விலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்

எனக்கு மூன்று ஊர்களை பற்றித் தான் இதுவரை அதிகம் தெரிந்திருக்கிறது. இந்த அதிகம் என்னும் வார்த்தை கூட சரியா என தெரியவில்லை. வேண்டுமெனில் ஓரளவு என வைத்துக் கொள்வோம். அந்த மூன்று ஊர் யாதெனில் சேலம், கோயமுத்தூர் மற்றுமொன்று திருச்சி.

சேலம் என் சொந்த ஊர் என்பதால், கோயமுத்தூர் இப்போது வசித்துக் கொண்டிருப்பதால் திருச்சியோ வாடிக்கையான இடம். வாடிக்கையான இடமெனில் சிறுவயதிலிருந்து அடிக்கடி செல்வது வழக்கம். இந்த விஷயத்தினை வேறு விதமாக நானே ஒரு முறை எழுதியிருக்கிறேன். இருந்தாலும் புதிய அனுபவங்கள் என்பதால் எழுதுகிறேன். திருச்சி சிறுவயதில் பல முறை சென்றிருக்கிறேன். முக்கியமாக ஒரு இடத்திற்கு அது சமயபுரம் அம்மன் கோயில்.

வேறு என்ன குடும்ப அரசியலில் சிக்குண்டு சின்ன வயதில் ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் தெரியாது நான் இணையதளம் ஒன்று ஆரம்பிப்பேன் அதில் பல குறிப்புகளை கட்டுரையாக எழுதுகிறேன் என. தெரிந்திருந்தால் நிறைய கோயில்களினை பற்றி குறிப்புகளினை அப்போது எடுத்து இப்போது எழுதியிருக்கலாம்.

சிறிய வயதில் கோயில்களுக்கு போவது கூட பிரச்சினையில்லை வீட்டில் கஷ்டப்பட்டு கூட்டி செல்கிறார்களே என சென்று விடலாம் அங்கு அவர்கள் சொல்லும் ஆசாரங்கள் தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. இதனாலேயே எனக்கு பெருமாளினை கண்டால் வெறுப்பு வர ஆரம்பித்தது. எப்படி எனில் ஒரு முறை மூன்றாவதோ நான்காவதோ படிக்கும் போது திருவரங்கநாதனை சந்திக்க சென்றிருந்தேன். பெருமாள் கோயில் என்றாலே எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை ஆனால் கூட்டமும் க்யூவும் மட்டும் கூடிவிடுகிறது. அதே போல் அன்றும். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை வேறு. நானும் வெகு நேரம் அம்மா அப்பாவுடன் நின்று கொண்டிருந்தேன். எனக்கு அப்போது அகோர பசி. அம்மாவிடம் பசிக்கிறது என்று தான் சொன்னேன். உடனே அம்மா - ஸ்வாமி சந்நதியில் நின்னுகிட்டு பசிக்குதுன்னு சொல்றியே என்றாள். என்றாள் என்பதை காட்டிலும் திட்டினாள். எனக்கு இதனை எப்படி புரிந்து கொள்வது என இன்றுவரை தெரியவில்லை. இதை விட கொடுமை திருப்பதி. இது முக்கால் வாசி பேருக்கு தெரியும். எனக்கு என்னமோ பெருமாள் கோயிலுக்கு செல்லும் போது மட்டும் பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு கோயிலினை தவிர. அது சேலத்திலிருக்கும் பணக்கார பெருமாள்.

பெருமாள் என்றாலே பணக்காரர் தானே என சொல்லலாம். சேலத்தில் முக்கியமாக இரண்டு பெருமாள் கோயில் இருக்கிறது. ஒன்று சேலத்தில் உள்ளூர்(பழைய) பேருந்து நிலையத்தின் அருகில் இருப்பது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பது இந்த கோயிலில் தான். இன்னுமொன்று தான் நான் குறிப்பிடுவது. அது பிருந்தாவன் ரோட்டில் இருக்கும் பெருமாள் கோயில். அந்த ஏரியாவே எனக்கு பணக்கார ஏரியாதான். அங்கு தான் சேலத்தின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு அருகில் தான் இந்த கோயில். ஆரம்பத்தில் கூரை வேயப்பட்டு பெரிய பெருமாள் உள்ளே நின்று கொண்டிருப்பார். சின்ன வயதில் அஃதாவது ஐந்தாவது படிக்கும் வரை எனக்கு அந்த ஏரியாவில் வேலை இல்லை. பின் பள்ளியினை மாற்றியதால் அந்த வழியில் அடிக்கடி செல்ல வேண்டி வரும். அப்பா எப்போதும் அந்த கோயிலினை கடக்கும் போது வணங்கு என்பார். நான் கண்ணாலேயே ஒரு சல்யூட். அதன் பின் அந்த பக்கம் நமக்கு என்ன வேலை என திரும்பிவிடுவேன்.

வெள்ளிக்கிழமை மாலை நேரமெனில் அந்த கோயிலுக்கு யார் கூப்பிட்டாலும் போவேன். எங்கு செய்கிறார்கள் என தெரியவில்லை ஆனால் புளியோதரையும் சில நாட்களில் வெண்பொங்கலும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். சாப்பிடும் விஷயம் எனும் போது தான் பெருமாள் கோயிலின் பால் ஈர்க்கப்பட்ட விஷயம் நினைவிற்கு வருகிறது. சிறுவயதில் பெருமாள் கோயிலுக்கு அவர்கள் கொடுக்கும் தீர்த்தம் வாங்குவதற்காகவே செல்வேன். அங்கும் எனக்கு மனக்கஷ்டம் வரும். அப்பாவின் கைகள் பெரிய கைகள். அதன்படி கோயில் குருக்களும் மூன்று முறை தீர்த்தத்தினை அளிப்பார். நான் நீட்டும் போதோ ஒரே ஒரு முறை தான். அதற்கே கரை புரண்டு ஓடும். அந்த கோயிலில் மட்டுமல்ல அனைத்து பெருமாள் கோயிலிலும். அந்த நீரோ எனக்கு அமிர்தம். இந்த சுவையினை எப்படி நீருக்கு அளிக்கிறார்கள் என பல நாள் யோசித்திருந்தேன். பெரியவனான பின் அது நீரில் துளசி இலையினை போட்டிருக்கிறார்கள் என அறிந்து கொண்டேன். எப்போது கண்டு கொண்டேனோ அன்றிலிருந்து நீர் சுவையின்றி காண ஆரம்பித்தது!

இந்த கோயிலினை இப்போது சென்று பார்க்க வேண்டுமே பெரிய கும்பாபிஷேகம் எல்லாம் செய்து படு ஜோராக இருக்கிறது. இதனால் என்னை போன்றோருக்கு என்ன பயன் எனில் வாரம் ஒரு முறை இன்றி இப்போது பல முறை நெய்வேத்திய பிரசாதங்கள். மேலும் இவர் மற்ர பெருமாளினை காட்டிலும் ஒரு படி மேலே. உழைத்து முன்னேறியவர். எப்படி என்பதை பெருமாளிடமே கேட்டுக் கொள்ளுங்கள். விலாசம் - பிருந்தாவன் சாலை, சேலம்.


எதோ சொல்ல நினைத்து எதனையோ சொல்லிவிட்டேன். அதனால் பெருமாள் சாப்டர் க்ளோஸ். அடுத்து மீண்டும் சமயபுரம். அடுத்த பதிவில் செ(சொ)ல்கிறேன். பரிட்சை நடப்பதால் குறும்பதிவுகளே. . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக