கலையாகும் காமம்

நான் சாரு நிவேதிதாவின் தீவிர வாசகனாக இரண்டு ஆண்டுகளாக இருக்கிறேன். அவர் அடிக்கடி தன் எழுத்துகளில் தமிழகம் ஒரு philistine சமூகம் என்பார். அதற்கு பலகாலம் அர்த்தம் தெரியாமல் இருந்தும் அவருடைய ஏனைய எழுத்துகளையும் வாசித்து வந்தேன். பின் ஒரு நாள் அர்த்தம் அறிந்தது philistine எனில் கலையார்வமற்ற என்று. அவர் தன் எழுத்துகளில் பூடகமாக சொல்லும் விஷயம் கலைஞன் அந்த சமூகத்தின் சொத்து. அவனை வளர வைப்பது அந்த சமூகத்தின் கடமை. அதனை தமிழகம் மறந்து விட்டது. இங்கே கலைஞன் பிச்சைக்காரனை போல் அலைகிறான். இது மட்டுமின்றி இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் ஊடுறுவலால் மக்கள் தத்தம் வாசிக்கும் திறனை இழந்து வருகின்றனர். இப்படி ஒட்டு மொத்த சமூகமும் இலக்கியத்தின் சுவையினை இழந்து விடுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவன் எழுத்தாளன். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் விற்பனைக்கும் இங்கு நடப்பத்ற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்கு அந்த நூல் முக்கும் முக்கல் எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும். நூலின் குறையா எனில் நிச்சயம் இல்லை. அப்படியே குறை இருந்தாலும் அதனை பதிவர்கள் எழுதியிருப்பர். இதில் அல்லது இந்த கட்டமைப்பில் எங்கோ பிரச்சினை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது மேலே சொன்ன தொலைக்காட்சிகளின் ஊடுருவல் தான். அல்லது அதாகவும் இருக்கலாம். இன்னுமொரு விஷயம் சில வாசகர்களிடமும் இருக்கிறது. யாரேனும் பதிவர்கள் சில நூல்களையோ அல்லது படத்தினையோ எதிர்வினை ஆற்றியிருக்கிறார்களெனில் அதை அப்படியே தம் கருத்தாக எடுத்துக் கொண்டு அந்த நூலையோ சினிமாவையோ நிராகாரித்து விடுவது. இது நூதன அபத்தம்.

அப்படி சினிமாவினால் தான் இவர்கள் இலக்கியத்தின் சுவாசத்தினை இழக்கிறார்கள் என வைத்து கொள்வோம் அப்படி என்ன சினிமா பார்க்கிறார்கள் என சற்று அவர்களுடன் ஒன்றினால் தான் தெரிகிறது அபத்ததிலிருந்து இவர்கள் சந்தோஷமடைகிறார்கள் என. இவர்கள் பார்ப்பது அனைத்தும் மசாலாக்கள். நானும் அப்படி இருந்தவன் தான் இருந்து கொண்டிருப்பவன் தான். வெளிவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழ் மக்கள் சினிமாவினை இரண்டாக பிரிக்கிறார்கள். ஒன்று அவார்ட் சினிமாக்கள் மற்றொன்று கமர்ஷியல் சினிமாக்கள். இந்த இரண்டில் மக்களின் ஓட்டு இரண்டாவதற்கே செல்கிறது. என் நண்பர் ஒருவர் ஆட்டோக்காரராக இருக்கிறார். அவர் பலதரப்பட்ட சினிமாக்களை பார்ப்பவர். சில நேரம் என்னிடம் இருக்கும் சினிமாக்களையும் அவரிடம் கொடுத்து அதன் கதையினையும் சொல்லிவிடுவேன் அவர் அதனை பார்ப்பார். அவரால் அனுபவிக்க முடியாதது வசனங்களினை மட்டுமே. அவரிடம் இந்த கமர்ஷியல் மற்றும் அவார்ட் சினிமாக்களை பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார் அவார்ட் சினிமாவினால் மக்களுக்கு என்ன பயன் ? மக்களுக்கு தேவையெல்லாம் ஒரு மணி நேர அசகாய சண்டை அரை மணி நேர குத்து பாட்டு கால் மணி நேர பஞ்ச் வசனம் மீதி நேரம் கதைக்கு சம்மந்தமில்லாத காமெடிக்கள். சில நேரங்களில் இப்போது பல நேரங்களில் இரட்டை அர்த்த வசனங்களாகவே இருக்கிறது. இந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது கமர்ஷியல் சினிமாக்கள் மட்டுமே. அவர்களுக்கு தேவை ஒரு பொழுது போக்கு.

இவையனைத்தினையும் எதற்கு சொன்னேன் எனில் இன்று ஒரு சம்பவம் என் மனதினை பாதிக்கும் அளவு அரங்கேறியது. இன்று வெளியான “கண்ணா லட்டு திங்க ஆசையா!” என்னும் படத்திற்கு சென்றேன். நண்பர்களுடன். இது மேலே வகை செய்ததில் இரண்டாம் பகுதியில் இருக்கும் படம். இந்த படத்தின் இடைவேளையில் எனக்கிருக்கும் சினிமா நண்பன் ஒருவன் imdb பற்றி பேசிக் கொண்டிருந்தான். The Internet Movie Database - இதில் உலகிலுள்ள அனைத்து திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். அப்போது முந்திரி கொட்டையாக The reader என்னும் படத்தினை பார்த்தேன் என சொன்னேன். அவனோ சற்றும் இடைவேளை விடாமல் “அது கேட் வின்ஸ்லெட்டுது தானே பிட்டு படமாச்சே டா அது” என சொல்லிவிட்டான். அப்போது அவனிடம் இல்லை இது நல்ல காதல் படம் என சொன்னேன். அவனிடம் அங்கே இந்த படத்தினை பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பித்தால் நண்பர்களுடன் வந்திருக்கும் போது அது மிகையாகாது. அதானால் அமைதியாகிவிட்டேன். மனதிற்குள்ளோ கோபம் மட்டுமே இருந்தது. என்ன செய்ய உன்னத படைப்பினை ஊருக்கு வெளியே போடப்படும் படத்துடன் ஒப்பிட்டதனால் ஏற்பட்ட உணர்ச்சிவசம்.

அவனை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. அவன் இந்த சமூகத்தின் அங்கம். அதன் தாக்கம் அப்படியே இவனிடத்திலும் இருக்கத் தான் செய்யும். காமத்தினை கலையினுள் புகுத்தினால் கலை தன் தன்மையினை இழந்துவிடுகிறது என்னும் மன நிலையினை தான் இச்சமூகம் அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கிறது.  நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய “ரோஜா மலரும் நேரம்” என்னும் பாக்கெட் நாவல் பாலியல் வக்கிரங்களை சொல்லுகிறது. ஆனால் காமத்தினை பயன் படுத்தியிருப்பதால் இது எழுத்துக்கே அவமானம் என்று அதை வாசித்த போது கருதினேன். நான் நூல்களில் பழக்கத்தினால் இதிலிருந்து வெளிவர கற்றுக் கொண்டேன். கலையினை எப்படி அணுக வேண்டும் எனவும் அறிந்து கொண்டேன்

பிறப்பு காதல் காமம் இறப்பு போன்ற அனைத்து உணர்வுகளுக்குள்ளும் இன்பம் சந்தோஷம் துன்பம் வாதை என அனைத்து உணர்ச்சிகளும் இருக்கிறது. அதை அதன் அழகியலுடன் பிரதியாக்கினால் இலக்கியம் திரையாக்கினால் அது உன்னத திரைப்படம்.

மேலும் இந்த மனோபாவம் தான் இன்று நடக்கும் அநேக பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்குமோ எனவும் தோன்றுகிறது. காமம் என்பது மறைக்கப்பட்ட அறிந்துகொள்ளக் கூடாத தங்கமலை இரகசியமாக எத்தனை காலம் இருக்குமோ தெரியவில்லை. ஆனால் அப்படி இருப்பின் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். பாலியல் கல்வி ஒன்றும் புதித்தாய் சொல்லித் தரப்போவதில்லை. ஒட்டு மொத்த சாராம்சமே சிரிப்பும் அழுகையினையும் போலத் தான் காமம். இதனை இலக்கியங்களும் திரைகளும் எப்போதோ சொல்லிவிட்டது. நாம் தான் பிந்தங்கி இருக்கிறோம்.

மேலும் சினிமா பற்றி நமக்கு இருக்கும் எண்ணத்தினை நாம் மாற்றியே ஆக வேண்டும். எந்த ஒரு படைப்பாகினும் அது promote ஆனால் மட்டுமே அதனை அனைவரும் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்தால் தான் உலக அரங்கில் கலையில் நமது பெயரும் பொறிக்கப்படும். ஆனால் நாம் தான் உள்ளூரிலேயே கமர்ஷியலினை தேடி தேடிப் போகிறோமே ? இந்த லட்சணத்தில் promote போன்றதெல்லாம் எப்படி நிகழும் ? துபாயில் இருக்கும் நண்பரிடம் சென்று அலெக்ஸ்பாண்டியனை பரிந்துரைக்கவா ? அதை போல் இழிவு வேறு ஒன்றும் இருக்காது ஆனால் இங்கே housefull!

நண்பன் சொன்னவுடன் ஒருமுறை அந்த ஆட்டோக்காரர் சொன்னவிஷயம் தான் நினைவிற்கு வந்தது. Gloomy sunday படத்தினை பார்த்துவிட்டு அவருக்கு கொடுத்தேன் க்தையினை சொல்லி. அவர் பார்த்துவிட்டு இதில் வரும் காட்சி பல நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. பரிந்துரைக்க ஆசையாக இருக்கிறது அதே நேரத்தில் என்னை கேவலமாக பார்ப்பார்களோ என பயமும் வருகிறது. அதே ஆட்டோக்காரர் தான் சொன்னார் டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு அவளின் ஆடையும் இரவு நேர சுற்றுதல் தான் காரணம் என. இதனை ஃபாஸிசம் என நிறைய சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர். ஆனால் இந்த கோட்பாடு தான் நிறைய பேர் மனதில் எழுந்தது. சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள் சிலர் சொல்லாமால் இருக்கிறார்கள். இது தான் சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்தது.

கலையார்வமற்ற சமூகத்தில் இருக்கும் ஒரே பிரச்சினை பாலியல் வறட்சி.

பி.கு : அவரை ஆட்டோக்காரர் என விளித்ததில் நான் வருத்தமே கொள்கிறேன். இப்பிரதி அவரை இழிவுபடுத்துகிறதோ எனவும் அர்த்தம் தொனிக்கிறது. ஆனால் அப்படி சொன்னதன் நோக்கம் அதிகம் படிக்காமல் ஆட்டோ ஓட்டும் ஒருவருக்கு இருக்கும் கலையறிவும் பகுத்தறிவும் பல காலம் என்னிடம் பழகி பல சிந்தனைகளை சொல்லிய படிக்கும் வர்க்கத்தின் ஒருவனான என் நண்பனிடம் இல்லையே என்பது தான். இந்த மனவுளைச்சலில் இன்று பார்த்த படத்தின் இரண்டாம் பாதியினை என்னால் அதிகம் கொண்டாட முடியவில்லை. இனி நணப்ர்களுடன் இருக்கும் போது எனக்கு தெரிந்த விஷயங்களை ஒருவரிடமும் பிரஸ்தாபிக்கக் கூடாது என்றிருக்கிறேன். எத்தனை நாள் இந்த முடிவு தாங்குமோ !!!!

Share this:

CONVERSATION