எக்ஸைலும் கறுப்பு அன்னமும்

நான் முக்கால்வாசி சினிமாக்களும் நூல்களும் என் வீட்டில் இருக்கும் போது தான் வாசிக்கிறேன். என் அம்மாவின் கவலை கூட வீட்டிற்கு வந்தால் போதும் நூலையோ அல்லது அறையின் கதவினை தாழிட்டுக் கொண்டு சினிமா பார்க்கிறானே என. மேலும் அதற்கு வேறு காசினை தண்ணீர் போல செலவழிக்கிறேன். இங்கு விடுதி அறைக்கு வந்தால் நான் எழுதுவது மட்டுமே அதிகம் செய்கிறேன். புத்தாண்டு முடிந்து வந்ததிலிருந்து the double என்னும் நாவலினை வாசிக்க ஆசைப்படுகிறேன்.ஆனால் முடியவில்லை. கல்லூரி வேலைகள் அல்லது எழுதுகிறேன். ஆனால் சினிமா மட்டும் பார்க்க முடிகிறது. எப்படியெனில் என் அறையில் இருப்பவர்கள் தமிழ் சினிமா மட்டுமே பார்ப்பவர்கள். மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்றால் நிறைய வேலைகள் இருப்பதால் இங்கு வந்தால் மட்டுமே சினிமாவினை பார்ப்பவர்கள். அதனால் நான் பார்த்த படமாயினும் சிலவற்றினை அவர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். நேற்று அறையில் இருப்பவர்களுடன் city of god இன்று black swan.

இந்த black swan படம் நான் கொண்ட மீள்பார்வையில் இன்னமும் ஆச்சர்யத்தினை மட்டுமே அளிக்கிறது. டேரன் அரனாவ்ஸ்கி இப்படத்தின் இயக்குனர். இதன் பற்றிய என் பார்வையினை நான் சில நாட்களுக்கு முன்னர் தான் பதிவு செய்திருந்தேன். அதன் லிங்க் - black-swan-2010 - க்ளிக்கி வாசிக்கவும்.

இந்த இயக்குனரின் அனைத்து படங்களுமே குழப்பம் விளைவிக்கும் படங்கள் என்பதையும் ஒருவருடன் நான் மேற்கொண்ட சாட்டினில் அறிந்து கொண்டேன். குழப்பம் எனில் இவர் நேரிடையாக சொல்ல வேண்டிய விஷயத்தினை நடிப்பாக கதாபாத்திரமாக மாற்றி கதையாக்குகிறார். இவருடைய மீதி படங்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த படத்திலும் கதாநாயகி நீனாவின் உள்ளுணர்வு கதாபாத்திரமாகிறது.

இன்று இப்படத்தினை என் அறை நண்பர்களுடன் பார்க்கும் போது ஒரு திகில் அனுபவமே இப்படத்தில் எனக்கு இருந்தது. அதிலும் குறிப்பிட்டு ஒரு காட்சி. அந்த காட்சியினை சொல்வதற்கு முன் எக்ஸைல் என்னும் சாரு நிவேதிதா எழுதிய நாவலிலிருந்து இந்த காட்சியினை பார்க்கும் போது நினைவில் வந்த பகுதியினை சொல்ல நினைக்கிறேன்.

கைவசம் என்னிடம் எக்ஸைல் நாவல் இல்லை. பல நாட்களுக்கு முன் வாசித்தது. நான் அதிக முறை வாசித்த நாவல்களில் எக்ஸைலும் ஒன்று. அதில் சால்சா நடனத்தினை பற்றி அதிக குறிப்புகள் வருகிறது. அந்த நடனம் காமத்துவமான நடனம் என உலகில் கருதப்படுகிறது(ஒரு முறை நீயா நானாவில் கோபிநாத் சொன்னது). அந்த நடனம் பழங்குடி மக்கள் தங்கள் விளையாத நிலத்தினை வைத்து எப்படி குழந்தைகளை காப்பாற்றுவது என தெரியாமல் பஞ்சத்திலும் பட்டினியிலும் ஒரு குட்டி கொண்டாட்டமாக இசையினையும் நடனத்தினையும் உருவாக்கினர். அது தான் சால்சா(திசை அறியும் பறவைகள் நூலிலிருந்து. . .). இந்த சால்சா நடனம் சில காமத்தினை தூண்டும் நடன பாஷைகளை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது தனியாக ஆடக் கூடிய நடனமும் அல்ல. ஜோடியாகத் தான் ஆட வேண்டும். அப்படி ஆடும் போது கண்ட இடங்களில் கை வைக்கிறானே என எண்ணம் தோன்றினாலே அந்த கலையினை ஆட முடியாது. இத்தோடு எக்ஸைல் எடுத்ததினை முடித்துக் கொள்கிறேன்.

இப்போது black swan படத்திற்கு செல்வோம். இந்த எக்ஸைலின் குறிப்புகள் மூலமாக சொல்ல வரும் விஷயம் கலை என்பது உணர்வுகளுக்கு அல்லது புலனுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. அப்படி புலன்களையும் வெளிப்புற உணர்ச்சிகளையும் அடக்கினாலே ஒருவன் சால்சா அல்லது பாலே போன்ற நடனங்களை முழுதும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்த கலைகள் செய்யும் உன்னதமான விஷயம் என்ன எனில் இரண்டு. ஒன்று சுயத்தினை இழப்பது மற்றொன்று சுகத்தினை கொடுப்பது. முதலில் சுயத்தினை இழப்பது. கலை என்பது ஒரு exited state. அதனை அனுபவிக்கும் போது நாம் நம் உணர்ச்சிகளும் நினைவுகளும் அடங்கிய சுயத்தினை இழந்து அந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அப்போது நமது இழக்கப்பட்ட உணர்ச்சி பண்டமாக்கப்பட்டு கலையின் வெளிப்பாடாக பார்வையாளனுக்கு கிடைக்கிறது. அங்கே இரண்டாவது நிலை எய்தப்படுகிறது. இங்கே கலைஞனுக்கு என்ன இருக்கிறது என கேள்வி எழலாம். கலைஞன் இருத்தல் என்னும் நிலைக்கும் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் ஒரு நிலைக்கும் செல்லும் போது அவன் அனுபவிக்கும் ஒரு உணர்வு மர்மமானது. அதனை அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் தான் கவிஞன் எழுத்தாளன் நடனம் மற்றும் இசைக்கலைஞர்களை எப்படி இப்படி செய்கிறீர்கள் என கேள்வி கேட்டால் ஒன்று உளறுகிறார்கள் அல்லது புரியாத மாதிரி பதில் சொல்கிறார்கள். அப்படியே சிலர் சொல்லியிருந்தாலும் அது உண்மை நிலையினை ஒத்திருக்க நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. அதன் சாயலாக இருக்கலாம். அவ்வளவே.

இதனை அஃதாவது இந்த மர்ம உணர்வினை போர்ட்மேன் அழகுற படத்தில் நடித்திருக்கிறார். நான் இன்று ஆச்சர்யப்பட்ட இடம் உணர்ச்சிகளை பண்டமாக்கும் ஒரு நிலை என கூறியிருந்தேன் அல்லவா அதனை படத்தில் பார்த்து தான்.

கறுப்பு அன்னமாக நடிக்க அவள் பார்வையாளர்களை கிளர்ச்சியினை அடையச் செய்யும் அளவு நடனமாட வேண்டும். அது அவளுக்கு வரவில்லை. அப்போது தாமஸ் என்று வரும் சொல்லிக் கொடுப்பவரே அவளுடன் சேர்ந்து ஆடுகிறார். அப்போது அவளின் உடலின் மேல் தன் கைகளை ஓட விடுகிறார். அப்படி செய்யும் போது அவர் சொல்லும் வார்த்தை நான் உன்னை எங்கங்கு தொட்டாலும் அதற்கான உணர்ச்சி வினையினை வெளிக்காட்டு என்று. அவள் அவரை விலக்கியவுடன் நடனத்திலிருந்து சட்டெனெ இதழ் முத்தம் கொடுக்க அவளும் உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறாள். காட்சி காமத்துவ களேபரமாகிவிடுகிறது. இந்த காட்சியினை வாசிக்கும் போது உங்களது முகம் சுழிக்கப்படலாம். ஆனால் இந்த காட்சி முடிந்த உடனே அவர் அவளை விலக்கி சொல்லும் வார்த்தை - that was me seducing you when it needs to be the other way around.

இது சாதாரணமாக தெரியலாம். ஆனால் இதனுள் இருக்கும் விஷயம் உணர்ச்சி சார்ந்து இருக்கும் வாதை. ஒரு உணர்ச்சியினை பண்டமாக்குகிறோம் எனில் அதனை செய்பவனுக்கு அந்த உணர்ச்சி மரக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ? உதாரணத்திற்கு பிணவறை காப்பாளனுக்கு அவன் மனைவி தரும் முத்தம் எவ்வித உணர்ச்சியினை தருமோ அது போல என கொள்ளலாம். ஆனால் கலைஞனுக்கு அது அத்தியாவசியமாகிறது. அப்படி செய்வதன் மூலமே கலை உயிர் பெறுகிறது.

படைப்பாளி வதைகளை உள்ளூர அனுபவிப்பவன். அவனை உதாசீனம் செய்யாதீர்கள். சாமான்யனுக்கும் கலைஞனுக்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கிறது. சாமான்யன் ஒரு முறை இறக்கிறான் படைப்பாளி ஒவ்வொரு கணமும் இறக்கிறான்.

பி.கு : நான் எந்த படத்தினையாவது பார்க்க வேண்டும் என முடிவு செய்து காத்திருந்து வாங்கினால் அதில் காமம் சார்ந்த காட்சிகள் வந்துவிடுகிறது. இதற்கு பயந்தே எந்த படமாகினும் அதனை லேப்டாப்பிலேயே பார்க்க வேண்டியுள்ளது. எப்போது தான் இருபத்தியோரு இன்ச் டி.வியில் நான் விரும்பும் உலக சினிமா பார்ப்பது ?

Share this:

CONVERSATION