the reader - 2008

திரைக்கலையில் இருப்பதிலேயே கடினமானதாக நான் உணர்வது காதல் படங்களை எடுப்பது. நான் இயக்குனர் அல்ல இருந்தும் அந்த உணர்வு எனக்குள் பல காலமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி காதல் படங்களை எடுப்பதில் பிரச்சினை யாதெனில் அது மற்ற படங்களை போல் இருத்தல் கூடாது. இது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயம் அல்ல. உட்கார்ந்து ஒரு காதல் கதையினை திரைக்கதையுடன் யோசித்தால் கூட அந்த காட்சி ஏற்கனவே எடுக்கப்பட்டது போல் தான் இருக்கும்.

இவையனைத்தினையும் மீறி எடுக்கப்படும் படங்கள் தான் மக்கள் மத்தியில் வித்தியாசமான காதல் படம் என பெயர் எடுக்கிறது. தமிழில் கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் கூட அநேக காதல் படங்கள் ஒரு கோட்டினை ஒத்தியே இருக்கும். அல்லது காதல் படங்கள் என்ற போர்வையில் சண்டைப்படங்களாக இருக்கும்! சமகாலத்தில் முழுக்க முழுக்க காதல் படங்களே இல்லையா ? கொஞ்சம் பின்னால் சென்று பார்த்தால் நிறைய காதல் படங்கள் கிடைக்கிறது. அதே இந்த சமகாலம் என வரும் போது கேள்விக்குறியில் வந்து தான் நிற்கிறது.

அநேகம் பேருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், 3 என பிடித்திருந்தது. நான் கூட 3 படத்தினை சிலாகித்து எழுதியிருக்கிறேன். இப்போது அதனை பார்த்தால் கொட்டாவி மட்டுமே வருகிறது!

ஆங்கிலம் படத்தினை பற்றி எழுத இருக்கும் இடத்தில் எதற்கு தமிழ்ப்படம் எனில் அதனை மீடியமாக கொண்டு தான் நான் சொல்ல வரும் விஷயத்தினை என்னால் வாசகனிடம் கொண்டு சேர்க்க முடியும். அதன் படி சொல்ல இருக்கும் விஷயம் காதல் படங்களில் இருக்கும் மீடியம். காதல் படங்களை அணுகுவதற்கு முன் எனக்கிருந்த ஒரு பெருத்த சந்தேகத்தினை வீக்கிபீடியாவில் தேடி அறிந்து கொண்டேன். காதலுக்கும் ரொமான்ஸிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தினை. காதல் காமத்துடன் கலந்து திரையிலோ அல்லது புனைவிலோ காட்டப்பட்டால் அந்த உணர்வின் பெயர் தான் ரொமான்ஸ்(யார் தான் கண்டுபிடித்தானோ!). வெறும் காதலை தொனிக்கும் படங்கள் காதல் படங்கள். இந்த ரீடர் எந்த வகை எனில் ரொமான்ஸ்.


சொல்ல வந்த விஷயத்தினை விட்டு வெளியே சென்று விட்டேன். அஃதாவது குறிப்பிட்டு இது போன்ற உணர்வுசார் படங்களினை முழுக்க முழுக்க அந்த உணர்வினை மட்டுமே வைத்து எடுக்க பலர் முயற்சித்திருக்கிறார்கள்(நான் பார்த்தவரை). ஆனால் அவர்களால் வெளியிலிருந்து ஒரு மீடியத்தினை இருவரின் காதலுக்குள் நுழைக்காமல் எடுக்க முடியவில்லை.

இதை வேண்டுமென்றால் இப்படியும் சொல்லலாம். இருவரிடையே காதல் ஏற்படுவதற்கு ஏதேனும் ஒரு இடம் அல்லது செயல் காரணியாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அது அப்புனைவின் கடைசி வரை தொடர்ந்து வருகிறது. அப்படி தொடரும் பட்சத்தில் கதையின் கரு காதலுடன் பங்கு கொள்கிறது. நான் எழுதியிருக்கும் gloomy sunday கூட காதல் படம் தான் ஆனால் அங்கு கதைக்கருவுடன் நாஜிகளும் இசையும் பங்கு கொள்கிறது. ஆனாலும் படத்தின் பார்வையாளனான எனக்கு காதலின் உணர்வினை அளிக்கிறது. அப்படியெனில் முழுக்க முழுக்க காதலினை மட்டுமே பிரதானமாக எடுத்தால் படம் எப்படி இருக்கும் ???

இந்த ஆசை நீண்ட காலமாக என்னுள் இருந்து வருகிறது. இதில் இன்னமும் ஒரு கஷ்டம் இருக்கிறது. எடுத்துக் கொள்ளும் மீடியத்தில் காதலினை தொனிப்பது. gloomy-sunday - இன் மீது என் பார்வை. க்ளிக்கி வாசிக்கவும். இப்படத்தில் காதல் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் அந்த குறிப்பிட்ட இசையும் படம் கடைசியினை நெருங்க நெருங்க நாஜிகளுடன் இணைந்து காண்பிக்கப்படுகிறது. அப்படி இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள விஷயம் வாசகத்தன்மை.

கதை என சொல்ல வேண்டுமெனில் மழைகாலத்திலிருந்து வெயில் காலம் வரை அவன் மனதினை கொள்ளையடித்த பெண். அந்த தாக்கத்தின் நீட்சியாக செல்லும் கதையே முழுப்படம்.

இப்படத்தில் மைக்கேல் ஹான்னா இவர்கள் இருவரின் காதலையும் நிரூபிக்கும் ஒரே விஷயம் வாசித்தல். மைக்கேலுக்கு கொடூர காய்ச்சல் வருகிறது. அது தெரியவரும் நாளுக்கு முன் தான் ஹான்னாவை சந்திக்கிறான். மூன்று மாத காலத்தில் குணமடைந்தபின் மீண்டும் அவர்களின் சந்திப்பு தினம் தொடர்கிறது. அவனுடைய வயது 15. அவளுடைய வயதோ 40 ஐ சுற்றி. இந்த 15-40 ஜோடியின் காதல் எப்படி இருக்கும் ? அதை யோசிப்பதற்கு முன் அவர்களினை பற்றியும் சொல்லிவிடுகிறேன். 40 வயதில் அவளோ தனியாக இருப்பவள். 15 வயதில் அவளின் மீது சொல்ல முடியாத ஒரு ஆசை நாயகனிடம் இருக்கிறது. அது என்ன என கடைசி வரை அவனாலேயே சொல்ல முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை காதல் எனில் தினம் அவர்களுக்கு இடையில் நடக்கும் கலவியும் அதன் பின் அவன் வாசித்து காண்பிக்கும் நூல்களும் தான். காலம் செல்ல செல்ல அவளுக்கு அந்த வாசிக்கும் பழக்கம் பிடித்து விடுகிறது.  இதன் பின் சொல்லாமலேயே அவள் அவனை பிரிந்து சென்று விடுகிறாள்.

கதை ஜெர்மனியில் நடக்கிறது. அங்கு எப்படியோ ஹான்னா பெரும் பிரச்சினைக்குள் சிக்கி ஆயுள் தண்டனை அடைகிறாள். அதன்பின் ஜெயிலில் அவளுக்கும் மைக்கேலுக்கும் இடையில் நடக்கும் காதல் பரிபாஷைகள் உண்மையில் உருக்கும் வண்ணம் இருக்கிறது.

நாம் ‘மைம்’ என்னும் விஷயத்தினை அறிந்திருப்போம். அது யாதெனில் சொல்ல வரும் விஷயத்தினை வசனங்கள் ஏதுமில்லாமல் காட்சிகளின் அமைப்பிலேயே சொல்வது. ஊமைப்படங்கள் எனவும் சொல்லலாம். இந்த ஊமைப்படாங்களிலிருந்து கொஞ்சம் மருவி வந்தது தான் சினிமா. அஃதாவது வசனங்களை வைத்து. இது என் கணிப்பு. ஆனால் இந்த வசனங்களை வைத்ததனால் நம்மால் வெறும் காட்சிகளினால் மட்டும் எதையேனும் சொல்ல முடியுமா என்பதை யோசிக்கவே மறந்துவிட்டோம். இப்படத்திலோ வசனங்களும் அதன் மூலம் உணர்ச்சிகளை அளிப்பது வெறும் நடிப்பின் மூலம் பல வசனங்களை நமக்குள்ளே தோன்ற வைப்பதும் இக்கதையில் படு சாதாரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட சொல்ல வேண்டுமெனில் ஈகோவினை சொல்லும் காட்சி. காதல் படங்கள் என்றாலே அங்கு ஈகோ இருக்கத்தான் செய்யும். ஆனால் இதில் காட்டப்படுவது முழுக்க இதுவரை பார்த்திராத வகையில் இருக்கிறது. சின்ன உதாராணம் சொல்ல வேண்டுமெனில் ஹான்னா எழுத படிக்கத் தெரியாதவள். அவளுக்கு ஆரம்பத்திலிருந்து கதைகளை வாசிப்பவன் மைக்கேல். சிறையில் அவனது கதை சொல்லும் டேப்புகளையும் நூல்களையும் வைத்து வார்த்தைகளை அறிந்து கொள்கிறாள். அவனுக்கு இரண்டு மூன்று வரிகளில் கடிதம் எழுதுகிறாள். அவள் எழுத படிக்க தெரிந்து கொண்டாள் என அறிந்தவுடன் தன் காதல் அவளிடமிருந்து போனதோ என ஈகோ இவனுக்குள் வளர்கிறது. அதை அவள் அறிந்து கொண்டவுடன் தான் வாசிக்க ஆரம்பித்ததில் என்ன தவறு என அவளுள் ஈகோ ஆரம்பிக்கிறது.

மேலே சொன்ன ஈகோவாகட்டும் எந்த காட்சிகளாகட்டும் வசனம் என தனியே இருந்தாலும் அவர்களின் நடிப்பின் மூலம் சில வசனங்கள் பார்வையாளனுக்கு கிடைக்கிறது. உண்மையில் என்னை இப்படம் பிரமிப்பூட்ட வைக்கிறது.

இன்னுமொரு காட்சி யாராகினும் உருக வைக்கும் காட்சியமைப்பு என்றே சொல்ல வேண்டும். அவள் வாசித்ததினால் தான் தன் காதல் இப்படி ஆனது என தன்னிடம் இருக்கும் நூல்களையனைத்தும் அடுக்கி அதன் மீது நிற்பது போல் ஒரு காட்சி. கதாநாயகியின் காலுக்கடியில் ஒடிசி. நான் இங்கே ஒற்றை வரியில் சொல்லி முடித்துவிட்டேன். ஆனால் படத்தில் இந்த காட்சி சொல்லும் கதைகள் அநேகம் என்றே உள்ளுணர்வு சொல்கிறது.

நான் இப்படத்தினை முழுதாக சொல்லவேயில்லை. கொஞ்சமாக சொல்லியிருக்கிறேன். இவை வெறும் குறிப்புகள். அந்த புத்தக காட்சி கூட நான் அனுபவித்ததை முழுதாக சொல்லவில்லை. சொல்லிவிட்டால் எங்கே வாசகனின் படம் பார்க்கும் இன்பம் போய்விடுமோ என்னும் எண்ணத்தில் தான். இப்படம் ஒவ்வொரு காட்சியிலும் என்னை கவர்கிறது. முக்கியமாக ஒவ்வொருவரின் நடிப்பும். மறக்காமல் இப்படத்தினை பாருங்கள். ஒரு வாசிப்பும் காதலும் ஒரே கோட்டில் நகர்ந்து நம்மையும் அழகான ஒரு நதியில் குளிப்பாட்டியதை போன்ற ஒரு உணர்வினை தரும்.

மொத்தத்தில் நான் பார்த்ததில் அருமையான காதல் படம் - the reader.

படத்தின் டிரைலர் - க்ளிக்கி பார்க்கவும்

Share this:

CONVERSATION