Zero Dark Thirty - 2012

ஆவணப்படம் எனில் என்ன ? சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக அநீதிகளை படமாக சொல்வது. உதாரணமாக ஜாதி மத ரீதியான கலவராங்கள், அதில் நடந்த அரசியல் ஊடுருவல்கள், மக்கள் மேலோட்டமாக அறிந்த விஷயங்களை உள்ளார்ந்து ஆய்வு செய்து அது சார்ந்த ஆவணங்களை அப்படியே ஒரு கதையினை கொண்ட படம் போலாக்கி வெளியிடுவர். அப்படியொரு படம் தான் ஜெய் பீம் கம்ரேட். இந்த ஒரு ஆவணப்படத்தினை மட்டும் தான் நான் பார்த்திருகிறேன். இதனை நம்மில் அநேகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அது ஜனரஞ்சகத் தனமையினை இழந்து நிற்கிறது. உண்மையினை அப்படியே சொல்வதால் நியூஸ் சேனலினை பார்ப்பது போல் இருக்கும். இதனைத் தாண்டி இருக்கும் சாதாரண படங்களை தான் நாம் அதிகம் பார்க்கிறோம். அதனை ஆங்கிலத்தில் feature film(தமிழில் தெரியவில்லை) என்பர்.

இப்போது அடுத்தக்கேள்வி இதில் ஆவணத் தனமை எவ்வளவு இருக்கிறது ? ஆவணத் தன்மை ஏன் இருக்க வேண்டும் ? சில படங்களை எடுத்துக் கொண்டால் அவை உண்மை சம்பவங்களை பின்புலனாக கொண்டு எடுக்கப்பட்டதாய் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதன் உண்மைத் தன்மையினை சிதைக்காமல் புனைவினை கலந்து எடுக்க வேண்டும். அதே சமயம் எந்த ஒரு ஆவணமும் ஒரு மீடியத்தினுள் வரும் பட்சத்தில் அது புனைவாகவே போகும். ஆவணப்படம் என சொல்லிவிட்டால் கவலையில்லை. சாதாரண படம் எனும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. மேலும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் தான் இந்த ஆவணத் தன்மை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. விருமாண்டி படம் ஆவணம் போல் கொஞ்சம் காட்டப்பட்டிருக்கிறது. முக்கியமாக ஆரம்பத்தில் சிறையில் நடக்கும் காட்சிகள். மேலே சொன்னது போல் அங்கெல்லாம் ஜனரஞ்சகம் மிஸ்ஸிங்!

இப்படி பல சிக்கல் இருக்கும் போது பார்வையாளானுக்கு சலிப்பினை கொடுக்காமல் ஆவணங்களை மையமாக வைத்து ஒரு feature film இனை கொடுப்பது எப்படி ? இந்த கேள்விக்கு பதிலினை சொல்வதற்கு முன் ஒன்றினை சொல்ல நினைக்கிறேன். ஆவணங்களை வைத்துக் கொண்டு படம் எடுக்கும் போது திரைக்கதை எழுதுவது கடினமான ஒன்று. ஆவணமானது உலகமே அறிந்த ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் திரைக்கதையானது எப்போதோ நடந்து முடிந்த சம்பவத்திற்கு மீண்டு உயிர் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அதே இரண்டாவது பட்சமெனில் அந்த ஆவணத்தின் பிண்ணனியினை தெளிவாக பார்வையாளன் புரியும் வகையில் எடுக்க வேண்டும். இப்போது பேச இருக்கும் படமோ முதல் ரகம். ஆஸ்கருக்கு இப்போது தேர்வாகியிருக்கும் படங்களுள் இதுவும் ஒன்று.


மேலே ஆவணப்படம் என்பதனை சொல்லியிருந்தேன். அதனை தேசியம் உலகம் என விரிவாக்க நினைக்கிறேன். உலகமே சம்மந்தப்பட்ட ஒரு சம்பவத்தின் ஆவணங்களை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இப்படம் கிடைக்கப்பட்ட சில ஆவணங்களை கொண்டு எடுக்கப்பட்டது என சொல்லும் போதே படம் ஆரம்பித்த ஒரு உணர்வு கிடைத்தது.

இப்படத்தின் கதை யாதெனில் அமேரிக்காவின் இரட்டை கோபுரங்களை ஒசாமா பின் லேடன் இடிப்பதில் கதை ஆரம்பிக்கிறது. அதன் பின் ஒசாமாவினை எப்படியாவது பிடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் மாயா என்னும் சி.ஐ.ஏ. 2001 இல் ஆரம்பிக்கும் படமானது 2011இல் ஒசாமாவின் கொலையில் சென்று முடிகிறது.

ஒசாமாவின் கொலையானாது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் படத்தின் ஆரம்பத்தில் இரட்டை கோபுர தாக்குதலில் ஆரம்பிக்கிறது என சொல்லியிருந்தேன். ஆனால் அவையெல்லாம் காட்டப்பட்டிருக்கும் விதம் நாம் நினைப்பதை காட்டிலும் அசத்தலாக இருக்கும். மேலும் குறிப்பிட வேண்டிய விஷயம் மாயா. இன்னுமொன்று இருக்கிறது மாயாவினை முடித்து அதனை சொல்கிறேன். நான் பார்த்த படங்களில் சிறந்த நடிகையெனில் அவள் நிச்சயம் அநேக காட்சிகளில் அழ வேண்டும். அல்லது காதலால் கசிந்து உருக வேண்டும். ஆங்கிலப்படங்களில் பார்த்தாலும் இதே நிலையினை தான் நான் இதுவரை பார்த்திருக்கிறேன். உதாரணம் தி ரீடர். இந்த படமோ அந்த மனநிலையினையே மாற்றி விட்டது. இந்த மாயா என்பவள் ஒரு protogonist. அஃதாவது கொள்கையினை நோக்கி நகர்பவள். அவளது ஒரே கொள்கை ஒசாமாவினை பிடிப்பது. அதற்காக அவள் செய்யும் வேலைகள் ஒவ்வொரு காட்சியிலும் அழகுற தெரிகிறது. அதிலும் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. என்னதான் அவள் சி.ஐ.ஏ ஒசாமாவின் தேடலை தலையாய கொண்டவளாக இருப்பினும் அவள் ஒரு பெண். அவளுக்கென இருக்கும் பெண் சார்ந்த மென்மையான குணங்களை அவள் அதிகம் வெளிக்காட்டாமல் தைரியமான பெண் என காண்பிக்க அவள் மேற்கொள்ளும் நடிப்புகள் மெய் சிலிர்க்க வைக்கிறது. இதனை படத்தின் ஆரம்பத்திலேயே காணலாம். ஒரு தீவிரவதியினை அவள் முன் கொடுமை செய்வார்கள். அவளால் அங்கிருக்க முடியாது. போகவும் முடியாது. உண்மை அவனின் வாயிலிருந்து வேண்டும் ஆனால் இந்த வதைகள் வேண்டாம் என முரண்பட்ட உணர்வுகளுடன் எதனையோ சொல்ல துடிப்பாள். ஆனால் அவளின் மௌனமே படத்தில் அதிகம் பேசும். அவள் பார்வையாளனிடம் கொடுக்கும் மௌனத்தில் கூட அவளின் வெறி செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரத்தினை நடிப்பதும் மிக மிக கடினமான ஒன்று. முடிவுகளில் தெளிவாக இருப்பினும் மனதில் இருக்கும் முரண்களால் அவளின் முக பாவனைகள் இரு வேறு முனைகளுக்கு சென்று வருகிறது. யாராகினும் அவளை விட்டு பார்வை அகலாது செல்லும் வகையில் அந்த பாத்திரம் இருக்கிறது.

அடுத்து என் பாராட்டிற்குரியவர் மார்க் போல். எழுதியிருக்கும் திரைக்கதையானது என்னை அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது. பத்து வருடங்களில் அமேரிக்காவிற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் எத்தனையோ தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவையனைத்தினையும் படமாக எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் அது ஒரு ஐந்து மணி நேரமோ அல்லது அதற்கும் மேலே கூட செல்லலாம். அதே நேரத்தில் பார்வையாளனுக்கு உண்மையினையும் மறைக்கக் கூடாது. இதற்கு அவர் டக் டக்கென காலத்தினை படத்தில் மாற்றுகிறார். நோலன் எழுதிய ஃபாலோயிங் படத்தினை பற்றி எழுதியிருந்ததில் ஒன்றினை சொல்லியிருந்தேன். காட்சிகளை மாற்றிப்போடும் போது பார்வையாளன் அதன் தொடர்ச்சிகளை தானாக உருவாக்கிக் கொள்வான். அதே விஷயம் இங்கு வேறு விதமாக நடந்திருக்கிறது.  எப்படி எனில் ஒசாமாவினை அடைய இவர்கள் அஃதாவது திரைக்கதையினை எழுதிய மார்க் போல் சில ஆட்களை வைத்திருக்கிறார். அவர்களை நோக்கி மட்டுமே கதையினை நகர்த்தியிருக்கிறார். அந்த தளத்திலிருந்து சற்றும் நகராமல் ஒன்றிலிருந்து மற்றொன்று என ஒவ்வொரு தடயமாக துப்பறிந்து கண்டறியும் திரைக்கதை தான் இந்த ஆவணங்களை feature film ஆக்குகிறது. படத்தில் எனகு பிடிக்காமல் போனது சில இடங்களில் வரும் ராக் இசை. ஏன் வைத்தார்கள் என யூகிக்கவே முடியவில்லை! இன்னமும் இருவரை பாராட்ட வேண்டுமெனில் இயக்குனரும் கேமிராவும். இரண்டும் சூப்பர். ஆனால் முதல் இருவர் ஏற்படுத்திய தாக்கத்தினை இவர்கள் காண்பிக்கவில்லை.

இதனுடன் முடிக்கலாம் என்பது தான் என் எண்ணம் ஆனால் நண்பர் நிர்மல் நேற்று படம் போகிறேன் என சொன்ன போது விஸ்வரூபத்துடன் ஒப்பிட்டு எழுதுங்கள் என சொன்னார். அதனால் அதனையும் சிறிது சொல்லிக் கொள்கிறேன்.

விஸ்வரூபத்தினையும் இந்த படத்தினையும் இணைத்து பார்க்கவே முடியாது. ஏன் எனில் விஸ்வரூபம் முழுக்க முழுக்க ஆஃப்கன் தீவிரவாதத்தினை அவர்களில் தளத்திலிருந்து பேசுகிறது. அதே இந்தப் படம் முழுக்க முழுக்க ஒசாமாவினை நோக்கிய பயணத்தினை விவரிக்கிறது. மேலும் விஸ்வரூபம் ஒரு மாயை. நல்ல சினிமா என வெறும் ஒலியினை வைத்து ஏமாற்றியிருக்கிறார். முதல் 45 நிமிடங்கள் தான் பார்க்கலாம் என்பது போல் தான் படம் இருக்கிறது. அதன் பின் இருப்பது அனைத்தும் ஒலி மட்டுமே. அதன் அழகில் மயங்கிவிடுகிறோம் என்பதே உண்மை. இங்கோ ஆரம்பம் முதல் கடைசிவரை அடுத்து என்ன அடுத்து என்ன என நாமும் மாயாவுடன் தேடிக் கொண்டிருப்போம். பாருங்கள் நான் சொன்னதை உணர்ந்து கொள்வீர்கள். 

ஒன்றே ஒன்றில் இணைக்கலாம் என்றிருந்தேன் அது இரு இயக்குனர்களும் செய்த ஆய்வில். கமல் முழுக்க கற்பனையில் விஸ்வரூபத்தினை எடுத்திருக்கிறாரோ என சந்தேகம் வருகிறது. நான் திட்ட வேண்டுமே என திட்டவில்லை. உதாரணம் ஒன்று சொல்கிறேன். இப்படத்தில் அபு அஹமது என்பவனை தேட வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்கனவே பிடிக்கப்பட்ட தீவிரவாதியும் அபு அஹமது என்று தான் பெயரினை சொல்வான். உடனே மாயா அபு அஹமது என்பது பெயர் கிடையாது அவனின் குடும்பப்பெயரினை சொல் என்பாள். அபு எனில் அப்பா என்று ஒரு அர்த்தம் கூட சொல்வாள். கூர்ந்து கவனித்ததில், கவனித்தும் விழவில்லை. இங்கோ தேசியத்தினை காப்பாற்றுவதால் பெயர் கூட மாற்றாமல் அப்படியே உளவு போகிறார் விஸாம் அஹமது கஷ்மிரி!!!!!

நிர்மல் கேட்டதால் எழுதினேன். சிறிதாக சொல்ல வேண்டுமெனில் ஸீரோ டார்க் தெர்டி ஒரு தீவிரவாத பொக்கிஷம்.

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் மூன்றினை பார்த்து விட்டேன். என் கணிப்பில்
1.ஸீரோ டார்க் தெர்டி 
2.லெஸ் மிசரெபில்ஸ்
3.அர்கோ 
பார்ப்போம் யார் ஜெயிக்கிறார்கள் என்று!

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Unknown said...

விஸாம் அஹ்மத் காஷ்மீரி பற்றிய உங்கள் புரிதல் மிகவும் தவறு. விஸாமின் அப்பா ஒரு பெரிய ஜிகாதி. சுதந்திர காஷ்மீர் வேண்டி போராடிய பெரும் போராளி. ஆனால், அவருடைய தமிழ் மனைவியை தலாக் செய்து விடுகிறார். அந்தப் பெண் தலாக்கிற்கு பிறகு தமிழகம் வந்து சேர்கிறார். தாயின் அரவணைப்பில் வளரும் விஸாமிற்கு அப்பாவின் செயல்பாடுகளில் எரிச்சல் உண்டு. ராணுவத்தில் சேரும் இவரை ரா பயன்படுத்திக் கொள்கிறது. விஸாம் உளவாளி என்று 'ரா' க்கு மட்டுமே தெரியும். ஆக, இதே பெயரலியே அவர் காஷ்மீரில் ஜிகாதியாக உரு மாற்றி அனுப்பி வைக்கிறார்கள். சரி, இதை பிற தீவீரவாதிகள் விசாரித்திருக்க மாட்டார்களா என்றால், ஆம், அப்படி ஒருவர் இருந்தார், வேலையை விட்டு விட்டார் அல்லது நீக்கி விட்டோம் என்று ரெக்கார்டுகளில் பதிவாகி இருக்கும். இப்போது அரசு உதவியால் விஸாம் நிறைய சதி செயல்களில் அரசுக்கு சேதம் ஏற்படுத்தி ஜிகாதிகள் மத்தியில் புகழ் பெற்று விடுகிறார். ஓரளவுக்கு மேல் அரசு அவரைத் தேடுவதாக நோட்டிஸ் ஒட்டுகிறது. விஸாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தப்புகிறார். அங்கு பிற தீவிரவாதக் குழுக்களில் அடைக்கலமாகிறார். அவருடை தீரத்தை அறிந்திருந்ததால், பிற தீவீரவாதிகள், அல்-கைதா அல்லக்கை ஓமருடைய அல்லக்கை சலீமுக்கு விஷயத்தை சொல்கிறார்கள். சலீம் ஓமரின் மெய்காப்பாளன். மெய்காப்பாளனை சந்தேகிக்க முடியாது. இதுவல்லாமல் விஸாம் பற்றியும், அவருடைய அப்பா பற்றியும் எல்லோருக்கும் தெரிகிறது(நாசர், ராகுல் போஸ், தூக்கிலிடப் படும் அரபிக்காரன்) சரி, இதையெல்லாம் படத்தில் காட்டவில்லையே ? இப்படியாக புரிந்துக் கொண்டு தமிழில் பார்க்க மாட்டோம் என்ற மமதை அல்லது அதற்குரிய ஞானம் இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. கமல்ஹாசன் ஹாலிவுட்டில் பிறந்திருந்தால் நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரே இயக்குனராக இருந்திருக்கக் கூடும். பாவம் நம்மிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார். ஆழ்ந்த அனுதாபங்கள் (கமலுக்குச் சொன்னேன்)

Kimupakkangal said...

அடியேனின் அடுத்த பதிவினை தயை கூர்ந்து வாசியுங்கள் ராஜா

Post a comment

கருத்திடுக