பக் பக் ப்க பக். . .

இப்போது அம்மன். சமயபுரம் கோயிலில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். இது நான்காவதற்கும் முன்னாடி. தலையில் மொட்டையும் போட்டிருந்தேன். எனக்கு மொட்டை போட பிடிக்கும் ஆனால் சந்தனம் வைப்பது பிடிக்காது. வைத்துவிட்டால் அழுவேன். அதற்கு மட்டுமல்ல சின்ன வயதில் எதற்கெடுத்தாலும் அழுது சாதிப்பவன் நான். அப்படி முகத்தினை சுழிப்போடு வைத்து கொண்டு அம்மாவின் கையினை பிடித்துக் கொண்டு கோயிலின் பிராகாரத்தினை சுற்றிக் கொண்டிருந்தேன். குறிப்பான ஒன்று குனிந்த தலை நிமிரவில்லை. வெகு நேரம் இப்படியே இருப்பதால் கொஞ்சம் நிமிரலாம் என நிமிர்ந்தேன். அப்போது முன்பிருந்ததை விட அம்மாவின் நடை வேகமாக இருந்தது. அம்மா அத்தனை வேகமாக நடந்து நான் பார்த்ததும் இல்லை. என்ன ஆயிற்று என மேலே நிமிர்ந்து பார்த்தால் ஆச்சர்யம் பயம் அழுகை. அது என் அம்மாவே இல்லை. எப்போது அம்மாவின் கையினை விட்டு வேறு ஒருவரின் கையினை பிடித்தேன் என தெரியவில்லை யாரோ ஒருவருடன் சென்று கொண்டிருந்தேன். என்னை பிடித்து இழுத்து சென்று கொண்டிருந்தாலும் பரவாயில்லை ஆனால் திட்டிக் கொண்டே. என்ன திட்டினாள் என ஞாபகம் இல்லை. திரும்பி பார்க்கும் போது தான் அம்மா வந்து இந்த பணயக் கைதியினை அந்த அம்மணியிடமிருந்து காப்பாற்றினாள்.

எப்போது சமயபுரம் சென்றாலும் அங்கிருக்கும் சுவர்கள் இந்த பீதியினை மட்டுமே எனக்கு அளித்தது. காலப்போக்கில் எப்போதும் வருவது ஒரே கோயில் என்பதால் இந்த ரசனையும் இல்லாமல் போனது. அப்போது தான் அவர்களின் அகராதியில் புது அம்மனின் முகவரி ஒன்று கிடைத்தது. அன்றிலிருந்து எப்போது சமயபுரம் சென்றாலும் அந்த கோயிலுக்கும் செல்வதுண்டு. அந்த கோயிலின் பெயர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்.

அது சமயபுரத்திலிருந்து பின் வழியே ஊருக்குள் செல்வது போல ஒரு பாதை வரும் அங்கு சென்றால் அக்கோயில் வரும். கடைசியாக சென்ற போது அதன் கட்டமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. இந்த கோயில் விக்கிரமாதித்யனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் பிராமணர்கள் அபிராமணர்கள் இருவரும் பூஜை செய்ய தனிதனியாக நேரங்கள் இருக்கிறது. இதைவிட அங்கு சொல்லப்படுவது அது சுயம்புவான கோயில் என. இதெல்லாம் வரலாறு ஓகே அந்த கோயிலுக்கென ஸ்பெஷல் என்ன என கேட்கலாம். இந்த கோயிலில் மிகப்பெரிய ஆப்பு ஒன்று இருக்கிறது அது தான் ஸ்பெஷல்.

குழந்தைகள் சிறுவர்கள் இருக்கும் குடும்பங்கள் இக்கோயிலுக்கு செல்லும் போது அவர்களை உடன் வைத்து கொள்வதே உசிதம். தப்பித் தவறி அவர்கள் அக்கோயிலின் மணியினை அடித்துவிட்டார்களெனில் அவ்வளவு தான் குடும்பத் தலைவனின் பணப்பை காலி. அப்படி அங்கிருக்கும் மணியினை அடித்துவிட்டால் அந்த சிற்றூருக்கே அன்னதானம் கொடுக்க வேண்டுமாம்!

இதில் ஆச்சர்யம் என்ன எனில் அங்கிருக்கும் அந்த கோயில் மணி அவ்வளவு அழகாக இருக்கும். அது மட்டுமின்றி உத்திரத்தில் பல விளக்குகள் வைத்திருப்பார்கள். அது அனைத்தும் பழைமையினை இன்னும் அந்த கோயிலில் ஒப்பித்துக் கொண்டிருக்கிறது. அழகான உட்கட்டமைப்பு கொண்ட கோயில். அடுத்த முறை சமயபுரம் சென்றால் இக்கோயில் சென்று நன்கு வேண்டி ஆண்டவனிடம் கேட்க மணியினை இருமுறை அடித்துவிட்டு வாருங்கள்!

இதைத் தாண்டி நான் அங்கு சென்றுள்ள கோயில்களெனில் திருவானைகாவல், உச்சி பிள்ளையார் கோயில், மற்றும் மிஸ்டர்.ரங்கனாதன். இப்படி திருச்சி என்றாலே கோயில்களை தாண்டி எதுவும் இல்லை எனும் முடிவினை மனத்தின்கண் வைத்துவிட்டேன். கல்லணை அணைக்கு சிறுவயதில் சென்றிருக்கிறேன் இருந்தாலும் அது என் கணக்கில் இல்லை.

இந்த முன்முடிவுகளுடன் தான் சமீபத்தில் திருச்சிக்கு செல்ல நேர்ந்தது. இது வரை சொன்ன எதுவும் என் நினைவுக்குள் வரவில்லை. அல்லது தோன்றச் செய்யாத பயணம். பயணமும் மார்க்கமாக இருந்தது அதே நேரம் திருச்சியும் வித்தியாசமாக காட்சியளித்தது. பயணத்தினை கடைசியில் சொல்கிறேன்.

திருவெறும்பூரில் என் பெரியம்மா வீடு இருக்கிறது. அங்கிருந்து கல்மண்டபம் என்னும் இடத்திற்கு நான் செல்ல வேண்டும். ஒரு அன்பரை பார்க்க. திருவெறும்பூருக்கும் கல்மண்டபத்திற்கும் இடையே இருக்கும் பயண தூரம் ஒன்றரை மணி நேரமாவது ஆகும். தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் போன்ற பேருந்துகளில் ஏறினால் நாற்பது நிமிடத்தில் போய்விடலாம். அதே உள்ளூர் பேருந்துகளில் ஏறினால் நிச்சயம் ஒன்றரை மணி நேரம்.

விஷயம் இந்த பேருந்துகளில் தான் இருக்கிறது. எந்த பேருந்தில் ஏறினாலும் இந்த ஒரு மணி நேர பயணத்திற்கு அஃதாவது திருவெறும்பூரிலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆறு ரூபாய் மட்டுமே. அப்படி பயணம் செய்யும் போது கோயமுத்தூரினை நினைத்து பார்த்தேன். பேருந்திலேயே சொகுசு சாதா என பிரித்து ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்தது செல்ல ஒன்பது ரூபாய் என வசூலிக்கின்றனர் இதில் இவர்கள் பிழைக்க தெரியாமல் இருக்கின்றனர்.

குறிப்பாக நான் சென்ற பேருந்தில் அந்த நடத்துனருக்கு நிச்சயம் நஷ்டம் தான். ஏன் எனில் தொடர்ந்து மூன்று நிறுத்தங்களுக்கு அவர் ஒரு பக்கமே நிற்கிறார். நான் இருந்தது பின் பக்கம் அங்கு அதற்குள் சிலர் இலவசமாக பயணிக்கின்றனர். இதில் குறிப்பிடதக்க ஒருவர் சீட்டினை எடுக்காமல் நீங்க மீதி ஐந்து ரூபாய் தர வேண்டும் என வாங்கி வேறு இறங்கினார். நானும் ஒருக்கணம் யோசித்தேன் வாங்கலாமா வேண்டாமா என வெளியூர் வந்து நம் நேரம் செக்கிங் வந்தால் என்ன செய்ய என ஆறு ரூபாய் செலவு செய்தேன். இந்த அல்ப புத்தி மட்டும் போக மறுக்கிறது!

அப்படி போகும் வழியில் தான் இந்த கோயில்தடங்கள் அப்படியே என்னுள் மாறியது. வழி முழுக்க தேவாலயங்கள். கிறித்துவர்களுக்குள் இருக்கும் பிரிவின்ரின் அடிப்படையில் ஏகப்பட்ட திருச்சபைகள். அதிலும் அந்த தேவாலயங்கள் அத்தனை அருமையாக கட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரண்டினை சொல்ல நினைக்கிறேன்.

ஒன்று முதலில் பார்க்கும் போது ஒரு மரக்கிளைகளின் ஊடாக பார்த்தேன். மசூதிகளில் இருக்கும் கூம்பினை போல இருந்தது. இரண்டு அதுவும் வெவ்வேறு விதங்களில். அதில் ஒன்று தேவாலயமாக இருக்கலாம் என சொல்லும் வகையில் மற்றொன்று நிச்சயம் இது மசூதி தான் என சொல்லும் வகையில். ஆனால் அந்த கிளைகள் சென்ற பின் தான் அத்தனை அழகான தேவாலயங்களை என்னால் காண முடிந்தது. உண்மையில் பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். இன்னுமொன்று என்ன எனில் அது நல்ல உயரமான தேவாலயம். சற்று தூரத்திலிருந்து பார்த்தால் ஆழமான படிகளை தன்னுள் கொண்ட கட்டமைப்பு. மேலே ஒரு சிலுவை. அதனை சுமந்து கொண்டிருக்கும் ஒற்றைக் கல் சுவர். அதற்கு கீழே ஒரு மூன்று கல் தடிமனான சுவர் என அடுக்குகள் அதிகரித்துக் கொண்டே சென்று தேவாலயத்தின் மேல் மாடத்தினை அடைகிறது. தூரத்திலிருந்து தான் பார்த்தேன்.

கடவுளின் மீது தான் என் மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது ஆனால் தேவாலயங்களும் கோயில்களும் ஈர்க்கும் வண்ணமே இருக்கிறது. ஒரே ஒரு ஆசை தர்காவிற்கு சென்று பார்க்க வேண்டும் என. ஒரு முறை சென்றிருக்கிறேன். மந்திரிக்க வீட்டில் அழைத்து சென்றார்கள் எனக்கு டைஃபாய்டு என! பொறுமையாக பார்க்க ஆசை என்றேனும் ஒரு நாள் பார்ப்பேன். அல்லது இதே போல ஏதேனும் பேருந்து பயணங்களில் ஈர்க்கபடலாம்.

அப்படியே ஏற்பட்டாலும் இப்போது நான் கொண்ட பயணம் போல் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். அதனை எதிர்க்கிறேன் என்பதல்ல என் வாதம். அதனை நினைக்கும் போது சொல்ல முடியாத உணர்வுகளுக்குள் சிக்கிக் கொள்கிறேன். சொல்கிறேன் அந்த சம்பவம் என்ன என.

சேலத்திலிருந்து திருச்சிக்கு மூன்று மணி நேரம். விடியற்காலையில் கிளம்பி நானும் அம்மாவும் சென்று கொண்டிருந்தோம். அம்மாவுடன் சென்றதால் படியேறியவுடன் இருக்கும் சீட்டில் அமர்ந்து கொண்டோம். இரண்டு மணி நேரம் சுமுகமான பயணம் தொடர்ந்தது. முசிறியினை தாண்டும் போது திடிரென பக் பக் பக் பக் பக் என சத்தம் அதிகரிக்கும் தொனியில் கேட்க ஆரம்பித்தது. அனைவரும் அமைதியாக இருந்ததால் எனக்கு மட்டும் கேட்கிறது பிரமையாக இருக்கும் என அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் எனக்கு முன்னிருந்தவர்கள் அனைவரும் திரும்ப ஆரம்பித்தனர். டிரைவர் முதற்கொண்டு. திரும்பி பார்த்தால் ஒரு பயணி தான் இப்படி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார். அவரை ஏன் என கேட்ட நடத்துனரை அடிக்க சென்றுவிட்டார் இந்த பக்பக். இந்த சத்தம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அம்மாவிற்கு தூக்கம் போனது.

இதற்கு அடுத்து நடந்தது தான் இன்னமும் மார்க்கமானது. எனக்கு வலது பக்கம் இருக்கும் சீட்டினில் பார்க்க என் உடலமைப்பினை போன்றிருந்த ஒருவன் அருகிலிருக்கும் கம்பியின் மேல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். இந்த பக்பக் என்ன தோன்றியதோ தெரியவில்லை கையினில் அலைபேசியினை வைத்து அவனை பலார் என அறைந்தான். அலைபேசி வெளியே பறந்தது. அவனுக்கு அதுவெல்லாம் கவலையே கிடையாது. அவனுடைய ஒரே வார்த்தை பக்பக். இத்தனைக்கும் அவன் பேருந்தின் மையப்பகுதியில் இருந்தான். எந்த பகுதியில் யாரினை அடிப்பான் என்னும் எண்ணத்திலேயே பயணம் செய்ய வேண்டியதாய் போயிற்று. இதில் கூத்து அந்த அடிவாங்கியவன் விட்ட கூச்சலும் அவன் செய்த களேபரமும் தான். இடையில் கண்டக்டரினை அடிக்க சென்றுவிட்டான். ஏன் என பார்த்தால் இந்த பக்பக் ஒரு பைத்தியக்காரன்(முடிவெடுத்துவிட்டனர்). தெரிந்தும் அவனை ஏன் பேருந்தில் வைத்திருக்கிறாய் ? என் ஊராக இருந்தால் இந்நேரம் பேருந்தினை கொளுத்திருப்பேன் என காட்டு கத்து கத்திக் கொண்டிருந்தான். எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு மட்டுமே வந்தது. சிரித்தால் என்னையும் அடிப்பார்களோ என சிரிக்கவில்லை. குறிப்பான விஷயம் பக்பக் தண்ணியடிக்கவில்லை.

அவனை முகம் கொடுத்து பார்க்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது ஆனால் அம்மாவின் கை பயத்தில் என் கையினை பிடித்திருந்ததால் என் பார்வை அங்கு சென்றது.

இதனையனைத்தினையும் நண்பன் மாஸ்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் சில நாட்களுக்கு முன் வாசித்த செய்தியினை சொன்னான் அஃதாவது திருச்சியினை தலைநகரமாக போடலாமா என. சென்னை தலை நகரம் ஆன பின் தான் சுயத்தினை இழந்து நிற்கிறது என்பது என் கருத்து. அப்படி ஆனது சென்னையோடு போகட்டுமே. . .

பி.கு : எந்த காரணத்திற்காக அப்பொது திருச்சி சென்றேன் என எழுத கை பரபரக்கிறது. ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. என் எழுத்தை நேசிக்கும் சிறு அன்பர்களுக்கு அது ஒரு இனிமையான செய்தி விரைவில். . . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக