பரதேசி எனக்கு பிடித்திருந்தது

இந்த தலைப்பினை தான் நான் வைக்க வேண்டிய சூழ்நிலையில் எனக்குள் இருக்கிறேன். இப்படத்தின் என் பார்வைக்குள் செல்வதற்கு முன் நான் மானசீகமாக கொண்டுள்ள குருவின் விமர்சனத்தினை பற்றி கொஞ்சம் சொல்ல இருக்கிறேன்.

சாரு நிவேதிதா பரதேசி படத்தினை சார்ந்து எழுதியிருக்கும் விஷயம் முழுக்க நெகடிவ் தன்மையினை கொண்டது. இதனை தவறாகவும் கொள்ள வேண்டாம். அவர் இப்படத்தினை ஒரு கலைபடைப்பாக கொள்ளவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை schlinder's list மற்றும் pianist என்னும் படத்துடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார். அவர் சொல்லுவது முழுக்க முழுக்க எனக்கு புதுமையாகவும் ஒத்துக் கொள்ளும் படியும் இருக்கிறது. அவருடைய இணையதளத்தில் ஏதோ ஒரு பிரச்சினை அதனால் லிங்கினை கொடுக்க முடியவில்லை. சரியானபின் அதில் எழுதியிருந்தால் தருகிறேன். அவர் முழுக்கட்டுரையும் ஃபேஸ்புக்கில் இருக்கும் வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.

மேலும் தமிழில் இதுவரை வெளிவந்திருக்கும் படங்களினை வைத்து இதனை சிலர் கொண்டாடுகின்றனர் என்னும் விஷயத்தினையும் முன்வைத்திருக்கிறார். நிச்சயம் இது உண்மை தான். ஒரு வேளை தொடர்ந்து எழுத இருக்கும் கருத்துகளும் அப்படி அமையலாம். அவரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பினும் இப்படம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு இப்படத்தினை நல்ல படம் என்றே சொல்ல வைக்கிறது.

முதலில் பாலா. எனக்கு பாலாவின் படங்கள் சுமாராக தான் பிடித்திருந்தது. காரணங்கள் இரண்டு. அவரது சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கும் விதம் ஜனரஞ்ஜகமாக இருக்காது. இன்னுமொன்று அவருடைய அனைத்து படங்களும் கட்டமைப்பில் ஒரு அமைப்பினையே கொண்டிருக்கிறது. அஃதாவது கதையானது ஒரு கோட்டில் ஆரம்பத்திலிருந்து பயணிக்கும். பின் எப்படி என்றே யாருக்கும் தெரியாது ஆனால் அந்த கதையிலிருந்து ஒரு கிளை உருவாகி வேறு ஒரு பாதையினை தேர்ந்தெடுக்கும். அந்த பாதையினை உற்று நோக்கினால் அங்கு கதையின் நாயகனுக்கு சம்மந்தமுடைய அல்லது நெருக்கம் கொண்ட யாரோ ஒருவர் இறந்தோ வதைக்கு உட்பட்டுக் கொண்டோ இருப்பார். அதனால் நாயகனுக்கு கோபம் வந்து அந்த வில்லனை அடித்து கொல்வார். இந்த ஃபார்முலாவினை பாலாவின் அனைத்து படங்களிலும் காண முடியும். இந்த பொதுத் தன்மையினை உடைக்கும் விஷயம் பரதேசியில் காண முடிகிறது. இந்த ஒரு விஷயம் தான் உடைகிறது. இதைத் தவிர பாலா படங்களில் காணப்படும் நாம் அறியாதொரு வகை தமிழ் பார்த்திராத லொகேஷன் அழுகை காட்சிகள் கெட்ட வார்த்தைகள் என சகலமும் இப்படத்திலும் இருக்கிறது.

நான் ரெட் டீ என தழுவி எடுக்கப்பட்ட நாவலினை இன்னாமும் வாசிக்கவில்லை. இப்படம் அதனை அப்படியே தழுவலாக்க பட்டிருக்கிறதா என பார்த்தால் இணையதளத்தில் வரும் விமர்சனங்களின் மூலம் இல்லை என்பதே தெரிகிறது.

படத்தின் ஆரம்பத்திலிருந்து பாலா கதையினை அருமையாக கட்டமைத்திருக்கிறார். சாலூர் கிராம மக்கள். அங்கு ஒட்டுபெருக்கி(அதர்வா) என தம்பட்டம் அடிப்பவன். அங்கு ஒரு கல்யாணம் நடக்கவிருப்பதை சொல்கிறான். அந்த கல்யாணமும் காட்சியில் நடக்கிறது. அதன் பின் இவனும் அங்கம்மாவும் காதலிக்கின்றனர்(வேதிகா). அந்த பஞ்சாயத்து முடியும் போது கதை கிளையினை ஆரம்பிக்கிறது. வேலை தேடி சென்ற இடத்தில் பணம் கிடைக்காமல் போக அங்கு வரும் கங்காணியின் கண்ணில் சிக்குகிறான். அங்கு அவன் கிராமத்திற்கே வேலை தருவதாக தேயிலை எஸ்டேட்டிற்கு கூட்டி செல்கிறான். அங்கு நடப்பது தான் மீதி வதை சாரி கதை.

நான் சொன்னது முழுக்க முதல் பாதி அஃதாவது இடைவேளை வரும் கதையம்சம் மட்டுமே. இதற்குள்ளேயே எனக்கு சில காட்சிகள் மிக பிடித்துவிட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஒட்டுபெருக்கியின் வேலையே தம்பட்டம் அடிப்பது. அதற்கு அவனிடம் இருக்கும் தண்டோராவினை அவன் தன் சொந்தமாக நினைப்பவன். அவனுடைய சுக துக்கங்கள் அனைத்தும் அதனுடன் பகிரும் வண்ணம் அமைகிறது. இந்த  கோட்பாட்டினை அழகுற படத்தில் பாலா காட்டியிருக்கிறார். குறிப்பாக அவனை அவமானபடுத்தியவுடன் தொடர்ந்து அந்த தண்டோராவினை அடிக்கும் காட்சி. இந்த தண்டோரா படம் நெடுக வரும் என எதிர்பார்த்தேன். என் படம் இல்லையென்பதால் வரவில்லை!

இதுவரை என் பார்வையில் தமிழ் சினிமா அடிமைபடுத்தப்பட்டவர்களினை மையமாக வைத்தே எடுக்கபட்டிருக்கிறது. ஆனால் இங்கோ முழுக்க முழுக்க அடிமை படுத்துபவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கட்டமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் எந்த கதாபாத்திரத்தினை படத்தினுள் நுழைத்தாலும் அது அதிகாரத்தினை சுமந்து கொண்டே வருகிறது. சில இடங்களில் அந்த மக்களாக பார்வையாளனை மாற்றும் அல்லது கதை மாந்தர்களை கதையினை விட்டு வெளியில் இழுக்கும் தன்மையினை அவர் அழகுற செய்திருக்கிறார். எப்படி எனில் இவர்களை காப்பாற்ற யாராவது கிடைப்பார்களா என தேடி தேடி அவர்களிடம் தேடல் மட்டுமே மிஞ்சுகிறது. தொடர்ந்து பார்ப்பதால் சிறிது நேரம் நாமும் தேடலை தொடர்கிறோம். ஒரு காட்சியினை அல்லது ஒரு உணர்வினை தொடர்ந்து வைப்பதால் பார்வையாளனிடமும் அதனை கொண்டு வர முடியும். அதன் சிறு முயற்சியே இது.

மேலும் படத்தின் முதல் பாதி முழுக்க கேமிராவின் துல்லியம் எடிடிங் போன்றவற்றினை நம்மால் காண முடியும். படத்தில் அசர வைக்கும் வண்ணம் முதல் பாதியில் எடிட்டிங் நடந்திருகிறது. அஃதாவது காட்சி மாறும் போது சில இடங்களில் தொடர்ச்சியற்று இருப்பது போல் தெரியும். அதே தன்மையானது இங்கு ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. குறிப்பாக கங்காணியிடம் ஒட்டுபெருக்கி தன் ஊரினை சொல்லியவுடன் ஒரு காட்சி மாறும். முடிந்தால் மீண்டும் கவனியுங்கள்.

படத்தின் முதல் பாதியில் மட்டும் என கூறியிருக்கிறேன். ஏன எனில் இரண்டாம் பாதி முழுக்க கதையின் ஆளுமை வந்துவிடுகிறது. கதையின் ஆளுமை எனில் வதைகள். இந்த வதைகளில் தான் எனக்கு கொஞ்சம் முரண்பாடு ஏற்பட்டது. அது யாதெனில் இரண்டு பாடல்கள். 'செந்நீர் தானா' மற்றும் 'ஒரு மிருகம்' இந்த இரண்டு பாடலில் வரும் வரிகளை அப்படியே காட்சியாக்கியிருக்கிறார். ஆனால் அவற்றினை காட்சியாக மாற்றியிருந்தால் இன்னமும் அற்புதமாகியிருந்திருக்கும் என்பது என் ஆதங்கம். சின்ன உதாரணம் சொல்கிறேன் சாலூர் மக்கள் அங்கு போனவுடன் அவர்களுக்கு எப்படி வேலை செய்வது என தெரியாது. அப்போது தன்ஷிகா ஒருத்திக்கு உதவி செய்வாள். அட்டை கடிக்கும் என் ஏதோ ஒன்றினை அவளுடைய காலில் தேய்ப்பாள். இதன் தாக்கத்தினை இந்த காட்சியின் நீட்சியினை நான் திரை காட்சிகளாக எதிர்பார்த்தேன் ஆனால் அனைத்தும் பாடல்களில் முடிந்துவிடுகிறது!

குறைகள் இவை மட்டுமா எனில் மாபெரும் குறை படத்தின் கதையில் இருக்கிறது. கதையில் பஞ்சத்தினை சிறிதும் காண்பிக்காமல் பஞ்சம் பொழைப்பதற்கான பயணம் தொடங்குகிறது. எப்படி என தெரியவில்லை(பாலா பதில் ப்ளீஸ்) ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் இதனை மறக்கடித்துவிடுகிறார். அதர்வாவின் நடிப்பு அப்படியே பிதாமகன் விக்ரம் தான் என்ன இதில் பலதரப்பட்ட வசனம் இருக்கிறது. பிடித்த நடிப்பு தன்ஷிகாவினுடையது.

ஒட்டு மொத்தமாக குறைகள் இல்லை என சொல்லமாட்டேன் ஆனால் ரசிக்கும் வண்ணம் ஒவ்வொரு காட்சிகளை எடுத்திருக்கிறர் பாலா. இன்னமும் கொஞ்சம் படத்தினை பாடல்களின்றி பெரிது படுத்தியிருக்கலாம். . .

பி.கு :  எனக்கு இந்த அட்டுரையே பிடிக்கவில்லை. நிறைய விஷயங்களை படம் பார்க்கும் போது எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் நான்கு நாட்கள் கழித்து எழுதுகிறேன். நான் அப்போது யோசித்ததில் ரசித்ததில் கால் வாசி கூட எழுதவில்லை என்னும் அதிருப்தி தான் வருகிறது. இப்போது இணையதளத்தில் பலதரப்பட்ட எதிர்வினை கட்டுரைகளை வாசித்துவிட்டதால் மீள்பார்வையில் நிச்சயம் ஏதேனும் மனச்சிக்கலில் இறங்கிவிடுவேன். இத்துடன் அரதேசி குளோஸ். நல்ல வெளி நாட்டு படங்களினை அடுத்து அறிமுகபடுத்துகிறேன். நிச்சயம் பரதேசி பார்த்திருப்பீர்கள் அதனால் எழுத வேண்டாம் என நினைத்தேன். பாழாய் போன மனம் இருக்கிறதே. . . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக