நள்ளிரவில் சுயமுன்னேற்ற கந்தர்வர்கள்

சாரு நிவேதிதா எழுதிய கோணல் பக்கங்கள் என்னும் நூலினை வாசித்துக்கொண்டிருக்க்கிறேன். இந்த நூல் ஒரு களஞ்சியம் என்றே சொல்ல விரும்புகிறேன். இதில் சமையல், கலை, இலக்கியம், சினிமா, ஓவியம், இசை, நடனம் என சகலமும் நிறைந்திருக்கிறது. மேலும் இதனை நான் வேறு ஒரு கோணத்தில் அணுகிக் கொண்டிருக்கிறேன். மூன்று தொகுதிகள் என்பதால் சற்று தாமதம் ஆகிறது. வாசித்து முடித்தபின் அதனை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

அதில் இனவாதத்தினை பற்றி எழுதியிருந்த ஒன்றினை வாசித்தேன். உடனே எனக்கு இரண்டு ஞாபகங்கள் வந்தது. ஒன்று ஆஸ்திரேலியாவில் நடந்த இனவெறி தாக்குதல் மற்றொன்று என் கல்லூரி. ஆஸ்திரேலியாவினி பற்றி அநேகம் பேர் எழுதியிருப்பதால் என் கல்லூரியினை பற்றி எழுதுகிறேன்.

என் கல்லூரியில் தமிழர்களுக்கு சமமாக மலயாளிகளும் படிக்கின்றனர். இந்த தமிழ் மலயாளம் என்னும் பேதத்தில் தான் இந்த இனவாதமே எனக்கு கண்ணில் பட்டது. நான் படிக்கும் விமானப்பொறியியலில் மொத்தம் தொண்ணூறுக்கும் மேல். அதில் நாற்பத்தி ஏழு பேர் என் வகுப்பிலும் மீதம் பேர் இன்னுமொரு வகுப்பிலும் இருந்தனர். இரண்டு வகுப்பிலும் இரண்டு மாநிலக்காரர்களும் கலந்து இருந்தனர். அங்கிருந்த முக்கால் வாசி கேரளாக்காரர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து பணம் கொடுத்து(management) சேர்ந்தவர்களாக இருந்தனர். ஏன் என விசாரித்த போது தான் அண்ணா பல்கலைகழக கலந்தாய்வில் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது என்பதனை சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை காரணம் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் அண்ணா பல்கலைகழகம் பிற மாநிலத்தாருக்கும் அதிக இடம் அளித்திருக்கிறது என்பதனை ஊர்ஜிதமாக சொல்லியிருந்தனர். அங்கு என்ன அரசியல் நடந்ததோ அது அண்ணாவுக்கே வெளிச்சம்!

இனவாதத்திற்கு வருவோம். அப்படி சேர்ந்தவர்களும் வகுக்கப்பட்ட பின் எந்த வகுப்பினை சென்று பார்த்தாலும் அவர்கள் தனிக்கும்பலாக மட்டுமே இருந்தனர். இது ஆரம்ப காலத்தில். அதன் பின் இணைந்தார்கள் ஆனாலும் அவர்கள் ஏதோ தனி ஒதுக்கீட்டினை கேட்பது போலவே வகுப்பில் இருந்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது மொழிப்பிரச்சினை. போகப்போக ததகா பிதகா தமிழ் அவர்களை காப்பாற்றியது. ஒன்றாக கலந்துவிட்டோம் என முழுமையாக நினைக்கும் போது தான் அந்த சம்பவம் நடந்தது. எங்களை கஞ்சிக்கோடு என்னும் இடத்தில் இருக்கும் Fluid Control Research Institute என்னும் இடத்திற்கு அழைத்து சென்றனர். போகும் போதே பேருந்தில் சத்தமும் கூப்பாடும் ஆரம்பித்தது. விஷயமே அந்த கத்தலில் தான் இருக்கிறது. அதில் ஒருவர் கூட கேரளாக்காரர்கள் கிடையாது. மேலும் அவர்களை வலுக்கட்டாயமாக அழைக்க முடியாது. ஊருடன் கூடிவாழ் என்னும் அபத்த பழமொழியில் நானும் அப்போது சிக்கிக் கொண்டேன். வரும் போதோ அவர்களின் பக்கமும் கூப்பாடு நிறைந்து வழிந்தது. மீண்டும் பாகுபாடு. தமிழர்கள் பேருந்தின் ஒருபக்கமும் கேரளாக்காரர்கள் ஒரு பக்கமும். அப்போது கூட சில கேரளாக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவோம் என்றனர். மீண்டும் ஊருடன் கூடி வாழ் பழமொழி தான். இந்த பழமொழி சொல்வதோ சொந்த ஊர் மட்டுமே தவிர அயல் ஊர்களெல்லாம் கிடையாது! இவர்களுக்கிடையே ஊசலாடும் இனவெறி என்று மாறுமோ. . .விவேகானந்தர் இப்போதிருந்தாலும் இதையெல்லாம் பார்த்து இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள் என்றிருப்பாரா அல்லது தமிழ் இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள் என்றிருப்பாரா ?

இவர்களாவது பரவாயில்லை என்றேனும் திருந்தி செய்தத்தற்கு வருந்துவார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாத கூட்டம் எங்கள் கல்லூரியில் mass massacre இனை நிகழ்த்தியது. எங்களுக்கு முதலாமாண்டிலிருந்து வேலை கிடைக்குமோ கிடைக்காதோ அது வேற விஷயம் ஆனால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். அதில் கற்று தருவன எல்லாம் சுயமுன்னேற்ற பாடங்கள் மட்டுமே. எப்படி பேசுவது, எப்படி உடலமைப்பினை பேசும் போது வைத்துக் கொள்வது, பயத்தினை எப்படி போக்கிக் கொள்வது, குழுவாக வேலை பார்க்கும் பொழுது எப்படி ஒற்றுமையினை வளர்த்துக் கொள்வது, கனவுகள் என்பது என்ன, அதை வளர்த்துக் கொள்வது எப்படி என இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளிக்க மாட்டார்கள் லெக்சர் மட்டுமே கொடுப்பார்கள்.இவர்கள் அளிக்கும் லெக்சரில் ஆழ்ந்து கவனித்தால் புரியலாம் ஆனால் கவனிக்கும் ஆரம்பத்திலேயே தூக்கம் வந்துவிடுகிறது என்ன செய்ய சரஸ்வதியினை விட நித்திரா வேகமாக இருக்கிறாள்!

இதே போல் எங்கள் நேரு குழமத்தின் அமைப்பே ஒரு நிகழ்ச்சியினை நிகழ்த்த வேண்டும் என முடிவினை செய்தது. அதற்கு HR CONFERENCE என பெயரினையும் சூட்டியது. அவர்களின் முக்கிய குறிக்கோள் அனைத்து மாணவர்களும் பங்கு கொள்ள வேண்டும் அதனால் அதற்கேற்றவாறு மாணவர்களை வகுத்தனர். எப்படி எனில் விடுதியிலிருந்து ஆரம்பித்தது. தளத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நேரம். எனக்கான நேரம் என்ன தெரியுமா - இரவு ஒன்பதிலிருந்து காலை ஐந்தரை வரை! இதில் எங்கள் குழுமத்திலேயே சற்று தொலைவில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டும். எங்களை அழைத்து செல்ல வரும் பேருந்து தாமதம். அதனால் பதினொன்றைக்கு சென்று சேர்ந்தோம். ஒரு ஹாலில் அவர்கள் பாட்டிற்கு கோட் சூட்டுகளை போட்டுக் கொண்டு ஏதேதோ தலைப்பில் பேச ஆரம்பித்தனர். மணி இரண்டினை கடந்தது. நல்ல விஷயம் எதுவெனில் இடையிடையில் கொடுக்கப்பட்ட பப்ஸும் வடையும். அதுவும் எத்தனை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். டீயும் காப்பியும் ஆறாய் எனக்குள் ஓடியது. அந்த நள்ளிரவில் நல்ல தூக்கம் சொக்கியது. பின்னால் திரும்பிப்பார்த்தேன். அங்கு பாடம் எடுக்கும் MBA வாத்தியர்கள் சரக்கடித்தவர்களை போல் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் அப்படியே என் லேப்டாப்பின் மேல் தூங்கினேன். ஐந்து நிமிடம் கூட இல்லை ஒரு வாத்தியாரிணி என்னை எழுப்பி தூங்குவதாக இருந்தால் வெளியில் போப்பா என சொன்னாள். அவர்களுக்கு மனிதநேயமே இல்லையா. அப்போது தான் எனக்கு அம்மா சொல்லும் கந்தர்வர்களின் கதை நினைவிற்கு வந்தது.

சிறு வயதில் கோடை காலத்தில் வீட்டினுள் புழுக்கம் தாங்காமல் அனைவரும் மொட்டை மாடியில் உறங்குவோம். எனக்கு சீக்கிரத்தில் தூக்கம் வராது. மணி பதினொன்றினை தாண்டிவிட்டால் கந்தர்வர்கள் வரும் நேரம் என சொல்லி தூங்க வைப்பாள். முழித்திருந்தால் என்னை தூக்கி சென்றுவிடுவார்கள் என. அதன் அர்த்தம் அவர்கள் நமது புராணங்களின் படி பிறக்கபோகும் குழந்தை, அதை ஈன்றெடுக்க காத்திருக்கும் பெண், வயோதிகர்கள் முக்கியமாக மரணப்படுக்கையில் இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியவர்களின் தலையெழுத்தினை எழுதுபவர்கள். அப்படி அவர்கள் செய்வதற்கான நேரம் இரவு பதினொன்றிலிருந்து மூன்று வரையுமாம். அப்போது அதனை நாம் பார்த்தால் நமது தலையெழுத்தினை மாற்றி எழுதிவிடுவார்களாம். அவர்களை நான் எப்படி பார்க்க முடியும் என கேட்டேன். அவர்கள் தான் நட்சத்திரம் என்பார்!!!

இவர்கள் எதனை மாற்றி எழுத என்னை நடு இரவில் வரவைத்திருக்கிறார்கள் ?

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக