Perfume: The Story of a Murderer - 2006

இந்த படத்தினை நேற்று முன் தினமே நான் பார்த்துவிட்டேன். இரவு வெகுநேரம் கழித்து தான் படம் முடிந்தது. அதன்பின் காலை எழுந்திருக்க வேண்டுமே என தூங்கி இன்று எழுதலாம் என முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் les miserables படத்தினை எழுத வேண்டியதாய் போயிற்று.

இந்தப்படத்தினை பற்றி நான் அறிந்த போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். யாராகினும் இந்த படத்தின் பேச்சினை எடுத்தால் நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள். இந்த யாராகினும் என்பது வீட்டில் பதினொன்றாம் படிக்கும் போது தனியறை கொடுக்கப்பட்ட என் நண்பர்கள் அல்லது அம்மா அப்பா இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் இருக்கும் என் நண்பர்கள். பொறுமை தாங்காமல் ஒரு நாள் அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என கேட்டுவிட்டேன். அவர்கள் காமக் கதைகளாக சொன்னார்கள். அப்போது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தது அக்கதைகள். இப்பொது அஃதாவது படம் பார்த்த போது அவர்கள் சொன்னது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.

சமீபத்தில் நான் எழுதிய கட்டுரை எக்ஸைலும் கறுப்பு அன்னமும். இந்த கடுரையில் black swan திரைப்படத்தினை சிலாகித்து எழுதியிருப்பேன். அதில் நான் குறிப்பிட்டிருக்கும் விஷயம் அல்லது  கேட்கப்பட்டிஉந்த கேள்வி ஒரு உணர்ச்சியினை பண்டமாக்குகிறோம் எனில் அதனை செய்பவனுக்கு அந்த உணர்ச்சி மரக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ? இந்தக் கேள்வியினையே கதையின் கருவாக மாற்றினால் ? இந்த உணர்ச்சியினை பண்டமாக்குவது என்பது ஒரு முறை அல்லது வாசிப்பவனுக்கோ பர்வையாளனுக்கோ தெரியப்படுத்தாத, தெரியபடுத்தமுடியாத ஒரு வாதை. இந்த வாதையினை ஒரு திரைப்படம் மூலமாக சொல்ல வேண்டுமெனில் அதனை மீண்டும் ஏதேனும் ஒரு பண்டத்திற்குள் செலுத்த வேண்டும். அதனை மீடியம் என்றும் சொல்லலாம். திரைப்படம் என முடிவெடுக்கும் போது இந்த மீடியமும் ஒரு பெரும்பங்கினை வகுக்கிறது. எப்படி எனில் இரண்டு வகையறாக்களாக சொல்ல வேண்டும். இயக்குனரே கதையினை எழுதுவது மற்றொன்று இரண்டும் வெவ்வேறு ஆட்களால் செய்வது. ஒவ்வொரு கதைக்கும் மூலக்கரு ஒன்று இருக்கிறது என சொல்லியிருக்கிறேன். அனைத்து கதைகளிலும் இது இருக்கிறது. அப்படி இருப்பதை ஜனரஞ்சகமாக மாற்றுவது இயக்குனர் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று. இது மிகவும் கடினமெனில் கதை எழுதுபவரும் இயக்குனரும் வெவ்வேறு ஆட்களாக இருப்பதில் தான். ஒரு நாவலிலிருந்தோ அல்லது உண்மைக்கதைகளிலிருந்தோ எடுக்கப்படும் படங்கள் தான் மிகக் கடினமானவை. காரணம் அந்த கதைகளை இயக்குனர் வெகு சீக்கிரத்தினில் புரிந்து கொள்ள முடியும். அதை தன்னைப் போல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரது கடமைகளுள் ஒன்று. அதற்கு அந்த கச்சாப்பொருளினை ஏதேனும் ஒரு மீடியம் கொண்டு ஜனரஞ்சகமாக மாற்ற வேண்டும். அது மட்டும் சரியான அளவில் அமைந்து விட்டால் நிச்சயம் இயக்குனர் தன் முழுத் திறமையினை கொடுத்துவிட்டார் என்பதே அர்த்தம்.

இதிலும் கடினமானது மிகப்பெரிய நாவல்களினை படமாக்குவது(Lord of the rings, harry potter, les miserables. . .போன்று). இந்த படமும் ஒரு நாவலினை தழுவியே எடுக்கப்பட்டது. நாவலும் அதிகம் விற்கப்பட்ட ஒன்றே. நிறைய பேர் காமத்தினை சொன்னார்களே எனப் பார்த்தால் படம் எனக்கு துளிக்கூட காமத்துவ உணர்வினை தரவில்லை.இந்த படத்தினை ஒரு protogonist பற்றிய படம் என்றே நான் சொல்ல நினைக்கிறேன். அதற்கு கதையினை சொல்ல வேண்டும். க்ரனௌலி என்பவன் தான் ஹீரோ. அவலமாக பிறந்து அனாதை இல்லத்தில் வளர்ந்து ஒரு தோல் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறான். அவனுக்கு அபரிமிதமான சக்தி ஒன்று இருக்கிறது. நுகர்வது. இதனை மட்டும் தனியே எழுத ஆசைப்படுகிறேன் அதனை பின் சொல்கிறேன். அவன் எத்தனை தொலைவில் இருந்தாலும் அதனை நுகர்ந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட அவனுக்கு பெண்களின் உடலில் ஏதோ ஒரு மணம் இருக்கிறது என்பது யூகம். அதனால் அதனை நுகர்ந்து கொண்டே செல்கிறான். அப்படி செல்லும் போது சம்பவமாக நுகர்ந்து கொண்டே சென்ற பெண்ணின் மரணம் நிகழ்கிறது. அதன் பின் மணம் இல்லை. அப்போது தான் மணத்தினை சேமிப்பது எப்படி என சிந்திக்க தொடங்குகிறான். ஒரு பெர்ஃப்யூம் தயாரிப்பவரிடம் வேலைக்கு சேர்கிறான். அவரிடம் கற்றுக் கொள்ள பார்க்கிறான். ஆனால் அது அவனுக்கு போதவில்லை. க்ராஸ் என்னும் ஊரிற்கு செல்கிறான். பாதுகாக்க ஒரு மேம்பட்ட வழி அங்கு இருக்கிறது என்பதனை அறிந்து. அந்த வழியினை வைத்து பெண்களிடம் மணத்தினை எடுக்கப்பார்க்கிறான். அவர்கள் ஒத்துழைக்க மறுக்கவே கொலை செய்கிறான். தொடர் கொலைகள் ஆகிறது. அவன் ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் பன்னிரெண்டு விதமான பெர்ஃப்யூம்கள் இருக்கிறது எனவும் பதிமூன்றாவது ஒன்று தேவை ஆனால் அது இல்லை எனவும் சொல்கிறார். இவன் அதனை தயாரிக்கிறானா ? அந்த பெர்ஃப்யூமில் என்ன இருக்கிறது ? தொடர் கொலைகள் நிறுத்தப்படுகிறதா ? அவன் பிடிபடுகிறானா என்பதே கதையின் முடிவு.

இப்படத்தின் இயக்குனர் டாம் ட்வைகனர். அவரின் படைப்புகளில் எனக்கு இது இரண்டாவது அனுபவம். முதல் அனுபவம் ரன் லோலா ரன். அந்த படத்தில் தன் கருவினை அத்தனை தூரம் போட்டு கலக்கி பார்வையாளனை குழப்பி எடுத்திருந்தாரே இதில் இல்லையா என எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இது இன்னமும் மாறுபட்ட விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது. கதையின் வகையில் பார்த்தோமானால் இப்படத்தில் ஆழ்ந்திருக்கும் விவாதங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. கதையானது கொலைகள் தொடர்ந்து நடப்பதால் அதன் த்ரில்லரிலேயே பார்வையாளன் இருந்துவிடுவான். இதன் ஊடாக ஏற்படுத்தும் விவாதம் மனிதர்களின் தோலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது. இந்த சந்தேகம் அல்லது விவாதம் நம்மை ஆழ்ந்து அழகாக உள்ளே கொண்டு செல்கிறது.

காது கேளாதோர் கண் தெரியாதோர் போன்று குரைபாடுகளை கொண்டாடும் படங்களையே அதிகம் பார்த்து வந்ததனால் இப்படி அதிசய குணங்களை சித்தரிக்கும் படங்கள் எனக்கு ஆச்சர்யத்தினையே கொடுக்கிறது. இது போன்று புலன்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் அதனை  வேறு ஒரு கதையாக மாற்றுவர். உதாரணம் வேண்டுமெனில் சொல்கிறேன். The eye என்றொரு படம் வந்தது. தமிழில் கூட அதனை  ‘அது’ என எடுத்தனர். இந்த படத்தில் கதை கண்ணினை மையமாக வைத்து நகர்ந்தாலும் இடையில் அந்த கண்ணின் சொந்தக்காரிக்கு இருக்கும் பின் கதை நடக்கும் கதை என எடுத்து செல்லப்படும். இப்படி தான் எடுக்க முடியுமா என எனக்கு வெகுநாட்கள் சந்தேகம் இருந்து வந்தது. மேலும் அப்படி எடுக்கப்படும் படங்களில் அந்த குறிப்பிட்ட புலன்கள் கதாபாத்திரத்தின் ஒரு பொருளாக மட்டுமே பார்வையாளனுக்கு காண்பிக்கப்படும். இப்படத்திலோ அது முற்றிலும் உடைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருவது க்ரனௌலியின் மூக்கு தான்.

இதனை protogonist கதை என சொல்லியிருந்தேன். ஒரு முடிவினை அல்லது தன் குறிக்கோளின் முடிவினை தேடியே செல்பவரை protogonist என்பர். இப்படத்தில் அந்த வேடத்தினை தருவிப்பது க்ரனௌலியின் மூக்கு தான். இதனை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர். இந்த மணம் என்னும் விஷயம் இருக்கிறதா இல்லையா என தெளிவாக குழப்பி இருக்கிறது என்பதனை கடைசியாக காட்டியிருப்பார். ஆழ்து கவனியுங்கள் என்பது என் வேண்டுகோள்.

க்ரனௌலி மிகக் கொடூரனாக காட்டப்படுகிறான். அந்த மூர்க்க அமைப்பெல்லாம் நறுமணத்தினை பிடிப்பதற்கு. அவனுக்கு இருக்கும் ஆசையெல்லாம் அனைத்தினையும் நுகர வேண்டும் என. ஆனால் அதனை பதப்படுத்த தெரியவில்லை. இந்த பிரச்சினையில் அவன் கொள்ளும் வேதனை. அதனை எப்படி பதப்படுத்துவது என தேடி தேடி செல்கிறான். அப்படி அறிந்து கொண்ட பின் பெண்ணின் உடலை ஏதோ பொருள் போல தன் தேவையினை தீர்த்து அவளை விட்டெறிகிறான். உருவம் உயிரற்று சதையாகிறது போன்றதெல்லாம் அவன் உணருவதேயில்லை. இதில் முக்கியமான விஷயம் அவன் யாரையும் கற்பழிப்பதில்லை. முயற்சிக்கக் கூட இல்லை.

சோர்பா தி க்ரீக் என்னும் நாவலினை பற்றி எழுதியிருந்தேன். அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் ஒரு விஷயத்தினை ஆசைப்படும் போது அதனை ஆசை தீர உண்டுவிட்டால் அனுபவித்துவிட்டால் அதன் ஆசை போய்விடும் என்பதே அது. இங்கோ இவனும் அதனையே வேறு விதமாக செய்கிறான். அல்லது செய்வது போல் காட்டப்படுகிறது. மேலும் ஆரம்பத்தில் எக்ஸைலும் கறுப்பு அன்னமும் என்னும் படத்தின் லிங்கினை கொடுத்திருந்தேன். அது எதற்கெனில் அவன் ஒரு படைப்பாளி. படைப்பாளி ஒரு படைப்பினை பலர் முன் சமர்ப்பிக்கும் போது அது சில தாக்கத்தினை அனுபவிப்பவர்களிடம் ஏற்படுத்தும். இந்த தாக்கமானது உணர்வுரீதியானது. ஆக உணர்வினை கதையாக்கி படைப்பாளி படைப்பில் வைத்திருக்கிறார் என சொல்லலாமா ? அப்படி உணர்ச்சிகளை பண்டமாக்கும் போது அது படைப்பாளிக்கு மரத்து போக வாய்ப்பிருக்கிறதல்லவா ? இந்த வாய்ப்பு தான் இங்கே பூதாகாரமாக இருக்கிறது. அது என்ன படைப்பு அதன் தாக்கம் என்ன என சொன்னால் படத்தின் மூலமும் திருப்பமும் அறுபட்டுவிடும். அதனால் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் படத்தில் கடைசி காட்சி அவ்வளவு உருக்கமாக எடுக்கப்பட்டிருக்கும்.


இதில் காட்டப்படும் ஃப்ரான்ஸ் உண்மையில் பிரமிக்க வைக்கிறது. நான் சாருவின் நூல்களில் அதிகம் ஐரோப்பா கண்ட நாடுகளை வாசித்திருக்கிறேன். அந்த சுத்ந்திரங்களெல்லாம் ஒரு புரட்சியினால் வந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். பழைய ஃப்ரான்ஸ் எப்படி இருக்கும் என்பதனை இப்படத்தில் பாருங்கள். படம் முழுக்கவே செட் என்று தான் நினைக்கிறேன். நம்மால் யூகிக்க முடியாதபடி அமைத்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு பாலத்தின் மேல் வீடுகள் இருப்பது போல் வருவது. அதன் போட்டொ கிடைக்கவில்லை. அதனால் வேறு ஒன்றினை போட்டிருக்கிறேன்.

அடுத்து இசை. இப்படத்தில் இசை அந்த நுகரும் திறனுக்கே இருக்கிறது. அந்த நுகர்ச்சிக்கு நாற்றத்திற்கும் வாசனைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அதற்கு தேவையெல்லாம் ஒரு புது நறுமணம். அதை தேடும் போதும் நுகரும் போதும் அதற்கு உருவம் கொடுப்பது போல அருமையாக இசையினை காட்சிப்பேழையில் சேர்த்திருக்கிறார்.


இப்படத்தில் எனக்கு குறைகள் எனப்படுவது கதை சொல்லும் முறை. கதாபாத்திரங்களினை பேச விடாமல் கதை சொல்லி மறைமுகமாக சொல்வது போல் வருகிறது. இந்த உரையினை சற்றும் எதிர்பாராமல் இருந்ததினால் கூட இருக்கலாம். அடுத்து அருமையான விஷயம் கதையின் நாயகன். நாயகன் என சொல்லுவதைவிட மூக்கிற்கு தேவையான உதவியினை செய்யும் அடிமை போலத் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு சைக்கோவினை போல மூக்கினை மட்டுமே பிரதானமாகவேண்டும் என்னும் குறிக்கோளில் அழகுற  செய்திருக்கிறார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்பதே கடைசியாக சொல்ல வருவது. அத்தனை இன்பம் தரக்கூடிய திரையனுபவம் கிடைத்தது.

படத்தின் டிரைலர் - க்ளிக்கி பார்க்கவும்.

க்றிஸ்டோபர் நோலனுக்கு பிறகு என்னை அதிகம் ஈர்த்தவர் டாம் ட்வைக்னர் தான். திரைக்கதையின் மூலம் கதை சொல்லுதலை அழகுற வேறுவிதமாக சொல்லுகிறார்கள் இருவரும். எனது பட்டியலில் அடுத்து எந்த இயக்குனரோ. . ..

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nirmal said...

Helooo mic testing 1........2..........3........

Post a comment

கருத்திடுக