12 Angry Men - 1957

என்னை முழுமையாக பிரமிப்பில் ஆழ்த்தியது இப்படம். இது 1957 ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. அப்படியெனில் இப்போது இருக்கும் சினிமாக்களை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் அந்த கறுப்பு வெள்ளை படங்கள் முக சுழிப்பினையோ அல்லது போர்த்தன்மையினையோ தர அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மூலக்காரணம் வசனங்கள்.

நான் தமிழ்ப்படங்களைக் கொண்டு விளக்கப்பார்க்கிறேன். கறுப்பு வெள்ளை படங்களினை இப்போது ஏன் இளைஞர்கள் பார்க்க மறுக்கிறார்கள் எனில் இரண்டு விஷயங்கள் தான் ஒன்று வசனங்கள் மற்றொன்று பாடல்கள். சிவாஜியின் கறுப்பு வெள்ளை படங்களினை பார்த்தால் அதிகம் வர்ணனைகள் மேலும் தமிழ் இப்போது போல் கலங்கமின்றி இருக்கும். இதுவே பெரிய பிரச்சினை. அவருக்கும் முன் சென்றால் தியாகராஜ பாகவதர் போன்ற காலத்தில் முழுக்க இசையாக இருக்கும். அப்போது கதையமைப்பினில் மட்டுமே நம்மால் சிறப்பம்சத்தினை காண முடியும். அதே திரை கட்டமைப்பு ? இது சந்தேகத்திற்குரியது. சந்தேகத்திற்குரியதெனில் அது வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம். இப்போது எழுதவிருக்கும் இந்தப்படமும் மேலே சொன்ன எதற்கும் சற்றும் குறையாமல் அப்படியே இருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை திரைப்படம் தான்.


மேலும் ஒரு விஷயத்தினை சொல்ல மறந்துவிட்டேன். அது நாடகத்திலிருந்து சினிமா வந்த காலம். அதனால் மக்களும் அந்த நாடகத் தன்மையினை கொஞ்சம் எதிர்பார்ப்பார்கள். நாடகத் தன்மை என்பது நடிப்பு தான். வேறு எதுவும் இல்லை. அதனால் தான் என் நண்பர்களில் சிலர் கூட சிவாஜி கணேசனின் நடிப்பினை ஓவர் ஆக்டிங் என சொல்கிறார்கள். நிச்சயம் கிடையாது. திரைத் துறையின் பரிணாமத்தில் அது ஒரு நிலை.

இப்போது இந்த படதிற்கு வருவோம். இது ஏற்கனவே இதே பெயரில் அமேரிக்காவில் நாடகமாக வந்தது. பின் இதனை படமாக்கியிருக்கிறார் ஹென்றி ஃபோன்டா. இதன் கதை யாதெனில் மகன் அப்பாவினை கொன்றுவிட்டான். இந்த கொலையினை பன்னிரெண்டு வக்கீல்கள் விசாரித்து நீதிபதியிடம் முடிவினை சொல்ல வேண்டும். அதனை அவர் பரிசீலிப்பார். இந்த பன்னிரெண்டு பேரும் ஒரு அறையில் அமர்ந்து அதனை விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். அதில் பதினோரு பேர் அவர் தான் குற்றவாளி என்கின்றனர். மீதம் இருக்கும் ஒருவனின் மூளை மட்டும் ஏன் அந்த சிறுவனை குற்றமற்றவன் என சொல்கிறது ? பதினோரு பேரிடம் இல்லாத எந்த சாட்சி அவனிடம் இருக்கிறது ? அவனால் ஜெயிக்க முடிகிறதா என்பதே மீதக்கதை. மீதக்கதை கூட இல்லை முழுக்கதையும் அது தான்.

இப்படத்தின் ஆச்சர்யகர விஷயம் யாதெனில் இதில் லொகேஷன் என்பதெல்லாம் கிடையாது. படம் ஒன்றரை மணி நேரமெனில் பத்து நிமிடத்தினை தவிர்த்து மீதம் அனைத்தும் ஒரு அறை மட்டுமே. அந்த பத்து நிமிடங்கள் யாதெனில் ஒரு காட்சியில் கோர்ட்டினை காண்பிப்பார், மற்றது கோர்டினுள் பன்னிருவரும் நுழைவதும் போவதும். சட்டம் சம்மந்தமாக எடுக்கப்பட்டிருக்கும் ஏகப்பட்ட படங்களை நாம் பார்த்திருப்போம். மேலும் சட்ட வல்லுனர்களின் முக்கிய கோட்பாடு(இதுவரை காட்டப்பட்ட திரையில்) தான் சார்ந்திருக்கும் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பது. அதே விஷயம் இன்னமும் அழுத்தமாக இங்கே காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தப்படத்தில் இயக்குனருக்கு பெரிய விஷயம் சுமத்தப்பட்டிருக்கிறது. அது என்ன என சொல்கிறேன். இப்படத்தில் லொகேஷன் இல்லை அந்த அறையில் நடக்கும் விவாதத்தினை தவிர வேறு எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது பார்வையாளனை படத்தின் இறுதிவரை அமர வைக்கக்கூடிய விஷயம் இரண்டே இரண்டு தான். ஒன்று நடிப்பு மற்றொன்று வசனம்.

முதலில் நடிப்பினை பார்ப்போம். நடிப்பு என வரும் போது அங்கே கேமிராவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது எந்த விதத்தில் காண்பிக்கப்படுகிறதோ அதனை பொறுத்து தான் நடிப்பின் தாக்கம் பார்வையாளனை அடைகிறது. இந்த படத்திலோ பன்னிரெண்டு பேரும் வக்கீல்கள். அப்படி இருக்கும் போது அனைவரும் தங்களின் தரப்பினை நியாயப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அதனை நிலை நாட்டுவார்கள், பகிரங்கமாக. மேலும் கதைப்படி இந்த பன்னிரெண்டில் ஒருவருக்கு ஏனையோர் எதிர் கருத்துகளை கொண்டிருக்கின்றனர். அதனால் நிச்சயம் சமரச உணர்வினை கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். ஒன்று முடிந்த வரை தன் பக்க நியாயத்தினை நிலை நிறுத்த போராடுவது. மற்றொன்று தான் செய்தது தவறு என எதிர் பக்கத்தில் சாய்வது. இந்த இரண்டு வழிகளிலும் உணர்ச்சிகளின் விளையாட்டு அதிகமாக இருக்கிறது. முதல் தரப்பில் கோபம். அவன் சொல்வது தவறு, தான் சொல்வது தான் சரி, அவன் இதனை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்னும் உணர்விலேயே கருத்துகளை முன்வைப்பது. இரண்டாவதில் குற்றவுணர்ச்சி அல்லது எதிர்தரப்பிலிருந்து தன் மனம் உணர்ந்த சந்தேகம். இதனை empathy என்றும் சொல்லலாம். அஃதாவது அவர்களின் நிலையில் இருந்து விசாரிப்பது. இதனை காட்டியிருக்கும் விதம் எழுந்து கைதட்ட வேண்டும் என்பது போல இருந்தது.

நடிப்பினை விட்டு இப்போது வசனத்திற்கு சென்றால் சரியாக இருக்கும் என்பது என் யூகம். ஏனெனில் கடைசியாக empathy என சொல்லியிருந்தேன் அல்லவா அதனை தான் இப்படம் ஒவ்வொரு வசனத்திலும் அதிகம் காண்பிக்கிறது. அதனை reasonable doubts என்கின்றனர். அஃதாவது ஒருவனை சிலர் குற்றவாளி என சொல்லிவிட்டனர். ஆனால் அவனை நிரபராதி என நிரூபிக்க போராடுபவர்களின் வாதம் ஏற்கும் வண்ணம் அமைந்து அதே சந்தேகம் இவர்களிடமும் தோன்றினால் அது தான் reasonable doubts. இதனை அழகுற கதையின் கட்டமைப்பில் செய்திருக்கிறார் இயக்குனர்.

போட்டோவில் இருப்பவர் தான் லீ.ஜே.காப். இவரின் பாத்திரம் அத்தனை தூரம் ரசிக்கும் அளவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய வாதமே சரியானது என்பதை நிரூபிக்க எத்தனையோ முறைகளை கையாள்கிறார். ஒரு இடத்தில் கூட அவன் தான் குற்றவாளி என்பதிலிருந்து நழுவாமல் இருக்கிறார். ஆச்சர்யமான விஷயம் யாதெனில் அந்த விவாத சபை இரண்டாக இருக்கிறது அல்லவா அதில் அவன் தான் குற்றம் செய்தவன் என்பதனை கட்சியினை போல நம்மை உணரச் செய்வது இவரின் கதாபாத்திரம் தான். இவருக்காகவே இப்படத்தினை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அத்தனை நல்ல நடிப்பு.

எனக்கு இப்படம் அதிகம் பிடித்தமைக்கு காரணம் கட்டமைத்தல் என்பது எனக்கு மிக மிக பிடித்த விஷயம். இதன் கதையே அப்படித் தான் இருக்கிறது. இங்கு குற்றவாளி-நிரபராதி என்னும் விஷயத்தினை காட்டிலும் அவன் குற்றம் செய்யாதவனாகவும் இருக்கலாம் என்பதையே இப்படம் அதிகம் முன்வைக்கிறது. தற்செயலும் யூகங்களும் கூட சில விஷயங்களை முடிவு செய்வதற்கு முன் தேவையாக இருக்கிறது என்பதை இப்படம் ஆரம்பத்திலிருந்து சொல்கிறது.

இப்படத்தினை அனைவரும் பாருங்கள். ஒரு இடத்திலும் தூங்கவைக்காத உணர்வு சட்டம் கோபம் ஈகோ  மூளை மாற்று சிந்தனை போன்ற ஒரு கதை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக