பால கணேசனுக்கு ஓர் கடிதம் (2)

பால கணேசனுக்கு,
                              முதலில் என்னை பற்றி சொல்லிவிடுகிறேன். எந்த ஒரு சிறுகதையானாலும் அதில் கட்டமைத்தலை மட்டுமே உற்று நோக்குபவன் நான். கட்டமைப்பு என்பது ஒரு  புனைவிற்கு அது சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அதிமுக்கிய ஒன்று. கதை எப்படி பட்டதாகினும் அதை எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்னும் ஒரு முறை தான் சாமான்யனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்.

ஒரு எழுத்தாளன் தன் பிரதியில் வைக்கும் கருவினை கண்டு வாசகன் அவனை மெச்சுகிறான் எனில் அது வாசகனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒரு இன்மையினை காட்டுகிறது. சின்ன உதாரணம். எனக்கும் உங்களுக்கும் ஒரே வயது என வைத்துக் கொள்வோம். தாங்கள் தாலிபன் தீவிரவாதத்தினை பற்றி எழுதுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எனக்கு தாங்கள் எழுதும் அனைத்தும் புதிதாக தெரிகிறது. அது எப்படி ? நம் இருவருக்கும் ஒரே வயது அப்படியிருக்கையில் எனக்கு தெரியாதது உங்களுக்கு மட்டும் எப்படி தெரிய வாய்ப்பு ? பாதில் மிக மிக சின்னது. தேடல் குறைந்தவனாக நான் இருக்கிறேன்.

இப்போது அதே விஷயத்தினை கதையாக மாற்றுகிறீர்கள். கதையாக கூட வேண்டாம் மூன்று பேரிடம் சொலுகிறீர்கள். ஒன்று சிறுவன் ஒன்று பெரியவர் ஒன்று தங்களுக்கு சமமான வயதுடையவர். அப்படியெனில் தங்களுக்கு இருக்கும் கடமை அனைவருக்கும் புரிய வைத்தாக வேண்டும். நிச்சயம் நீங்கள் மூவரிடமும் ஒரே மாதிரி சொல்ல மாட்டீர்கள். ஆக அங்கே அந்த வயதிற்கேற்றாற் போல கருவினை மாற்றாமல் அதனை சொல்லும் விதத்தினை மாற்றுகிறீர்கள். கட்டமைப்பினை மாற்றுகிறீர்கள். அதற்கான தேவையும் ஆங்காங்கே எழுகிறது. உண்மையாக சொல்ல வேண்டுமெனில் கட்டமைப்பு மட்டுமே கதைகளுக்கு உயிரினை கொடுக்கிறது. அதற்கு தக்க சான்றே தங்களின் கதை.

இப்படி இருக்கும் பட்சத்தில் கதை என்பது பொத்தாம் பொதுவாக வைக்கப்படுகிறது. அதில் எப்படி மூவரையும் இழுக்கலாம் ? இந்த சிந்தனையின் வெளிப்பாடு ஒரு கட்டமைப்பினை தருகிறது. அப்படி தருவதன் மூலம் நாம் சில ஸ்தூலங்களை தகர்த்தெறிகிறோம். அஃதாவது ஏற்கனவே இப்படி தான் புனைவுகள் இருக்க வேண்டும் என்னும் கோட்பாடுகளை. இதனால் தான் கரு ஆளுமையினை வாசகனின் பலவீனம் என்கிறேன். அதே கட்டமைப்பியல் ஆளுமை எப்போதுமே எழுதும் எழுத்தாளனின் பலம்.

ஆனால் இப்படி பழையதை கழித்து புதியவைகளை புகுத்தும் போது வரவேற்பு கிடைப்பதில்லை. அதற்கு காரணம் obsession. தொடர்ந்து ஒரு விதமாகவே கதைகளை சொல்லி சொல்லி தமிழ் மக்களை இப்படித் தான் கதைகள் இருக்க வேண்டும் என நம்ப வைத்துவிட்டார்கள். அதனால் தான் புறக்கணிப்புகள் அதிகம் எழுத்துலகில் இருந்திருக்கிறது. இவையனைத்தின் மூலமும் நான் சொல்ல வருவது இப்படியொரு கட்டமைப்பினை அளித்த கைகளுக்கு நான் முத்தமளிக்க ஆசைப்படுகிறேன். ஏன் என்பதை இனி வரும் பத்திகள் சொல்லும்.

இந்த கதையினை நேரிடையாக சொல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஐந்து பத்திகளில் சொல்லிவிடலாம். சிறுகதை என வரும் போது கதையின் மாந்தர்களை நாம் வாசகர்களுக்கு அறிமுக படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதனை எப்படி செய்யலாம் ? இது என்ன மடத்தனமான கேள்வி கதையின் முதல் பத்தியில் இருக்க வேண்டும் அல்லது கதை நெடுக எந்த பாத்திரம் வருகிரதோ அது தான். இங்கே அந்த பாத்திரம் எப்படி அறிமுகமாகிறது ? தேர்ந்தெடுத்து எழுதுக என்னும் இடத்தில்.

ஒவ்வொன்றாக விளக்குவது கூட எனக்கு பயமாக இருக்கிறது. எங்கு நான் சொல்லும் அனைத்தும் கட்டமைப்பினை மட்டுமே சொல்லுகிறதோ என. உண்மையும் அதில் தான் அடங்கியிருக்கிறது. இந்த பிரதியில் கட்டமைப்பு கதையாகிறது. நம் சமுகத்தில் இருப்பவர்களுக்கு கதையெனில் சம்பவமும் அதிலிருந்து முடிக்கப்பட்ட முடிவும் இருக்க வேண்டும். குறிப்பன ஒன்று கரு ஒன்றினை எடுத்து செல்ல வேண்டும். அது இந்த கதையில் மிஸ்ஸிங் என்பதால் இந்த கதை கட்டமைப்பினை மட்டுமே கொண்டுள்ளது என்கிறார்கள்.(இக்கதைக்கான லிங்கின் பின்னூட்டத்தில் பாருங்கள் யாரை குறிப்பிடுகிறேன் என புரியும்).

விஷயம் அதுவல்ல. கரு கட்டமைப்பு. முதலில் கருவானது தோன்றி அதனை வாசகனுக்கு ஆச்சர்யமூட்டும் வகையிலும் சலிப்படையாத வகையிலும் சொல்வது எப்படி என்பதற்கு கட்டமைப்பு என்றொரு தளம் இருக்கிறது. பொருளினை டப்பாவில் போட்டு தருவது போல. இங்கே பொதுவாக கரு ஸ்தூலமாக இருக்கும். அதற்கேற்றாற் போல கட்டமைப்பினை மாற்றுவர். இந்த கதையினை வாசிக்கும் போது அது எனக்கு துளி கூட தோன்றவில்லை. காரணம் கருவானது இங்கே அதிகம் மாற்றமடைந்து வித்தியாசமான உருவம் கொண்டிருக்கிறது. கட்டமைப்போ வினாத்தாள் என்னும் நிலையிலேயே இருக்கிறது.

இதனை நான் லீனியர் என சொல்லலாமா ? நிச்சயம் முடியாது. ஏன் எனில் பிரதி என்பது ஒரு ஸ்தூலம், கருவினை தாங்கி நிற்கும் வெளி. இங்கே இன்னுமிரண்டு பிரதிகளை இணைத்து அதனை மாற்றி மாற்றி போட்டால் மட்டுமே அது நான் லீனியர் ஆகும். இங்கே அந்த பிரதியே வினாத்தாள் வடிவம் தான். இடைச்செருகலாக வேறு ஏதேனும் பிரதிகளோ அல்லது வேறு ஒரு வினாத்தாளோ வந்தால் மட்டுமே இது நான் லீனியர் என்னும் தன்மையினை பெறும். இங்கே தேவையில்லாமல் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். கருவினை மட்டும் பார்த்தால் பல்வேறு சம்பவங்களை வெவ்வேறு பத்தியில் சொல்வதால் இக்கதையானது நான் லீனியர் தோற்றத்தினை அளிக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு கதாபாத்திரத்தின் சம்பவங்களே. ஆக இப்பத்திகளை மாற்றி போட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இக்கதையில் இல்லை. இந்த கதைகள் முந்தைய பத்திகளிலிருந்து ஏதோ ஓன்றினை மறைமுகமாக கடத்திக்கொண்டு தான் செல்கிறது. அழமாக பார்த்தால் நிச்சயம் இதனை புரிந்து கொள்ள முடியும்.

கோடிட்ட இடங்கள், பொருத்துக தேர்ந்தெடுத்து எழுதுதல் அனைத்தும் பத்திகளின் மறு உருவமே. இவைகளை வாசிக்கும் போது என் நினைவிற்கு வந்தவர் இயக்குனர் கிறிஸ்தோபர் நோலன் மட்டுமே. அவர் மெமெண்டோ படம் எடுத்த போது ஒரு பேட்டியில் சொன்னார் நான் ஒரு படம் எடுக்கிறேன் எனில் பார்வையாளன் மீண்டும் விருப்பத்தின் அடிப்படையில் மீள்பார்வையினை கொள்ள வேண்டும். இந்த கோட்பாடு தங்களின் சிறுகதைக்கு சாலப்பொருந்தும். சின்ன உதாரணம்
1 . காலையில் எழுந்ததும் விக்னேஷ் செய்யும் முதல் காரியம்,
a) 
தன் தங்கையின் ஜடையை இழுத்தல் b) தன் தந்தையிடம் திட்டு வாங்குதல்,
c) 
அவன் அம்மாவின் புலம்பலை உதாசீனப்படுத்துதல் d) மொட்டை மாடிக்கு சென்று பல் விளக்குதல்
விடை:- மேற்கண்ட நான்கும்.


இது போன்று இக்கதையில் வரும் வரிகளை மீள்வாசிப்புகள் செய்யாமல் ஒரு வாசகன் கதையினை புரிந்து கொண்டேன் என்றால் அது அரைகுரை புரிதலாக மட்டுமே இருக்கும். முதலில் கேள்வியில் ஆரம்பிக்கும் வாசிப்பு பதிலால் மீள்வாசிப்பிற்கு சென்று பின் அடுத்த கேள்விக்கு செல்கிறது.

கட்டமைப்பில் மட்டுமே எத்தனையோ கேள்விகளை உருவாக்கும் படைப்பினை நான் எப்போதும் வரவேற்கிறேன். கதையினை பார்க்கும் போது கருவினை மெருகேற்றி மிக கடினமாக எழுதியிருக்கிறீர் என்பது தெரிகிறது. இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்து எப்படியாவது பத்திரிக்கைகளில் வெளிக் கொண்டுவர பாருங்கள் பாலா. 

எழுத்தாளன் ஆக வேண்டும் என்பதை காட்டிலும் இது போன்ற கதைகளை ப்ரமோட் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருக்கிறேன். பால கணேசனுக்கு கிடைத்த கிடைக்க இருக்கும் விசிறிகளில் அடியேனும் ஒருவன் என்பதை இதில் பதிவு செய்கிறேன். . .

இப்படிக்கு,

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Bala Ganesan said...

முதலில் நன்றிகள் கி.மு.

//கருவினை மட்டும் பார்த்தால் பல்வேறு சம்பவங்களை வெவ்வேறு பத்தியில் சொல்வதால் இக்கதையானது நான் லீனியர் தோற்றத்தினை அளிக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு கதாபாத்திரத்தின் சம்பவங்களே. ஆக இப்பத்திகளை மாற்றி போட்டு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இக்கதையில் இல்லை. இந்த கதைகள் முந்தைய பத்திகளிலிருந்து ஏதோ ஓன்றினை மறைமுகமாக கடத்திக்கொண்டு தான் செல்கிறது. அழமாக பார்த்தால் நிச்சயம் இதனை புரிந்து கொள்ள முடியும்.//

இந்த வரிகளுக்காகத்தான் நான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். யாரேனும் ஒருவர் என்னுடைய இந்தக் கதையிலிருக்கும் இந்த விஷயத்தை என்னோடு விவாதிக்க வர மாட்டார்களா என ஏங்கியிருக்கிறேன்.அது இன்று நிறைவேறியுள்ளது. மீண்டும் நன்றிகள் பல. பொறுப்புணர்வோடு கூடிய ஒரு உணர்வு எனக்குள் வந்துள்ளது. அதை என் வரும் கதைகளிலும் தொடர்வேன்.

Post a comment

கருத்திடுக