இசையில் ஒரு நாள்

இசை பற்றிய போதிய உணர்வுசார் விஷயங்கள் எனக்கு அரங்கேறியதே இல்லை. அனைவரையும் போல் இசையினை கேட்பேன். ரசனை என்பதெல்லாம் எட்டாக்கனி. கடந்த சிறு நாட்களாகவே இசை சார் விஷயங்கள் என்னிடம் நடந்த வண்ணமே இருக்கிறது.

நேற்று மௌனியின் நூலினை வாசித்துக் கொண்டிருக்கும் போது அப்பா ஜேசுதாசின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு தன் சிறு வயதிலிருந்தே சாஸ்திரிய சங்கீதத்தின் மேல் ஒரு அலாதி பிரியம். அவருக்கு இருக்கும் பிரியத்தில் வீட்டிலும் என் சிறு வயதிலிருந்து டேப் ரிக்கார்டரில் சங்கீதப் பாடல்களையே போடுவார். எனக்கோ அப்போது அதன் மேல் அவ்வளவு ஆர்வமெல்லாம் கிடையாது. நான் பெரியவனாக ஆக எனக்கும் சாஸ்திரிய சங்கீதத்தின் மீது ஆர்வம் வந்தது. நானும் கேட்க ஆரம்பித்தேன். அப்படி பாடல்களை கேட்பதால் நான் சந்தோஷமடைய ஆரம்பித்தேன். இந்த உணர்வினை அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டும் என ஆசை கொண்டேன். அப்படி சொன்னதில் தான் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. அப்படி சொன்னவுடன் நீ பிராமாணன் அதனால் பிடித்திருக்கிறது என நண்பர்கள் சொல்லிவிட்டனர். இதற்கு பாழாய் போன மீடியாவும் காரணம். இதையும் மீறி என்ன தான் ரசனையினை சொன்னாலும் சாதியால் நாசூக்காக அடிப்பார்கள் அதனால் சொல்வதை நிறுத்திக் கொண்டேன். சொல்வதை நிறுத்திக் கொண்டேனே அன்றி கேட்பதை அன்று. சொற்ப பாடல்கலையே இதுவரை கேட்டிருக்கிறேன். அதில் எனக்கு பிடித்தது,
அலைபாயுதே கண்ணா. . . - கே.ஜே.ஜேசுதாஸ்
பண்டு ரீதி கோலு. . . - சுதா ரகுனாதன், உன்னிகிருஷ்ணன்
நாத தனு மனிஷம். . . - நித்யஸ்ரீ மகாதேவன்

இது தவிர சிறுவயதிலிருந்து அப்பா ஸ்லோகங்களை எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருப்பார். சில நேரங்களில் அதனையும் சி.டிக்களில் போடுவார். அவ்வப்போது கேட்பதோடு சரி. இவையனைத்தினையும் நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் ரசனைகள்.

இன்று எனக்கு மிக மிக சந்தோஷமான நாள். நான் எழுதிய நேநோ சம்மந்தமான கட்டுரையினை நித்யாபிரியா என்பவர் சிலாகித்து தன் பதிவிதளத்தில் (http://jilagimilagi.blogspot.in/2013/01/blog-post_14.html?spref=fb) எழுதியிருந்தார். என் தோழி ஒருவர் என்னுடைய பழைய பதிவினை சிலாகித்தார். என் நண்பனும் என் பதிவு ஒன்றினை பாராட்டினான். இவையனைத்தினையும் தாண்டி புது இசை ஒன்றினையும் கேட்டேன். அவர் பெயர் அயானிஸ் செனாகிஸ்.

இவரை பற்றி சொல்வதை விட சாருவின் எழுத்துகளில் இசையினை பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். அவர் இசை பற்றி மட்டுமே “கலகம் காதல் இசை” என நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார். இந்நூலில் இருக்கும் அநேக இசையின் பெயரினை கூட நாம் கேட்டிருக்க மாட்டோம். நூலின் ஆரம்பத்தில் தாக்கர் என ஒரு இசைக்குழுவினை பற்றி வருகிறது. இதனை நான் மீள்வாசிப்பின் போது இணையத்தில் தேடினேன். எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. அதற்கென தனி இணையதளம் ஒன்று இருக்கிறது. அதில் தான் அந்த குழுவினரினை பற்றியும் அவர்களின் ஆரம்பகால இசைகளை பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. அப்படி இருக்கையில் சாரு அந்த நூலினை இப்போது எழுதவில்லை, அப்படியிருக்கையில் அவருக்கு எப்படி அந்த குறிப்புகள் கிடைத்திருக்கும் ? இப்படி பக்கத்திற்கு பக்கம் நமக்கு அந்த கேள்விகள் எழும். அவர் அத்தனை புது இசைகளை அறிமுக படுத்துகிறார். இந்த நூலினை பொருத்தவரை நான் சாருவின் வாசகனே அல்ல. காரணம் அதிலிருக்கும் இசையினை கேட்கவில்லை. உணர்வினை நிச்சயம் யாராகினும் அடுத்தவரிடமிருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது. அந்நூலில் இருப்பது அனைத்தும் அவர் கொண்ட ரசனையின் பிரதி. அதனை கேட்டு அனுபவித்தால் மட்டுமே அந்த நூல் முழுமையுமடையும், வாசகன் என்னும் பட்சத்தில் பெருமையும் கொள்வேன்.

நான் ஆங்கில இசையினையே கேட்க மாட்டேன். இவ்வளவு ஏன் இசையினையே கேட்கும் வழக்கம் இல்லாதவன். கொஞ்சம் கொஞ்சமாக தான்  தமிழ் இசையினை கேட்க ஆரம்பித்தேன். நான் அப்படி இருக்கும் போது ஜானி என்று எனக்கிருந்த நண்பன் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸினை கேட்க ஆரம்பித்தான். அப்போது எனக்கு எந்த உணர்வும் இல்லை நான் காலச்சுற்றில் பின்தங்கி இருக்கிறேன் என. இப்போது வருத்தப்படுகிறேன். சாருவினால் தான் நான் எமினெம் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், சத், நீலா சிமோன், பாப் மார்லி, லாரா ஃபேபியன் என கேட்க ஆரம்பித்தேன்.

gloomy sunday படத்தின் இசையினை கூட ரசித்து கேட்க ஆரம்பித்தேன். இருந்தும் இவையில் எதையும் நான் உணர்ந்ததில்லை. அல்லது உணர்வுசார் படவில்லை show me the meaning - back street boys, adagio - lara fabian தவிர. அது கூட அதில் வரும் இதயம் தொடும் வார்த்தைகளுக்காக.  லாராஃபேபியனோ அவளின் கதறலுக்காக. அப்படி ஒரு இதயம் தொடும் குரல்.

இப்படி செல்லும் போது தான் இன்று எனக்கு அவர் மூலம் அறிமுகமானவர் Iannis xenakis. இவரின் பாடல்கள் பாடல் கிடையாது. அவையாவும் இசை மட்டுமே. சாருவே தன் கட்டுரையில் சாமான்யன் இந்த இசையினை கேட்டால் வெறும் கதறல் எனத் தான் சொல்வான் இதில் இருக்கும் இசையினை உணர முடியாது என்றிருக்கிறார். என்னால் ஒரு முறை தாண்டி இந்த இசையினை கேட்க முடியவில்லை. இவை எழுப்பும் அதிர்வலைகள் எனக்கு பயமாக இருக்கிறது. சாரு கொடுத்திருந்த லிங்க் - http://www.youtube.com/watch?v=n2O8bMlEijg.

இதனை கேட்கும் போது பயத்தில் உடம்பே  நடுக்கத்தில் கட்டையாக நிற்குமே அப்படி ஒரு உணர்வு. அணைத்துவிடலாமோ எனவும் எனக்கு தோன்ற செய்தது. நிச்சயம் அனைவரும் இதனை கேட்க வேண்டும். இப்படியும் இசை என்பது உலகில் இருக்கிறது என்பதை நம்மால் நிச்சயம் அறிந்து கொள்ள முடியும். அவர் சொல்லியிருந்ததால் மேலும் செனாகிஸின் பாடல்களை தேடலாம் என சென்று சிலவற்றினை பதிவிரக்கம் செய்தேன். அதில் இன்னுமொன்றும் இதே போல் அதிர வைத்தது - http://www.youtube.com/watch?v=RTlKINcSTBE.

இவரின் இசையினில் எனக்கு பிடித்தது மௌனத்தினையும் இசையாக்கும் திறன். அந்த மௌனம் கூட நமது மனதில் பெரும் அதிர்வினை ஏற்படுத்துகிறது.

இப்படி சந்தோஷ செய்திகளாலும் அதிரும் இசையினாலும் நாள் போய்க் கொண்டிருந்தது. அதனை இசையினால் ஏன் கொண்டாடக் கூடாது ? பல பல கலைஞர்கள் இசையில் கொண்டாடுகிறேன் என்கிறார்களே நாம் ஏன் கொண்டாடக் கூடாது என ஒரு மெல்லிய இசையினை ஹோம் தியேட்டரில் கேட்டேன். மாலை கோயில் போவதாக இருந்தோம். அதற்கு அரை மணி நேர முன்பு இப்பாடலை கேட்டேன். இதுவும் சாரு எனக்கு அருளியதே. அறிமுகப்படுத்தியதற்கு மனம் நெகிழும் நன்றிகள் சாரு. . .

http://www.youtube.com/watch?v=EpF1WLB-omw.

Share this:

CONVERSATION