இலக்கியம் எனில். . . ?

நான் அசோகமித்திரனின் ஒற்றன் என்னும் நாவலினை வாசித்த போது மெல்லிய இழை என நானாக ஒரு வார்த்தையினை பிரயோகித்து என் புரிதலினை விளக்கியிருந்தேன். அதனை வாசிக்க  - http://www.kimupakkangal.com/2012/12/blog-post_21.html.

இதனை இங்கே சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. பிரதி யதார்த்தம் இவ்விரண்டினையும் இணைத்து பார்க்கலாம் என்னும் சிறு எண்ணம் தன். ஆனால் இந்த வரையறை என வரும் போது வாசகன் ஒரு தவறான புரிதலினை கொள்கிறான். யதார்த்தத்தினை அப்படியே பிரதியில் கொணர்ந்தால் அதன் பெயர் கட்டுரை. அதே புனைவினை(பெயர் மாற்றம் செய்து) கலந்து எழுதினால் அது கதை என்னும் தளத்திற்கு செல்லப்பட்டிருக்கிறது.

இதனை சற்று இடம் மாற்றி பார்ப்போம். எழுத்தாளனுக்கு ஒரு கனவு வருகிறது. சற்று நீண்ட கனவு. கனவு என்னும் பட்சத்தில் அது அந்த குறிப்பிட்ட எழுத்தாளனுக்கு கடந்தகாலத்தில் நடந்திருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் நடக்கலாம். இந்த இரண்டும் வாசகனுக்கு யூகம் மட்டுமே. ஒன்றினை தவிர - அது எழுத்தாளனின் கனவு என்பது. அந்த கனவில் புது உலகம் வரலாம், உலகத்திலேயே இருக்கும் விலையுயர்ந்த மதுபானத்தின் பெயரும் சிறப்பு அம்சங்களும் வரலாம், உலகத்திலேயே நம்பர் ஒன் படமாக்க ஒட்டு போடுங்கள் என சொல்லும் விஸ்வரூபம் படம் கனவில் ஓடலாம் இப்படி பல ஆம்கள் வந்தாலும் வாசகனுக்கு அது ஒரு பிரதி. எழுதுபவனின் கனவினை சொல்லும் பிரதி. என் கேள்வியே இங்கே தான் இருக்கிறது. இதனை கட்டுரை என்பார்களா கதை என்பார்களா ?

இந்த கேள்வி கூட அபத்தமாக இருக்கலாம். காரணம் இங்கு தான் கதை எனில் இப்படி தான் இருக்க வேண்டும் என வரைமுறை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை தாண்டினால் அதனை ஏற்றுக் கொள்ள சங்கோஜப்படுகிறார்கள். இது நான் முதலில் எழுதியிருக்கும் யதார்த்தம் கட்டுரை என்னும் பகுதி. அடுத்து கதை யதார்த்தம் என்னும் பகுதிக்கு செல்வோம்.

இது முன்பினை விட கொடுமை. நமது சித்தரிப்புகளின் படி கதையெனில் கதாபாத்திரங்களினை வர்ணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையெனில் அது கதையே கிடையாது. சிறுவயதில் என்னுடைய புரிதலும் இப்படி தான் இருந்தது. யதார்த்தமும் கதையும் ஒன்றாக இருப்பின் எதற்காக கதைகளை எழுத வேண்டும் என அருகில் இருப்பவர்களிடம் கேட்பேன். இந்த புரிதல் இன்னமும் என் நண்பர்களிடம் இருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் ஜெய் பீம் கம்ரேட் என்னும் ஆவணப்படத்தினை நான் இந்த இணையத்தில் எழுதியிருந்தேன். விஷால் கோக்ரே என்னும் கவிஞனின் இறப்பிலிருந்து இப்படம் தொடங்கும். இதனை நாவலாகவும் எழுதலாம் ஜனரஞ்சகமூட்டும் ஒரு கதையாக இருக்கும் ஆனால் மக்களுக்கு அது எப்படி இருக்கும் ? அழகுற வடிவமைக்கப்பட்ட செய்தித்தாள்!

இதிலிருந்து நான் சொல்ல வருவது மிக மிக எளிமையான விஷயமே - நாம் புனைவுகளுக்கு வரையறைகளை வைத்திருக்கிறோம். இந்த பிணைப்பிலிருந்து வெளி வந்து ஒரு படைப்பினை முன்வைக்க முடியுமா எனில் அதற்கான சிறந்த உதாரணம் “கோணல் பக்கங்கள்”.
கதை - யதார்த்தம் - கட்டுரை என்னும் தளத்தில் தான் இந்நூல் பயணிக்கிறது. இது மொத்தம் மூன்று பாகங்கள். இந்த கோணல் பக்கங்களுக்கு பின்னால் எனக்குல் சாருவிற்கும் இடையே நடந்த சின்ன உரையாடல் நினைவிற்கு வருகிறது.

அது நான் சாருவினை வாசிக்க ஆரம்பித்த காலம். சேலத்தில் அவருடைய நூல்கள் அப்போது ஒன்றிரண்டு மட்டும் இருந்தது. அதனையும் வாங்கிவிடுவேன். நான் வாசித்த முதல் மூன்று நூல்கள் - திசை அறியும் பறவைகள், எனக்கு குழந்தைகளை பிடிக்காது, மூடுபனிச் சாலை. இந்த மூன்றிலும் எனக்கு புலப்படாத விஷயம் ஏன் இந்த எழுத்தாளர் கோணல் பக்கங்கள் என்னும் நூலினையே புகழ்ந்து தள்ளுகிறார் என்று. அப்போது அவரது அனைத்து நூல்களும் உயிர்மை பதிப்பகத்தில் மட்டுமே இருக்கும். அதனால் அங்கு அழைத்து கேட்டேன். அவர்கள் சொன்ன பதில் அந்த நூல் பதிப்பிலேயே இல்லை!

இந்த அதிர்ச்சிக்கு முன்னும் நான் கேட்க ஆரம்பித்த நாட்களுக்கு பின்னும் நடந்த விஷயங்கள் அவருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்கள், எழுதிய கடிதங்களின் பின்குறிப்பு (மின்னஞ்சல் - கடிதம் ? என குழம்ப வேண்டாம். அப்போது என்னிடம் கணினி இல்லை. எப்போதாவது இணையதள நிலையத்திற்கு செல்லும் போது யாருக்காவது மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என தோன்றும். ஆனால் யாருடைய மின்னஞ்சல் முகவரியும் தெரியாது. அதனால் சாருவிற்கு தொடர்ந்து இதனை அனுப்பிக் கொண்டிருந்தேன்.) என ஒரே கேள்வி நிறைத்துக் கொண்டிருந்தது - கோணல் பக்கங்கள் எங்கு கிடைக்கும் ? அவர் தானே தருகிறேன் என் ஒரு அழைப்பில் சொன்னவுடன் எப்போது என அடுத்த தொந்தரவினை கொடுக்க அரம்பித்தேன்(ஒருவன் கோணல் பக்கங்கள் கேட்டு தொல்லை கொடுக்கிறார் என ஒரு பதிவில் கூட எழுதியிருந்தார். இதனை அந்த குறிப்பிட்ட மாதத்தில் தம்பட்டம் அடிக்காத நாளே கிடையாது!).

அப்போது எனக்கு மூன்றாம் பாகம் மட்டுமே அனுப்பி வைத்தார். காரணம் முதல் இரண்டு பாகங்களில் இருக்கும் விஷயங்கள் அவருடைய ஏனைய நூல்களில் விரவி இருக்கிறது என்பதால். மேலும் இவையனைத்தும் தொடராக விகடனில் அவர் எழுதியது.

இந்த நூல் அப்படி என்ன சிறப்பினை சொல்கிறது எனில் இது சாரு நிவேதிதா என்னும் அடைக்கப்பட்ட மனிதரின் இனிமையான கதறல் என்றே சொல்ல நினைக்கிறேன். வெறும் இந்த மூன்று நூல்களை வைத்தே நம்மால் முழு ஆயுளினையும் முடித்துவிட முடியும். அத்தனை விஷயங்களை, அறிமுகங்களை அவர் அந்நூலில் சொல்கிறார். இதில் முக்கால்வாசி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சின்ன உதாரணம் அப்பலோனியன் டயனோசியன் என்னும் வாழ்வியல் முறை. இதை இசை இலக்கியம் சினிமா என சகலத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அது என்ன என சொல்கிறேன். இங்கு இலக்கியத்தினை எடுப்போம். ஒரு கதை எழுதுகிறோம் என வைத்துக் கொள்வோம். அதில் ஒரு கம்யூனிச கதாபாத்திரம். ஏழைகளுக்கு உதவும் கதாபாத்திரம், அதிகாரம் மற்றும் பணம் படைத்தவனை பகடி செய்வது போல் அமைகிறது. இப்போது வாசகனுக்கு விடுக்கப்படும் கேள்வி - கம்யூனிச கோட்பாடுகள் சிறிதும் சிதைக்கப்படாமல் கொடுக்கப்பட்டு கரெக்டாக பகடிகள் இருக்கிறது என கதாபாத்திரத்தினை ஆராய்வாதா அல்ல அந்த பகடிகளை ரசிப்பதா ?
 இந்த இரண்டும் வாசகனை பொறுத்த விஷயம் ஆனால் பிரதியோ அல்லது சினிமாவோ இசையோ இதனை வாசகனிடம் திணிக்கிறது. அந்த இரண்டு கேள்விகளில் முதல் கேள்வி தான் அப்பலோனியன் தன்மை அடுத்தது டயனோசியன் தன்மை. இதனை இங்கு சற்று நிறுத்தி குட்டி விஷயம் ஒன்றினை சொல்கிறேன்.

சாரு தன் பிரதியினில் வைக்கும் பிரதான விஷயம் வாசகனை விடுவித்தல் என்பது. இது பின்நவீனத்துவ சார்ந்த கோட்பாடும் கூட. எழுத்தாளன் இது தான் என தன் கதை மூலம் அதிகாரத்தினை வாசகனிடம் திணிக்கக்கூடாது. அதனால் சாருவின் எழுத்துகள் வாசகனுக்கு குறிப்புகள் போல மட்டுமே சென்றடைகிறது. அதனை முழுமை படுத்துவது வாசகனின் விருப்பம் பொறுத்தது.

இப்போது முந்தைய பத்தியில் விட்டதை தொடர்கிறேன். சாரு ஒரு கலைப்படைப்பினை அப்பலோனியன் டயனோசியன் என பகுப்பாய்ந்து பார்ப்பதை நூதனமாக தன் பிரதியில்கொடுப்பதால் கொடுப்பதால் அவரின் படைப்பு இந்த இரு விஷயத்தில் எதில் சென்று நிற்கும் ? இதுவும் ஒரு வகையில் ஒரு அதிகாரம் தானே ?

இப்படி எழுத்தின் சிக்கலில் வாசகன் எப்படியேனும் சிக்கி விடுகிறான். அப்படி ஒரு எழுத்து நடை. நான் சொன்ன விஷயங்கள் வெறும் எடுத்துக் காட்டு மட்டுமே. இன்னும் இது போல் ஏகப்பட்ட விஷயங்கள் அந்நூலில் இருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்திருப்பதால் அதனை பற்றியும் சில விஷயங்கள் சொல்ல நினைக்கிறேன். அது என்னை மிகவும் ஈர்த்த விஷயம். பக்கங்கள் அதிகமாகவும் விலை கம்மியாகவும் இருக்கிறது. முக்கால்வாசி அந்த பதிப்பகத்தில் வரும் நூல்கள் இப்படித் தான் இருக்கிறது. இது என்ன பிற்போக்கு தனமான பேச்சு எனலாம். விற்பனை என வரும் போது இது அதிகமாக கை கொடுக்கும். நூல்கள் இக்காலத்தில் பயணங்களில் தேவையாக இருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக இருக்கிறது. அதற்கு அவர்களின் தேவை கம்மி விலையில் பெரிய புத்தகம். அதனை கிழக்கு செவ்வனே செய்கிறது. உயிர்மை இதனை செய்யவில்லை என்பது என் எண்ணம். கைவசம் இரு பதிப்பகத்திலிருந்து நூல்கள் இருந்தால் ஒப்பிட்டு பார்க்கவும்.

கிழக்கு பதிப்பகத்தில் எந்த நூல் வந்திருந்தாலும் அது கதையா கட்டுரையா என பின்னட்டையில் சிறிதாக போட்டிருப்பர். இந்த முரண்பட்ட படைப்பில் என்ன இருக்கிறது அல்லது எதன் அடியில் வைத்திருக்கிறார்கள் என பார்த்தால் இலக்கியம் என போட்டிருந்தனர். இலக்கியம் எனில். . .  ?

பி.கு : அப்பலோனியன் மற்றும் டயனோசியனை எனக்கு விளக்கியவர் நிர்மல். இது ஒரு களஞ்சியம் என்பது மட்டுமே என் பிரதான வாதம். வாசித்து கருத்துகள் இருப்பின் எனக்கு எழுதுங்கள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக