ஆசையே அலைபோலே. . .

இந்த பாடலை ஔவையார் முதல் பவர்ஸ்டார் வரை பாடிவிட்டனர். அப்படியா இந்த பூமியில் ஆசையானது மனிதனை ஆட்டி வைக்கிறது என முரணான கேள்விகளை எழுப்பக்கூடாது. இப்போது உள்ள நிலையில் அனைவருக்கு ஆசைகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பார்த்தீர்களெனில் காசே இல்லையெனினும் ஏதேனும் அந்த ஊரே மதிக்கும் ஒரு மாலிற்கு சென்று அங்கு கண்ணாடியின் வழியே பார்வையால் பொருளை பேரம் பேசிக் கொண்டிருப்பர். இதற்கு நவநாகரீக உலகம் பெயரும் வைத்திருக்கிறது - window shopping. இதன் உள்ளார்ந்த அர்த்தம் அதனை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆசையினை விதைத்தல். எனக்கே அப்படி பல நேரங்களில் தோன்றியிருக்கிறது.

எழுத்து சார்ந்து எனக்கு தோன்றிய ஆசைகளை நான் சொல்லியே ஆக வேண்டும். என் ஆசைகளெல்லாம் இந்த கட்டுரைகள் எனது சிறுகதைகள் மற்றும் நாவல்களை நூலாக வெளியிட வேண்டும் என்பதே. அதற்கு பணம் அதிகம் செலவு ஆகும் என்பதை அறிந்தவுடன் தான் கூகிளில் ப்ளாக் ஒன்றை உருவாக்கி எழுதி வந்த நான் பணம் செலுத்தி அதனை இணையதளமாக மாற்றினேன். அதற்கு ஆகும் தொகை வருடத்திற்கு பத்து டாலர்கள். இந்த பத்து டாலரினை கட்டுவதற்கு நான் செய்த கூத்துகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எனக்கென இருக்கும் கார்டானது விசா கார்ட். அதனை டெபிட் கார்ட் எனவும் சொல்லலாம். இந்த இணையதளத்தினை ஆரம்பிக்கும் நேரம் தான் அப்பாவிற்கு அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் க்ரெடிட் கார்ட் ஒன்று கொடுத்தனர்.

கணக்கர் பிள்ளையாக இருந்து கொண்டு இது நாள்வரை இது இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்து வந்திருக்கிறேன். அப்போது தான் அப்பா சொன்னார் அகௌண்டில் பணம் இருந்து அதனை எடுத்தால் அது டெபிட் கார்ட். அவர்களே உன்னை செலவு செய்ய வைத்து கடனாளியாக்கினால் அது க்ரெடிட் கார்ட் என. இந்த சந்தேகம் கூட எதற்கு வந்ததெனில் அமேசானில் ஒரு நூலினை வாங்கலாம் என பல மணி நேரம் முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் கார்டினை அது ஏற்றுக் கொள்ளவேயில்லை. இந்த நிலையில் தான் நான் இணையதளத்தினை ஆரம்பிக்கும் நாள் வந்தது. அதற்கும் என் கார்ட் செல்லுபடியாகவில்லை. என் நண்பர்களின் கார்ட் எல்லாம்  வேலை செய்தது எனதோ ஏ.டி.எம்மில் மட்டும் வேலை செய்கிறது. இது சதியா விதியா என்பதே அறிந்து கொள்ள முடியாமல் இருந்தேன். அப்பாவின் கார்டின் மூலம் பணம் செலுத்தி எனக்கான டொமைனினை வாங்கியாயிற்று.

இணையதளமாக மாற்றிய பின்னும் எப்போதும் இருப்பது போலவே இருக்க வேண்டுமா என அமைப்பினை மாற்ற நினைத்தேன். எனக்கு இருக்கும் ஒரே வெளி என் இணையதளம் தான். அதனை நான் அழகாக வைக்கவில்லையெனில் பிறகு யார் அதனை பராமரிப்பார்கள் என எனக்கிருக்கும் டெக்னிக்கல் நண்பன் கமலக்கண்ணனிடம் சென்றேன். ராப்பகலாக மன உளைச்சலினை கொடுத்து புதிதாக ஒரு டிசைனினை பதிவிரக்கம் செய்து அதனை இணையதளத்தில் பொருத்தினோம். அது எனக்கு ஆகப்பிடித்ததாக இருந்தது. காரணம் அதன் முகப்பில் ஒரு ஸ்லைட்ஷோ ஓடிக் கொண்டிருக்கும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைப்பில் எழுதுவதை குறித்தது
பறவை - கிமு பக்கங்கள்
கண்கள் - என் பக்கங்கள்
புத்தகம் - புழுவாகிய நான்
திரைச்சுருள் - ஒளி சொல்லும் கதைகள்
சாரு நிவேதிதா - I AM KRISHNA CHA
இதனை சாதாரணமாக இல்லாமல் ஒவ்வொன்றும் எப்படி எப்படி ஸ்லைட் ஆக வேண்டும் என அவன் சிந்தித்து அழகாக அமைத்துக் கொடுத்தான். அப்படி அழகாக செய்து கொடுத்த அவன் ஒரு விஷயத்தினை என்னிடம் சொல்லவில்லை. அது என்ன என சொல்கிறேன்.

இதனை நான் முகநூலின் மூலம் அனைவரிடமும் சொன்னவுடன் விஜயபாஸ்கர் மற்றும் கல்பனா என என் இரு நணபர்கள் கூகிள் குரோமில் உனது இணையதளம் திறக்கவேயில்லை என சொன்னார்கள். விஜய் பிறகு சொல்லவில்லை. ஆனால் மற்றவருக்கு அந்த பிரச்சினை இருந்து ஒண்டே இருந்தது. இதனை நண்பனிடம் சொன்னேன். பாவம் அவனுக்கு நேரமில்லை. இவர் ஒருவர் நேரடியாக சொல்லிவிட்டார் ஆனால் இவரைப்போலவே சொல்லாமல் சிலர் இருப்பின் ?

இப்படியெல்லாம் கேள்விகள் தோன்றினாலும் என் கவனம் முழுக்க எப்படி இணையத்தினை பிரபலப்படுத்துவது என்பதில் தான் இருந்தது. அப்போது எனக்கு நிர்மல் மற்றும் வா மாணிகண்டன் மூலமாக சில உதவிகள் கிடைத்தது. முதலில் வா மணிகண்டன். இவரின் இணையதளத்தில் தமிழ்வெளி என ஒரு சின்னம் இருந்தது. அதில் தம் இணையதளத்தினையோ பதிவுதளத்தினையோ பதிவு செய்து வைத்தால் அதனை இன்னமும் சிலர் வாசிப்பார்கள் என. நானும் பதிவு செய்தேன். அதற்கு அவர்களிடம் இருக்கும் சின்னத்தினை என் இணையதளத்தில் வைக்க வேண்டும். நானும் வைத்தேன். இப்போது கூட எனது இணையதளத்தில் நீங்கள் இதனை காணலாம்.

அதே நிர்மலின் மூலமாக நான் சென்றது தமிழ்மணம் என்னும் இணையதளம். அதில் இணையதள எழுத்தாளார்களுக்கெல்லாம் போட்டிகள் வைக்கிறார்கள். அதனால் பதிவு செய்யலாம் என நினைத்தேன். நானும் பதிந்தேன். அங்கும் தமிழ்மணத்தின் சின்னத்தினை என் இணையதளத்தில் வைக்க வேண்டும். இங்கோ அதற்கான செய்முறை சற்று மாறுபட்டது. விளக்குகிறேன்.

ஒவ்வொரு இணையதளத்திற்கும் பதிவுதளத்திற்கும் template என்ற ஒன்று இருக்கிறது. இதனை விளக்க சின்ன உதாரணம். வீடு கட்டுகிறோம் என வைத்துக் கொள்வோம். கட்டுவதற்கு முன் கணினியின் சில மென்பொருள்கள் மூலமாக அதன் டிசைனினை ப்ரோக்ராமாக போடுவர். அதே போல் தான் இணையதளம் எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதற்கான முறை. அந்த டிசைன் தான் template. அதன் ப்ரோக்ராம் தான் html. இந்த ப்ரோக்ராமினை வெட்டி தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு பெட்டியில் ஒட்ட வேண்டும். அப்படி ஒட்டி அளி எனும் பொத்தானை அமுக்கினால் அதுவே சின்னத்தினை வைத்துக் கொள்ளும். பிறகு மீண்டும் அதனை எனது இணைதளத்துடன் இணைக்க வேண்டும். இதையே தான் நானும் செய்தேன். விளைவு! இணையதளமே கந்தல் கோலமாகிவிட்டது. வார்த்தைகள் அப்படியே கொட்டியது போல பக்கங்கள் நீண்டும் அடர்த்தியாகவும் எனக்கே அசிங்கமாகவும் தெரிய ஆரம்பித்துவிட்டது. இப்படி செய்வதற்கு முன்பே முன்பிருந்த templateஇனை ஒரு பிரதி வைத்திருந்தேன். அதனை மறுபடியும் இட்டாலும் என் இணையதளம் முன்பு இருந்தது போல் வரவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அப்போதென ஒருத்தி பிறந்தும் விட்டாள். எனக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என தோழி கத்த நானும் உண்மையினை சொன்னேன். ஒரு இணையதளத்திற்கா என ஆரம்பித்தாள். எனக்கு கோபம் அதிகமாக வந்தது. என்ன ஆனாலும் பரவாயில்லை என பிறந்த நாள் பரிசாக அவளை திட்டிவிட்டேன். எனக்கு வருத்தமாகத் தான் இருந்தது. அவள் என் ஒரு எழுத்தினை கூட வாசித்ததில்லை. நான் எப்படி எழுதுவேன் என்பது கூட அவளுக்கு தெரியாது. ஒரே ஒரு முறை வாசிக்கச் சொன்னாள் ஆனால் அதற்குள் தூங்கிவிட்டாள். பிறரின் கவிதைகளை அவள் எனக்கு வாசித்து காண்பிப்பாள். நான் நன்றாக இருக்கிறது என ஜால்றா அடிக்க வேண்டும். என்னைப்பார்த்தால் அவளுக்கு எப்படி தெரிகிறது என்பதனை யூகிக்க முடியவில்லை. நான் இந்த இணையதளத்தில் இதுவரை தொண்ணூறிற்கும் மேல் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இது என்னைத் தவிர யாராலும் எழுத முடியாது எனவும் சொல்லுவேன். அனைத்தும் என் சொந்த அனுபவங்கள். இவளாவது பரவாயில்லை ஒன்றுமே வாசிக்காமல் ஆரம்பத்திலேயே முடிவினை காட்டி பிறந்த நாள் என்பதினால் சீற்றம் கொண்டாள். இன்னுமொரு தோழி தன்னுடைய எத்தனையாவது காதலன் எனத் தெரியவில்லை அவனிடம் என்னைப்பற்றி - அவனுக்கு தன் கதைகளை வாசித்தால் போதும். அப்படி வாசிப்பவர்களிடத்தில் மட்டுமே நட்பு பாராட்டுவான் என சொல்லியிருக்கிறாள். இது அவர்களுக்கிடையில் இருந்த ஊடலின் போது அவன் எனக்கு சொன்னது. மேலும் சிலரிடம் கட்டாயத்தால் மட்டுமே என் கதைகளை வாசிப்பதாய் சொல்லியிருக்கிறாள். அவள் மீது நான் மான நஷ்ட ஈடு வழக்கு கூட தொகுக்கலாம். நான் விரும்பவில்லை. என்னை, என் எழுத்தினை பிடிக்கவில்லையென்றால் தயவுசெய்து வாசிக்காதீர்கள். நான் மனிதநேயமற்ற ஜடமல்ல. எழுத்தினை வாசிக்காதவர்கள் கூட எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நினைப்பதெல்லாம் பார்க்கும் போது இவர்கள் இல்லையெனில் என் எழுத்தினை சீந்த நாதியில்லை என்பது போல் இருக்கிறது. அப்படி பயத்தில் இருந்தவன் தான். இப்போது என்னிடம் இணையதளம் இருக்கிறது. இன்று என்னை வயதினை வைத்து வாசிக்காமல் இருப்பவர்கள் கூட சில காலம் கழித்து வாசிப்பார்கள். அப்போது இந்த சமூகம் தெரிந்து கொள்ளும் என் கட்டுரைகள் எவ்வளவு ஆழமானவை என.

மேலும் தங்களுக்கு இது இணையதளமாக இருக்கலாம். எனக்கோ கிமு பக்கங்கள் என் உற்ற நண்பன். என் நிழல். என் உருவத்தினை வாழ்க்கையினை நிழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட கருவுலத்தினை நானே தமிழ்மணத்தின் மீதிருந்த ஆசையினால் சிதைத்துவிட்டேன். எனக்கு என் மீதே அத்தனை வெறுப்பு வந்தது. இரவு முழுக்க தூக்கமில்லை. தூக்கமின்றி  விழிகளுடன் கல்லூரி சென்றேன். அதே டெக்னிக்கல் நண்பனிடம் கேட்டால் அப்போது அவன் சொன்னான் இது எடுக்க ஃப்லாஷ் ப்ளேயர் தேவை மட்டுமில்லாமல் இதில் ஸ்லைட்ஷோ இருப்பதால் நேரமெடுக்கும் என. உடனே வேறு ஏதாவது சிம்பிளாக வைக்கலாம் என அவனிடம் கேட்டேன். அடுத்த மன உளைச்சல் ஆரம்பமானது. அவனின் கணினி சரியில்லை என சர்வீஸ் செய்ய கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றான்!

என்ன செய்ய என தெரியாமல் நாமே செய்யலாம் என களத்தில் இறங்கினேன். அப்போது எனக்கு உதவியவர் நிர்மல். அவரின் முகநூல் சாட் வழி உதவியினாலேயே இந்த புது வடிவமைப்பினை என்னால் வைக்க முடிந்தது. அவருக்கு என் கோடி நன்றிகள். இந்த உதவி செய்தாரே என்பதனால் இதனை சொல்லவில்லை. நானும் அவரும் மேற்கொள்ளும் சாட்களை பெரியவனானதும் நிச்சயம் புத்தகமாக போட வேண்டும் என ஆசைப்படுகிறேன். எழுத்து சார் எனக்கிருக்கும் உற்ற நண்பர் இருவரில் ஒருவர் நிர்மல்.

இறுதியாக என் சகவயதில் இருந்து கொண்டு என்ன தூற்றும் அனைவரிடமும் சொல்கிறேன் நீங்கள் செய்யும் அல்லது சொல்லும் ஒவ்வொரு அவதூறுகளையும் என் எழுத்து முறியடிக்கும். நிச்சயம் உலகமறிய ஒரு எழுத்தாளனாக அறியப்படுவேன். இப்போதைக்கு எனக்கு நான் எழுத்தாளனே!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nirmal said...

உங்கள் கணவு மெய்பட வாழ்த்துக்கள்

Post a comment

கருத்திடுக