில் பின் நவீனத்துவ கோட்பாடுகள் பின்னி பிணைந்துள்ளது .
பத்தாம் வகுப்பு தனி வினாத்தாள் தேர்வு எழுதும் விக்னேஷ்

1 . "விக்னேஷ் விவகாரமான ஆள்" - விளக்குக.
எட்டாம் வகுப்பு, B பிரிவு படிக்கின்றார் . இது போன்ற பல வித்யாசமாக கதை எழுதி அசத்தியுள்ளார் ,கதாசிரியர் . நானும் அவரது blog சென்று பார்த்தேன் . சிறுகதை எழுதுவது எப்படி என்ற நூல் வாங்கி படித்து அதன் விளைவாக இது போன்ற சிறுகதை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார் . இது போல் அவர் சிறப்பாக பல சிறுகதை எழுதி அதை நாவலாக தொகுத்தால் சாருவின் 0 டிகிரி நாவலுக்கு இது ஒரு சவாலாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை .

Post a comment

கருத்திடுக