Argo - 2012

இப்போது ஆஸ்கருக்கான நேரம். இதுவரை நான் ஆஸ்கர் ஏதேனும் திரைப்படம் வாங்குகிறது எனில் அதன் பெயரினை தெரிந்து கொள்வேன். வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டால் பதிலளிக்க. இந்த முறை ஏதோ ஒருவித மும்முரம் என்னிடம் இருக்கிறது. அதற்கு குட்டியாக ஒரு காரணமும் இருக்கிரது. அது யாதெனில் அந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படத்தினை நான் பார்த்துவிட்டேன். அது - லெஸ் மிஸரெபில்ஸ். இந்த படத்தினால் எனக்கு என்ன நடக்கும் எனில் அப்படி அந்த படம் ஏதேனும் விருதினை பெற்றுவிட்டால் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமே!

இதில் இன்னுமொரு விஷயம். என் வகுப்பில் இருக்கும் சில நண்பர்கள் லிங்கன் படத்திற்கு தான் விருது கிடைக்கும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த படம் இப்போது கோயமுத்தூரில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னால் தான் பார்க்க முடியவில்லை. பணப் பற்றாக்குறை தான் வேறென்ன! ஆனால் அந்த படம் மோசமான ப்ரிண்டில் என்னிடம் உள்ளது. இதனுடன் தான் அர்கோ படத்தினையும் வாங்கினேன்.

இந்தப்படம் கோல்டன் குளோபில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதினை வாங்கியது. இதனாலேயே இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என அறிந்து கொள்ள பார்க்க ஆசைப்பட்டேன். அப்போது தான் பெரிய கேள்வி தோன்றியது.

இதனை எந்த வகைப்படம் என்பதனை முதலில் சொல்ல வேண்டும். இதுவரை நான் பார்த்திராத அரசியலினை ஜனரஞ்சகமாக பேசும் ஒரு திகில் படம். செய்தித் தாள்களில் அநேகம் முறை குறிப்பிட்ட படங்களுக்கு டிராமா என போட்டிருப்பர். அது என்ன என எனக்கு தெரியவே தெரியாது. பின் தான் அதனை புரிந்து கொண்டேன். கதைகளுக்குள்ளேயே முன் முடிவுகள்  அமைக்கப்பெற்று அதன் படி கதாபாத்திரங்கள் நடந்தால் அது தான் டிராமா.

இந்தப்படமும் அதே ரகம் தான். அடுத்து ஒரு குட்டி விஷயத்தினையும் சொல்கிறேன். நான் சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்டுகளை பற்றி சொல்லியிருக்கிறேன். அதில் இன்னுமொரு விஷயத்தினை சேர்ந்த்தே ஆக வேண்டும். நிறைய திரை விமர்சனங்களில், குறிப்பாக தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதில் அவர்கள் - இந்த படத்தில் வரும் காட்சிகள் சீட் நுனியில் அமர வைக்கிறது என சொல்லியிருப்பர். இதன் அர்த்தம் என்ன என அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை எப்படி எடுப்பர் ? இந்த காட்சிகள் உண்மையில் நீளமானவையாக இருக்கும். சின்ன உதாரணம் கார் அல்லது பைக் ரேஸ் வில்லனை ஹீரோ கொல்வதற்கு துரத்துவது ஹீரோயினை காப்பாற்ற துரத்தும் ஹீரோ இத்யாதி இத்யாதி. இந்த காட்சிகளில் உண்மையில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் இதற்கு உயிரினை கொடுப்பது இசையும் கேமிராவும்.

கேமிராவில் காட்டப்படும் வேகம் திடிர் திடிர் என கேமிராவினை மாற்றுவது பார்வையாளனுக்கு மும்முரத்தினை அளிக்கிறது. வேகம் என்பதனை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும் அது என்ன கேமிராவினை மாற்றுவது ? சின்ன காட்சியினை யூகம் செய்து கொள்வோம். ஹீரோயினை வில்லன் கடத்தி வைத்திருக்கிறார். ஆனால் எங்கு என ஹீரோவிற்கு தெரியவில்லை. வில்லனை அடித்து உதைத்து உண்மையினை வாங்க வேண்டும். வில்லன் ஓடுகிறான் ஹீரோ துரத்துகிறார். ஓடும் போது கண்டிப்பாக கூரைகள்/ஓட்டுவீடுகள்/கான்கிரீட் வீடுகள்/தொழிற்சாலை என எதன் மீதாவது தான் துரத்திக் கொண்டிருப்பார்கள். அப்போது கேமிராவினை ஹீரோவிற்கு முன், பின் அதே போல் வில்லனுக்கு முன் பின், இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு இடத்தில், ஹீரோவின் பார்வையிலிருந்து, என ஒவ்வொரு பார்வையாக இயக்குனர் கேமராவினை மாற்றுவார். அப்படி மாற்றும் போது இரண்டு நிமிடத்தில் நடக்கவிருக்கும் செயலினை நாம் ஐந்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். அந்த பிரக்ஞையோ நமக்கு அறவே இருக்காது. இதுதான் கேமிராவின் பலம். நான் சொன்னது ஒரு சின்ன துரத்தல் தான். படத்தின் கதையே அப்படி இருப்பின் ?

இந்த படத்தின் கதையும் அப்படித் தான். ஈரானில் நடக்கும் அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து மக்கள் ஒரு புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அதுவும் அமேரிக்க தூதரகத்தில். அங்கிருக்கும் அனைவரும் அம்மக்களிடம் பணயக்கைதிகளாக சிக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒரு ஆறு பேர் தப்பித்து கனடா தூதரகத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களும் ஒருவகை பணயக்கைதிகளே. காரணம் அவர்களால் தங்களின் அடையாளத்தினை வைத்துக் கொண்டு மீண்டும் தப்பிக்க முடியாது. இவர்களை காப்பாற்ற ஒரு ப்ளானினை முன்வைக்கிறார் கதாநாயகன். அந்த ப்ளான் என்ன ? அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. இந்த ப்ளான் என்ன என்பதற்கு இரண்டு க்ளுக்கள் தருகிறேன். ஒன்று சினிமா. மற்றொன்று இந்த பத்தியிலேயே இருக்கிறது.

இது போன்ற கதையமைப்பினை கொண்ட சினிமாவினை ஹீரோயிசம் கொண்டு பெரும் பெரும் சண்டைக்காட்சிகளை வைத்து அந்த ஆறுபேரினை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இந்த படத்திலோ அது எதுவும் இருக்காது. அப்படி இருப்பினும் கடைசிவரை மும்முரத்தினை இயக்குனர் அழகுர கொடுத்திருக்கிறார். அதிலும் இப்படத்தில் இருக்கும் கேமிரா முழுக்க முழுக்க பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது. அதிலும் க்ளைமாக்ஸ். அதனை போன்ற சாதாரண காட்சி எதுவும் இருக்காது. ஆனால் அது கொடுக்கும் விறுவிறுப்பு சொல்லி மாளாது. கண்டிப்பாக இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஆரம்பத்தில் இப்படம் என்க்குள் ஒரு கேள்வியினை எழுப்பியது என சொல்லியிருந்தேன். அது யாதெனில் ஏன் இப்படத்திற்கு சிறந்த படம் என்னும் விருதினை அளித்தனர் என்பதே. விருது என வருவதால் லெஸ் மிஸரெபில்ஸ் என்னும் படத்துட ஒப்பிட வேண்டியிருக்கிறது. இந்தப்படம் கதையமைப்பினுள் மட்டுமே வித்தியாசத்தினை கொண்டிருக்கிறது. ஆனால் லெஸ் மிஸ்ரெபில்ஸ் படமோ இதுவரை சொல்லப்படாத முறையில் கதையினை சொல்லியிருக்கிறது. அப்படி இருக்கையில் அதற்கு தானே சிறந்த படம் என்னும் விருதினை அளித்திருக்க வேண்டும் ? விருதுகள் என்றாலே சிறந்த படத்திற்கு கதையமைப்பினை வைத்து தான் தருகிறார்களா ? இது மட்டும் ஆம் எனில் இந்த விருதுகள் எனக்கு வருத்தத்தினை தான் அளிக்கிறது. பதில் சரியாக தெரியாததனால் கேள்வியுடனேயே இப்பதிவினை முடிக்கிறேன். 

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

slawake said...
This comment has been removed by the author.
slawake said...

இந்த திரைபடத்தில் அமெரிக்கர்களை அதில் புத்திசாலிகளாக கான்பிதிருப்பதால் தான் இதற்க்கு விருது என்பது என் கருத்து

Post a comment

கருத்திடுக