Beast of The Southern Wild - 2012

சமீபத்தில் எனக்கும் நிர்மலுக்கும் சின்ன விவாதம் ஒன்று நடந்தது. அது அவருடைய ஃபேஸ்புக்கிற்கான போட்டோ அவதார் படத்தின் நாயகன். ஏன் எனக் கேட்டேன். அவர் அந்த படத்தினை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் அந்த படம் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் தொடர்பினை எடுத்து சொல்லும் படைப்பு என்பது தான். என்னால் இதனை நம்ப முடியவில்லை.

அவதார் படம் வந்த போதெல்லாம் நான் தமிழ் படங்களின் தீயான ரசிகன். எப்படிப்பட்ட படங்களெனில் பேரரசு விஜயகாந்த் போன்றவர்களின் படங்களினை ஆளில்லா தியேட்டர்களில் சென்று பார்க்க ஆசைப்படுவேன். அப்போது அவதார் படம் மிகப்பிரமாண்டமாக வந்திருக்கிறது என பார்த்தால் எனக்கு தூக்கமே வந்தது. அதிலிருந்த அந்த உலகம் மக்கள் அவர்களின் சாகசங்கள் மேஜிக் போன்ற எதையும் ரசிக்க முடியவில்லை. இப்படி நான் எப்போதோ வெறுத்து பின் அதற்குள் என்ன இருக்கிறது என்பது கூட அறிந்து கொள்ளாமல் விட்ட படத்தினை இவர் இப்படி சொன்னவுடன் நான் ஆச்சர்யமே பட்டேன். இயற்கை மனிதனுடன் ஒன்றாகவே இருந்து பின் மனிதனின் உள்மன மாற்றங்களினால் இயற்கையின் தடயங்கள் அம்மனிதர்களை விட்டே அகலும் தன்மையினை இவ்வுலகம் பெற்றுவிட்டது. இதனையே இழையாக கொண்டு ஒட்டு மொத்த கதையினையும் கேமரூன் எடுத்திருக்கிறார்.

இவை நிர்மல் சொல்லும் போது ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பகுதிகள். இதனை இங்கு எதற்கு குறிப்பிடுகிறேன் எனில் காரணம் இருக்கிறது. இயற்கை சார்ந்த ஒன்றினை நாம் கதைக்கருவாக எடுக்கும் பட்சத்தில் அதனை மக்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டிய கடமை இயக்குனரின் மேல் வந்து விழுகிறது. அப்படி செய்யும் போது அநேக இடங்களில் ஒரு மீடியம் இயக்குனருக்கோ கதையினை வடிவமைப்பவர்களுக்கோ தேவைப்படுகிறது. இந்த விஷயத்தினை அவதார் படத்தில் உணர முடியும். இது சற்று பின்னடைவு சார்ந்த பகுதிகளாக நான் பார்க்கிறேன். அவதார் செய்ததை போல் செய்வதன் மூலம் இயக்குனரின் மூலக்கரு சிதைக்கப்பட்டு வேறு ஒன்று அல்லாது பண்டோரா உலகத்தின் ஆச்சர்யம் மட்டுமே பார்வையாளனிடம் மிஞ்சுகிறது. இந்த இயற்கை சார் பகுதி எனக்கு நிர்மல் சொன்னது போல் அவர்களுக்கு யாரேனும் சொல்ல வேண்டும்!

ஆழமான ஒரு கருத்தினை வேறு ஒரு மீடியத்தினை கொண்டு முழுமையாக பார்வையாளனிடம் கொண்டு சேர்க்க முடியுமா ? இந்த கேள்விக்கான பதில் எழுத இருக்கும் இந்த படத்தில் தான் கிடைத்திருக்கிறது என்பது என் யூகம்.

இந்த படத்தினை பற்றி சொல்வதற்கு முன் இன்னுமொரு விஷயத்தினை சொல்ல நினைக்கிறேன். zero dark thirty என்னும் படத்தின் விமர்சனத்தில் ஆவணப்படம் எப்படி சராசரி படம் என்னும் தளத்திற்கு ஒரே காட்சியில் கொண்டு செல்லப்படுகிறது என சொல்லியிருந்தேன். அதே தான் இந்த படத்திலும்.

படத்தினை பார்க்கும் போது பட்ஜெட் போன்ற விஷயங்கள் நிச்சயம் கம்மியாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். மேலும் இப்போது நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்த படமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அந்த விருதுகளில் கூட அமேரிக்கா சார்பான படங்களுக்கு தான் கொடுக்கப்பட்டது என சிலருக்கு மனஸ்தாபம் இருந்தது. நான் இதுவரை பார்த்த இந்த வருடத்திற்கான சினிமாக்களும் அதனை போலவே தான் இருந்தது. அந்த உணர்விலிருந்து சற்று விலகி நிற்கும் ஒரு படைப்பு தான் இந்த Beast of The Southern Wild.

இந்த படம் எந்த கதையினை சொல்லுகிறது என பார்த்தால் சின்ன கூவம் போன்ற ஒரு இடம். ஒரு சுவர். அந்த சுவருக்கு அப்பால் நகரம். இந்த கூவத்தில் சில குடும்பங்கள். இந்த கூவம் என்ற வார்த்தை கூட தவறு. அது மக்களால் கருதப்படுவது. அங்கு ஒரு புயல் வருகிறது. அது வருவதை தெரிந்து கொண்டே சிலர் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால் அங்கிருக்கும் சிலருள் huffpuffy குறிப்பிடதக்க சிறுமி. அவள் கதையின் நாயகனும்(நாயகி) கூட. இன்னுமொருவர் அவளுடைய அப்பா கதாபாத்திரம். அந்த புயல் இந்த அப்பா மகள் இடையே ஏற்படுத்தும் பாதிப்பு என்ன ? இது தான் கதை.

இதற்கு ஏன் இயற்கையினையெல்லாம் இழுக்க வேண்டும் என கேட்கலாம். சொல்கிறேன். ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அவர்களுக்கேன மனதளவில் ஒரு வெளி ஒரு உலகம் இருக்கிரது. அங்கு அவர்களுக்கு ஒரு மொழி இருக்கிறது. இதனால் தான் நம்மால் நாய் மாடு குதிரை யானை போன்ற அன்றாடம் காணும் மிருகங்களின் மொழியினை புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் மனித இனத்திலேயே இருக்கும் அல்லது ஒன்றான குழந்தைகளின் மொழியினை தனியாக சொல்வதென்ன ?

காலங்காலமாக சொல்லப்படும் விஷயம் குழந்தையாக இருக்கும் வரையில் அவனுடைய உலகத்தில் சமூகத்திற்கோ அக்கம் பக்கம் வீட்டுகாரர்களுக்கோ எந்த ஒரு அனுமதியும் இல்லை. அதே கொஞ்சம் படி தாண்டி சென்றாலே திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல சமூகம் சார்ந்து சிந்தனைகள் கவலைகள் நம்முள் நுழைந்து விடுகிறது. அந்த நிலை முற்றும் நிலையில் நாம் நம் கடந்த பருவத்திற்கு செல்ல ஆசைப்படுகிறோம் ஆனால் காலம் கடந்து சென்று விடுகிறது.

இன்னுமொரு விஷயத்தினையும் என் புரிதலுக்குள் செல்வதற்கு முன் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் படித்த பதிவுகளில் பரதேசி படம் சார்ந்து எழுதப்பட்ட விஷயங்களில் நான் ஒன்றை அறிந்து கொண்டேன். இது பரதேசியினை எதிர்த்த தாக்குதல்களோ அல்லது இவ்விரண்டு படங்களுக்கான ஒப்பீடுகளோ இல்லை. அதில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் படம் நெடுக இருக்கிறது. முதலில் சில பதிவர்கள் சொன்ன விஷயம். பரதேசி படத்தில் தேயிலை தோட்டத்தில் மக்களின் வதைகளை மட்டுமே காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனால் அந்த மக்கள் கூட்டத்தினூடே இருக்கும் கொண்டாட்டங்களை படமாக்கவில்லையே என. இந்த கொண்டாட்டம் என்னும் விஷயத்தினை அநேகம் பேர் சிரிப்பு என நினைத்துவிட்டனர். ஒருவர் சில விஷயங்களை சொல்ல நாம் சிரிப்பது கொண்டாட்டம் அல்ல. கொண்டாட்டம் என்பது ஒரு வாழ்வியல் முறை. Hedonism என்று அதற்கென ஒரு பெயரும் இருக்கிறது. அதனை இப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை காண முடியும். கதையில் வரும் இரண்டு பேரினை சொல்லி சில வசனங்களுடன் இதனை நான் சொல்கிறேன்.

இந்த இருவேறு பருவ வேறுபாட்டினை உணரும் அல்லது பார்வையாளனுக்கு உணர்த்தும் கதாபாத்திரங்கள் தான் இந்த ஹஃப் பஃப்ஃபியும் அவளுடைய அப்பாவும்.  முதலில் அப்பா. அவரை பற்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் எனக்குள் அதிகம் படவில்லை அதனால் அவரே முதல்.

இவருடைய கதாபாத்திர சித்தரிப்பு யாதெனில் தன் இறப்பினை அறிந்து கொண்ட மனிதர். அந்த கூவத்திலிருந்தும் இவ்வுலகத்திலிருந்தும் தான் எப்போது விடுதலை அடைய போகிறோம் என்பதை தன்னுள் இருக்கும் நோயின் மூலம் அறிந்து கொண்டதால் தன் மகளை எப்படியாவது தன்னை விட்டு பிரித்துக் கொள்ள வேண்டும் என செயற்கையாக நினைப்பவர். ஆனால் அவரால் அதனை செய்ய முடியவில்லை. இன்னுமொரு விஷயத்தினையும் அவருடைய கதாபாத்திரம் சுமந்து கொண்டு செல்கிறது. அது அந்த இடம். அதன் பெயர் பாத்டப். புயல் என்றவுடன் அனைவரும் செல்லும் போது இந்த புயல் என்ன செய்து விட போகிறது என சிலருடன் அங்கேயே இருக்கிறார். அப்போது அவருக்குள் இருக்கும் வியாதி முத்தி விடுகிறது. மரணம் நிச்சயம் என்பதும் தெரிகிறது. மகளும் கண்ணுக்கு தெரிகிறாள். ஓடிப்போன மனைவியின் நினைவும் வாட்டுகிறது. மகளுக்கு தெரியக்கூடாது என தடுத்து அனுப்ப முயற்சித்தாலும் தன்னையே தேடி வரும் மகள் என அறுபடாத வாதையினை தலையாய் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் தான் அப்பா.

அடுத்து மகள் huffpuffy. இந்த கதாபாத்திரத்தினை பற்றி முக்கியமாக சொல்ல வேண்டும். ஒரு படம் எடுக்க எந்த கருவினை எடுக்கிறோமோ கட்டமைப்பிலும் அதனை சற்று வைத்தால் அக்கதையானது முழு உருவம், உயிர் பெறும் என்பது என் கருத்து. அது இந்த சிறுமியால் நடந்திருக்கிறது. முழுக்கதையினையும் அவளுடைய பார்வையிலேயே அவளே அநேக இடங்களில் கதை சொல்லியாக மாறியும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு வசனங்களும் அவ்வளவு அருமையாக வைக்கப்பட்டிருகிறது என்றே சொல்ல வேண்டும். சிறப்பு யாதெனில் அதே வசனங்களை பெரியவர்களுக்கு வைத்தால் அது செயற்கை தன்மையினை அடைந்துவிடும். அந்த சிறுமிக்கு மட்டுமே பொருந்தும். அவையனைத்தும் அந்த வயதில் அப்படி ஆழமாக சிந்திக்க முடியாத வண்ணம் இருக்கும் விஷயங்களை தன்னுள் கொண்டவை. அவள் கதையின் முதல் காட்சியில் சில மிருகங்களிடம் பட்சிகளிடம் சென்று அதன் மொழிகளை புரிந்து கொள்ள பார்ப்பாள். ஆனால் அது தனக்கும் அப்பாற்பட்டது என்பதை மட்டும் புரிந்து கொண்டதால் அதற்கு பசிக்கிறது என சொல்வாள். இந்த மொழியறிதலினை அவள் செய்வது எப்படி எனில் அந்த மிருகங்களை காதுக்கருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தங்களை வைத்து யூகிப்பது. இதே விஷயத்தினை அப்பாவிடமும் அவள் செய்யும் போது உண்மையில் அப்படியே புல்லரித்துவிட்டது. இந்த இயக்குனரை அப்படி என் வாழ்வில் சந்திக்க வாய்ப்பு நேர்ந்தால் நான் கேட்கும் கேள்வி அந்த குழந்தையினை இவ்வளவு நேர்த்தியாக இயல்பாக நடிக்க வைத்தது எப்படி என்பதே. ஏன் எனில் அந்த குழந்தைக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்பு அனைத்தும் சற்று பிசகினாலும் செயற்கை தன்மையினை அடைந்து விடும் தன்மையினை கொண்டது.

சின்ன உதாரணம் எனில் அந்த சிறுமிக்கு படத்தில் இரண்டு முறை உபதேசங்கள் நடக்கும். இரண்டல்ல மூன்று. அந்த மூன்று முறை நடக்கும் உபதேசம் யாதெனில் இருத்தல் சார்ந்த விஷயம். முதலில் அப்பா இல்லையெனும் போது அவரை வீடு முழுக்க தேடிக் கொண்டிருப்பாள். வழியே சில மிருகங்களை பார்க்கும் போது அவள் சொல்லும் வார்த்தை
"அப்படி அப்பா கிடைக்காவிட்டால் நான் உங்களை போன்ற செல்லப்பிராணிகளை உண்ண வேண்டியிருக்கும்"

அடுத்து அங்கு டாக்டரினை போல ஒருத்தி இருப்பாள். அவள் இந்த உலகம் ஒரு நாள் தண்ணீரால் அழிந்து போகும் என குழந்தைகளுக்கு ஏற்றாற் போல சொல்லிக் கொண்டிருப்பாள். கடைசியில் அப்படி அழிந்து போனால் அழாமல் எப்படி வாழ வேண்டும் என்பதை இப்போதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லுவாள். இந்த காட்சியினை என்னால் அவள் சொல்லுவதை போல் சொல்ல முடியவில்லை. இன்னமும் இரண்டு காட்சிகளை சொல்ல நினைக்கிறேன். ஆசைப்படுகிறேன்.

இன்னுமொரு இருத்தல் சார்ந்த காட்சி யாதெனில். புயலுக்கு பின் அந்த ஊரில் யாரும் இல்லை என அப்பா நினைத்துவிடுவார். அப்போது மகளிடம் நானும் இறந்து போனால் இந்த பாத்டப்பில் நீ எப்படி உயிர் வாழ வேண்டும் அதற்கு எதனை சாப்பிட வேண்டும் இரையினை எடுப்பது எப்படி என்பதை கற்றுத் தருகிறேன் என மீனினை பிடிக்க கற்றுத் தருவார்.

இந்த காட்சியினை சொல்லும் போது தான் ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவள் பெண் எனினும் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமோ பலம் கொண்டு அப்படியே வளர்க்க யத்தனிப்பார். அது கதையின் அநேக காட்சிகளில் நன்றாக தெரியும். இதன் விளையாவக அவள் தான் பெண் என்பதையே வெறுக்கும் அளவு கூட படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அஃதாவது மருத்துவமனையில் அவளுக்கு பெண்கள் அணியும் ஃப்ராக்கினை போட்டு தலைமுடியினை வெட்டியிருப்பர். அது அவளுக்கு ஒரு சிறை. இந்த வார்த்தையினை கூட நாம் சொல்ல தேவையில்லை. அந்த காட்சியினில் அந்த சிறுமி பார்க்கும் பார்வையிலேயே அழகுற தெரியும். அவள் பார்க்கும் பார்வையே ஆயிரம் கேள்விகளை கேட்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

என் மனதினை உருக்கிய காட்சியெனில் இவள் செய்த தவறுக்கு இவளை அடிக்க அப்பா ஓடி வருவார். தானும் அம்மாவினை போல ஓடிப் போகிறேன் என ஓடிக் கொண்டிருப்பாள். பிடிபட்டதும் அவளை அடித்துவிடுவார். அப்போது அவள் சொல்லும் வார்த்தை
"நீ ஒரு நாள் இறந்துவிடுவாய். அப்போது உன் கல்லறையின் மேல் அமர்ந்து ஒரு கேக்கினை முழுக்க நானே சாப்பிடுவேன்"
இதனை தாண்டி இப்படத்தினை சிலாகிக்க என வார்த்தை தெரியவில்லை.

ஒன்றினை சொல்ல ஆசைப்படுகிறேன் முழுக்க முழுக்க வதையினை மட்டுமே பிண்ணனியாக கொண்டிருந்தாலும் இப்படம் நெடுக வரும் கொண்டாட்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த கூட்டத்திற்கு வாழ்க்கை சார்ந்த பார்வையும் புரிதலும் நம்மால் ரசிக்க முடியுமே தவிர ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி வாழ ஆசைப்படுவோம் ஆனால் நாம் இருக்கும் இந்த நகர வாழ்க்கை அதை முற்றிலும் நிராகரிக்கிறது. இதனை இப்படத்தில் அழகுற இயக்குனர் பகடியாக்கியிருக்கிறார். இந்த படத்தினை பற்றி குறுக சொல்ல வேண்டுமெனில் குறுகிய வட்டத்தில் இருக்கும் சிறுமியின் பார்வையில் இந்த உலகம் என்ன உருவம் கொள்கிறது. இந்த உலகம் எவ்வளவு அபத்தமானது, குரூர தன்மைகளை கொண்டது என்பதை இப்படம் சொல்கிறது.

பி.கு 1 : இதில் சொல்ல மறந்த விஷயங்கள் இப்படத்தில் ஒரு பெரிய மிருகம் ஒன்று வரும். அது ஒரு இயற்கைக்கும் அச்சிறுமிக்கும் இடையே இருக்கும் தத்துவப்போக்கு.
பி.கு 2 : ஹெடோனிசம் பற்றி சொல்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் நான் சொல்ல நினைக்கும் காட்சி தான் இப்படத்தின் க்ளைமாக்ஸ். படத்தினை பாருங்கள் இதனை தாண்டி ஹெடோனிசத்தினை அல்லது கொண்டாட்டத்தின் இருத்தலை எந்த ஒரு காட்சியாலும் காட்ட முடியாது என நம்புகிறேன்.
பி.கு 3 : படத்தின் ஒவ்வொரு வசனங்களையும் நான் எழுத ஆசைப்படுகிறேன்.
பி.கு 4 : இதனை எனக்கு கூரியரில் அனுப்பிய அருண் பரத்திற்கு நன்றி. அவர் இன்னுமொரு படத்தினையும் அனுப்பியிருந்தார். பார்த்து அதனையும் எழுதுகிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக