ரசனை கெட்ட மனிதன்

என் இணையதளத்தில் அதிகம் தமிழ்ப்படங்களை பற்றி எழுதுவதில்லை. அதற்கு நான் தமிழ்ப்படங்களையே பார்ப்பதில்லை அல்லது முழுக்க தமிழ்ப்படங்களை உதாசீனம் செய்கிறேன் போன்ற அர்த்தங்கள் இல்லை. தமிழ்ப்படங்கள் முக்கால்வாசி பேர்களால் பார்க்கப்பட்டு விடுகிறது. அதனை மறுபடியும் எழுதி அறிமுகம் செய்வதில் அர்த்தம் இல்லை. அதே சமயம் எழுதாமலே இருக்கவும் மாட்டேன். எப்போது எழுதுவேன் எனில் தமிழ் சினிமாவில் திரையினை எடுத்து செல்லும் விதம் எப்போது மாற்றம் கொள்கிறதோ அப்போது.

எந்த மாதிரி மாற்றத்தினை நான் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கிறேன் எனபதை சொல்லியிருக்கிறேன் இருந்தாலும் லேசாக சொல்கிறேன். சினிமா என்று வரும் போது அது இரு கூறாக பிரிகிறது. ஒன்று இயக்குனர் சொல்ல வரும் கதை அல்லது கரு. இது இயக்குனர் என்பது கூட சரியல்ல அந்த படத்தின் கதையினை எழுதுபவர். மறொன்று அந்த கதையினை வழிநடத்தும் திறன். இது திரைக்கதை மற்றும் இயக்கத்தினை சார்ந்த விஷயம்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவினை தொடர்ந்து பார்த்துவருபவர்கள் ஒரு சினிமாவினை பார்க்கும் போது இந்த காட்சிகள் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என விசனப்படுவர். இந்த பிரச்சினையினை அநேக இணைய திரை சார் கட்டுரைகளில் பார்க்க முடியும். இது தான் என் பிரச்சினையும். நாம் அநேக நாட்டு சினிமாக்களில் இருந்து கதைகளை காப்பியடிக்கிறோம். ஆனால் கதை சொல்லல் முறையினையோ நாம் கண்டு கொள்வதே இல்லை. உதாரணமெனில் நான் எழுதியிருப்பதில் இருந்து சொல்கிறேன் - நோலன், அரனாவ்ஸ்கி, டாம் ட்வைக்னர் போன்றவர்கள். இவர்கள் செய்யும் முறை பார்வையாளனை கதைக்குள் இழுக்கிறது. நாமோ பார்வையாளனை பார்வையாளன் என்னும் நிலையிலேயே வைத்திருக்கிறோம்.

இந்த முறைகளை காப்பியடிப்பது தவறில்லையா என கேள்வி எழலாம். கேள்வி நியாயமானது தான். என் பதிலோ நூறு சதவிகிதம் தவறில்லை. கோட்பாடுகள் எப்போதுமே பொதுவானது. இலக்கியத்தில் ஜே.கே ரௌலிங் மேஜிகல் ரியலிசத்தில் எழுதியதால் அந்த முறை அவருக்கு மட்டுமே சொந்தமானது என சொல்லிவிட முடியுமா ? அதே போல் தான் இங்கும். இயக்குனருக்கு சாமர்த்தியம் இருந்தால் அந்த கோட்பாட்டினை தன் கதைக்குள் கொண்டு வந்து அதிசாமர்த்தியமாக ஒரு படைப்பினை அளிக்க முடியும்.

இந்த கதை சொல்லல் முரை இருக்கிறதே அது மஞ்சுவிரட்டில் இருக்கும் காளையினை போல. அதனை தங்கள் கதைகளுக்கு ஏற்ப இசைத்து படைப்பினை உருவாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதே அது கிட்டத்தட்ட இயக்குனர் அல்லது திரைக்கதை எழுதுபவருக்கு மரணத்தினை எட்டி பார்ப்பது போன்றது. சிறந்த உதாரணம் inception.

இது மட்டும் தான் எனக்கு முரணாக படுகிறதா எனில் இங்கே படைப்பாளியின் சுதந்திரம் அவர்களின் படைப்புகளிலேயே இல்லை. விஸ்வரூபம் சிறந்த உதாரணம்(இன்னமும் பார்க்கவில்லை அதனால் பார்த்து கருத்துகள் இருப்பின் எழுதுகிறேன்). இப்படி விஷயங்களை அல்லது குறைகளை மறந்து சமீபத்தில் ஒரு முழு மன நிம்மதியினை அளித்த தமிழ்ப் படம் கடல்.


இதில் அப்படி என்ன கண்டேன் ? நிறைய இருக்கிறது. இதன் இயக்குனர் மணிரத்னம் இதுவரை தமிழகத்தில் தலை சிறந்த இயக்குனராக இருந்து வருகிறார். அவரின் படங்கள் மக்களிடம் அதீதமாக சென்று சேரவில்லை. அதற்கு மூலக் காரணம் நம் மக்களின் ரசனையும் அவர் படங்களில் அவர் வைக்கும் மௌங்களும். மௌனம் என்பது ஒரு கலைப்படைப்பிற்கு அதீதமான ஒன்று. ஆனால் அதன் ரசனையினை அதிகம் தமிழகத்திற்கு கொடுத்த பெருமை மணி ரத்னத்திற்கே சேரும். இங்கோ அந்த மௌனம் தூக்கத்திற்கான முதல் படியாக கொள்ளப்படுகிறது.

வெறுமனே நான் தமிழ் மக்களின் மீது குற்றச்சாட்டினை வைக்கிறேன் என நினைக்க வேண்டாம். நானும் அப்படி என் நண்பர்களுடன் இருந்தவன் தான். அதன் பின் தான் மணி ரத்னத்தின் படங்களை ரசித்து பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு இருக்கும் இன்னுமொரு முரணான விஷயமும் சொல்லிவிடுகிறேன். ஒரு திரைப்படத்தினை பற்றி பலர் சொல்லும் விஷயங்கள் அதன் கதையின் பால் மட்டுமே இருக்கிறது. அது எனக்கு எப்போதுமே ஒவ்வாது. காரணம் கதை சார் விஷயங்களை சொல்ல வேண்டுமெனில் எனக்கு சமூக பொறுப்புணர்ச்சி அல்லது அந்த கருவிற்கும் சமூகத்திற்கும் இருக்கும் தொடர்பினை நான் நன்கு அறிந்திருக்க வேண்டும். என் சிற்றறிவிற்கு அது எட்டாக்கனி. அதனால் தான் நான் கதை சொல்லல் முறையினை பார்த்து ஈர்க்கபட்டு அதனை தொடர்ந்து எழுதுகிறேன்.

இந்த படத்தினை பற்றி சொல்ல வேண்டுமெனில் இத்துடன் வெளியான படம் டேவிட். அந்த தலைவலியினை பின் குறிப்பாக சொல்கிறேன். ஃபேஸ்புக்கில் இந்த இரண்டு படங்களையுமே மொக்கை, தூக்கம் தரும் சினிமாக்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தனர். ஆனால் சிலர் நல்ல அபிப்பிராயத்தினையும் சொல்லியிருந்தனர். அதில் குறிப்பாக என் நண்பர் விஜயபாஸ்கர் விஜய் என்பது அவர் பெயர். அவர் சொன்ன விஷயம் கடல் படத்தின் கரு மன்னிக்கப்பட்டவன் மனிதனாகிறான் மன்னிக்கபடாதவன் மிருகமாகிறான்.

இங்கேயே எனக்கு ஆச்சர்யம் ஆரம்பித்தது. இதற்காகவே இப்படத்தினை பார்க்க சென்றேன். படம் முழுக்க முழுக்க கிறித்துவத்தினை சார்ந்த திரைப்படம். கதை என்பது ஒரே வரியினில் முடியக்கூடியது - பாதிரியாராக பயிற்சி எடுக்க வரும் இரு மாணவர்கள். ஒருவர் அரவிந்தசாமி அவர் பணக்கார குடும்பம் நிம்மதி தேடி வருகிறார். மற்றொருவர் அர்ஜுன் அதற்கு நேர் மாறான பிண்ணனி. அர்ஜுன் செய்யும் தவறினை அறிந்து கொண்டவுடன் அரவிந்தசாமியினை பழிவாங்க நினைக்கிறார் அர்ஜுன். இது தான் கதை.

இந்த கதையின் சாரத்தினை வைத்து யாராகினும் ஒட்டு மொத்த படத்தினையும் எடை போட முடியாது. இப்படம் ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மீகத்தினை எப்படியாவது புகுத்துகிறது. புகுத்துகிறது என்பது கூட தவறு ஆன்மீகத்தினை காட்டுகிறது. ஆன்மீகம் கடவுள் போன்ற ஸ்தூலங்களெல்லாம் அதிகார மையங்கள் அல்ல என்பதையும் கடவுள் என்பது மனிதனுக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வெளி என்பதையும் அழகுற இப்படம் சொல்லுகிறது.

இதைத் தாண்டி இப்படத்தில் இருக்கும் கதை சொல்லல் முறை என்னை அசர வைக்கிறது. பொதுவாக மணி ரத்னத்தின் படங்களை கூர்ந்து கவனித்தீர்களெனில் அனைத்து படங்களிலும் ஒரு நீளமான கதையின் உருக்கமான ஆரம்பத்தினை படம் பெயர் போடுவதற்கு முன் சொல்லிவிடுவார். அதன் பின் கதை முதலில் இருந்து ஆரம்பிப்பது போல் இருக்கும். இதிலோ முதல் பத்து நிமிடங்களில் முழுக்கதையினையும் சொல்லிவிடுகிறார். அதன்பின் சம்மந்தமே இல்லாமல் கடல் சார்ந்த மக்களில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து அவனின் வாழ்க்கையினை மட்டும் பின் தொடர்வது போல் சென்று மூலக் கதைக்குள் திரைக்கதை நுழைகிறது. படத்தில் அசத்தும் விஷயங்கள் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு - என்னால் திரையினை தாண்டி எதையும் கவனிக்க முடியவில்லை. இன்பமான சிறையாக மட்டுமே எனக்கு தெரிந்தது. அடுத்து ஜெயமோகனின் வசனங்கள்.

வசனங்கள் எனும் போது தான் அதன் தாக்கத்தினை என்னால் முழுதும் உணர முடிகிறது. ஒரு கதையினை குறிப்பிட்ட ஊரினை மையப்படுத்தி எடுக்கிறோம் எனில் அந்த இடம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த இடத்தினை முழுதும் துயிலுரித்து காட்ட வேண்டியது இயக்குனரின் கடமை. அதில் பெரும் பங்கினை வகிப்பது வசனமும் என்பதை இப்படத்தில் அதிகம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஏ.ஆர் ரகுமானின் இசை எனக்கு எப்போதுமே பிடித்தது இல்லை. கேட்பேன் அதோடு சரி. இந்த படத்தின் பாடல்கள் எனக்கு ஒன்று கூட பிடிக்கவில்லை. ஒரு வேளை படத்துடன் பார்த்தால் பிடிக்குமோ என காத்திருந்தேன். அங்கும் ரகுமான் அவுட். ஆனால் அவரின் பிண்ணனி இசை எனக்கு பிடித்திருந்தது.

இந்த கட்டுரையினை முக்கியமாக எதற்கு எழுத நினைத்தேன் எனில் என்னிடம் கடல் படத்தினை பற்றி கேட்கும் போது நான் மனதில் தோன்றியதை சொல்லிவிடுகிறேன். கேட்பவர்களோ என்னை ஏதோ வேற்றுகிரஹ வாசியினை போல பார்க்கிறார்கள். இது கூட பரவாயில்லை உற்ற நண்பனிடம் சொன்னால் அவனின் பதில் - உனக்கு ரசனை வர வர கெட்டு போயிடிச்சின்ன்னு நினைக்கிறேன். எனக்கு இது தேவை தான்!

பலர் நான் சொல்வதை கேட்டு இது மணிரத்னம் படம் போல இல்ல மணிரத்னம் படம் போல இல்ல என புலம்புகிறார்கள். அவர்களிடம் என் கேள்வி அவருக்கென தனிப்படங்கள் ஏதேனும் இருக்கிறதா ? அப்படி இருப்பின் எப்படி ஐயா புது படங்களை எடுக்க முடியும் ? ராவணன் படம் வந்த போது மணிரத்னம் போன்றவர்கள் அவருடைய இளமை காலத்திலேயே தங்கிவிட்டவர் என இந்த சமூகம் தூற்றியது. அதே நேரத்தில் இப்படி புதுமையான படங்களை எடுத்தால் மணிரத்னைத்தை போல் இல்லையே என போலி குற்றச்சாட்டினை வைக்கிறீர்கள். ஒரு ஆன்மீகப் கதையினை இது போல் ஜனரஞ்சக தன்மையுடன் யாராலும் எடுக்க முடியாது என்பதே என் வாதம்.

இதனை ஒரு கலைப்படைப்பு என்று நான் முன்னிறுத்தவில்லை ஆனால் இதுவரை வந்திருக்கும் திராபைகளிலிருந்து தனித்து இருக்கும் ஒரு முக்கிய படைப்பு.

பி.கு : டேவிட்டினை சொல்கிறேன் என சொல்லியிருந்தேனே. அந்த கதையினை பீஜாய் நம்பியார் எப்படி யோசித்தார் ? எப்படி நடிகர்களுக்கு சொல்லியிருப்பார் ? இரண்டிற்கே எனக்கு கண்ணினை கட்டுகிறதே ஹிந்தியில் மூன்று!(பாவம் ஹிந்திவாலாஸ்) இது பீஜாய் நம்பியார் தமிழுக்கு அளித்திருக்கும் ஓர் உன்னத குப்பை. இப்படத்தினால் ஏற்படக்கூடிய ஒரே ஒரு நன்மை - காதலர்கள் இப்படத்திற்கு தாராளமாக செல்லலாம். கூட்டம் வராது. அப்போது தான் காதலியிடம் .............................................................................................................................................................................................................................................................................................................................................தனித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும்!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக