கட்டமைப்பியல் பைத்தியக்காரன்

இந்த விஷயத்தினை எழுதலாமா வேண்டாமா என பல நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் நீட்சியாக நடந்த ஒரு விஷயம் என்னை சற்று சிந்திக்க வைத்ததால் அதனை எழுத இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் விடுதியில் பெரிய கலவரமே நடந்தது. அதன் பின்னிருக்கும் விஷயம் ஒன்றுமே இல்லை. காலங்காலமாக மனிதன் அடிமைப்பட்டு கிடக்கும் அதிகாரம் தான். என்றோ என்னுடன் வேறு டிபார்ட்மென்டில் படிக்கும் மாணவன் ஒருவன் ஜூனியர் ஒருவனை ஏன் தெனாவட்டாக திரிகிறாய் என சொல்லி அடித்துவிட்டான். அதனை மனதில் வைத்துக் கொண்டு அவனின் சகாக்கள் நல்ல சரக்கில் சீனியர்கள் தங்கும் விடுதிக்குள்ளேயே நுழைந்து அவன் மட்டும் தனியாக இருக்கும் நேரத்தினை அறிந்து கொண்டு அவனை அடித்திருக்கிறான். இத்தனைக்கும் அடிவாங்கியவன் நன்கு கராத்தே தெரிந்தவன்! என்ன பிரயோஜனம் கீறல்களை அடைந்த புண்ணியவானாகிவிட்டான்.

இதன் பின் தான் முட்டாள் தனமான சம்பவம் நடந்தது. அந்த ஒருவனை அடித்தது பெரும் அரசியல் பிரச்சினையாகி அனைத்து சீனியர் மாணவர்களும் ஒன்று கூடி அந்த முதலாமாண்டு மாணவனை வெளியே இழுத்து போடுங்கள் என கூச்சலிட ஆரம்பித்துவிட்டனர். ஒரு நூறு பேராவது கூடியிருப்போம். அந்த நூறில் அடித்தவன் யார் என ஒரு மூன்று பேருக்கு மட்டுமே தெரியும்! இருந்தும் அனைவரும் கூச்சல். மேலும் அக்கூட்டத்திலிருந்து பின் வாங்கவும் முடியாது. அப்படி பின்வாங்கினால் அதுவும் பிரச்சினையாகிவிடும். இந்த பிரச்சினை அப்படியே பெரிதானது. பிரதான வாயிலினை பூட்டிய பின்னரும் மேலிருந்து முதலாமாண்டு மாணவர்கள் கல்லினை விட்டெறிந்ததால் கோபபட்டு பூட்டினை உடைத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து களேபரம் அரங்கேறியது. பாதிக்கப்பட்டது முதலாமாண்டு மாணவர்கள் தான்.

இந்த பிரச்சினையினை சமரசம் செய்கிறேன் என சஸ்பென்ஷனை நிர்வாகமும் சிலருக்கு கொடுத்தது. ஒரு மாணவன் இதனை செய்கிறான் எனில் அது நிச்சயம் தவறு தான். பகுத்தறிவின அவனது படிப்பினைகள் சொல்லித் தரவில்லை என்பதையே அது காட்டுகிறது. அந்த கூட்டத்தில் எனக்கு முதலிலிருந்து சிரிப்பு மட்டுமே வந்து கொண்டிருந்தது. என் நண்பன் தான் தேசியத்தினை காப்பவன் போல சிரிக்காதே என அதட்டினான். நானும் அமைதியாகி அவர்கலுடன் உள்ளே சென்றேன் அனைத்தினையும், அஃதாவது கலவரங்களை பார்வையாளனாக அனுபவித்தேன்.

படிப்பினையினை கொடுக்காதது பள்ளிகளின் பிரச்சினை. கல்லூரி என்ன செய்ய முடியும் ? பள்ளி கொடுக்க மறந்ததை நாங்கள் கொடுக்க வேண்டுமெனில் அவர்கள் ஏன் ஆயிரம் ஆயிரமாக காசு வாங்குகிறார்கள் என சொல்ல முடியுமா ? அல்லது அவர்கள் கொடுக்காதது அவர்களின் தவறு அதையெல்லாம் பொறியியலுக்கான நேரம் போகத் தான் சொல்லித் தர முடியும்  என இருந்துவிட முடியுமா ?

என் கேள்விகள் நியாயமானது தான். ஆனால் என் கல்லூரி செய்தது என்ன தெரியுமா ? இந்த பிரச்சினை நடந்தது வெள்ளிக்கிழமை. அந்த ஞாயிற்றுக் கிழமை சில அடியாட்களை அழைத்துக் கொண்டு வந்து கண்ணில் பட்ட சீனியர்களையெல்லாம் அடித்திருக்கிறார்கள். மேலும் கேம்பசினுள் அழைத்து சென்று வேறு! அவர்கள் எங்களுக்கு கொடுக்கும் நீதி போதனை இது தான். நாங்கள் செய்தது நியாயம் சரி என வாதாடவில்லை. ஆனால் இந்த அதிகார தேடல் என்றும் இந்த சமூகத்தில் ஓயாது என்பதே நான் சொல்ல வருவது. சமூகத்திற்கு நீதி போதனை வகுப்புகள் எடுக்கப்பட்ட படைப்புகள் இப்போது எடுபடுவதில்லை. இருந்தும் இதனை எழுதியதன் காரணம் எந்த ஊடகங்களிலும் சொல்லப்படாத விஷயம் தான் இது.

இப்போது என் கல்லூரியில் செய்த இழிவான வேலை என்ன தெரியுமா ? இந்த பிரச்சினையிலிருந்து மாணவர்கள் திருந்தி வாழ வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். அதற்கு தான் நம் சமூகத்தில் அதிகமான சுயமுன்னேற்ற நூல்கள் இருக்கிறது. இருந்தும் வாசிப்பு விகிதம் குறைந்திருப்பதால் அது நடைமுறை படுத்தப்படமாட்டாது என நடிகனை வரவழைத்திருக்கிறார்கள். யார் அந்த நடிகர் எனில் ரஞ்சித். பசுபது மே/பா ராசக்காபாளையம் போன்ற படங்களில் நடித்தவர். அவரும் எங்கள் விடுதியின் நிர்வாகத்தில் இருக்கும் ஒருவரும் பால்ய கால நண்பர்கள். மேலும் அவர்களுக்கு பாடம் எடுத்த வாத்தியார் ஒருவரையும் அழைத்து வந்திருந்தனர்.

இருவரிடமும் சொல்லி வைத்து கூட்டி வந்து விட்டனர். இது தான் பிரச்சினை அவர்களுக்கு நல்ல முன்னேற்ற சிந்தனைகளை சொல்லுங்கள் என. அந்த வாத்தியார் சில வீடியோக்கள், ஒவ்வொரு பூக்களுமே பாடல், உன்னால் முடியும் தம்பி பாடல் என சகலத்தினையும் போட்டு ஒவ்வொன்றிற்கும் தன்  சொந்த வாழ்விலிருந்து கண்ணீர் சிந்த கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார். ரஞ்சித்தோ தன் கல்லூரிக்கால நிகழ்வுகளை அதிலிருக்கும் சோகங்கள் அம்மா செண்ட்மென்ட் என சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு மூன்று மணி நேரம் அடைக்கப்பட்ட இடத்தில் வெளியில் போகக்கூடாது என சொல்லி நடத்தப்பட்ட உணர்வுசார் வன்முறை இது. அப்போது தான் எனக்கு சந்தேகம் ஒன்று வந்தது. உண்மையில் இனி சொல்லப்போகும் விஷயங்கள் என்னை பற்றிய பெருமைகள் என கூட சொல்லலாம். அஃதாவது ஏன் இப்படி சொந்த சோகங்களை பிறரிடம் திணிக்கிறார்கள் ? இதன் மூலம் திருந்துவார்கள் என அவர்களுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா ?

நான் எழுத ஆரம்பித்த போது எனக்கு சாரு நிவேதிதாவினை போல கதைகளை கட்டமைக்க வேண்டும்(கதைகளை அல்ல கட்டமைத்தலை) என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப்போக தான் தனித்திறமை வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். என் புனைவுகள் குறிப்பாக என் சிறுகதைகள் வெளிவந்தால் அதனை நன்கு அறிந்து கொள்வீர்கள். ஆனாலும் என் கதைகளை வாசிக்கும் சில நண்பர்கள் சாருவின் நடை தெரிகிறது என சொல்கிறார்கள். அவர்களிடம் இல்லை என சொல்ல முடிகிறது நிரூபிக்க தெரியவில் அல்லது சொல்லத் தெரியவில்லை. சாரு தன் வாழ்வில் இருக்கும் உக்கிரமான மன வெளியினை வார்த்தைகளில் வேறு ஒரு உணர்வாக மாற்றுகிறார். எக்ஸைல் நாவலினை வாசித்தால் அது நன்கு புரியும். அது முழுக்க முழுக்க கொண்டாட்டமான நாவல். உண்மையில் மனதில்,நிகழும் வதைகளை அப்படியே சொல்லும் ஒரு நாவல் எக்ஸைல். எனக்கு அப்படி உணர்வுகளை மாற்ற தெரியவில்லை. இப்போது தான் வதைகளை சந்தோஷங்களை சோகங்களை புதிராக மாற்ற பிரதிகளிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கென ஒரு பாணியினை எனக்குள்ளே கண்டறிந்து கொண்டிருக்கிறேன்.

இது தான் அந்த பேச்சுகளை கேட்கும் போதெல்லாம் எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் மக்கள் தன் வதைகளை அடுத்தவனிடம் காட்ட யத்தனிக்கிறார்கள் ? சுய எள்ளலுக்கா அடுத்தவரின் பச்சாதாபத்திற்கா ? மேலும் பெருத்த சந்தேகம் ஒன்றிருந்தது அனுபவம் தான் வாழ்க்கை எனும் போது ஏன் அடுத்தவரின் அனுபவத்த கேட்டுக்கோ என சொல்கிறார்கள் ?

பதில் எதற்கும் கிடைக்கவில்லை. ஆனால் ரஞ்ஜித்திற்கு நன்றி மட்டும் சொல்ல நினைக்கிறேன். கலை மற்றும் நான் எழுத்தில் எப்படி இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது அவர்களின் அபத்த பேச்சுகள் தான். மனதளவில் கட்டமைப்பியல் பைத்தியக்காரனாக இருக்கும் நான் சீக்கிரம் எழுத்தாளனாக உருவெடுப்பேன். அவர்களின் மூன்று மணிநேர போதனையில் சொல்லவில்லை. சுயபரிட்சையின் வெளிப்பாடு.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

நட்சத்திரா said...

கட்டமைப்பு விரும்புதல் நிரந்தம் அல்ல . . . நிறைய விஷயங்கள் தேடி படித்து நுணுக்கமாக அதை பற்றி நினைந்தால் கட்டமைப்பு விருப்பம் மாறுபடும்

Post a comment

கருத்திடுக