என் தேவையை யாரறிவார். . .

Les miserables. இந்த படத்தினை தொடர் உலக சினிமா பார்ப்பவர்களாயினும் சரி தொடர்ந்து செய்திச் சானல்களை பார்ப்பவரளாயினும் சரி அறிந்து கொள்ளலாம். சமீபமாக கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது அல்லவா அதில் மூன்று அவார்ட்களை குவித்த திரைப்படம். மேலும் ஆஸ்கருக்கு சென்றிருக்கிறது இன்னும் பதில் தான் தெரியவில்லை. அதுவும் எட்டு ஆஸ்கருக்கு சென்றிருக்கிறது.

இப்போது அடுத்த விஷயம் இந்த வாரத்தின் ஆரம்பத்திலிருந்து ஏதாவது படத்திற்கு செல்வோம் வா வா என நண்பன் ஆசிப் அழைத்துக் கொண்டிருந்தான். நானோ யோசித்து சொல்கிறேன் வேலையிருந்ததனால் வருவதில் சந்தேகம் என சொல்லியிருந்தேன். இன்று யதேச்சையாக நயன்தாரா நான் இனி காமத்துவக நடிக்க மாட்டேன் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் போட்டிருப்பதால் அந்த செய்தித் தாளினை வாங்கினேன். அதில் தான் Les miserables படம் brookefields இல் ஓடுவதாகவும் அதுவும் ஒரே ஒரு ஷோ எனவும் போடப்பட்டிருந்தது. உடனே எந்த வேலையாயினும் போயேத் தீர வேண்டும் என முடிவெடுத்தேன்.

சினிமாவினை பற்றி யோசிக்கும் போது கோயமுத்தூர் எனக்கு ஆச்சர்யமே அளிக்கிறது. சேலத்தில் தமிழினை தவிர்த்து வேற்று மொழி படமெனில் தைரியமாக போய் முதல் நாள் படம் பார்க்கலாம். யாரும் வர மாட்டார்கள். இங்கு கோயமுத்தூரிலோ நான் dark night rises வெகு நாட்கள் கழித்து போனாலும் அங்கே கூட்டம் வழிகிறது. இத்தனைக்கும் நாளை நான் செல்வதாக முடிவெடுத்திருப்பது ஒரே ஷோவில் போடப்படும் திரைப்படம்! அதுவும் சாயங்காலம் தான் படம். நான் ஆசிப்பிடம் சொன்னேன் - ஒரே ஷோ தான் அதனால் திரை நிரம்பவும் வாய்ப்பு இருக்கிறது, கோயமுத்தூர் காரர்களை நம்ப முடியாது அதனால் காலையிலேயே டிக்கெட் எடுத்து சுற்றுவோம் அந்த நேரம் வந்தவுடன் படத்திற்கு போவோம் என. இந்த இடத்தினை பின் நான் தொடர்கிறேன்.

இந்த விஷயத்தினை நான் என் நண்பர் நாகராஜன்(ஆட்டோக்காரர் என ஒரு பதிவில் குறிப்பிட்டவர்) என்பவர் அழைத்த போது சொன்னேன். அவரிடம் ஊரிலிருந்து கிளம்பும் போது சில திரைப்படங்களை கேட்டு வாங்கி சென்றிருந்தார். அதனை பற்றி அவர் சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது என்ன தோன்றியதோ தெரியவில்லை சினிமாவெல்லாம் இருக்கட்டும் கொஞ்சம் படிப்பா, அப்பா அம்மா கனவையும் பார்த்துக்கோ என்றார். எனக்கு அந்த வார்த்தைகள் தூக்கிவாரி போட்டது. எனக்குள் ஒரு முற்போக்குவாதியாக தோன்றிய அவரது பிம்பம் அப்படியே சரிவது போன்றொரு எண்ணம். இதனை இவர் மட்டும் சொல்வதில்லை இன்னும் அநேகம் பேர் என்னிடம் சொல்லியிருகின்றனர். அதற்கு மூலக் காரணம் பல ஆயிரங்களை என் அப்பா என் பெயரில் முதலீடு செய்திருக்கும் பொறியியல்!

மேலும் நண்பர் நாகராஜனிடமோ நான் அதிகம் சினிமாவினை மட்டுமே பேசியிருக்கிறேன். நான் எழுதுவதை பற்றி பேசியதில்லை. அதற்கே எனக்கு இந்த அட்வைஸ்! இந்த அட்வைஸினை பற்றி நான் கவலையே படுவதில்லை. அவருக்கும் சரி அவரைப் போன்று நினைக்கும் அனைவருக்கும் இப்பதிவில் ஒன்றினை தெளிவாக்குகிறேன். எனக்கு முழுமுதற் குறிக்கோள் எழுத்தாளனாவதே. ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை. இப்போது என் கைவசம் இருப்பது என் இணையதளம் மட்டுமே. நூலினை வெளியிட வேண்டுமெனில் அதற்கு பணம் தேவை. பணம் காய்க்கும் மரத்தினையும் நான் இதுவரை அறிந்ததில்லை. ஆனால் அந்த பணத்திற்கும் என்னிடம் ஒரு வழி இருக்கிறது. அது தான் நான் படிக்கும் பொறியியல். அப்படி இருக்கையில் அதனை நான் விடுவேனா ? கல்வி என்னும் விஷயம் எத்தனையோ பேரினை தங்களின் அவலமான சூழலிலிருந்து வெளிவர உதவியிருக்கிறது. எனக்கோ என் திறமையினை பிரகடனப்படுத்த உதவும் என்பதில் முழுமையாய் நம்புகிறேன். அதனால் இந்த கவலையினை கொண்டுள்ள அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நான் படிப்பேன் என்ற அத்தாட்சியினையும் அன்பிற்கு நன்றியினையும் சொல்லிவிடுகிறேன்.

இப்போது பழைய விஷயத்திற்கு செல்வோம். பணம் இதற்கு மட்டும் தான் தேவையா எனில் இல்லை. எனக்கு உலக சினிமாக்களை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என கொள்ளை ஆசை. அதற்கு முட்டுக் கட்டையோ இரண்டு ஒன்று இங்கே வெளியிடப்படாது மற்றொன்று அப்படி வெளியிட்ட போதெல்லாம் இதெல்லாம் ஓடப்போதா என நான் விட்டது. அப்படி நான் மிஸ் செய்த படம் தான் Argo. அந்தப்படம் நான்கு கோல்டன் குளோபினை எடுத்தது. அதனால் இந்த முறை என்ன ஆயினும் காத்திருந்தாவது அந்த படத்தினை பார்க்க வேண்டும் என இருக்கிறேன்.

எப்படியோ அவனிடம் கேட்டு சென்றுவிடலாம் என முடிவினை செய்தேன். அது ஐந்தரைக்கு. உள்ளூர பட்சி ஒன்று சொன்னது பொதுவாக நீ தனியாகத் தானே படம் பார்க்க செல்வாய் இதென்ன அதிசயமாய் துணை தேடுகிராய் என. சொன்ன விஷயம் என் மனதினை எட்டுவதற்குள் தன் நண்பனின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை அதனால் பொள்ளாச்சி சென்று கொண்டிருக்கிறேன் என சொன்னான். சிரிக்கவா அழவா என்றே தெரியவில்லை.

நிறைந்த திரையனுபவம் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன் முதலில் டிக்கெட் கிடைக்கிறதா எனப்பார்ப்போம்!

பி.கு : பொறியியலினை காட்டியும் எனக்கு திரை மற்றும் இலக்கியமே அதிகம் புத்துயிர் தருகிறது அல்லது தருவதாக எண்ணம். ஒரு வேளை தேடிச் சென்று அடைவதால் வரும் இன்பமோ ?

Share this:

CONVERSATION