தமிழகம் என்னை பயமுறுத்துகிறது

மீண்டும் விஸ்வரூபத்தின் பிரச்சினை தான். ஆனால் இந்த முறை என் முழு வருத்தங்களையும் தெரிவித்துவிடலாம் என்றிருக்கிறேன். படம் முடிந்தபின் திரையரங்குக்காரர்கள், அதன் பின் இசுலாமியர்கள், அதன் பின் இந்திய சட்டம் அதன்பின் தமிழக முதலமைச்சர் இன்னும் எத்தனை பேர் ஒரு கலையினை கற்பழிக்க காத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

என் பதிவுகளை பார்க்கும் போது சிலர் நீ கமல்ஹாசனின் ரசிகன் என்பதை உன் கட்டுரைகளில் நிரூபிக்கிறாய் என்கிறார்கள். நான் கமலின் ரசிகன் என சொல்வதையே இப்போது அபத்தமாக உணர்கிறேன். கமல் இப்படத்தின் மூலம் ஆரம்பித்தது ஓர் உன்னத போராட்டம். அதன் மூலக்குறிக்கோள் - சினிமா ஒரு கலை என்பதே. இந்த் பிரச்சினைக்கு காரணம் கூட தமிழர்களின் கலை ரசனை தான். சினிமாவினை சினிமாவாக பார்க்காமல் கலவரத்தினை உண்டு செய்தே வந்த மனப்பாங்கு இந்த விஷயத்தில் மிக அருமையாக தெரிகிறது. இதில் எனக்கு ஏன் கமலினை பிடிக்கவில்லை எனில் அவர் போராட்டத்தினை ஆரம்பித்த போது துணை என சொல்லிக் கொள்ளுமளவு யாரும் கிடையாது. திரைச்சங்கங்களோ உடன் வரவில்லை. கடைசியில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை போல் ரஜினி அஜீத் என தலைக்காட்டினர். இதனை வைத்து பார்க்கும் போது நிச்சயம் கமல் தன் பக்கத்தில் வெல்வார் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் சொல்லியிருப்பதோ இசுலாமியர்களுக்கு இடையூறாக தெரியும் காட்சிகள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தி நீக்கப்படும்!

என்ன கேவலமய்யா இது ? கமல் இந்த பாசாங்கினை போல் செய்தது அனைத்தும் இலவச விளம்பரங்கள் வேண்டித் தானா ? அல்ல தொடர்ந்து மன உளைச்சலினை போல் சுறி சுற்றி அடிக்கப்பட்டதுனல் களைப்பில் இந்த முடிவினை எடுத்தாரா ? அல்லது கலையின் மதிப்பு அவ்வளவு தானா ?

எந்த தொலைக்காட்சி பேட்டியினை எடுத்தாலும் கம்யூனிசம் பற்றி பேசும் கமலிடம் இன்னுமொரு கேள்வியினையும் முன்வைக்க விரும்புகிறேன். அதே கம்யூனிசத்தில் ஒருவரான சே குவேரா ஃபிடல் கேஸ்ட்ரோவும் சகாக்களும் எத்தனை முறை எதிர்த்தாலும் அமேரிக்க ஏகாதிபத்தியத்தினை எதிர்த்தே தீருவேன்  என பொவீலிய காடுகளுக்கு சென்றாரே அது தானய்யா போராட்டம். தங்களுக்கு தங்களாலேயே ஏற்பட்ட கற்பிதங்கள் என்ன ஆனது ? மேலும் கமல் நான் இனி தமிழகத்தில் இருக்கப்போவதில்லை. வேற்று நாடுகளுக்கு செல்கிறேன் அங்கிருந்து என் கலைப்பணியினை தொடர்கிறேன் என்றிருக்கிறார். இதனை ஆதரிக்க வேண்டும் என மனதினில் ஆசை வந்தாலும் சொல்ல தெரியவில்லை. காரணம் தன்னுடைய படைப்பினை சிதைத்து வியாபார வெற்றிக்காக கொடுக்க முடிவினை செய்துவிட்டார். இதனை விட இழிவு என்ன இருக்க முடியும் ? மேலும் தான் தமிழகத்திற்கு கடைசியாக செய்த தொண்டாக விஸ்வரூபத்தின் முதலீட்டினை கமல் சொல்லியிருக்கிறார். இதே விஷயத்தினை சற்று மாற்றி தமிழகத்தினை தவிர மற்ற இடங்களில் நான் வெளியிடுவேன் என சொல்லியிருந்தால் அவரின் போராட்டம் வென்றிருக்கும். அவரோ படத்தினை வியாபாரமாக்கிவிட்டார். அப்படி செய்வதன் மூலமும் படம் நட்டம் அடையப்போவதில்லை என்பது முக்கிய குறிப்பு. காரணம் ஃபெஃப்ரவரி முதல் நாள் ஹிந்தியிலும் தெலுங்கிலும் படம் வெளியாகிறது. சிவாஜி படத்தில் ரஜினி சொல்வது போல் - எப்படி பார்த்தாலும் கமல் பிசினஸ் சக்சஸ். என்ன கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

இலக்கியங்களில் இது போன்ற கலை சார்ந்த பிரச்சினைகள் ஏகப்பட்டது இருக்கிறது. ஆனால் அவை யாவும் வெளியில் தெரிவதில்லை. சினிமா என்பதால் மட்டுமே தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தினை ஆதரிக்கும் அரசியல் பிரதினிதிகளை என்னால் எந்த மனோபாவத்தில் சொல்கிறார்கள் என்றே யோசிக்க முடியவில்லை.

சினிமா என்பது என்ன ? ஒரு குறிப்பிட்ட அளவுள்ள திரையில் யதார்த்த வாழ்வினை புனைவுடன் கலந்து அது யதார்த்தத்துடன் ஒன்றாதவாறு மாற்றி ஒரு பிம்பத்தினை அளிப்பது. இதனை எத்தனை சதவிகிதம் செய்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். இதில் எங்கிருந்து ஐயா Political correctness இனை எதிர்பார்க்கிறார்கள்.

யதார்த்த வாழ்க்கையில் ஒழுக்கத்தினை பற்றி வண்டி வண்டியாக பேசுபவர்கள் உண்மையில் அப்படி தான் இருக்கிறார்களா என்பது எத்தனை சதவிகிதம் உண்மை ? அப்படி இருக்கையில் ஒழுங்கின்மை என்பதனை எப்படி அவர்கள் நிர்ணயிக்கிறார்கள் ? அதை திரையில் காண்பித்தால் எதிர்ப்பதற்கு தைரியம் எங்கிருந்து வருகிறது ? கலை அழகியல் சார்ந்த விஷயம். அதில் அரசியல் செய்யும் அராஜாகம் தமிழகத்திற்கே மாபெரும் அவமானம்.

எனக்கு தெரிந்து இலக்கியத்தில் சாரு நிவேதிதா தான் இனி தமிழில் எழுதப்போவதில்லை என சொன்னார். அடுத்து திரைத்துறையில் கமல்ஹாசன். அடுத்து எந்தத் துறை எந்த ஆள் என்பது மர்மமாக இருக்கிறது. தமிழகம் கலைஞர்களை இழந்து வ்ருகிறது என்பது மட்டுமே இதிலிருந்து தெரியும் ஒரே விஷயம். அதே சமயம் கமல் செய்ததும் தவறே.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கலைஞர்கள் நாடுகடத்தப்படுதல் சகஜமான விஷயம். அங்கே படைப்பினால் வெளியேற்றப்படுகிறார்கள், இங்கே கலையின் மீது மக்கள் கொண்டுள்ள அபத்த புரிதலினால் அவர்களே வெளியினை தேடி போகிறார்கள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக