பொறுப்புணர்ச்சியா ? காழ்ப்புணர்ச்சியா ?

இப்போது சமீபகாலமாக நம் சமூகத்தில் ஹாட் டாபிக்காக இருக்கும் விஷயம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை. கலை சட்டம் மருத்துவம் என அனைத்தும் களப்பணியில் இறங்கிய போதும் பொறியியல் கல்லூரி அமைதி காத்துக் கொண்டிருந்தது. இதனை என் கல்லூரி மாணவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒன்றினை சொல்லிவிடுகிறேன். நான் என் கல்லூரியில் நடந்த விஷயத்தினை மட்டுமே பதிவு செய்கிறேன். இது வேறு ஏதேனும் போராட்ட நிறுவனங்களை பாதிப்பது போல் இருந்தால் கிமு பக்கங்கள் பொறுப்பல்ல.

திருச்சி வொர்க்‌ஷாப் சென்று கோவை திரும்பும் போது எங்களிடையே விளையட்டாக இருந்த பேச்சு நமக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை ? நாம் தான் களத்தில் இறங்கவில்லையே என சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த குறுந்தகவல் திருமலையம்பாளையத்தில் நாளை காலை ஒன்பது மணிக்கு மனித சங்கிலி போராட்டம் ஈழத் தமிழர்களுக்காக என. அப்போது உடனே அனைவருக்கும் செய்தி பரவ ஆரம்பித்தது.

நான் விமானப் பொறியியல் மாணவன். குறுந்தகவல் வந்ததும என் டிபார்ட்மெண்ட் மாணவனுக்கு தான்.அவனுக்கு இருக்கும் பிரச்சினை ECE டிபார்ட்மெண்டில் இருக்கும் ஒருவன் நான் பத்துக்கும் மேல் மாணவர்களை தன் வகுப்பிலிருந்து இறக்குகிறேன் என சொல்லிவிட்டான். இவனும் இறக்கவில்லையெனில் அது தன் அந்தஸ்திற்கு அவமானம் தானே ? அதனால் என்னையும் சேர்த்து சிலரை பங்கு கொள்ள சொன்னான். என் கேள்வி இது போராட்டமா ? இந்த கேள்வி கூட இங்கே சரியானது அல்ல.

இன்று நடந்ததை சொல்கிறேன். போராட்டம் திருமலையம்பாளையத்தில் நடந்தது. அது நேருவின் குழுவில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு செல்லும் வழி. அங்கு தான் பெண்களுக்கான விடுதி இருக்கிறது. நாங்கள் இருப்பது எட்டிமடையில். அங்கு ஆண்களுக்கான விடுதியும் வேறு ஒரு நேரு குழுமத்தின் கல்லூரியும் இருக்கிறது.

பேருந்து ஏறும் போது என்னை அழைத்த நண்பன் எனக்கு அழைப்பினை விடுத்தான். யாரும் செல்ல முடியாது. அப்படியே போக நினைத்தாலும் அந்த பேருந்தினை வழிமறைத்து அதில் இருக்கும் கல்லூரி மாணவர்களை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் என. எப்படியோ நான் சென்ற பேருந்தினை யாரும் மடக்கவில்லை! அந்த இடத்தினை கடக்கும் போது நான் பார்த்த அனைத்தும் வெறும் வதைத் திடலே தவிர போராட்டம் அல்ல.

காலையில் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவிகளை அப்படியே கூட்டிக் கொண்டு போராட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு முதல் வரிசையில் இருக்கும் மாணவர்கள் சிலர் கைகளில் போர்டுகளை சுமந்து கொண்டு உயிரினை கொடுத்து கத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னர் கொளுத்தும் வெயிலில் தார் ரோட்டில் பெண்களினை உட்கார வைத்திருந்தனர். அவர்களுக்கு பின் ஆங்காங்கே குட்டி குட்டி கும்பல்கள் சிரிப்பு கலாய் என அரங்கேறிக் கொண்டிருந்தது.

வெறி என்பது தற்காலிக இலக்கினை கொண்ட ஒன்று. அதைத் தான் ஈழத் தமிழர்கள் சார்பாக மாணவர்கள் கொள்ளும் போராட்டத்தினில் காண முடிகிறது. இன்று அதனையே என் கல்லூரியிலும் ஆரம்பித்தது. மேலும் அதற்கு என்னை அழைத்த என் அறைப்பங்காளன் சொன்ன விஷயம் - நாம ஆரம்பிப்போம் தானா மத்த பொறியியல் காலேஜ் சேரும்!!! இது என்ன வியாபாரமா போராட்டமா ?

மேலும் போராட்டம் என்பது வெறும் கோஷங்களாலும் மனித கூட்டங்களாலும் அரங்கேறும் விஷயம் அல்ல. இங்கே இலங்கையில் ராணுவம் தமிழர்களை வதை செய்கிறது என தன்னுடன் படிக்கும் சகாக்களை வதை செய்து கொண்டிருக்கின்றனர். பழிக்கு பழிதான் தீர்வு என மாணவர்களிடம் யார் சொன்னது ? உண்மையில் அந்த பெண்களை பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கிறது. மேலும் ஊருக்கு அந்த வழியே பெண்கள் வெளி வந்தாலும் போராட்டாத்தினுள் இழுக்கப்பட்டனர்.

எந்த ஒரு பிராந்தியத்திலும் இப்படி ஒரு போராட்டத்தினை நான் கண்டதில்லை. கேட்டதும் இல்லை. சுயத்துடன் அடுத்தவனுக்காக செய்வதே போராட்டம். அப்படி வலுக்கட்டாயமாக அழைத்து வந்தால் அவனின் போராட்டம் அந்த திடலிலிருந்து வெளியே எப்படி போவது என்பதில் தான் இருக்கும். இதனை கூட புரிந்து கொள்ளாத மனித ஜந்துக்கள் யாருக்கு போராடி என்ன பயன்!

இதனை அரங்கேற்றியவர்களின் முக்கிய குறிக்கோள் என்ன ? அங்கிருக்கும் எத்தனை பேருக்கு இந்த போர் ஏன் நடக்கிறது ? உண்மையில் அது போர்தானா ? எங்கு யாரால் ஆரம்பித்தது ? இது நாள் வரை நடக்கிறது எனில் உலக அமைதிக்காக நிறுவப்பட்ட ஐ.நா சபை என்ன செய்கிறது ? தமிழகம் மட்டும் போராடுகிறதா ? இப்போது இந்த போராட்டம் எப்படி முடியும் ? இது போல் எத்தனையோ கேள்விகளை நான் அவர்களை பார்த்து கேட்க விரும்புகிறேன். இதில் பல எனக்கும் தெரியாது. தெரியாமல் நான் கலந்து கொண்டிருந்தால் உண்மையில் என்னை பொறுத்த வரை அது போராட்டம் அல்ல ஆட்டு மந்தை கூட்டம். தனுள் நானும் ஒரு ஆடாக இருந்திருப்பேன் காரணமின்றி கத்திக் கொண்டு.

என் கல்லூரியின் போராட்டத்தினை பார்க்கும் போது தோன்றிய கேள்வி - இவர்களின் போராட்டம் இலங்கை ராணுவம் செய்த கொடுமைகளை கண்டு சும்மா இருக்கும் அரசின் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியா அல்லது கலை கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்களே என்னும் தார்மீக பொறுப்புணர்ச்சியா ?

இதை வாசிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் அடுத்து பரதேசி படத்தினை பற்றி எழுத இருக்கிறேன். வாசியுங்கள் பாருங்கள் நல்ல கலையனுபவமாவது கிட்டும். தயவு செய்து இந்த கேள்விக்குறிகளுக்கு பதில் தேட வேண்டாம்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக