மௌனி பிறப்பிக்கும் நிலை

சமீபகாலமாக மௌனியின் எழுத்துகளை தான் வாசித்து கொண்டிருக்கிறேன். அவர் எழுதியிருப்பது நாவலல்ல. சிறுகதைகள். அது தான் பிரச்சினையே. 400 பக்க நூலானாலும் தெளிவுடன் ஒரே நாளில் வாசிக்கும் நான் இந்த 260 சொச்ச பக்கங்கள் இருக்கும் நூலினை மட்டும் மூன்று நாட்கள் வாசித்திருக்கிறேன். புரியவில்லையோ என்பதல்ல இங்கே விவாதம். இவர் ஒரு சிறு கதையின் மூலம் சில அதிர்வலைகளை எழுப்புகிறார். அதனை உள்வாங்கிக் கொள்ளும் முன் அடுத்த கதைக்குள் நுழைய முடியவில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது அவரின் கதைகள் ஒன்று போலவே எனக்கு படுகிறது ஆனால் சற்று ஆழமாக பார்க்கும் போது தான் ஒவ்வொரு கதையும் பல்வேறு பரிணாமங்களை கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.


இந்த பதிவினை இப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் நினைக்கவில்லை. இந்நூலினை தொடர்ந்து மூன்று நாட்களாக வாசித்து வருவதால் அவ்வப்போது மனதினை பறிக்கும் வார்த்தைகளை அந்நூலிலிருந்து முகநூலில் பகிர்ந்து கொண்டேன். அதில் ஒன்று தான் “இறப்பில் தான் மனித வாழ்க்கை பூர்த்தியாகிறது” என்பது. அதிசயமாக என் நண்பர் ஒருவர் கமெண்ட் எழுதியிருந்தார். இறத்தலுக்கு பின் இருக்கும் வாழ்க்கையினை பற்றி. அப்படியே விவாதிக்கும்போது அவர் மௌனியினை மட்டும் நூறு முறை வாசிக்க வேண்டும் அப்படி செய்தால் ஆயிரம் அர்த்தங்கள் கிடைக்கும் என்றார்.

இந்த விஷயம் உண்மையா ? நூறு முறை வாசிக்கும் போது ஆயிரம் அர்த்தம் கிடைக்கும் எனில் அப்படி இதில் சொல்லப்பட்டிருப்பது என்ன ? எப்படி சொல்லப்பட்டிருக்கிறது ? எந்த ஒரு புனைவாகினும் இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று கரு மற்றொன்று நடை. கரு என்பது எழுதும் எழுத்தாளரை பொருத்தது. அதே நடை என்பது தான் கதையின் உயிரினை கொடுக்கப்போவது. அது குழப்பும் படி இருந்தால் கூட கவலையில்லை காரணம் அதுவும் ஒருவித நடை என சொல்லிவிடலாம். ஆனால் அழகியலின்றி இருத்தல் மட்டும் கூடவே கூடாது. ஒரு பிரதி வாசிப்பவனுக்கு இன்பத்தினை அளிக்க வேண்டும். இன்று மௌனியினை பற்றி எழுதுகிறேன் எனில் இருபது வருடங்களுக்கு பிறகு யதேச்சையாக இதனை வாசித்து அதன் மூலம் மௌனியினை அறிந்து கொள்கிறான் எனில் என் பதிவு ஜெயிக்கிறது. இப்போது சொன்னது ஒரு யூகம். அதே ஆச்சர்யமான விஷயம் 1936 இல் எழுதப்பட்ட மௌனியின் பிரதி எனக்கு இன்பத்தினை மட்டுமே கொடுக்கிறது. என்ன அதில் குழப்பமும் கலந்திருக்கிறது.

இந்த குழப்பம் என்பது என்ன என சொல்கிறேன். மனோதத்துவத்தில் ஸ்கீசோஃப்ரீனிக் என்றொரு நிலை இருக்கிறது. நினைவுகள் உடைவது. இருத்தல் அவர்களுக்கு அற்றுவிடுகிறது. அவர்களது உலகத்தில் அல்லது உலகத்திலிருந்து உலகம் மாறி பிதற்றுவார்கள். இதனை எழுத்தில் கொண்டுவந்து கலையாக மாற்ற முடியுமா ? என்பது ஒரு கேள்வி. முன்னிலிருந்தே இருந்ததா எனில் இந்த வார்த்தையே சாருவின் கட்டுரைகளில் அறிந்தது தான். அவர் மட்டும் தான் இதனை எழுதுகிறார் என இதுநாள் வரை தவறாக நினைத்திருந்தேன். ஆனால் மௌனி தன் சிறுகதைகளில் முயற்சி செய்திருக்கிறார். சொல்லானது நேர்கோட்டிலேயே வெகுதூரம் மௌனியின் படைப்புகளில் பயணம் செய்கிறது. திடிரென அது தன் இஷ்டத்திற்கு ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு சென்று மீண்டும் அந்த நேர்கோட்டிற்கு வந்துவிடுகிறது. இது தான் அனைத்து படைப்புகளிலும்.

உதாரணம் அழியாச்சுடர்கள் என்னும் கதையில் ஒரு மரத்தினை காண்பித்து பிதற்றலை போல் ஆரம்பிக்கிறது. அந்த பிதற்றலை நண்பன் என்னும் பாத்திரம் சொல்கிறது. அப்போது அவன் கோயில்களை பற்றி எதனையோ சொல்கிறான் உடனே கேட்டுக் கொண்டிருப்பவன் சிந்தனையில் ஆழ்கிறான்,

ஆழ்ந்த அநுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாக கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவைதானா கோயில்கள் ? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது ? நாம் சாயைகள் தானா ? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?

இப்படி சொல்லப்பட்டவுடன் மீண்டும் கதைக்குள்ளே மௌனி சென்றுவிடுகிறார். ஆனால் முசந்தியில் வழி தெரியாமல் நிற்பவன் ? ஈசிஜி ரிப்போர்ட்டினை போல ஒவ்வொரு கதையும் இப்படி நம் சிந்தனைகளை தூண்டி அவை ஒய்யாரமாக கதை சொல்லுகிறது. இந்த எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்பதை மட்டுமே சாரு நேநோ கதையில் எழுதியிருக்கிறார் என்பது என் கருத்து. அப்படி இருக்கையில் இதனை ஏன் போர்கீஸிய முறை என சொல்லுதல் கூடாது ? இத்தனைக்கும் மௌனியும் போர்கேஸும் சமகாலத்தவர்களே! தமிழன் பெருமைப்படக் கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

மௌனியினை என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான்கு விஷயங்கள் என்னை அவரின் படைப்புகளின் மூலம் ஈர்க்கிறது. ஒன்று போர்கீஸிய முறை அதனை எழுதிவிட்டேன். அடுத்து குறியீடுகள். ஒவ்வொரு கதையும் ஏதேனும் ஒரு பொருளினை குறியீடாக வைக்கிறது. அந்த கதையின் கருவாக அந்த குறியீடுகள் மாறுகிறது. சில நேரங்களில் மனிதர்களும் மௌனியின் படைப்பில் குறியீடாகிறார்கள். இதனை இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் தாங்கள் வீட்டினை சுத்தம் செய்யும் போது ஏதேனும் பொருட்கள் தங்களுக்கு அகப்படலாம். அவை தங்களின் கடந்தகாலத்தினை நினைவுகொள்ள வைக்கும் குறியீடுகள். அதனை பார்க்கும் போது தங்களின் மனதில் கடந்தகால வரலாறே ஓடிக்கொண்டிருக்கும். இது போன்ற குறியீடுகள் கதைகளில் வருகிறது. ஆனால் என்னை ஈர்த்ததோ கதையின் போக்கில் இவர் குறியீடுகளை உருவாக்குகிறார். அஃதாவது தங்களிடம் ஒரு பேனாவினை கொடுத்தால், அது பத்திரமாக வைக்கப்பட்டால் ஞாபகமார்த்தமாகும். இல்லையெனில் நினைவுகள் அழிந்து போய்விடும். இந்த ஞாபகார்த்தம் என்னும் உணர்வு வாங்கும் சமயத்தில் நிச்சயம் இருக்காது. இந்த நுண்ணுணர்வினை தான் எழுத்தின் மூலம் அழகுற உருவாக்குகிறார். என்னால் முடிந்தவரை விளக்கியுள்ளேன் இதுவும் புரியவில்லை எனில் தாங்கள் நூலினை வாசிக்கும் போது தேடி உணர்ந்தால் தான். அதற்கு எடுத்துக்காட்டும் என்னால் தர முடியாது. ஒரு கதை என எடுத்துக் கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக குறியீட்டினை வளர்த்து கதையின் ஏதேனும் ஒரு பகுதியில் அதனை அளிக்கிறார்.

அடுத்து மெடாஃபிக்‌ஷன். இதனை நான் நூதன அதிகாரம் என்றே சொல்ல விரும்புகிறேன். தமிழர்களிடம் இது தரும் இன்பத்தினை உணர்த்த முடியுமா என்பது சந்தேகம் தான். நம்மவர்களுக்கு ஒரு கதை தேவை. திரைப்படங்களை போன்று அந்த காகிதத்தினுள் அடங்கும் கதை. இந்த மெடாஃபிக்‌ஷனோ நீ வாசிக்கும் பண்டம் வெறும் பிரதி என்பதை பிரதியிலேயே சொல்கிறது. கதையினையும் நிஜ வாழ்க்கையினையும் சம்மந்தம் செய்து பார்க்கும் மூளையினை கழற்றிவை என சிரித்துக் கொண்டே சொல்லும் இலக்கியம். இதனை அழகாக சொல்லியிருக்கும் கதை “சுந்தரி”. நிர்மல் இன்று தான் தன் பதிவுதளத்தில் இதனை பற்றி எழுதியிருந்தார் அதன் லிங்க் - http://nirmalcb.blogspot.in/2013/01/blog-post.html. கொஞ்சம் செருப்படி அடித்தால் போல இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நான்காவது அவர் தன் எழுத்துகளில் காட்டியிருக்கும் பரிணாமம். அசோகமித்திரனின் ஏதோ ஒரு நூலினை பற்றி எழுதியிருந்ததில் எழுத்தாளனின் படைப்பில் அவனை சுற்றியிருக்கும் சமுதாயமும் சுயமும் பங்கு கொள்ளும் என எழுதியிருந்தேன். இந்நூல் 1936 இலிருந்து அவர் எழுதியிருந்த கதைகளை அந்தந்த வருடத்திற்கேற்ப அடுக்கியுள்ளனர். அதில் அவரின் பரிணாமம் அழகுற தெரிகிறது - கதையிலும் சரி நடையிலும் சரி.

கதைகளுக்கு பின் அவர் எழுதிய கட்டுரைகள் இரண்டும் பின் இணைப்புகளாக அவரை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இருக்கிறது. அந்த பின் இணைப்புகள் இரண்டும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. க.நா.சு போன்ற தீவிர விமர்சகன், ப்ரொமோட்டர் என்னும் நிலை காணாதது போன்ற ஒரு உணர்வு. நிச்சயம் அனைத்து எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ப்ரமோட்டர்கள் தேவை. அவர்கள் இல்லையெனில் எழுத்து வெற்றி பெறாதா எழுத்தில் வீரியம் இல்லையா என்பது விதண்டாவாதம். ப்ரமோட்டர் தான் உணர்ந்ததை பகிர்கிறான் அவ்வளவே அவை நேர்மறையாகவும் இருக்கலாம் எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இரண்டாவதாக லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் என்பவர் ஒருவரின் கட்டுரை வருகிறது. இந்த கட்டுரை பொய்த்தேவு நாவலின் கடைசியில் எழுதப்பட்டிருக்கும் சி.சு செல்லப்பாவின் கட்டுரையினையே நினைவுகூர்கிறது. மேலும் செல்லப்பா சொல்லும் விதம் தான் கதை அமைப்பும் மௌனியிடம் இருக்கிறது. செல்லப்பா சொல்வது நேர்வாழ்க்கையில் நால்வரின் குணங்களை மனத்தின் கண் கொண்டு ஒரு கதாபாத்திரத்தினை எழுத்தாளன் வடிவமைக்கலாம். அந்த பாத்திரம் யதார்த்தத்தினையொத்த யதார்த்தமில்லாத உருவமாக இருக்க வேண்டும். இதனை ஒவ்வொரு கதையிலும் அழகுர காண முடியும்.

காலம் கடந்து பயணிக்கும் வெளியும் எழுத்தும் தான் மௌனியினுடையது. இங்கோ காலம் மௌனியினை மறந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

Share this:

CONVERSATION