எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?

எடையில்லா பொருட்கள் இருப்பதை சிந்திக்க முடியுமா ? அல்லது இப்படி பொருட்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? இந்த கேள்விகள்  எனக்கு அந்த guest lecture இனை கேட்டவுடன் தோன்றியது.

நான் கேட்ட முதல் லெக்சரும் இது தான். என் கல்லூரியிலும் எடுக்கிறார்கள் ஆனால் அது ஏதோ வியாபாரம் போல் இருந்தது. அதனால் எனக்குள் ஏற்பட்ட பிரச்சினை எங்கு இவரும் எதனையாவது நம்மிடம் விற்பாரோ என. ஆனால் நினைத்ததை விட ஒரு உன்னத அனுபவத்தினை அவர் தன் விரிவுரையின் மூலமாக சொல்லிச் சென்றார். அவர் யாரென பின் சொல்கிறேன்.

பிரபஞ்சம் எப்படி தோன்றியது ? இந்த கேள்வியினை கேட்டவுடனே பதில் பெருவெடிப்பு(big bang) என்பதாகவே இருக்கும். அதன் அர்த்தம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த ஒரு வெடிப்பில் என அர்த்தம் கொண்டிருப்போம். ஆனால் வெடிப்பு நடக்கவில்லை என அவர் சொன்னார். ஒவ்வொரு பொருளும் எடையினை கூட்டிக் கொண்டே இருக்கிறது. அதே போல் தான் இந்த உலகமும் இந்த பிரபஞ்சமும்.

அடுத்து இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் அணுக்கூட்டத்தினால் அமைந்தது. அந்த அணுக்கூட்டம் பல அணுக்களால் ஆனது. இந்த அணுக்களினுள் பல ப்ரோட்டான்கள் எலக்ட்ரான்கள் இருக்கிறது. இது அறிவியலின் அல்லது இயற்பியலின் வித்து. இந்த வித்தினை இன்னமும் சற்று பெரிது படுத்தி பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் இயற்பியல் வாதிகளால் இரண்டாக பிளவு படுகிறது. ஒன்று பொருள் மற்றொன்று அலை. இதில் நாம் பார்க்கப்போவது பொருளினை பற்றி மட்டுமே. ஒவ்வொரு பொருட்களும் பன்னிரெண்டு அணுவின் பகுதிகளால் ஆகியிருக்கிறது. அது குவார்ட்ஸும் எலக்ட்ரான்களும். இரண்டும் ஆறு ஆறு. இப்போது தான் அணு விஞ்ஞானிகளுக்கு அடுத்த பிரச்சினை வருகிறது.

அதற்குமுன் இப்படி பல பொருட்கள் இணைந்து ஒரு பொருளினை எப்படி உருவாக்குகிறது ? இதன் பதில் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்கென தனிப்பட்ட சில விசைகள் இருக்கிறது. அதன் மூலம் அந்த பகுதிகளெல்லாம் இணைந்து பொருளினை கட்டமைக்கிறது. இந்த முடிவுக்கு வந்த உடன் தான் மேலே குறிப்பிட்ட விஷயம் அவர்களுக்கு சந்தேகமாய் வந்தது. குவார்க்ஸில் ஆறு வகை இருக்கிறது. அதில் ஒரு வகையறாக்கு எடை மிகவும் கம்மியாக இருக்கிறது. மற்றொன்றுக்கு முன்பு சொன்னதை விட மிகப்பெரியதாக இருக்கிறது. ஒரு சுமோ வீரன் முன் பச்சிளம் குழந்தை நின்றால் எவ்வளவு வித்தியாசம் வருமோ அத்தகைய ஒரு வித்தியாசம் விஞ்ஞானிகளின் கண்ணில் பட்டது.

இந்த முரண்பட்ட விஷயங்களை எப்படி காண்பது. எடை என்பது உள்ளார்ந்த சக்தி. அப்படி இருக்கையில் அது எதனை பொருத்து மாறுகிறது ? இந்த கேள்விக்கான விடை ஐன்ஸ்டினிடம் ஆரம்பிக்கிறது. அவர் ஒரு பொருளின் ஆற்றலையும் எடையினையும் இணைத்தார். E=mc2 என்பது அது. ஆக எந்த ஆற்றலினை அவர் சொல்ல வருகிறார் என்பது அடுத்த கேள்வியானது.

நான் சமீப காலத்தில் முகநூலில் எழுதியிருந்த விஷயம் அறிவியல் யூகங்களில் தான் ஆரம்பிக்கிறது என்பது. அதன்படி அறிவியலில் நடந்த ஒரு மாபெரும் யூகம் ஹிக்ஸின் யூகமே. இந்த எடையானது எப்படி வந்தது என அவர் சொன்னது. அணுவின் பகுதிகள் போல போசான் என்றொன்று இருக்கிறது. அது தான் எடையினை தருகிறது என்றார். மேலும் அது துகள் கிடையாது. அது ஒரு வெளி(field).

அது தான் தருகிறது என யூகம் செய்தாயிற்று அது எப்படி எடை வித்தியாசங்கள் இருக்கும் ? இந்த கேள்விக்கான பதிலும் எப்படி எடை கிடைக்கிறது என்னும் முறையில் இருக்கிறது. உதாரணம் எலக்ட்ரானின் எடை அறிவியலில் 9.109×10−31 என கணிக்கப்பட்டுள்ளது. இந்த எடையானது எப்படி அந்த எலக்ட்ரானுக்கு வந்ததெனில் அந்த குறிப்பிட்ட எலக்ட்ரானானது நான் மேலே சொன்ன வெளியுடன் சென்று மோதுகிறது. அந்த மோதலில் அது எடையினை எடுத்துக் கொள்கிறது. முக்கியமான விஷயம் அதுவரை அந்த எலக்ட்ரானுக்கு எடை கிடையாது.

இது எலக்ட்ரானுக்கு மட்டுமல்ல மற்ற அனைத்திற்கும் என்கிறார். அப்படியெனில் அணுவினால் அமைக்கப்பட்டிருக்கும் நமக்கும் இந்த தத்துவம் மிகையாக பொருந்தும். இப்போது அடுத்த பிரச்சினைக்கு செல்வோம். அஃதாவது எடை வித்தியாசம். இதனை விஞ்ஞானிகள் எவ்வளவு ஆற்றலுடன் மோதப்படுகிறதோ அதனை பொருத்தே எடை கூடுதலாகவோ கம்மியாகவோ அமைகிறது என்கின்றனர்.

இதில் ஆச்சர்யகரமான விஷயம் இதை சார்ந்து யாதெனில் இதுவரை நான் சொன்ன அனைத்தும் இந்த பிரபஞ்சத்தின் ஐந்து சதவிகிதமே. மீதி 95 சதவிகிதம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவையும் பொருட்களே. அதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் dark matter. மேலும் அவற்றிற்கென சில ஆற்றல்களும் இருக்கிறது அதன் பெயர் dark energy. இதனை வாசித்து இருளுக்கு எடையும் ஆற்றலும் எப்படி இருக்கும் என விதண்டாவாதம் செய்யக் கூடாது. இங்கே dark இன்மை என்னும் அர்த்தத்தினை கொண்டிருக்கிறது. இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கண்டுபிடிக்கப்படாதது இவை மட்டுமல்ல. இன்னுமொரு விஷயத்தினையும் சொல்லி ஆக வேண்டும். இந்த உலகத்தில் இயற்பியல்வாதிகள் மூன்று பரினாமங்களாக(dimensions) வகுத்தனர். அதன் பின் ஸ்டீபன் ஹாகின்ஸ் காலத்தினையும்(time) ஒரு பரினாமமாக கருத ஆரம்பித்தார். இவை ஐன்ஸ்டினும் நியூட்டனும் ஆரம்பித்ததே. ஹாகின்ஸோ அதனை நிரூபனத்துடன் சொல்லியிருக்கிறார். முடிந்தால் யூனிவர்ஸ் என்னும் ஹாகின்ஸின் ஆவணப்படத்தினை பாருங்கள். முக்கால் மணி நேரத்தில் அழகுர பல விஷயங்களை சொல்லியிருப்பார்.

இதுவரை நாம் பிரதி வடிவில் சில உண்மைகளை பார்த்தோம். இவைகளை நிரூபணம் செய்ய முடியுமா ? இந்த கேள்விக்கான பதில் தான் ஜெனீவாவில் நடக்கும் ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சிக் கூடம் தான் உலகிலேயே பெரிய இயற்பியலின் பொருள் சார்ந்து இருக்கும் ஆராய்ச்சிக் கூடம் என கருதுகின்றனர். அதன் சமீப கண்டுபிடிப்பு தான் ஹிக்ஸ் போசான்.

இப்போது ஆரம்பத்திலிருந்து மறைத்து வரும் உண்மையினை வெளிப்படுத்தலாம் என்றிருக்கிறேன். அது அந்த லெக்சர் கொடுத்தவர் யார் என்பதை. ஜெனீவாவில் நடக்கு ஆராய்ச்சி கூடத்தினை செர்ன்(CERN) என அழைக்கிறார்கள். அங்கு முக்கியமான இடம் சி.என்.எஸ் என்பது. அங்கு பல உலக நாடுகள் இணைந்து பொருளாதார ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஒத்துழைத்து ஆராய்ச்சியினை மேற்கொள்கிறார்கள். அங்கு என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அதனை சமூகத்திற்கு சொல்வதற்கு ஒரு பதவி இருக்கிறது. அதன் பெயர் ஸ்போக்ஸ்பெர்சன். அதற்கு புதியதாய் நியமிக்கப்பட்ட விஞ்ஞானி கைடோ டொனேலி(Guido Tonelli) என்பவரின் விரிவுரை தான் இவ்வளவு நேரம் சொன்னது.

இனிமேல் அவரின் பிரக்ஞையுடன் விரிவுரையினை தொடரலாம். போசான்களை கண்டுபிடிக்க இரண்டு ப்ரோட்டன்களை அதிக வேகத்துடன் அஃதாவது ஒளி வேகத்தில் மோத விட வேண்டும். அப்படி செய்தால் அது பல துகள்களாய் சிதறும். அப்போது அந்த போசானை கண்டுபிடிக்கலாம் என யூகம் செய்தனார். தொடர்ந்து பல மோதல்களினை மேற்கொண்டு வெற்றிகண்டனர். இதற்கு முன் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் கண்டுபிடித்தனர். அதன்பின்னே தான் இந்த முயற்சிகளெல்லாம்.

இப்படியாக ஒரு மணி நேரம் லெக்சரினை அழகுர சொல்லி முடித்தார். உன்னத ஆனுபவம் மட்டுமே என்னிடம் இருந்தது. ஏதோ புண்ணியத்தால் அவரின் ஆங்கிலமும் புரிந்தது. ஒரே தொல்லை அங்கு ஸ்க்ரீனினை சின்னதாக வைத்திருந்தனர். முன் சீட்டுகளெல்லாம் நிரம்பியிருந்தது. நடுவில் தான் எனக்கு ஒரு சீட்டு கிடைத்தது. அதனால் கண் தெரியவில்லை. அந்த ஸ்க்ரீனில் வந்த எழுத்துகள் அனைத்தும் வெறும் கோடுகளாக இருந்தது.(என் பிரச்சினை எனக்கு!)

உலக நாடுகள் இணைந்து செய்யும் இந்த ஆராய்ச்சியில் நாடுகளின் பங்கினை சொல்லிக் கொண்டிருக்கும் போது இந்தியாவின் வரைபடம் வந்தது. பல வருடங்களுக்கு பின் பார்ப்பது போல் பரவசம். வட இந்தியாவில் அந்த செர்னின் சில மையங்கள் இருப்பதை சுட்டி காண்பித்து கடைசியில் தென் இந்தியாவில் ஒன்றுமே இல்லையா என அவர் எங்களை கேட்டார். பதிலா சொல்ல முடியும் ? உரையாற்றும்போது எவ்வளவு அமைதியோன அதே அமைதி அரங்கத்தில் அப்போதும் நிலவியது.

இதற்கு பின் நடந்தது தான் அறிவியல் கொலை. கேள்விக்கான நேரம் என ஒதுக்கினர். ஆனால் அவர்கள் ஐந்து கேள்விகள் தான் என முடிவு செய்துவிட்டனர். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அறிவிலி சமூகத்தின் பிரதினிதிகளை போல் இருந்தது. எனக்கு கேள்வி கேட்கலாம் என சொன்ன உடனேயே கேட்க தோன்றியது. உடனே ஒருவேளை அது மொக்கையாக இருந்தால் என யாரேனும் என் கேள்வியினை கேட்பார்கள் என அமைதியாக இருந்தேன். நான்கு கேள்விகள்  எனக்கு கடுங்கோபத்தினை ஏற்படுத்தியது.

அதிலும் ஆண்டி-நியூட்ரினோ ஒளியினை விட வேகமாக போகிறது என கண்டுபிடித்திருக்கிறார்களே அதனை பற்றிய கருத்து என்ன என. இந்த கேள்வி கேட்கக்கூடாதா என்பதலல இங்கே வாதம். ஒரு மணி நேரம் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதனை விரிவாக ஒருவர் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் சொன்னதிலிருந்து தனக்கு தெரியும் என்பதனை அவரிடமும் சுற்றி இருப்பவர்களிடமும் காண்பிக்க இப்படியும் கேட்க வேண்டுமா ? அந்த பெண்ண தவிர மற்ற சுமாரான கேள்விகள் அனைத்திற்கும் அவரின் லெகரிலேயே பதில் இருந்தது. அந்த பெண்ணுக்கு கூட அவர் சுமுகமான அடியினை கொடுத்தார். இயற்பியல் யூகம் சார்ந்த விஷயம். அங்கே தவறு நடப்பது இயல்பு. மேலும் ஒரு அருமையான வசனத்தினையும் சொன்னார். அதனை வெளியில் மாணவர்கள் எழுதலாம் என வைக்கப்பட்ட பேனரில் எழுத நினைத்தேன். ஏதோ லஜ்ஜை எழுதவில்லை. அந்த வசனம் -
இயற்பியலாளர்கள் தவறு செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.

கடைசியாக தான் பிரதான கேள்வி கேட்கப்பட்டது. அப்போது கூட ஒருங்கமைப்பாளர் கடைசி கேள்வி என சொல்லிவிட்டார். இல்லையெனில் அரங்கத்தில் இன்னமும் நிறைய கேள்விகள் எழும்பியிருக்கும். அந்த கடைசி கேள்வி - ஹிக்ஸ் போசான்ஸ் ஏனைய பொருளுக்கு மோதல் மூலம் எடையினை தருகிறது எனில் அதன் எடை எங்கிருந்து வருகிறது ? அவர் உடனே இதைத் தானே முதலில் கேட்டிருக்க வேண்டும் என அடித்தது போல சொன்னார். மனதில் எனது நன்றியினை அக்கேள்வியினை கேட்டவரிடம் சொல்லிக் கொண்டேன். அதற்கான பதில் போசான்ஸ் தங்களின் எடையினை தங்களுக்குள்ளேயே மோதி உருவாக்கிக் கொள்கிறது - self interaction.

மாபெரும் தத்துவ போக்கினை இந்த விரிவுரை எனக்கு சொல்லியது என்றே சொல்ல வேண்டும். இருத்தலின்மையே இருத்தலினை ஆண்டு கொண்டிருக்கிறது என அருமையாக சொல்லிச் சென்றார்.

அங்கிருந்து வெளியே வரும் போது ஏனோ மௌனி என்னும் எழுத்தாளர் தன் சிறுகதை ஒன்றில் எழுப்பிய கேள்வியே என் நினைவிற்கு வந்தது,
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?

பி.கு : இந்த லெக்சர் ஆரம்பித்தத்லிருந்து நான் வேக வேகமாக குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். என்னை யாரோ கண்காணிப்பது போல் ஒரு சந்தேகம். பார்த்தால் அருகில் இருக்கும் பெண்கள். என்னை போல குறிப்புகள் எடுத்த என் நண்பனுக்கும் இதே அனுபவம். நாங்கள் என்ன குரங்கு வித்தையா காண்பித்துக் கொண்டிருக்கிறோம் என கேட்க தோன்றியது. ஆனால் கேட்காமல் குறிப்புகள் எழுதி கொண்டிருந்தேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக