amador - 2010

மனிதனுடைய மாபெரும் பிரச்சினையே உயிர் வாழ்தல் தான். ஒரு நாளில் நாம் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறோம். யாரேனும் நம்மை பார்த்து இதெல்லாம் பிரச்சினையா ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது என சொல்லும் போது உண்மையில் அது அவ்வளவு பெரிய பிரச்சினையா என நமக்கே தோன்றும். அது தான் இருத்தலின் பால் உள்ள பயம். இந்த பயமின்றி எந்த உயிரினமும் இல்லை என்பது என் கணிப்பு.

என் வீட்டில் கூட பூனைகளின் நடமாட்டம் அதிகம். மெதுமெதுவாக வீட்டின் பின் பக்கம் தென்னை மரத்தினை சுற்றியுள்ள திட்டின் மேல் அம்மா போடும் சோறினை எடுக்க வரும். அப்படி யாரேனும் அங்கு வந்தாலோ அல்லது காலடி சத்தம் கேட்டால் கூட அவ்வளவு தான் தலை தெறிக்க ஓடிவிடும். காரணம் அந்த பூனையினை பொருத்தவரை அது மனிதனின் இரை.

மனிதனுக்கு ஏன் இந்த இருத்தலின் பால் பயம் ஏற்படுகிறது. ஒன்று மனிதன் தனக்குத் தானே செய்யும் முன்முடிவுகள். ஒரு மனிதருடன் நாம் பல கோடிகளுக்கு வியாபாரம் செய்யப்போகிறோம். அப்போது நடக்கவில்லையெனில் அவ்வளவு தான் என் அந்தஸ்து கௌரவம் மண்ணாங்கட்டி எல்லாம் போயிடும் என அப்படியே சென்று மரணத்திற்கும் நினைவுகளை செலுத்துவார்கள். இதனை அதிகம் செல்வம் படைத்த மனிதர்களிடம் காண முடியும். செல்வத்தில் திறனும் அடங்கும். தன் திறமைகளுக்காக அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஏங்குபவர்கள் கூட. இன்னுமொரு வகை அடிதட்டு மக்கள். அவர்களுக்கு பிரதானமாக அமைவது தேவை. இந்த தேவை இருந்தால் தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கும். தங்களின் தேடலை அந்த தேவையினை நோக்கி நகர்த்துவார்கள்.

இப்போது சொல்லப்போவது இரண்டும் கலந்த இருத்தலின் பயம். இந்த இரண்டாம் ரக பயத்தில் அம்மனிதர்களின் இல்வாழ்க்கை எப்படி இருக்கும் என யாராவது சிந்திக்க முடியுமா ? வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. அடிதட்டு மக்களிடம் சென்று கேட்டால் கூட இதே தங்களின் ஆசையும் ஆனால் வாழ்ந்தால் போதும் என்பது போல் இருக்கும் அவர்களின் பதில். பொருளீட்டலுக்கான பயணம் களைப்பு இருத்தலுக்கான பயம் என சுழற்சியில் முழு வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. இந்த வாழ்க்கை சுழற்சியினையே நான் வதையாக காண்கிறேன்.. இந்த வதையினை அழகுற சொல்லும் படம் தான் ஸ்பானிஷ் மொழியில் வந்த amador.


நடிப்பினை சிலாகிக்கும் படங்கள் அதிகம் வந்த போதும் இப்படம் என்னை மிகுந்து கவர்ந்துள்ளது. குறிப்பாக நான் தி ரீடர் படத்தில் நடிப்பு பிடிக்கும் என சொல்லியிருந்தேன். அந்த படத்திலெல்லாம் அந்த காட்சியமைப்பிற்கு ஏற்றவாறு எந்த முக உடல் பாவனைகள் தேவையோ அதனை நடிகர் நடிகைகள் தருகிறார்கள். இந்த படத்தில் வசனம் பாவனைகள் வாயிலாக அழகுற தரப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியில் வசனம் மிகக் குறைவு எனில் அந்த காட்சியில் நடிகையின் முகம் கண்ணசைவு சிரிப்பு சிரிப்பில்லாத தன்மை வசனங்களாக அதிகம் கதைகள் சொல்லுகிறது. இவளை இந்த படத்தில் ஊமைப் பெண்ண்ணாக நடிக்கவைத்திருந்தால் இன்னமும் தூளாக இருந்திருக்கும். இவ்வளவு தூரம் பாவனைகள் காட்டபட்டும் பாத்திரம் ஊமையில்லையா என கேட்கலாம். என்ன செய்ய கதை அப்படி அமைந்துவிட்டது.

கதை யாதெனில் மெர்செலா நெல்சன் இருவரும் தம்பதியினர். நெல்சன் பூக்களை திருடிக் கொண்டு வந்து விற்பவன். அப்போது அவள் கர்ப்பமாகவும் இருக்கிறாள். தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை கணவனிடம் சொல்லவில்லை. அவர்கள் பூக்களை வைக்கும் ஃப்ரிட்ஜ் பழுதடைந்துவிடுகிறது. அதனை வாங்க தயாராகின்றனர். அதற்கு பணம் வேண்டும் அதனால் அவள் வேலைக்கு செல்ல வேண்டும். அதற்காக அவள் எங்கு வேலைக்கு செல்கிறாள் எனில் அமடார் என்னும் கிழவனை குறிப்பாக நோய்வாய்ப்பட்ட கிழவனை பார்த்துக் கொள்ள. முன்பணமும் அளிக்கின்றனர். மேலும் அவள் நினைப்பதைவிட அதிகமாக சம்பளமும். சரியென ஒப்புக் கொண்டு அந்த வீட்டின் வேலைக்கு வருகிறாள். வேலை யாதெனில் அமடாருக்கு மருந்து அளிப்பது கழிவுகளுக்கு உதவுவது. இதைவிட முக்கியமான ஒரு நிபந்தனை அவர் தனிமையாக இருக்கிறேன் என உணராத வண்ணம் இருக்க வேண்டும். இவளும் அப்படியே பேச்சுத் துணையாக இருக்கிறாள். வியாழக்கிழமையானால் அவரை பார்க்க அவரின் கள்ளக்காதலி வருவாள். இப்படி தினமும் நடக்கும் போது ஒரு நாள் அவர் இறந்துவிடுகிறார். இந்த விஷயத்தினை அவரின் பெண்ணுக்கு சொன்னால் தன் சம்பளம் நிறுத்தப்படுமோ ? தன்னை நம்பி முன்பணம் கட்டி வாங்க இருக்கும் ஃப்ரிட்ஜினை தடுக்கலாம் என வீட்டிற்கு சென்றால் வாங்கிவிட்டான் நெல்சன். மீதிப்பணம் எப்படி கட்டுவது ? எப்படியேனும் சமூகத்திற்கு பிணவாடை தெரிந்துவிடுமே எப்படி தடுப்பது ? என கேள்விக்குறிகள் அவளை முடக்குகிறது. இதற்கு அவள் தன் வாழ்வின் மூலம் சொல்லும் பதில் தான் மீதிப்படம்.

இந்த படத்தில் அதிகம் பேசப்படும் மொழி மௌனம் தான். இருத்தலுக்கான பயம் தான் இப்படத்தின் அடிநாதம் என சொல்லியிருந்தேன். இதனை இப்படத்தின் கட்டமைப்பிலும் இயக்குனர் கொணர்ந்திருக்கிறார். குறிப்பாக எதிலெனில் கேமிரா மற்றும் நடிப்பில். இது போன்ற கதையமசத்தில் உள்ள படங்களிலும் திகிலினை வைக்க முடியுமா என ஆச்சர்யப்படும் விதத்தில் படம் செல்கிறது.

சில காட்சிகளை பார்க்கும் போது இது செயற்கைத் தன்மையினை அளிக்கிறதோ என தோன்றியது. உதாரணம் அவர் இறந்த உடன் அந்த வீட்டிற்கு வரும் அழைப்புகள். அந்த அழைப்பினை எடுக்க வெகு நேரம் செய்வாள். அது மட்டுமின்றி பேசும் போது அவள் அழுவாள். இதன் நடிப்பு மிக அருமையாக இருந்தாலும் ஏன் இந்த காட்சியமைப்பு இப்படி இருக்கிறது என கேட்க தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் அவளுடைய நிலையினை யோசித்து அந்த காட்சியினை உள்வாங்க வேண்டும். அஃதாவது காட்சியானது அந்த பிணத்தினை முன்வைத்தாலும் நடிகை தன் அனைத்து சோகங்களையும் தன்னுடனேயே சுமந்து கொண்டு வருகிறாள். ஒவ்வொரு காட்சியிலும். அந்த அனைத்திலும் தெரிவது அவளுடைய முழு வரலாறும். அவளுடைய ஒவ்வொரு நடிப்பும் கடந்தகாலத்தினையும் எதிர்காலத்தினையும் இணைக்கும் வண்ணமே இருக்கிறது. இப்படிப்பட்ட நடிப்பினை இப்போது தான் முதன் முதலில் பார்க்கிறேன். எழுந்து பாராட்டும் வண்ணம் இருக்கிறது.

மேலும் அவள் கிழவனுடன் பேசும் காட்சிகள் அதில் வரும் வசனங்கள் உண்மையில் ஒரு தனிப்பட்ட உணர்வினை அளிக்கிறது. கிழவன் எப்போதும் puzzle ஆடிக் கொண்டே இருப்பான். இவளுக்கு அதில் ஆர்வமே கிடையாது. ஏன் என கேட்கும் போது ஏற்கனவே இருந்த ஒன்று தான் மீண்டும் வரும் இதில் எதற்கு அதனை இணைக்க வேண்டும். அதற்கு அந்த கிழவனின் பதில்
"வாழ்வும் இந்த விளையாட்டும் ஒன்று. நாம் பிறக்கும் முன்பே நம்மிடம் அனைத்தும் தரப்பட்டது. அதனை சரியாக வைக்கத் தெரியாமல் கடைசி வரை திண்டாடுகிறோம்"
இந்த வசனங்கள் அனைத்தும் பேசுவது வேற்று மொழியாக இருந்தாலும் ஒரு வித புலரிப்பினை, நடிகை கொள்ளும் ஆச்சர்யத்தினை உன்னத தன்மையினை பார்வையாளனுக்கும் அளிக்கிறது.

அவன் இறந்தவுடன் அவளுடைய ஏக்கம் எனக்காக அவர் தன் ஆயுளினை நீடித்திருக்கலாமே என நினைக்கும் காட்சிகள் எல்லாம் அத்தனை சோகத்தன்மை நிறைந்தது. எனக்கு இப்படம் அதிகம் பிடிக்கக் காரணமும் இது தான். சோகமான படம் என தெரிந்து விட்டது. இருந்தும் இயக்குனர் அதனை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார். என்ன வித்தியாசம் எனில் இப்படத்தில் சோக காட்சிகள் அனைத்தும் தன்னை தானே பரிசீலிக்கும் போது, அதுவும் அடுத்தவரால் அவள் தன் மனதளவில் கொள்ளும் வதை. அதனை அப்படியே நடித்திருக்கிறார். க்ளாஸ். இங்கு மரணம் ஒரு பொருளாக்கப்படுகிறது. அடுத்தவனின் மரணத்திற்கும் அவளுடைய தேவைக்கும் இடையே நடப்பது ஒரு போர். அந்த போர் இக்கதையில் கண்ணீரால் நிறைந்திருக்கிறது.

இதனை தாண்டி என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய ஒன்று இப்படத்தின் இசை. இந்த காட்சிக்கு இந்த இசை பொருந்துமா என்றே எனக்கு தோன்றியது. ஆனாலும் இசை எப்படியோ ரசிக்கும் வண்ணம் இருந்து காட்சியுடன் ஒன்றிவிடுகிறது. படம் நெடுகிலும் இசையின் ஆதிக்கம் இல்லையெனினும் அது வரும் இடங்களில் எல்லாம் தன் தாக்கத்தினை பார்வையாளனுக்கு செவ்வனே செய்து முடிக்கிறது.

படத்தில் எனக்கு சற்று குறையாக பட்டது - அமடாருக்கு இன்னமும் காட்சிகள்  வைத்திருக்கலாம். மற்றபடி புதியதொரு கதையினை வித்தியாசமாக சொல்லும் இனிமையான ஒரு படம்.

ஒரு வசனத்தினை சொல்லாமல் வைத்திருந்தேன். கடைசியில் சொல்லலாம் என. அது அந்த கிழவன் அடிக்கடி சொல்லும் கதை

கடவுள் ஏன் மேகத்தினை படைத்தார் என தெரியுமா ? 
அவமானம் தாங்க முடியாத போது மறைந்து கொள்ள

என சொல்லி அவர் சிரிப்பார். இந்த வசனம் இரண்டு மூன்று முறை தான் நேரிடையாக வரும். அதே கேமிராவின் மூலம் சொல்லப்படும் இந்த வசனம் மெய் சிலிர்க்கும் வண்ணம் அட்டகாசமாக காட்சிபடுத்தபட்டுள்ளது. அது மட்டுமின்றி சில காட்சிகளால் வாசகன் மனதிலும் மெர்சலா மனதிலும் தோன்றும் ஒரு கேள்வி, இது தான் கதையோ என சிந்திக்கவும் வைக்கிறது அது,

அவமானம் எனில் மனிதர்களை பார்த்தா தன் படைப்பினை நினைத்தா ?

இந்த கேள்விக்கான பதில் பார்வையாளனிடம் பார்வையாளனை பொருத்து தான் இருக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக