City of God - 2002

இப்பதிவில் சொல்ல இருக்கும் படம் சற்று வன்முறை சார்ந்தது. இந்த வன்முறையிலும் அழகியல் இருக்கிறது என்பது என் கருத்து. நான் பார்த்தவரை இதனை உணர்ந்தது saw படத்தில். அதே வெறுத்தது wrong turn இல். மேலும் ஹிந்தியில் gangs of wasseypur படத்தினை கூட வன்முறை அழகியல் என்று எழுதியிருந்தேன். வன்முறையில் உண்மையில் அழகியல் இருக்குமா ? அல்லது திரையில் அதனை எப்படி கான்பிக்க முடியும் ?

இதற்கான பதில் சிம்பிளாக இருக்கும் ஆனால் அதன் ஆழமான அர்த்தம் மிக நீளமானது. ஒவ்வொரு கதையாகட்டும் நாவலாகினும் சரி திரையாகினும் சரி அந்த களத்தின் உணர்வினை நாம் எப்போது உணர்கிறோமோ அப்போது அது அழகியல் என்னும் தன்மையினை அடைகிறது. அதே நேரத்தில் இந்த அழகியல் என்னும் தன்மை உடையவும் அநேக வாய்ப்புகள் இருக்கிறது. எடுத்துக் கொண்ட விஷயத்தில் அல்லது கருவில் கடைசிவரை நிற்பது. அப்படி உடைந்தால் நிச்சயம் அழகியல் அபத்தமாகிவிடும்.

இப்பதிவில் நிறைய படங்களினை சம்மந்தம் படுத்தி திரைத்துறை அருமைகளை சொல்லலாம் என நினைக்கிறேன். மேலே சொன்ன விஷயத்தினை the reader படத்தின் மூலம் சொல்ல நினைக்கிறேன். அப்படத்தில் காதல் என்பது கரு. மையம் என்பது வாசித்தல். வாசித்தலின் மூலமாக கதை தன் பார்வையாளனுக்கு காதலினை அளிக்கிறது. இதை திரைச் சிறை என சொல்ல விரும்புகிறேன். அப்படி ஒரு கட்டமைத்தலினை உருவாக்கினால் தான் அது சிறந்த படைப்பாக ஆக முடியும்.

இப்போது இந்த படத்திற்குள் செல்லலாம். நான் சொன்ன கரு இங்கே ஒரு தத்துவமாக இருக்கிறது. கரு என்பதற்குள் இன்னுமொன்றும் இருக்கிறது. காதல் என்பது ஒற்றை வார்த்தை. ஆனால் gangs of wasseypur போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அதன் கரு பழிவாங்குதல் அதன் பிண்ணனியில் இருப்பது ஒரு குட்டி கதை. கதைக்குள் கதை. இந்த கருவிற்கு பின் இருக்கும் கதையின் முக்கிய வேலை யாதெனில் பார்வையாளனை திக்கு முக்காட செய்வது. City of God படத்தினை பார்த்தவுடன் இப்படத்தின் கரு வீரியம் இழந்து இருக்கிறது என்பதை உணர்கிறேன். இரண்டுமே கும்பல் வன்முறை சார்ந்த படம் தான். நான் முழுவதுமாக ஒப்பு செய்யவில்லை. இந்த கருவின் புரிதலால் அந்த கரு என்னுள் உடைகிறது அதை தெளிவு படுத்த நினைக்கிறேன். ஒரு படம் ஆரம்பத்திலிருந்து சில கதை மாந்தர்கள் கொண்டு அரை மணி நேரம் செல்கிறது. அதன் பின் புது கதை மாந்தர்கள் வருகிறார்கள். அப்படி புதிதாய் வரும் கதை மாந்தர்கள் கூட பிரதான கருவினில் சென்று ஐக்கியமாக வேண்டும். அது தான் கருவும் கதையும் இணையும் இடம். இது சரியாக இருப்பின் படம் நிச்சயம் தூள்.

இந்தப்படம் முதல் காட்சியிலிருந்து வன்முறையில் ஓவியம் தீட்டுகிறது. இது பிரேசில் மொழிப்படம்.


அநேக படங்களில் கரு சொல்லப்படுவதில்லை. நாமாக கதையின் போக்கில் அறிந்து கொள்கிறோம். இப்படத்தில் கதையின் ஆரம்ப காட்சியிலேயே கதையின் கரு சொல்லப்படுகிறது. ஒரு கும்பல் கோழி பிடிக்க செல்லும் போது அதனை போட்டோகிராஃபர் ஒருவன் பிடிக்க யத்தனிக்கிறான். அவனுக்கு ஒரு புறம் ரௌடி கும்பல் மற்றொரு பக்கம் போலீஸ். அப்போது சொல்லப்படுகிறது கரு - சண்டையிட்டால் வாழ முடியாது ஓடினால் பிழைக்க முடியாது.

இதுவரை சினிமா பற்றிய என் பார்வையில் நான் கதையினை இரு வரியில் சொல்லி அதிகம் சிலாகிக்காமல் அதன் கட்டமைப்பினை பற்றி சொல்லுவேன். அதே இக்கதையிலோ இந்த தத்துவமானது படத்தின் ஒவ்வொடு காட்சியிலும் அமையப்பெற்றிருக்கிறது. இன்னும் தெளிவாக போனால் இருத்தலை அனுபவிக்க முடியாமல் எப்போதும் கேள்விக் குறியாகவே வைத்துக் கொண்டு திரியும் மனிதர்களின் கதை. இதை மாந்தர்களிடம் மட்டுமில்லை கதையின் அமைப்பிலும் அந்தந்த காட்சியின் இருத்தலில் கேள்விக் குறியினை வைக்கிறார். இதனை பின் சொல்கிறேன்.

இந்த கதையின் கட்டமைப்பு தெளிவாக குழப்பும் ஒன்று. லி’ல்சே என்பவனின் கதையினை சொல்வது போல் ஆரம்பிக்கிறது. ஆனால் கதைப்போக்கில் சிறு சிறு கூட்டத்தினை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறது. இந்த குழப்பத்தில் இன்னுமொன்று யாதெனில் கதை சொல்லியின் நிலை மாறுவது. நேர்கோட்டாக செல்லும் கதையில் திடிரென கதை சொல்லி மாறுகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சினை யாதெனில் லி’ல்சே விடம் கதை ஆரம்பிக்கிறது. ஆனால் கதைப்போக்கில் பல்வேறு மனிதர்களை ஒரு கதைசொல்லியின் மூலம் இயக்குனர் விளக்குகிறார். மீண்டும் லி’ல்சே பேசுகிறான் அல்லது போட்டோகிராஃபர் பேசுகிறான். அவன் பேச்சில் தத்தம் கதைகளை சொல்கின்றனர். அப்போது உண்மையில் கதையின் நாயகன் யார் என்றொரு குழப்பம் வருகிறது. உண்மையில் அருமையான அமைப்பு இது.

கதைகளில் திருப்பங்கள் கதை மாந்தர்களும் தரலாம் அல்லது படைப்பாளியும் தரலாம். இதனை நான் எழுத்துகளில் அதிகம் சொல்லியிருக்கிறேன். உதாரணம் வேண்டுமெனில் நீண்ட கதை சென்று கொண்டிருக்கும் போது கதையின் மீதி பக்கங்கள் நெருப்பில் எரிந்துவிட்டது என சொல்லி கதையினை தொடர்வது போல. அப்படி சொல்வதனால் வாசகன் அந்த இடைப்பட்ட இடத்தினை பூர்த்தி செய்து கொள்கிறான். இது போல் இப்படத்தில் கதைசொல்லி சில கதாபாத்திரங்களை காட்டும் போது இவனின் கதை இப்போது தேவையில்லை பிறகு பார்ப்போம் என சொல்லிவிட்டு கதைக்குள் சென்றுவிடுகிறது. இது அடிக்கடி  வருவதால் கதை இன்னமும் சூடுபிடிக்கிரது.

அடுத்து கொள்ளை. இதனை இந்த இயக்குனர் நியாயப்படுத்துகிறாரா அல்லது அங்கிருக்கும் மக்களின் நிலையினை சொல்கிறாரா என தெரியவில்லை. ஆனால் இருத்தலின் நிச்சயம் கொள்ளையில் தான் இருக்கிறது என்பதை அழகுற சொல்லியிருக்கிறார். சிறுவயது முதல் கொள்ளை கொலைகளை பார்த்து பழகி வரும் விஷயம் அச்சிறுவர்களுக்குள் வேரூன்றி விடுகிறது. இதனையும் அவர்கள் பழகிக் கொள்கிறார்கள். அப்படி வருபவனில் ஒருவன் தான் கதையின் நாயகன். மேலும் கதையில் கொலைகள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் கையிலினெல்லாம் துப்பாக்கிகள். எதிர்த்தால் சூடு என கதையில் இருக்கிறார்க்ள். அதுவும் முக்கியமான ஒரு காட்சி சிறுவனாக இருக்கும் போது மோட்டலில் கொலைகளை செய்து அப்பிணங்களை பார்த்து சந்தோஷம் கொள்வான். இதைத்தான் வன்முறை அழகியல் என்கிறேன்.

இதில் உணர்ச்சிகளை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். என்ன தான் சிறுவனாக இருந்தாலும் அவன் சிறுவனாக இருப்பதாலேயே அவனை அங்கீகரிக்காமல் இருக்கும் போது அவனின் உணர்வுகள் எப்படி இருக்கும் ? அவனை பொறுத்தவரை கொலை கொள்ளை செய்தால் அவன் மனிதனாகிறான். அதற்கு தடையாய் இருப்பதோ வயது. இதை எப்படி எதிர்கொள்கிறான் ?

இந்த எண்ணமே கதையின் பிரதான தத்துவத்திற்குள் சென்றுவிடுகிறது. அஃதாவது கொலை கொள்ளை வாழ்க்கையில் எதிர்த்தால் உயிர்வாழ முடியாது ஓடினால் பிழைக்க முடியாது.

விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் இரண்டு மணி நேரம் செல்கிறது. தமிழில் மசாலா ரௌடிகளையே பார்த்து வந்ததனால் இக்கதை வன்முறையினை ரசிக்க தூண்டுகிறது. அடர்த்தியான கதை அழகான கட்டமைத்தல். தயை கூர்ந்து மிஸ் செய்துவிடாதீர்கள்.

படத்தின் டிரைலரை க்ளிக்கி பார்க்கவும்

Share this:

CONVERSATION