சின்ன பகிர்தல்

http://www.kimupakkangal.com/2012/11/i-am-krishna-cha-8_22.html
இந்த கட்டுரையினை நான் எழுதி பல நாட்களுக்கு பின்  இப்போது பகிர்வதற்கு காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ் என்னும் நண்பருடன் சின்ன உரையாடலில் இருந்தேன். அதன் முக்கிய விஷயம் கவிதை ஏன் வாசகனுக்கு அதிகம் புரிய மறுக்கிறது ? இந்த கேள்விக்கான என் பதில் நிச்சயம் அது வாசகன் தனக்காக தானே ஏற்படுத்திக் கொண்ட மாயை.

எனக்கு அதிகம் கவிதை வாசிப்பு அனுபவம் இல்லை. ஆனால் சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசி பக்கங்கள் என்னும் நூலினை கவிதை விரும்பிகள் வாசிக்க வேண்டும் என்பதை இங்கு முக்கிய குறிப்பாக் சொல்கிறேன். என்னை பொறுத்தவரை சுஜாதா நல்ல கவிஞரும் கூட. அவர் அதில் ஹைக்கூ கவிதைகளை பற்றி அதிகம் எழுதியிருப்பார். மேலும் வாசகர்களின் கவிதைகளில் கூட பகடிகளை கையாண்டிருப்பார். வாசகனுக்கு இந்த நூலுடன் இருக்கும் மல்யுத்தம் இதன் பக்கங்கள் தான்! பார்த்தவுடன் சராசரி வாசகன் வாங்கமாட்டான். ஆனால் இந்த நூல் எழுதப்பட்ட காலத்திற்கும் இப்போது நம்மை சுற்றி நடக்கும் கால வெளிக்கும் அதிகம் வித்தியாசம் கிடையாது. காணவும் முடியாது.

சின்ன உதாரணம் என்ன எனில் இப்போது இணையதளங்களில் சகட்டு மேனிக்கு எந்த திரைப்படமாகினும் அதில் தவறினை கண்டுபிடித்து தன் அறச்சீற்றத்தினை வெளிப்படுத்த வேண்டும் என தீயாய் ஒவ்வொரு பதிவர்களும் இருக்கின்றனர். ஏன் நான் கூடத்தான்! சுஜாதாவின் காலத்திலோ இணையதளம் இல்லை. முழுக்க முழுக்க பிரதி தான். அதில் அவர் தன் காலத்திற்கும் முன்னோடியாக சிந்தித்தித்திருக்கிறார். ராஜராஜ சோழன் திரைப்படத்தினை ஏன் செட்டில் போட்டார்கள் ? தஞ்சாவூர் அருகில் தான் இருக்கிறது அங்கு போய் எடுக்க என்ன குரைச்சல் என ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். அந்த காலகட்டத்திற்கு சென்று அப்படியொரு பத்தியினை யோசிக்க முடியுமா ? அப்படி ஒரு காலங்கடந்த இப்போது இருக்கும் காலம் மறந்த எழுத்தாளர் சுஜாதா.

அவர் மட்டுமின்றி என்னிடம் பேசிய தமிழ்ச்செல்வன் என்னும் கவிஞர் சொன்ன விஷயம் கூட இப்போது நினைவிற்கு வருகிறது. அவர் அவருடைய காலத்தில் புரட்சி கவிதைகளை எழுதி பிரசுரம் செய்ய எடுத்து சென்றிருக்கிறார். அங்கே இருக்கும் ஆசிரியர்ளோ இது காதல் கவிதைகளுக்கான நேரம் இப்போது இப்படி தரளாமா என கேட்டிருகிறார். மீண்டும் சில காலம் கழித்து காதல் கவிதைகளை எழுதி எடுத்து சென்ற போது காலம் மாறி புரட்சி கவிதைகள் நிரம்பி வழிந்திருக்கிறது. பாவம் புரட்சியும் கவிதையும் அதிகம் அவர் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறது!

இது சற்று நன்கு நோக்க வேண்டிய விஷயம் ஏன் எனில் காலத்திற்கு ஏற்ப கவிதைக்கருவின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கிறது அல்லது மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியெனில் இப்போது கவிதைக்கான தேவை என்ன ? இந்த கேள்விக்குறி கவிதைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலக்கியத்திற்கே!

அனைவருக்கும் தெரிந்த விஷயம் வாசிப்பு என்பது மீடியாவின் ஊடுருவலால் உருக்குலைந்ந்து விட்டது. எதுகை மோனை வார்த்தை குரைத்தல் அர்த்தத்தினை உள்ளடக்கி பிரதியினை சிறிது படுத்துதல் போன்றவை சிலருக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. உரைநடை வகை கவிதைகள் தான் எளிமையாக சென்று சேர்கிறது என்பது என் புரிதல்.

இதில் தான் எங்களின் உரையாடலே அமைந்திருந்தது. கவிதை அனைவருக்கும் புரிய வேண்டும். வாசித்து பல மாதங்கள் ஆனாலும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இதில் எனக்கு சற்றும் உடன் பாடில்லை. கவிதை வாசிக்கும் போது சுவை அனுபவம் மொழியின் ஆளுமை என அனைத்து விதத்திலும் ஒரு சிறையினை எழுப்ப வேண்டும். ஆனால் முடித்த உடன் அதன் நினைவு இருத்தல் கூடாது. மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். அப்படி செய்யும் போது புதியதோர் அனுபவம் வாசகனுக்கு கிடைக்க வேண்டும். இன்னமும் சுருங்க சொல்ல வேண்டுமெனில் ஒரே அமைப்பு ஆனால் பல பரிமாணங்கள் ஒவ்வொரு பார்வையிலும் கொடுக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட லிங்கினில் நான் நிர்மலுடன் கொண்ட உரையாடல்கள் கட்டுரையாய் இருக்கிறது. கட்டுரையோ ஆய்வுக் கட்டுரையினை போல் இருக்கிறது. மீள்வாசிப்பில் தான் எனக்கே தோன்றியது. சின்ன பகிர்தல். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக