நீரின்றி அமையும் விடுதி

புத்தாண்டினை கண்டுபித்தவனை விட அதில் ரெஸெல்யூஷன் எடுக்கமவேண்டும் என நிர்பந்தம் வைத்தவனை தான் என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அனைத்தினையும் நல்வழியில் மேற்கொள்ள வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் தான் இப்படி ஒரு திட்டத்தினை அவன் அமல்படுத்தியிருக்க வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் என்னும் வாசகத்தினை வைத்து தான் இந்த நல்ல திட்டம் இருக்கிறது.

அப்படி நான் எடுத்த ரெஸெல்யூஷன் தான் இப்போது எனக்கு எதிரியாக இருக்கிறது. நான் எடுத்தது மிகவும் சாதாரணமானது - என்ன ஆனாலும் தினம் குளிக்கிறேன் என்பதே அது. அதற்கு கூட நிறைய பேர் பகடியாக நீ குளிப்பது பெரிய விஷயமல்ல நன்றாக குளிப்பேன் என முடிவினை சற்று எடிட்டிங் செய்து கொள் என்றனர். போன வருடம் இப்படி கிண்டலுக்கு ஆளாகும் படி குளிக்காமல் இருந்ததை நானே சுத்தம் சோறு போடும் என்னும் கட்டுரையில் சிலாகித்து எழுதியிருக்கிறேன். இந்த சிலாகித்தல் இப்போது எனக்கு மனவருத்ததினை தருகிறது. இப்போது குளியலினை உணர ஆரம்பித்திருக்கிறேன்.

மிண்டும் விடுதிக்கு வந்தபின் தான் என் ரெஸெல்யூஷனுக்கு எதிரி யாரென அறிந்து கொண்டேன். விடுதி. தினம் காலையில் தண்ணீர் வராது. வராது என ஒரேடியாக சொல்லிவிட முடியாது. நான் எழுந்திருக்கும் நேரம் ஏழரையினை சுற்றி. அது கூட அம்மா ஏழு மணியிலிருந்தே போன் அடித்துக் கொண்டிருப்பார். அவர்களுக்கு தரும் மனவுளைச்சலினை நிறுத்தலாம் என நினைக்கிறேன். ஆனால் அப்படி மட்டும் செய்தால் அடியேன் காலி தான். அம்மாவின் போன் வழி எழுப்புதல் அமல் ஆன நாட்களில் ஏழு மணிக்கு போன் அடித்தவுடனேயே எழுந்து விடுவேன். அதன்பின் அம்மா போன் அடிக்கும் போது எடுத்து அம்மாவுடன் தெளிவாக பேசி மீண்டும் தூங்கிவிடுவேன். இதனை நானே அறிந்தவுடன் அம்மாவிடமே சொல்லிவிட்டேன். சொன்னதோடு நிற்காமல் இனி போன் போடும் போது எழுந்திரு என்று மட்டும் சொல்லாதீர்கள் என்னோடு எதனையாவது பேசுங்கள் நான் அப்படியே தெளிவாகிவிடுவேன் என்றேன். அம்மா கொடுத்த எதிர்வினை பிரமிப்பூட்டக் கூடியது. அன்றிலிருந்து இன்று வரை எந்த ஐடியாவும் அம்மாவிடம் நான் எழுந்திருப்பது தொடர்பாக சொல்ல வில்லை. ஏனெனில் அடுத்த நாளே காலையில் அம்மாவின் போன் - “எழுந்து உட்காருடா கண்ணா தூங்காத டா. தெளிவாயிட்டியா இல்லை ஏதாவது பேசட்டுமா ?????”
அடியேன் - @@@#@@@####???

அதன் பின் ஏழு மணிக்கு அடிக்கும் அம்மாவின் காலிற்கு எதிர்வினையாக ஏழரையினை சுற்றி எழுந்துவிடுவேன். விடுதியில் நான் இருக்கும் தளத்திலோ நான் எழுந்து கொள்வதற்கு முன்னாலேயே வந்து கொண்டிருக்கும் தண்ணீர் நின்றுவிடும். என் அறையிலும் முந்தைய நாளே கொஞ்சம் நீரினை பிடித்து வைத்திருப்பர். அது காலைக்கடனுக்கு தேவையே என ஒதுக்கி வைத்திருப்போம். அநேகம் பேர் தரைத்தளத்தில் துணி தோய்ப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் குளிப்பர், சிலர் காலையிலேயே குளித்துவிட்டு குட்டி தூக்கத்தினை போடுவர், சிலர் இரவிலேயே குளித்துக் கொள்வர் இன்னமும் சிலர் என்னைப்போல் அட்டாச்ட் பாத்ரூம் உள்ள அறைகளில் போய் குளித்துக் கொள்வர். அவர்களின் அறைகளில் மட்டும் எந்நேரமும் தண்ணீர் வரும். இந்த காரணத்தினால் இதுவரை என்னுடைய ரெஸெல்யூஷன் உடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த உடையாமல் இருப்பதற்கு பின் சில உளவியல் பிரச்சினை இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் உள்ளாடைகள் பிரஷ் சோப் என அடுத்தவன் அறைக்கு படையெடுக்க வேண்டுமா ? அவர்கள் இது நாள் வரை என்னை என்னவென்று நினைத்திருப்பார்கள் ? அவர்களுக்கு உளவியல் பிரச்சினை அளிக்கிறேனா அல்ல எனது இந்த நினைவினால் எனக்கே உளவியல் பிரச்சினை அளித்து கொண்டிருக்கிறேனா ?

குளித்தலின் சுகம் இதனால் இழந்தும் விடுகிறது. இது நாள் வரை அதனை அனுபவித்திராதவன் தான். யாராகினும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது அந்த முதல் சொம்புக் குளியலினை மட்டுமே வர்ணிக்கும் அளவு உணர்ச்சிகளை கொண்டிருக்கும். அதனை எத்தனையோ விஷயங்களுடன் இணைத்து உருவகமாக்கலாம். ஆனால் நான் அடுத்தவன் குளியலறையில் குளிக்கும் போது அவன் அறைக்காரனோ அல்லது என்னை போன்று வாடகை குளியல் போட வந்தாவனோ கதவினை தட்டிக் கொண்டிருப்பான். அந்த நேரங்களில் குளியலிலும் மனிதநேயத்தினை கடைபிடிக்க வேண்டி வரும்.

தண்ணீர் இல்லாததை வருணித்த நானே இப்போது வருத்தப்படுகிறேன். விடுதி காப்பாளர்களிடம் சென்று கேட்டால் அவர்கள் அரை மணி நேரத்திற்கு பாடம் எடுக்கிறார்கள். அவர்கள் எத்தனை நேரம் எடுத்தாலும் ஒன்று மட்டும் உறுதி - இப்போதைக்கு தண்ணீர் வராது!

இன்னமும் எத்தனை நாட்கள் என் ரெஸெல்யூஷன் உயிருடன் இருக்குமோ ?????

Share this:

CONVERSATION